"23 வருடங்களாக என் பிள்ளையை தேடி அலைகிறேன்"
நான் கடவுளைக் கும்பிட்டதை விட ஆட்களை கையெடுத்துக் கும்பிட்டது தான் அதிகம். என் பிள்ளையைத் தாருங்கள் என்று 23 வருடங்களாக பிள்ளையைத் தேடித் திரிகிறேன். இவ்வாறு சொல்லி புலம்பினார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியொருவர்.
சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு 10.12.2013 அன்று திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தடியில் காணாமல் போனோரை தேடியறியும் அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட கவனஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட உறவினர்களில், தாய் ஒருத்தி இவ்வாறு கதறியழுததை பார்த்த எல்லோரும் உறைந்து போய் நின்றார்கள்.
மணிக்கூட்டு கோபுரத்தடியில் காலை 11 மணியளவில் மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியது. ஏற்பாட்டாளர்களில் ஒரு சிலரும் பல தாய்மாரும் உறவினர்களும் அங்கு ஒன்று கூடியிருந்தார்கள்.
அவர்களின் கைகளில் பல புகைப்படங்கள் காணப்பட்டன. மகனை, மகளை இழந்த தாய் தகப்பன், சகோதரர்களை இழந்த உறவினர்கள் தமது உறவினர்களின் படங்களை தாங்கியிருந்தார்கள். இன்னும் சிலர் பல்வேறு வாசகங்கள் அடங்கிய அட்டைகளைத் தாங்கி நின்றார்கள். ஒரு தாய் மூன்று பிள்ளைகளின் படங்களை தாங்கிய வண்ணம் அழுது வடிந்த கண்ணோடு காணப்பட்டார். நான் நாலு ஆண் பிள்ளைகளைப் பெற்றேன். மூன்று பிள்ளைகள் கடத்தப்பட்டும் காணாமலும் போயுள்ளார்கள். 2008 ஆம் ஆண்டு சதானந்தம் அருள் சீலன், சதானந்தம் நிஷாந்தன், சதானந்தம் சிவகுமார் என்ற மூன்று பிள்ளைகளை இழந்து விட்டேன் என சாம்பல்தீவு ஊரைச் சேர்ந்த அந்த தாய் கதறியழுதார்.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில் கடத்தப்பட்டோர் காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்று கூடி நின்றார்கள். இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவித்த சுந்தரம் மகேந்திரன் தலைமை தாங்கி கோஷங்களை எழுப்பிய வண்ணம் நின்று கொண்டிருந்தார். ஆரம்பத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறைவாக இருந்த போதும் நேரம் செல்லச் செல்ல சனங்கள் கூடியது. இந்த வேளையில் பொலிஸ் படையினர் சுற்றிவளைத்து நின்றார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு சுமார் பத்துப் பதினொரு பேர் நின்றார்கள். இவர்கள் யார் என்று அடையாளம் காணுவது கஷ்டமாக இருந்தது. பொலிஸார் போக்குவரத்து ஒழுங்கை தீவிரமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். கவன யீர்ப்புப் போராட்டத்தை நடத்தியவர்கள் நின்றதற்கு எதிர்ப்புறமாக யார் யாரோவெல்லாம் நின்றார்கள். இரண்டொரு பெளத்த பிக்குமாரையும் காண முடிந்தது.
ஊடகவியலாளர்களோ ஓடியோடிப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். சிங்களத்திலும் தமிழிலும் பல்வேறு கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். கடத்தப்பட்டோர் எங்கே, காணாமல் போனோரைக் காட்டு, எங்களை எங்கள் சொந்த மண்ணில் வாழ விடு, சிறையில் இருக்கும் தமிழ்க் கைதிகளை விடுதலை செய், சம்பூர் மக்களைக் குடியேற்று என்ற வாசகங்கள் தாங்கிய அட்டைகளை கையில் ஏந்திய வண்ணம் கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள். சுமார் 4 நிமிட நேரம் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பொலிஸ் உயர் அதிகாரிகள் ஒரு சிலரும் பிரசன்னமாகி இருந்தார்கள். கோஷமிட்டுக் கொண்டிருந்த உறவினர் பக்கத்துக்கு ஒருவர் ஓடி வந்தார். கோஷமிட்டுக் கொண்டிருந்த உறவினர்களைப் பார்த்து சிங்கள மொழியில் அவர் கத்தினார். நீங்கள் யாழ்ப்பாணத்தில் கத்துங்கோ, மட்டக்களப்பில் கோஷமிடுங்கோ, திருகோணமலையில் கோஷமிடக் கூடாது என பலத்த தொனியில் கத்தி தாக்குவது போல் பாய்ந்தார். ஆனால், அங்கிருந்த பொலிஸார் அவரைத் தடுத்து விட்டார் கள். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கவனயீர்ப்பு போராட்டம் நடத்திய உறவினர்கள் மிக அமைதியாகவும் ஆர்ப்பாட்டம் இன்றியும் கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
காணாமல் போன, கடத்தப்பட்ட தங் கள் தங்கள் உறவுகளின் படங்களை ஏந் திய வண்ணம் நின்றவர்களை ஊடகவியலாளர்கள் பேட்டி கண்டு கொண்டிருந்தார்கள். படம் எடுத்துக் கொண்டிருந்தார் கள்.
ஒரு தாய் மிகக் கண்கலங்கிய வண்ணம் தனது மகளின் படத்தை ஏந்தியவாறு இவ்வாறு கூறினார். 2008 ஆம் ஆண்டு நேர்முகப் பரீட்சைக்கு திருமலை மட்டிக்களி என்னும் இடத்திலிருந்து போன எனது மகளை இதுவரை காணவில்லை எனக்கூறி தேம்பித்தேம்பி அழுதார். இதற்கிடையில் இன்னுமொரு தந்தை ஊடகவியலாளர் மத்தியில் ஓடி வந்து குறித்த பொலிஸ் நிலையத்தின் பெயரைச்சொல்லி இதற்கு முன் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்ட 32 வயதான மு.அசோக்குமாரை இதுவரை காணவில்லை. என்ன ஆனான்? என்ன நடந்தது? என்பது எமக்குத் தெரியாது என வாய் விட்டுக் கதறி அழுதார். இவ்வாறு முருகாபுரியைச் சேர்ந்தவர்கள், 6 ஆம் கட்டை இலப்பைக் குளத்தை சேர்ந்தவர், வவுனியாவை சேர்ந்தவர், கட்டைப்பறிச்சான், பெரியகுளம், அன்பு வழிபுரம் என திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு உறவினர்களும் கதறியழுது கண்ணீர் விட்டு கோஷம் போட்ட படி நின்றார்கள்.
இதன் நடுவே கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜே.ஜனார்த்தனன் மற்றும் முன்னாள் மூதூர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் திருச்செல்வம், கூட்டமைப்பின் பிரமுகர் ஜேசுதாசன் ஆகியோர் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தியவர்களுடன் சங்கமித்துக்கொண்டனர்.
ஏற்பாட்டாளர் மகேந்திரன் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்த போது பின்வருமாறு தெரிவித்தார். வடக்கு கிழக்கில் காணாமல் போனோர், கடத்தப்பட்டோர் ஆகியோரை கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆணைக்குழுவில் எமக்கு நம்பிக்கையில்லை. இவர்களை கண்டறிவதற்கு சர்வதேச விசாரணையொன்றே தேவையென அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு இடங்களில் காணாமல் போனோர், கடத்தப்பட்டோர் ஆகியோரின் உறவினர்கள் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துகின்றார்கள்.
காணாமல் போனோரையும் கடத்தப்பட்டோரையும் அரசாங்கம் கண்டுபிடித்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இப்போராட்டம் நடத்தப்படுகிறது. அரசாங்கம் கடந்த காலங்களில் காணாமல் போனோர், கடத்தப்பட்டோர் என்று இலங்கையில் யாருமில்லையென்று கூறி வந்தது ஆனால் பொது நலவாய மாநாட்டின் பின்பு காணாமல் போனோர் தொடர்பாக கண்டறிவதற்கு கணக்கெடுப்பொன்றை ஆரம்பித்துள்ளார்கள்.
ஜனாதிபதி, ஆணைக்குழுவொன்றையும் கண்டறிய நியமித்துள்ளார். காணாமல் போனோர் கடத்தப்பட்டோர் என்று யாருமில்லையென கூறி வந்த இலங்கை அரசாங்கம் ஏன் இப்படி நியமித்துள்ளது? அது மாத்திரமின்றி இந்த நடவடிக்கைகளினால் தமிழ் மக்களுக்கு எந்த நியாயமான தீர்வும் கிடைக்கப் போவதில்லை. எனவே தான் சர்வதேச விசாரணையொன்று கொண்டு வரப்பட வேண்டுமென்ற கருத்தை மகேந்திரன் கூறி முடித்தார்.
பேரினச் சமூகத்தின் வரவு வரவரக்கூடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் மரக்கறி சந்தைப்பக்கத்திலிருந்து சுமார் நாலைந்து பேர் சிங்கள மொழியில் கடுமையாகப் பேசிய வண்ணம் பாய்ந்து வந்தார்கள். இதற்கிடையில் ஏலவே முகத்தை மூடி மறைத்துக் கொண்டிருந்தவர்களும் பரபரப்பாக காணப்பட்டார்கள். அந்த நாலைந்து பேரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தவர்களின் கையில் வைத்திருந்த வாசக அட்டைகளையும் புகைப்படங்களையும் பறித்து கிழித்து எறிந்தார்கள். தாய்மார்கள் மற்றும் பெண்களின் கரங்களிலிருந்த மேற்படி படங்களையும் வாசக அட்டைகளையும் பிடுங்கி எடுத்தார்கள். அங்கிருந்த உறவினர்கள் கொய்யோ முறையோ எனக் கத்தினார்கள். பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் ஓடினார்கள். ஊடகவியலாளர்களின் கையிலுள்ள கமராக்களை பறித்தெறிய முற்பட்டார்கள். தெய்வாதீனமாக ஏதும் அகப்படவில்லை. அவர்களின் அட்டகாசத்தை அடக்க அங்கிருந்த யாரும் முன் வரவில்லை.
வாசகம் தாங்கிக் கொண்டிருந்த முன் னாள் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலை வர் திருச்செல்வம் நின்ற இடத்துக்கு பாய்ந்து சென்று தாக்கினார்கள். சரமாரியாகக் கைகளால் எல்லோரையும் தாக்கினார்கள். எல்லோரும் நாலா திசையும் சிதறுண்டு ஓட்டம் பிடித்தார்கள். ஏற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன் தாக்கப்பட்டார். திருகோணமலைக்கு சாபமோ என்னமோ 1958ஆம் ஆண்டு தொட்டு மணிக்கூட்டுக்கோபுரம் இனக்கோபுரத்தின் அடையாளமாகவே இன்றைய சம்ப வம் வரை காணப்படுகிறது. வயது போன தாய்மார், பெண்கள் என்று கூடப்பார்க்காமல் தாக்கப்பட்டார்கள். மொத்தத்தில் அமளிதுமளியாகி விட்ட இந்த அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தில் நடந்த இந்த அட்டூழியத்தை தடுக்க அங்கு நின்று கொண்டிருந்த எந்த சீருடைக்காரரும் முயற்சி செய்யவில்லை.
சுமார் 70 நிமிட நேரத்துக்குள் இவ்வளவும் நடந்து முடிந்து விட்டது. மீண்டுமொரு இனக்கலவரம் தோன்றிவிட்டதோ என்ற பயப்பாட்டுடன் மணிக்கூட்டுக் கோபுரத்தடி பிரதான பஸ் நிலையம், மரக்கறி சந்தையடி, மீன் சந்தையடி பரபரப்பாகக் காணப்பட்டது. சில வினாடிகளில் கூட்டமைப்பின் பிரமுகர் திருச்செல்வமும், ஏற்பாட்டாளர் மகேந்திரனும் தாக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்பதை அறியக் கூடியதாக இருந்தது.
சர்வதேச மனித உரிமை தினமொன் றில் தமது உறவுகளைப் பறிகொடுத்த உடன் பிறப்புக்கள் அமைதியான முறை யில் தங்கள் வேதனைகளை உச்ச ரிக்கக் கூட இந்த நாட்டில் ஜனநாய கம் இல்லையென்ற கவலை எல் லோர் மனச்சாட்சியையும் குடைந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போராட்டத் தில் குறைவான எண்ணிக்கை கொண்ட உறவுகள் வந்திருந்த போதும், மேற்படி சம்பவம் கூடுதலானோர் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்து விட்டது என்றும் கூறலாம். ஊடகங்கள் உயர்ந்த குரலில் அதை வெளிக்காட்டியது.
இதேவேளை சம்பவம் நடைபெற்ற அன்றைய தினமே நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா இச்சம் பவம் பற்றி கூறுகையில்,
இன்று மனித உரிமை தினம். இன்றைய தினத்தில் திருகோணமலையில் நடை பெற்ற சம்பவம் இந்த நாட்டில் மனித உரிமை இல்லையென்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது எனச் சுட்டிக் காட் டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சாணக்கியன்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக