வாழ்க்கை பெரும் கடலைக் கடப்பவர்களுக்கு கலங்கரை விளக்காக அமைந்தவர் அன்னை தெரேசா
தொண்டின் இலக்கணமாக விளங்கிய அன்னை தெரேசா ஐரோப்பாவின் அல்பேனியா நாட்டிலுள்ள செகாப் ஜீ எனும் கிராமத்தில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி நிக்கோலஸ் ரோஸி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு வைத்த பெயர் அக்னெஸ் கான்ஷா போஜாஷ் (Agnes Gonxha Bojaxhiu) என்பதாகும். சிறு வயதிலேயே இவர் இறையுணர்வும் தொண்டுள்ளமும் பெற்றிருந்தது முற்பிறவியின் தொடர்பினால் ஏற்பட்டது போலும்.
கீரிமியா போரில் காயமுற்ற சேனை வீரர்களுக்கு தேவதை போல் விளங்கி நர்ஸின் பணிக்கே தன்னை அர்ப்பணித்த நைட்டிங்கேல்லே திரும்பவும் உலகில் ஒளி வீச பிறவி எடுத்திருப்பது போல் அன்னை தெரேசாவும் தோன்றினார்.
இளமையில் அன்னை தெரேசா
மேலும் இந்திய மிஷனரிகள் கல்கத்தாவில் செய்யும் பணியை நன்கு தெரிந்து கொண்ட சிறுமி அக்னெஸ் தானும் அதுபோன்ற செயல்களில் ஈடுபட ஆர்வம் கொண்டார். அத்துடன் லொரேட்டா கன்னிகா மடத்தைப்பற்றிய விவரங்களும் அவரது ஆர்வத்தை வளர்த்தது. லொரேட்டா கன்னிகா மட உறுப்பினரான பின் ஆன்மீகத் துறையில் கல்வி கற்க அயர்லாந்து சென்றார். அதைத் தொடர்ந்து ஆசிரியத்துறை பயிற்சிக்காக அவர் இந்தியாவில் முதன் முதலாக காலடி வைத்த இடம் டார்ஜீலிங்....கல்கத்தாவில் புனித மரியன்னை உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக 1929 ஆம் ஆண்டில் பணியைத் துவங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அக்னெஸ் கன்னிகா பெண்களுக்கான கட்டுப்பாடுகளை ஏற்று தமது வாழ்நாள் முழுவதும் இயேசுபெருமானுக்கு அர்ப்பணிக்கும் ஞானஸ்நானத்தினால் 'தெரசா'வாக ஏற்றம் பெற்றார்.
தெரேசா என்ற அந்தப் புனிதப் பெயர் அவருக்கு ஒரு புதிய வாழ்க்கைத்தத்துவத்தை போதித்திருக்க வேண்டும். அதன் பின் அவர் அன்பின் அவதாரமாகவே மாறி விட்டார்.
பதினைந்து ஆண்டுகள் சிறப்புற ஆசிரியர் பணியை நிறைவேற்றிய பின்னர் ஏழைகளிலும் ஏழைகளாக இருப்போருக்கு தொண்டாற்றி புதிய இயக்கமொன்றை உருவாக்க விரும்பினார்.
மத விதிகளுக்கு உட்பட்டு தாம் பணியாற்றும் கிறிஸ்தவ மத நிர்வாகத்தின் அனுமதியோடு அதை உருவாக்க எண்ணினார். அவரது இந்த வாழ்க்கைக்குறிக்கோளுக்கு முதலில் ஆதரவு கிடைக்கா விட்டாலும், அவரது உதிரத்தில் ஊறியிருந்த தொண்டு மனப்பான்மையை நன்கு உணர்ந்த ரோமின் போப்பாண்டவர் அவரது இயக்கத்திற்கு அனுமதி கொடுத்து கடிதம் எழுதினார். அனுமதி கிடைத்தவுடனேயே கல்கத்தா சேரிகளுக்கு செல்லத்துடித்தார் அன்னை தெரேசா.
பாட்னாவில் மருத்துவப் பயிற்சிக்கான வகுப்புகள் சென்று அதில் தேர்வு பெற்ற பின் தனது லொரேட்டா சீருடையைக் களைந்து மூன்று நீல நிற பார்டர்களுடன் கூடிய வெள்ளைப்புடவை அணிந்து அன்னை தெரேசாவாக மோத்திஜில் சேரி மக்களுக்கு பழக்கமானார்.
அன்னை தெரேசாவின் சமூக சேவை சிறிது சிறிதாக மக்களுக்கு தெரிய வந்ததும் பல படித்த பெண்கள் அவரது இயக்கத்தில் இணைய முற்பட்டனர். அவரிடம் முதன் முதலாக தீட்சை பெற்ற சுபாஷினிக்கு தனது இயற்பெயரான அக்னெஸ்ஸையே அக்னெஸ்தாஸ் சூட்டி மகிழ்ந்தார்.
1950 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் நாள் அவரது மிஷனரிஸ் ஆஃப்சாரட்டி என்ற கருணை இல்லம் அவரால் துவக்கப்பட்டது. பின்னர் கல்கத்தா நடைபாதைகளில் அநாதைகளாக உயிர் விடும் மனிதர்களைக் கண்டு இரங்கிய அன்னை அதற்காக தனியிடம் அமைக்க வேண்டும் என நகராட்சியிடம் கேட்டுக்கொண்டார். அவர்கள் கொடுத்த தர்மசாலா 'நிர்மல் ஹரிதே' என்ற பெயர் பெற்றது. இறக்கும் தறுவாயிலுள்ளவர்களுக்கு கருணை காட்டும் இல்லமாக இது விளங்கியது. யாவற்றிற்கும் மேலாக அன்னை திரேசாவை தெய்வத்திற்கு சமமாக உயர்த்தியது அவர் தொழுநோயாளிகளை அரவணைத்து ஆற்றிய தொண்டுதான்.
உறவினர்களினாலும், நண்பர்களினாலும் கைவிடப்பட்ட அருவருப்பு மிக்க தொழுநோயாளிகளுக்காக அமைக்கப்பட்ட கட்டிடம் தொழு நோயாளி இல்லம் இன்று ஒரு கோயிலாக விளங்குகிறது.
மேலும் சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிசுபவனம் என்ற பெயரால் காப்பகம் இயங்குகிறது. குழந்தை கல்வி கற்கும் பருவம் வந்ததும் அவரால் அமைக்கப்பட்ட 'பால பவனம்' மகத்தான சேவையாற்றி வருகிறது. இத்துடன் சமூக அமைப்புக்கள் தொடர்ந்து செய்யும் பணியோடு புயல், புவி அதிர்ச்சி, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களை நீக்கும் தொண்டினையும் அன்னை தெரேசா அவ்வப்போது ஆர்வத்தோடு ஈடுபட்டும் வந்தார்.
பங்களாதேஷ் போரில் அகதிகளாக வந்து குவிந்த மக்களுக்கு அவர் ஆற்றிய பணிக்கு உலகம் எங்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. ஆயினும் அல்லும் பகலும் அயராது உழைத்த அன்னையின் உடல் 1983ஆம் ஆண்டு மிகவும் பாதிக்கப்பட்டது. அன்னை தெரேசா தமது உடல் நிலை பற்றி என்றுமே கவலை கொண்டதில்லை. எனது உடல் நிலை முக்கியமல்ல அவர் பணிகள் தொடர வேண்டும் என்பார்.
இதன் காரணமாக சகோதரி நிர்மலா அவரது சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் அன்னை தெரேசாவின் மகத்தான சேவைகளைப் பாராட்டி 1962 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதினையும் 1971 ஆம் ஆண்டு கென்னடி சர்வதேச விருதினையும் அமெரிக்கா டாக்டர் பட்டத்தையும் 1972 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு விருதினையும் ஸ்ரீமதி இந்திராகாந்தி விருதினையும் 1979 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசினையும் 1980 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதினையும் வழங்கி கெளரவித்தனர்.
உண்மையிலேயே அன்னை தெரேசா தன் எல்லையற்ற தாய்மை அன்பால் அண்டசராசரங்களையும் அரவணைக்கும் தெய்வீக தாயாக விளங்கினார். இப்படி வாழ்க்கை பெரும் கடலைக்கடப்பவர்களுக்கு கலங்கரை விளக்காக அமைந்தவர் அன்னை தெரேசா.
கலாபூஷணம்
செல்வத்தம்பி மாணிக்கவாசகர்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக