செவ்வாய், 9 ஜூலை, 2013

போதி மர நிழலில்..!

எவ்வளவு பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தாலும் பயங்கரவாதிகள் நினைத்த இடத்தில் நினைத்த மாதிரி தாக்குதல் நடத்த முடியும் என்ற கசப்பான உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது, மகாபோதி விகாரையில் ஞாயிறு அதிகாலை நிகழ்ந்த குண்டு வெடிப்புகள். சிறிய எரிவாயு சிலிண்டர்களில் அம்மோனியம் நைட்ரேட், சல்ஃபர், பொட்டாசியம் கலந்து தயாரிக்கப்பட்ட குண்டுகளை கடிகாரங்களுடன் இணைத்து விகாரையின் உள்ளேயும் வெளியிலும் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைத்து டைம் பாம் போல வெடிக்க வைத்துள்ளனர். ஒன்பது குண்டுகள் வெடித்துள்ளன. மூன்று வெடிக்காமல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புத்தர் சிலைக்கோ போதி மரத்துக்கோ சேதம் இல்லை.

பல நாடுகளில் இருந்து ஆண்டு முழுவதும் புத்த மதத்தினர் யாத்திரை வரும் தலம் புத்தகயா. இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 260 ஆண்டுகள் முன்னதாக 12 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட அமைதி தவழும் இந்த ஆலயத்துக்கு ஒரு முறையேனும் சென்று வருவதை அவர்கள் வாழ்க்கை இலக்காக வைத்துள்ளனர். அந்த வகையில் இந்த குண்டு வெடிப்பு உலகச் செய்தியாகி இருக்கிறது.

குண்டு வைத்தவர்கள் யார் என்று தெரியவில்லை. அதிகாலையில் வெடிக்கச் செய்ததன் மூலம், அதிக உயிர்களை பலி கொள்ள அவர்கள் எண்ணவில்லை என்பது தெரிகிறது. கோயிலையும் புனித மரத்தையும் அழிக்கும் நோக்கமும் தெரியவில்லை. பிகார் போலீசும் கோயிலின் காவலர்களுமாக 30 பேர் பாதுகாப்பில் இருந்துள்ளனர். வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள 22ல் 16 கேமராக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. எதிலும் சிக்காமல் இத்தனை குண்டுகளை கொண்டுபோய் வைத்தது அபாரமான திட்டம். எப்படி பார்த்தாலும் இது ஓர் எச்சரிக்கையாக தோன்றுகிறது.

யுனெஸ்கோ அறிவித்த உலக பாரம்பரிய சின்னம் என்பதால் மகாபோதி வளாகத்தை சுற்றிலும் கடைகளோ கழிப்பறைகளோ கிடையாது. அத்துமீறல்களை கண்காணிக்க முடியும். ஆனால் இந்தியாவில் , குறிப்பாக தமிழகத்தில் , அற்புதமான கட்டிடக்கலைக்கு சான்றாக நிற்கும் பழமையான கோயில்களை சுற்றிலும் எண்ணற்ற கடைகள், ஓட்டல்கள், கழிப்பறைகள், விடுதிகள். அலைமோதும் பக்தர்களின் வசதி, வியாபாரிகளின் வாழ்வாதாரம் போன்ற காரணங்களை சொல்லிக் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் மெத்தனம் காட்டுவது கவலையளிக்கிறது.

தினகரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல