திங்கள், 10 பிப்ரவரி, 2014

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 11

பர்மாவில் இருக்கும் தமிழர்களில் கணிசமானோருக்கு தமிழை படிக்கவும் எழுதவும் தெரியாது.

பள்ளிக்கூடங்களில் தமிழ் கற்பிக்கப்படாததாலும், தனியாக ஆசிரியரைவைத்து தமிழ் படிக்க வசதியில்லாததாலும் கடந்த 50 ஆண்டுகளுகளாக தமிழ் கற்பது அங்கே பெரிதும் குறைந்துவிட்டது.

இந்த நிலையைப் போக்க, அங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் பல தமிழ் பள்ளிக்கூடங்களைத் திறந்துள்ளனர்.

இராணுவ ஆட்சியின் போது பல கோயில்களில் சமயக் கல்வி தமிழில் கற்பிக்கப்பட்டது.

பலரால், பல இடங்களில் வேறுபட்ட நோக்கங்களுடன் ஆரம்பித்து நடத்தப்படும் தமிழ் பாடசாலைகள் அனைத்திலும், ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை பின்பற்றச் செய்ய வேண்டும், அவற்றின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சிகளும் இங்கே எடுக்கப்பட்டு வருகின்றன.

அங்கு வீட்டில் பலர் தமிழ் பேசினாலும், இளவயதினர் பெரும்பாலும் பர்மிய மொழியில்தான் பேசுகின்றனர்.

தமிழ் மொழியை ஊக்குவிக்க பல முயற்சிகள் எடுக்கப்படுவதாக அதில் ஈடுபட்டுள்ள ஆர்வலர்கள் கூறினாலும், அதை முன்னெடுப்பதில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்

அங்கு இப்போது, இணையம் மூலமும் சிலர் தமிழ் படிக்க ஆரம்பித்துள்ளனர்

பர்மியத் தமிழர்கள் பலரின் குடும்பங்கள் அந்நாட்டிலேயே நூறு ஆண்டுகளுக்கும் மேலான இருக்கின்றன. இருந்தும் தமிழ்க் கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையையும் கைவிடாமல் அவர்கள் பின்பற்றுகின்றனர்.

திருமணங்கள் தமிழ் இந்து முறைப்படி நடக்கின்றன. வரதட்சணைப் பிரச்சனை இல்லை. ஆண்கள் பெரும்பாலும் சுய தொழில் அல்லது வியாபாரம் செய்கின்றனர். பெண்களின் நிலை தற்போதுதான் சற்று மேலெழுந்து வருகிறது. கல்வியில் கூடுதலாக கவனம் செலுத்தப்படுகிறது.

பல குடும்பங்களில் பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதும் நடைமுறையில் உள்ளது. படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழர்கள் மத்தியில் காணப்படுகிறது. அங்காங்கே பரதநாட்டியம், வாய்ப்பாட்டு போன்றவை சொல்லித் தரப்படுகின்றன.

நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கோயில்களை தமிழக கோயில் அமைப்பிலேயே தமிழர்கள் கட்டியுள்ளனர். கோயில்களை வைத்தே தமிழர்கள் அதிகம் இருக்கும் இடங்களை அடையாளம் காணலாம்.

கோயில்களில் தமிழும் சமஸ்கிருதமும் கலந்து பூஜைகள் செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட ஆகம முறை என்றில்லாமல் – அவரவர் அவர்களுக்குத் தெரிந்த முறையில் சிரத்தையுடன் பூஜை செய்கின்றனர்.

தீண்டாமை

இங்கே பிரமணர்கள் இல்லை. எனவே மற்ற ஜாதிகளைச் சேர்ந்தவர்களே அர்ச்சகர்களாக இருக்கின்றனர். அதேநேரம் இந்திய மண்ணை விட்டு அகன்று சென்றும் தீண்டாமை நீங்கவில்லை. பல கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை இருக்கிறது. அதனால் மதமாற்றமும் நடக்கிறது

பர்மியத் தமிழர்களில் கணிசமானோர் முக்குலத்தோர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். முத்துராமலிங்கத் தேவரின் படம் பல வீடுகளில் வைக்கப்பட்டுள்ளது. சிறு தெய்வ வழிபாடுகளும் இங்குள்ளது. பெரும்பாலானோர் சைவர்களாக இருப்பதால் சிவன், முருகன், அம்மன் கோயில்களை அதிகம் காணமுடிகிறது. வள்ளலாரின் சன்மார்க்க சங்கமும் இங்கே வேரூன்றியுள்ளது.

தமிழ் அடையாளமும் இந்து அடையாளமும் இங்கே பின்னிப் பிணைந்து இருக்கின்றன. பொதுவாக, தமிழ் மொழியைப் படிப்பதை விட திருவிழாக்களிலும் சமயச் சடங்குகளிலும் கலந்து கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.


தொடரும்

பிபிசி தமிழோசை
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல