வெள்ளி, 1 நவம்பர், 2013

ஸ்னோடன் வெளியிட்ட அடுத்த ரகசியம்: ஆட்களை கொல்ல சி.ஐ.ஏ. குறிவைப்பது எப்படி?

அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோடன் பணிபுரிந்த உளவுத்துறை NSA (National Security Agency), அமெரிக்காவின் மற்றொரு உளவுத்துறை சி.ஐ.ஏ.வின் உளவு விமான தாக்குதலுக்கு எப்படி உதவியது என்ற ரகசியம், தற்போது வெளியாகியுள்ளது. ஆம். இதை வெளியிட்டவரும், எட்வார்ட் ஸ்னோடன்தான்.

இந்த NSA, அதிரடி தாக்குதல்களில் ஈடுபடும் உளவுத்துறை அல்ல. சிக்இன்ட் (SIGINT – Signals Intelligence) எனப்படும், எலக்ட்ரோனிக் உளவு பார்க்கும் அமைப்பு. சி.ஐ.ஏ. பிரிவு, மட்டுப்படுத்தப்பட்ட SIGINT உளவு பார்த்தலுடன், அதிகளவில் ஹியூம்இன்ட் (HUMINT – Human Intelligence) மற்றும், அதிரடி தாக்குதல்களிலும் ஈடுபடும் அமைப்பு.

ஆப்கானிலும், பாகிஸ்தானிலும், ஆபிரிக்க நாடுகளிலும் உளவு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி, தீவிரவாத தளபதிகளை ஏவுகணைகள் மூலம் கொல்வது, சி.ஐ.ஏ.

தீவிரவாத தளபதிகளின் மறைவிடங்களை அறிந்து, அவர்களது நடமாட்டங்களை தெரிந்து கொண்டால்தான், உளவு விமானங்கள் மூலம் அவர்களை குறிவைக்க முடியும். இதற்கு தாக்குதல் பகுதிகளுக்குள் ஊடுருவ விடப்பட்ட உளவாளிகள் தரும் தகவல்கள் உதவும் அளவுக்கு, சிக்இன்ட் மூலம் பெறப்படும் தகவல்களும் உதவுகின்றன.

இப்போது ஸ்னோடன் வெளியிட்டுள்ள ஆவணங்களின்படி, சி.ஐ.ஏ.வின் உளவு விமான தாக்குதல் இலக்குகளை அடையாளம் காட்ட சிக்இன்ட் உளவுத் தகவல்களை NSA-யும் கொடுத்து உதவியது.

ஸ்னோடன் வெளியிட்ட ஒரு ஆவணம், பின்லேடனின் பிரதான தளபதிகளில் ஒருவரை பற்றியது.

ஹசன் குல் என்ற இந்த தளபதியின் மனைவி, உலகின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து அனுப்பிய இமெயில் ஒன்றை இடைமறித்து டவுன்லோட் பண்ணியிருக்கிறது NSA. அந்த இமெயிலில், ஹசன் குல்-ன் இருப்பிடம் தொடர்பான தகவல் ஒன்று இருந்திருக்கிறது. அந்த தகவலால், சி.ஐ.ஏ.வுக்கு பலன் உண்டு என நம்பிய NSA, ஹசன் குல்-ன் இருப்பிடம் பற்றிய விபரங்களை கொடுத்திருக்கிறது.

ஹசன் குல், அப்போது பாகிஸ்தானில் உள்ள மறைவிடம் ஒன்றில் இருந்திருக்கிறார். NSA கொடுத்த தகவலின் அடிப்படையில், சி.ஐ.ஏ. தமது உளவு விமானம் ஒன்றை அனுப்ப, அந்த உளவு விமானம் மறைவிடத்தை நோக்கி ஏவுகணை ஏவியதில், ஹசன் குல் கொல்லப்பட்டார்.

இது, ‘அடையாளம் தெரியாத உளவு விமான தாக்குதல்’ என்ற அளவிலேயே இதுவரை அறியப்பட்டு இருந்தது. ஹசன் குல் மீது தாக்குதல் நடத்தி, அவரை கொன்றதை அமெரிக்கா இதுவரை ஒப்புக் கொண்டதில்லை. இப்போதுதான், ஹசன் குல் கொலையில் சி.ஐ.ஏ. தொடர்பு பட்டுள்ளது என்பதும், அவரது இருப்பிடத்தை NSA கொடுத்த தகவலின் அடிப்படையில் சி.ஐ.ஏ. அறிந்து கொண்டது என்பதும், ஸ்னோடன் வெளியிட்ட ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த தகவல் ஒரு சாம்பிளுக்கு மட்டுமே எனவும், இதுபோன்ற பல ஆபரேஷன்களின் பின்னணியில் உள்ள விபரங்கள் தொடர்பான ஆவணங்கள் ஸ்னோடனிடம் உள்ளன எனவும், இந்த தகவலை வெளியிட்ட த போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஸ்னோடன் வெளியிட்டுள்ள ஆவணத்தில் இருந்து தெரியவந்துள்ள மற்றொரு விஷயம், NSA உளவுத்துறை CT-MAC என்ற ரகசிய யூனிட் ஒன்றை உருவாக்கி, அதன் மூலமே தாக்குதல் இலக்குகளை சி.ஐ.ஏ.வுக்கு கொடுத்துள்ளது. CT-MAC-ன் விரிவாக்கம், Counter-Terrorism Mission Aligned Cell.

இந்த யூனிட்டும், சி.ஐ.ஏ.வும் சேர்ந்து தீர்த்துக் கட்டியவர்களின் விபரங்கள் ஸ்னோடனிடம் இருந்து ஒவ்வொன்றாக வெளியாகப் போகின்றன போலிருக்கிறதே!

விறுவிறுப்பு.காம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல