ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள பெண் குழந்தை கல்விக்கான் மலாலா விருது இந்தியாவை சேர்ந்த 15 வயது மாணவி ரசியா சுல்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த ரசியா சுல்தான் 48 பெண் குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்தற்காக அவர் இந்த விருதை பெறுகிறார். முதல் விருது தங்கள் மகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசியா சுல்தானின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையில் மலாலாவின் 16-வது பிறந்தநாள் ‘மலாலா தினமாக’ உலகம் முழுவதும் வரும் நேற்றும் இன்றும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஐ.நா. சார்பில் நியூயார்க்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இளைஞர் அமர்வில் மலாலா உரையாற்றினார்.
அப்போது அவர்,”என் மீது அன்பு வைத்து நான் விரைவாக குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் பிரார்த்தனைகள் என்னை வலுப்படுத்தியுள்ளது. மலாலா தினம் எனது நாள் அல்ல. தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு பெண்ணின், ஒவ்வொரு சிறுவனின், ஒவ்வொரு சிறுமியின் நாளாகும்.
தீவிரவாதிகளால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களால் தாக்கப்பட்டதில் நானும் ஒருத்தி. இன்று நான் எனக்காக பேசவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காக பேசுகிறேன். அவர்களின் தோட்டாக்கள் நம் வாயை அடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.
மாறாக ஆயிரக்கணக்கான குரல்கள் ஒலித்தன. நம்பிக்கையின்மை இறந்து, வலிமையும் தைரியமும் பிறந்தது. நான் அதே மலாலாவாகத் தான் இருக்கிறேன். எனது நோக்கங்கள், நம்பிக்கை, கனவு எல்லாம் ஒன்றுதான். நான் எந்த தனி நபருக்கும் எதிராக பேசவில்லை.
தலிபான்களுக்கு எதிராக தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்திலும் பேசவில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்க உரிமை உள்ளது என்றுதான் பேச வந்திருக்கிறேன். என்னைத் தாக்கிய தலிபான்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகளின் மகன்களுக்கும், மகள்களுக்கும் கல்வி வேண்டும்.
இந்த இரக்க உணர்வை முகமது நபிகள், இயேசு கிறிஸ்து, புத்தர், மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா மற்றும் முகமது அலி ஜின்னாவிடம் இருந்து படித்திருக்கிறேன். மகாத்மா காந்தி, அன்னை தெரசா மற்றும் எனது தாய் தந்தையிடம் கற்றுக்கொண்டதும் இதுதான்.
அமைதி மற்றும் மற்றவர்களை நேசிக்கவேண்டும் என்று எனது ஆன்மா சொல்கிறது. கத்தியைவிட பேனா வலிமையானது என்பார்கள். அது உண்மைதான்.எனவே தான் பயங்கரவாதிகள் கல்வியை கண்டு பயப்படுகின்றனர். பெண்களின் சம உரிமையை கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர்.இந்நிலையில் அனைத்து அரசுகளும் இலவச மற்றும் கட்டாய கல்வியை உறுதி செய்ய வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போராடுவதுடன் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும். சாதி, சமயம், பிரிவு, நிறம் அல்லது பாலினம் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதை நிராகரிக்க வேண்டும்.
பெண்கள் அமைதியாகவும் சமத்துவத்துடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். அமைதி மற்றும் கல்விக்கான நமது பயணம் தொடரும். வறுமை மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். இதற்கு கல்வி மட்டும்தான் ஒரே தீர்வு.”என்று அவர் பேசினார்.
ஆந்தைரிப்போர்ட்டர்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக