அத்தியாயம் 26
விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் வாங்குவதற்காக 2002-ம் ஆண்டில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களும், இந்தோனேசியாவை தமது பிரதான தளமாக பயன்படுத்தினார்கள். வட கொரிய ஆயுத ஏஜென்ட் மூலம் ஆயுதம் வாங்கினார்கள். ஆனால், 2002-ம் ஆண்டுவரை கே.பி. ஏற்படுத்தி வைத்திருந்த டீல் மாறியது.
“ஆயுதங்களை ஏற்றியபின் காசு” என்பது கே.பி.யின் டீல்.
சில சமயங்களில் ஆயுதங்களை வட கொரியக் கப்பல் ஒன்றில் கொண்டுவந்து நடுக் கடலில் வைத்து புலிகளின் கப்பல்களில் லோட் பண்ணுவதும் உண்டு. அப்போதுகூட, புலிகளின் கப்பலில் ஆயுதங்கள் ஏற்றப்பட்ட பின்னரே கே.பி.யின் ஆட்கள் பணத்தை கொடுப்பார்கள்.
ஆனால், புதிதாக ஆயுதம் வாங்க நியமிக்கப்பட்டவர்கள், இந்த டீலிங்குகளில் அவ்வளவு அனுபவம் இல்லாத ஆட்கள். அதனால், வட கொரிய ஏஜென்ட்டுடன் கறாராக டீல் பேச தெரியவில்லை. பணத்தை முதலில் கொடுத்தார்கள். அதன்பின் கப்பலை வைத்துக்கொண்டு, வட கொரிய ஏஜென்ட் ஆயுதம் கொடுக்கும்வரை காத்திருக்க வேண்டும்.
இந்த விதத்தில், ஆயுதம் வந்து சேரும்வரை புலிகளின் கப்பல்கள், இந்தோனேசியக் கடலுக்கு வெளியே சும்மா காத்திருக்க வேண்டும்.
இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால், முதலாவது செட் கப்பல்களில் ஏற்றப்பட வேண்டிய லோட் ஆயுதங்கள் வந்து சேர்வதற்கு முன், 2-வது செட் கப்பல்களில் ஏற்றப்பட வேண்டிய ஆயுதங்களுக்கும் பணத்தை கொடுத்தார்கள். ஒவ்வொரு டீலிலும் கொடுக்கப்பட்ட பணத்துக்கு வாங்கப்படக்கூடிய ஆயுதங்கள், 2 கப்பல் லோட்.
அடுத்தடுத்து 2 தடவைகள் பணம் கொடுத்ததால், 4 கப்பல் லோட் ஆயுதங்கள் ஒன்றாக வந்து சேர்ந்தன!
இதனால்தான் புலிகளின் கப்பல்கள் எல்லாமே, ஒரே கடல் பகுதியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தக் கப்பல்களை சி.ஐ.ஏ.வால் மிக சுலபமாக கண்காணிக்க முடிந்தது. இவற்றை தாக்குவதற்காக சென்ற இலங்கை கடற்படையின் கப்பல்களும், ஒரே கடல் பகுதியில் (இந்தோனேசியா கடல் எல்லைக்கு அருகே) புலிகளின் கப்பல்களை அடுத்தடுத்து வேட்டையாட முடிந்தது.
இலங்கை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து வந்த இலங்கை கடற்படை கப்பல்கள், விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்களை மூழ்கடித்துவிட்டு, தமது கப்பல்களில் எரிபொருள் அளவு குறைந்ததால் திரும்பிச் சென்றன என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா?
அந்தச் சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான், புலிகளின் 4 கப்பல்களில் ஒன்றன்பின் ஒன்றாக ஆயுதங்கள் ஏற்றப்பட்டிருந்தன. அவற்றை இலங்கை கடல் பகுதிக்கு கொண்டுசெல்ல சரியான தருணத்தை (பெரும்பாலும் அமாவாசை இருளுக்காக காத்திருப்பார்கள்) எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில்தான், இலங்கை கடற்படையால், 3 கப்பல்கள் தாக்கப்பட்டு, மூழ்கடிக்கப்பட்டன.
விடுதலைப் புலிகளின் 4-வது கப்பல், இந்தோனேசிய கடல் எல்லைக்குள் விரைந்து சென்றதால், தப்பித்துக் கொண்டது.
இந்த மூன்று கப்பல்களும் அடுத்தடுத்து மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் 2007-ம் ஆண்டு செப்டெம்பர் 16-ம் தேதி இரவும், 17-ம் தேதி காலையிலும் நடந்தன. தாக்குதலை நடத்திய இலங்கை கடற்படையின் 4 கப்பல்களும் (சமுத்ரா, ஷக்தி, சயூரா, சுரனிமாலா) எரிபொருள் அளவு குறைந்த காரணத்தால், திருகோணமலை துறைமுகத்துக்கு திரும்பிச் சென்றன.
இப்படி ஒரு சம்பவம் நடந்து 3 கப்பல்கள் ஆயுதங்களுடன் மூழ்கடிக்கப்பட்டால், விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் வாங்கி அனுப்பும் ஆட்கள் உடனே என்ன செய்திருப்பார்கள் என்று ஊகிக்கிறீர்கள்? ஆயுதம் ஏற்றப்பட்ட தமது 4-வது கப்பலை அந்த கடல் பகுதியிலேயே வைத்திராமல், வேறு எங்காவது கொண்டுபோய் மறைத்திருப்பார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்?
அதுதான் இல்லை.
இலங்கை கடற்படை கப்பல்கள் திருகோணமலை சென்று எரிபொருள் நிரப்பிக்கொண்டு, 3 வாரங்களின் பின் சாவகாசமாக திரும்பி வந்தபோதும், புலிகளின் 4-வது கப்பல், இந்தோனேசிய கடல் அருகில்தான் நின்றிருந்தது!
இம்முறை இலங்கை கடற்படையின் 3 கப்பல்கள் (சகாரா, சயூரா, சுரனிமாலா) வந்து, விடுதலைப் புலிகளின் 4-வது கப்பலை தாக்கி மூழ்கடித்துவிட்டு சென்றன. இது நடந்தது, 2007-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி.
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை “அவர் காட்டிக் கொடுத்தார்.. இவர் போட்டுக் கொடுத்தார்… இதோ துரோகி.. அதோ துரோகி..” என்றெல்லாம் இப்போது எழுதித் தள்ளுகிறார்கள்.
இந்தக் கப்பல்களை காட்டிக்கொடுக்க வெளியேயிருந்து யாராவது வரவும் வேண்டுமா?
“நில், கவனி, தாக்கு” என்று அறிவிப்பு பலகையுடன் நிற்பது போல அல்லவா ஒரே இடத்தில், அனைத்து கப்பல்களையும் ஒரே இடத்தில், அதுவும் ஆயுதங்கள் ஏற்றப்பட்ட நிலையில் வரிசையாக நிறுத்தி வைத்திருந்தார்கள்!
இலங்கை கடற்படை புலிகளின் 1-வது கப்பலை தாக்கி அழித்துவிட்டு, 2-வது கப்பலை நோக்கி வருவதற்குள், மற்றைய கப்பல்களை அங்கிருந்து நகர்த்தி வேறு எங்காவது கொண்டு போயிருக்க வேண்டாமா? 3 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட பின்னரே 4-வது கப்பலை ஓட்டிச் சென்று தப்பித்தார்கள்.
சரி. அதை விடுங்கள்.
செப்டெம்பர் 16-ம், 17-ம் தேதிகளில் 3 கப்பல்களை இழந்தவர்கள், அக்டோபர் 7-ம் தேதி வரை தமது 4-வது கப்பலை அதே இந்தோனேசிய கடல் பகுதியில், ஆயுதங்களுடன் நிறுத்தி வைத்திருந்திருக்கிறார்களே.. இதை என்னவென்று சொல்வது? இந்தக் கப்பலை காட்டிக்கொடுக்க வெளியேயிருந்து யாராவது வர வேண்டிய அவசியம் உள்ளதா?
சரி, சரி. அதையும் விடுங்கள்.
செப்டெம்பர் மாதத்தில், 3 கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டு விட்டன. அவற்றின் மீது தாக்குதல் நடத்திய கப்பல்கள், இலங்கை கடற்படையின் கப்பல்கள் என்று தெரிந்தும் போய் விட்டது. இந்தோனேசிய கடல் பகுதியில் இலங்கை கப்பல்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றன என்றால், அவை திருகோணமலை துறைமுக கடற்படை தளத்தில் இருந்தே புறப்பட்டு சென்றிருக்க வேண்டும் என்று ஊகிப்பது ஒன்றும் கடினமல்ல.
இந்த நிலையில், திருகோணமலை கடற்படை தளத்தில் ஒரு கண் வைத்திருக்க வேண்டாமா?
முதல் தாக்குதல் நடந்து 3 வாரங்களுக்கு பின், மீண்டும் அதே திருகோணமலை கடற்படை தளத்தில் இருந்து 3 கப்பல்கள் புறப்பட்டு செல்கின்றன… நடுக்கடலில் எரிபொருள் நிரப்பும் கப்பலும் புறப்பட்டு செல்கிறது… போர் நடக்கும் நாட்களில் இலங்கை கடற்படை, இவ்வளவு முன்னேற்பாடுகளுடன், கடலில் உல்லாசப் பயணம் செல்கிறது என்று நினைத்தார்களா?
புலிகளின் உளவுத்துறை இதை கவனித்து தலைமைக்கு அறிவித்திருக்க வேண்டாமா?
ஓகே.. ஓகே.. புலிகளின் உளவுத்துறை சொல்லியிருப்பார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
திருகோணமலை கடற்படை தளத்தில் இருந்து இலங்கை கடற்படை கப்பல்கள் இந்தோனேசிய கடல் பகுதியை சென்றடைய 6 நாட்கள் எடுத்தன! கப்பல்கள் புறப்பட்ட விஷயம் தெரிந்துகொண்டு, அவை தமது கப்பலை வேட்டையாட செல்கின்றன என்று ஊகித்துவிட்டால், 6 நாட்களுக்குள் 4-வது கப்பலை வேறு எங்காவது அனுப்பியிருக்கலாமே!
இவ்வளவு கால அவகாசம் கிடைத்த பின்னரும், இந்தோனேசிய கடல் பகுதியில் புலிகளின் 4-வது ஆயுதக் கப்பல், “அண்ணே.. வந்திட்டீங்களா?” என்பது போல காத்திருந்து… அடி வாங்கி… மூழ்கிப் போனது!
மூழ்கிப்போன 4 கப்பல்களின் விலை என்னவென்று தெரியுமா? அதற்குள் இருந்த ஆயுதங்களில் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? அந்த பணம், வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இரவு பகலாக உழைத்து சம்பாதித்த பணம் என்பது தெரியுமா? கடனாக பணம் எடுத்துக் கொடுத்துவிட்டு, எத்தனை பேர் தற்போது வெளிநாடுகளில் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்றாவது தெரியுமா?
சீரியசாகத்தான் கேட்கிறோம்… இந்தக் கப்பலை காட்டிக்கொடுக்க எட்டப்பன், கிட்டப்பன் என்று யாராவது வர வேண்டிய அவசியமும் உள்ளதா?
இதற்கெல்லாம் பதில்கள் உள்ளன. அவற்றை ஜீரணிப்பதுதான் கஷ்டம்.
இந்த தொடரில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட பாகத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறோம்.
விறுவிறுப்பு.காம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக