புதன், 25 செப்டம்பர், 2013

“நாடக ஹீரோ முதல்வர் விக்கினேஸ்வன் அயோக்கியர்” -நாடுகடந்த கவிஞர் காசி.ஆனந்தன்

“தமிழீழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கின்ற யோக்கியதை எவனுக்கும் கிடையாது. நேற்று கொழும்பில் முளைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தழைவிட்ட (முதல்வர்) விக்னேஸ்வரனுக்கு நிச்சயம் கிடையாது” என்று போட்டு தாக்கியிருக்கிறார், விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரமுகரும், தமிழகத்தில் நீண்ட காலமாக வசிப்பவருமான கவிஞர் காசி.ஆனந்தன்.

இலங்கையில் வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றதே தவறு என்ற கருத்தை முன்வைத்துள்ள காசி.ஆனந்தன், “இந்த தேர்தல் மகிந்த அரசிற்கு பெரிதும் உதவி புரிந்திருக்கின்றது. மகிந்தவின் அரசு ஒரு நேர்மையான அரசு, தேர்தல் நடத்தி, ஜனநாயகத்தை மதிக்கிற அரசு, ஆகவே அந்த ஜனநாயவாதியான மகிந்த போற்றுதலுக்கு உரியவர் என்று காட்டுகின்ற நாடகத்திற்கு இந்த மாகாணசபை பயன்பட்டிருக்கின்றது” என்கிறார்.

“தமிழர் பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று கோரிக்கை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மட்டும் இருந்தல்ல, பல உலக நாடுகளிடமும் இருந்துதான் வந்தன. திரு. ஆனந்தனின் இந்த சாடலைக் கேட்டவுடன், “அடாடா… இந்த நாடகம் நடக்கும் விஷயத்தை உலக நாடுகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து, எச்சரிக்கை செய்திருக்கலாமே” என்ற அங்கலாய்ப்பு ஏற்படுகிறது அல்லவா?

கவிஞரின் பார்வையில் ‘நாடகம்’ என்று தோன்றும் தேர்தலில், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்கினேஸ்வரன் யார்? நாடக ஹீரோவா?

சரி. காசி.ஆனந்தனின் சென்னை பார்வையில், இலங்கையில் மக்கள் முன் சென்று வாக்கு கேட்டு ஜெயித்த விக்கினேஸ்வரன் எப்படி தெரிகிறார்?

இதோ, அவரே கூறுகிறார், தெரிந்து கொள்ளுங்கள்: “விக்னேஸ்வரன் போன்றவர்கள் சமஸ்டிதான் எங்கள் கொள்கை என்று சொல்கிறார்கள். அந்த சமஸ்டிக்காக வடக்கு மாகாண மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை விக்னேஸ்வரன் புரிந்து கொள்ளவேண்டும்” என்கிறார்.

அடேங்கப்பா.. இலங்கைக்கு வெளியே நீண்டகாலம் வசித்தாலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் எதற்காக வாக்களிக்கவில்லை என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறாரே.. அங்கேதான் நிற்கிறார் மக்கள் மனம் புரிந்த கவிஞர்.

இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களால் அமோக வெற்றி பெற வைக்கப்பட்ட முதல்வர் விக்கினேஸ்வரன் பற்றி, வேறு என்ன சொல்கிறார், சென்னையில் வசிக்கும் கவிஞர் காசி.ஆனந்தன்?

“வெற்றிக் களிப்பில் விக்னேஸ்வரன் போன்றவர்கள் பேசுகின்ற பேச்சு அயோக்கியத் தனமான பேச்சு. ‘நாங்கள் தமிழீழத்தை கைவிட்டு விட்டோம்’ என்று அவர் சொல்கின்றார். அவர் எந்த தமிழீழத்தை கைவிட்டோம் என்று சொல்கின்றார்? 1976-ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா தீர்மானம் இயற்றி நிறைவேற்றிய அதே தமிழீழ தீர்மானத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கிறார்.

அந்த தமிழீழ தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விட்டு, பொது தேர்தலில் வாக்களித்து, அதை வெற்றிபெற செய்தார்களே; அந்த தமிழிழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கிறார்” என்கிறார்.

அட, அப்பிடி போடுங்க கவிஞரே அருவாளை…

1976-ம் ஆண்டு, “தமிழீழம் வேண்டும் என்றால் எமக்கு வாக்களியுங்கள்” என்று தேர்தலில் நின்றபோது விழுந்த வாக்குகள் தமிழீழத்தை ஆதரித்து விழுந்த வாக்குகளாம். 2003-ம் ஆண்டு, “சமஸ்டி வேண்டும் என்றால் எமக்கு வாக்களியுங்கள்” என்று வெளிப்படையாக கூறி தேர்தலில் நின்றபோது ஜெயித்த வாக்குகள், சமஸ்டியை ஆதரித்து விழுந்த வாக்குகள் இல்லையாம்.

சூப்பர் லாஜிக் கவிஞரே.

அத்துடன் விட்டாரா கவிஞர்? விக்கினேஸ்வரனுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனையும் போட்டு துவைத்து எடுத்திருக்கிறார். “ஏதாவது ஒரு மேடையில் விக்னேஸ்வரன், என்னுடைய தாயகம் தமிழீழம் என்று சொல்ல முடியுமா? விக்னேஸ்வரனோ சம்மந்தனோ துணிச்சலான ஒரு மேடையில் என்னுடைய தாயகம் தமிழீழம் என்று சொல்லமுடியுமா? என்று கேள்விக் கணையை, வேள்விக்கு வந்த ஆட்டுக்கு விடுவதுபோல வீசியிருக்கிறார்.

“ஏதாவது ஒரு மேடையில்” என்று நீங்கள் குறிப்பிடுவது, இலங்கைக்கு வெளியே, (சென்னை போல) ஒரு பாதுகாப்பான மேடைதானே கவிஞரே?

அதை விடுங்கள், “என்னுடைய தாயகம் தமிழீழம்” என்று சம்பந்தனும், விக்கினேஸ்வரனும் சொல்ல வேண்டும் என்று ஏன் சவால் விடுகிறீர்கள் கவிஞரே? அவர்கள்தான் மிகத் தெளிவாக, “என்னுடைய தாயகம், ஒன்றுபட்ட ஸ்ரீலங்கா” என்று சொல்லி விட்டார்களே.

அதை ரகசியமாகவும் சொல்லவில்லை. பகிரங்கமாக மேடையில் சொல்லி வருகிறார்களே… தேர்தலுக்கு முன்பிருந்தே சொல்லி வருகிறார்களே…

அப்படியிருந்தும் இந்த தேர்தலில், விக்கினேஸ்வரன் (காசி.ஆனந்தனின் கூற்றுப்படி அயோக்கியர்) ஜெயிக்காமல் இருந்திருக்க என்ன செய்திருக்கலாம்?

1) அயோக்கியர்கள் அற்ற அணி ஒன்றை தேர்தலில் களம் இறக்கி, மக்கள் வாக்களிக்கிறார்களா என்று பார்த்திருக்கலாம். (கடந்த நாடாளுமன்ற தேர்தலில், குதிரை கஜேந்திரன் அணிக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்த பின்னரும் தைரியமாக…)

2) தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், ஸ்ரீலங்கா தேசியக் கொடியை பகிரங்கமாக மேடையில் பிடித்து ஆட்டியபோதே, அவரையும், அவரது கட்சியையும் அதரிப்பதை நிறுத்தி, புதிய அணியை உருவாக்கியிருக்கலாம்.

3) எந்த மேடையிலும் “என்னுடைய தாயகம் தமிழீழம்” என்று கூறக்கூடிய காசி.ஆனந்தனை, சொந்த மண்ணில் மேடையமைத்து ஏற்றி விட்டு, முழங்கி வாக்கு கேட்க வைத்திருக்கலாம்.

அப்படியில்லாமல், எப்போதோ ஈழ கொள்கையை குழி தோண்டி புதைத்துவிட்டதாக வெளிப்படையாக அறிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் கையில் ஏந்தியபடி, அவர்கள் ஜெயித்தபின், ‘ஐயகோ அயோக்கியர்கள்’ என அலறுகிறீர்களே… இதை, தமிழில் என்ன வார்த்தையில் குறிப்பிடுவார்கள் தெரியுமா கவிஞரே?

“தும்பை விட்டு வாலைப் பிடிப்பது”

இலங்கை வடக்கு மாகாண தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் விக்கினேஸ்வரன் பற்றி மேலும் குறிப்பிட்ட வீரக் கவிஞர், “தமிழீழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கின்ற யோக்கியதை எவனுக்கும் கிடையாது. நேற்று கொழும்பில் முளைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தழைவிட்ட (முதல்வர்) விக்னேஸ்வரனுக்கு நிச்சயம் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

அண்ணே… இதையே விக்கினேஸ்வரன், ‘திருப்பிப் போட்டால்’ எப்படி இருக்கும் தெரியுமா? “நேற்று இலங்கையில் முளைத்து, இன்று தமிழகத்தில் தழைவிட்ட காசி.ஆனந்தனுக்கு….”

விறுவிறுப்பு.காம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல