திங்கள், 10 பிப்ரவரி, 2014

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 13

பர்மியத் தமிழர்கள் தங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதையும் அரச வேலைவாய்ப்புக்களில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் இந்த பாகத்தில் பார்க்கலாம்.

தமிழர்கள் பர்மாவில் சுமார் இருநூறு ஆண்டுகளாக வாழ்கின்றனர்.

கிராமங்களிலும், நகரங்களிலும் வசிக்கும் பல தமிழர்கள், பர்மியர், இந்து, தமிழர் ஆகிய மூன்று அடையாளங்களையும் சேர்த்தே பயன்படுத்துகின்றனர்.

இங்கிருக்கும் பலர் பர்மாவிலேயே ஐந்தாறு தலைமுறைகளாக இருக்கின்றனர். திருமணங்கள் கூட பெரும்பாலும் நெருங்கிய வட்டாரங்களுக்குள் நடக்கின்றன. சிலர்தான் இந்தியா சென்று மணம் முடிக்கின்றனர்.

கணிசமானோர் பர்மிய குடிமக்களாக அங்கீகரிக்கப்படவில்லை. குடியுரிமை பெறாதவர்கள் அரச வேலைவாய்ப்புகளில் உயர்ந்த நிலையை எட்ட முடியாது உள்ளதாக கூறுகிறார் ரங்கூனில் கல்லூரி ஆசிரியராக பணியாற்றும் தமயந்தி.

குடியுரிமையை அரசாங்கம் வழங்கிய கால கட்டங்களில் பல தமிழர்கள் அஜாக்கிரதையாக இருந்தமையால்தான் இந்த நிலை ஏற்பட்டது என்று விமர்சனமும் சமூகத்தில் இருக்கிறது.

அரசு வேலைகளில் தமிழ் இளைஞர்களுக்கு நாட்டமில்லை

குடியுரிமை – பாஸ்போர்ட் இல்லாவிட்டால் கூட இந்தியாவுக்கு தரை மார்க்கமாக பலர் வந்து சென்றுள்ளனர்.

பர்மா சுதந்திரம் அடைந்த காலத்தில் இராணுவம், காவல்துறை, கல்வி, அரச நிர்வாகம் உள்ளிட்ட பல அரசதுறைகளில் தமிழர்கள் இருந்தனர். 1962 இல் முன்னெடுக்கப்பட்ட தேசிய மயமாக்கம் நடவடிக்கைக்குப் பின், பாதுகாப்புத் துறையில் இருந்து சிறுபான்மையினர் வெளியேற்றப்பட்டனர்.

விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழர்களே அரச நிர்வாகத்தில் உயர் பதவிக்கு வந்துள்ளனர். அப்படி வந்தவர்களில் ஒருவர் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்ற, மோல்மின்னில் இருக்கும் மு ந மாணிக்கம்.

தான் பணிபுரிந்த காலத்தில் பாரபட்சத்துக்கு உள்ளானதாகக் கூற முடியாது என்றாலும் தற்போது நிலைமை அப்படியல்ல என்கிறார் இவர்.

அதேநேரம் தகுதிவாய்ந்த பல தமிழ் இளைஞர்கள் அரச வேலைகளை நாடுவதில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அரசு வேலைகளில் சம்பளம் குறைவு என்பதாலும், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவு என்பதாலும் இளைய தலைமுறையினர் அரச வேலைவாய்ப்புக்களை விட சுய தொழில் செய்வதையே விரும்புகின்றனர். இதனால் அரசு வேலை கிடைக்கவில்லை என்பது சமூகத்தினரிடையே ஒரு பெரிய குறையாக இல்லை.

பர்மாவில் வாழும் தமிழர்கள் அனைவரும் தமது தமிழ்ப் பெயருடன், பர்மியப் பெயரையும் வைத்துக்கொண்டுள்ளனர். ஆவணங்களில் பயன்படுத்த எளிதாக இருக்கும் என்பதாலேயே மக்கள் இப்படிச் செய்வதாக கூறினார் ரங்கூன் வர்த்தகர் மு க முனியாண்டி.


தமிழர் இழந்து, மீண்ட கதை

பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமாக 1937 ஆம் ஆண்டுவரை பர்மா இருந்ததால், நூறு ஆண்டுகளுக்கம் மேலாக எவ்விதப் பிரச்சனையும் இன்றி தமிழர்கள் அங்கே ஏராளமாக குடியேறியிருந்தார்கள். இரண்டாம் உலகப் போரும் அதன் பின் அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் இந்தியர்களுக்கு எதிரான ஒரு சூழலை அங்கு ஏற்படுத்தியது.

இரண்டாம் உலகப் போர் துவங்கிய பிறகு, ஜப்பானியப் படையெடுப்புக் காரணமாக, பிரிட்டிஷ் நிர்வாகத்தில் வேலை செய்வதற்காக பர்மா சென்றிருந்த படித்தவர்கள் ”கூட்டம் கூட்டமாக” பர்மாவை விட்டு வெளியேறினர்.

சென்னையில் வசிக்கும் 92 வயதான பி. வி. கிருஷ்ணமூர்த்தி, பர்மாவில் பிறந்து வளர்ந்தவர்.

தனது தந்தை அரசுப் பணியில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு ரங்கூனுக்கு அருகே, சைவ உணவு சாப்பிடும், குஜராத்திகளும், தமிழ் பிரம்ணர்களும் குடியிருப்பதற்கென உருவாக்கப்பட்ட பகுதியில் தனது தந்தை ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டி வாழ்ந்ததாக கூறுகிறார். அமைதியாக வளமாக இருந்த இவர்களின் வாழ்க்கை இரண்டாம் உலகப் போரால் மாறியது.

போர் ஆரம்பித்த பிறகு, அனைத்தையும் அங்கேயே விட்டு, இந்திய திரும்ப தனது குடும்பம் முடிவு செய்ததாகக் கூறும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தாம் செல்லவிருந்த கப்பல் புறப்படத் தயாராக இருந்த வேளையில் வான் தாக்குதல்கள் நடைபெற்றதை இன்றும் நினைவு கூருகிறார்.

இந்தியாவுக்கு வந்த பிறகு சிறிது காலம் கஷ்டத்தை அனுபவித்த இவருக்கு, அரச வானோலியில் வேலை கிடைத்தது. பின்னர், தூர்தர்ஷனின் தலைவராக பதவி விகித்த இவர், ஐ நா அமைப்புக்களிலும் பணியாற்றியுள்ளார். தமது தந்தை இந்தியக் கூலித் தொழிலாளிகளுக்காக, பர்மாவில் பள்ளிக்கூடத்தை நிறுவியதாக பெருமையுடன் நினைவுகூரும் கிருஷ்ணமூர்த்தி, இந்தியர்கள், உள்ளூர் மக்களை மதிக்கவில்லை என்றும் அதனால்தான் அவர்களுக்கு இந்தியர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது என்றும் கூறுகிறார்.

செட்டிமார்

தமிழ் சமூகத்தில் கல்விரீதியாக முன்னேறிய பிராமணர்கள் அரச நிர்வாகத்தில் அதிகம் இருந்த அதேவேளை, நகரத்தார் என்று அழைக்கப்படும் காரைக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த செட்டியார்கள் பெரும் நிலக்கிழார்களாக உயர்ந்தனர். பர்மாவில் கிடைத்த செல்வமே, வறண்ட பூமியான செட்டிநாட்டில் பல அழகிய மாளிகைகள் எழ வழி செய்தது. கோயில்களையும், கல்விச் சாலைகளையும் அமைத்த நகரத்தார்கள், பல வங்கிகளையும் தொழிற்சாலைகளையும் துவங்கினர்.

பர்மா சுதந்திரமடைந்த பிறகு, நிலங்கள் படிப்படியாக தேசியமயமாக்கப்பட்டன. வட்டித் தொழிலும் தடை செய்யப்பட்டது. வேறு தொழில் தெரியாத நிலையில் பல செட்டியார்கள் 1960 களில் இந்தியா திரும்பினர்.

தற்போது 87 வயதாகும் லட்சுமணன் செட்டியார் பர்மாவின் நீர் வளத்தையும், நில வளத்தையும் பிரதானமாக நினைவு வைத்திருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் பலரிடமிருந்து இவரால் பணத்தை வசூலிக்க முடியவில்லை. மேலும் இவர் தன்னிடமிருந்த பொருட்களையும், அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக முழுமையாக கொண்டுவர முடியவில்லை.

இந்தியா வந்த பின்னர் சுய தொழில் செய்து படிப்படியாக முன்னேறி தமது பிள்ளைகளை ஒருவாறு நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட்டார் லட்சுமணன் செட்டியார்.

பர்மாவில் செட்டியார்கள் 10 லட்சம் ஏக்கருக்கு மேல் நிலங்களையும் பிற சொத்துக்களையும் இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 70க்கும் மேற்பட்ட நகரங்களில் இருக்கும் நிலங்களையும் மற்ற சொத்துக்களையும் மீட்க பர்மா நகரத்தார் முதலீட்டுக் குழு என்ற அமைப்பு தற்போது முயற்சிக்கிறது.

தொடரும்

பிபிசி தமிழோசை
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல