திங்கள், 10 பிப்ரவரி, 2014

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 7

இந்தியாவிடம் ஒய்வூதியத்தை எதிர்பார்க்கும் நேதாஜியின் படையினர்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்திய வழியை ஏற்காத பலர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுபாஷ் சந்திர போஸோ தனியாக படையமைத்து பிரிட்டனுடன் போராடினார். நேதாஜியின் படைக்கு முதுகெலும்பாக இருந்தது தென் கிழக்கு ஆசியாவிலும் பர்மாவிலும் வாழ்ந்த தமிழர்கள்தான்.



நேதாஜியின் வசீகரத் தலைமையின் கீழ் சென்றவர்களில் ஒருசிலரே தற்போது மிஞ்சி இருக்கின்றனர். அவர்களும் வறுமையில் உழல்கின்றனர். ஆனால் தமது பழைய நாட்களை பெருமையோடு நினைவு கூர்கின்றனர்.

ரங்கூனில் நேதாஜியோடு தொடர்புடைய இடங்களை நமக்குக் காட்டினார் இந்திய தேசிய இராணுவத்தில் இருந்த லெப்டினன்ட் பெருமாள். தற்போது 88 வயதாகும் இவர் நேரடியாக போரில் ஈடுபடவில்லை. வீடு வீடாக சேர்ந்த படைக்கு ஆள் திரட்டும் பணியை இவர் செய்தார்.

தற்போது 94 வயதான முத்துவேல் இந்தியாவின் புதுக்கோட்டையில் பிறந்தவர். நேதாஜி மற்றும் ஐஎன்ஏ குறித்த படங்களையும்,பத்திரிக்கை செய்திகளையும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். தான் பார்த்த கணக்காளர் வேலையை உதறிவிட்டு, இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்த இவர், நேதாஜின் பங்களிப்பு மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைத்திருக்காது என்கிறார்.

ஒய்வூதியம்

இந்திய அரசு இந்தியாவில் வாழும் முன்னாள் ஐ என் ஏ வீரர்களுக்கு மாதம் தோரும் 15 ஆயிரம் ரூபாய் ஒய்வூதியம் அளிக்கிறது. சில மாநில அரசுகளும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவுகின்றன. ஆனால் பர்மாவில் தற்போது இருப்போருக்கு இந்த ஒய்வூதியம் கொடுக்கப்படுவதில்லை. இந்த கொள்கை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்கிறார் பெருமாள்.

பிரிட்டிஷ் படையில் பணிபுரியும் கூர்க்கா இனத்தவர் மீண்டும் தமது நாட்டுக்குத் திரும்பினாலும் அந்நாடு ஒய்வூதியம் அளிக்கிறது. அதே போல இந்தியாவும் செய்ய வேண்டும். நான் இது குறித்து இந்தியப் பிரதமருக்கு எழுதினேன். அவர் என்னை இந்தியாவுக்கு வரும்படி கூறினார். நான் 17 பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் இங்கே இருக்கிறேன். இவர்களையெல்லாம் விட்டு நான் போக முடியாது என்றார் பெருமாள்.

இந்திய குடிமகன்களுக்கு மட்டுமே தியாகிகளுக்கான ஒய்வு ஊதியம் அளிப்பது என்று அரசு முடிவெடுத்துள்ளதாக, விடுதலைப் போராட்ட வீரர்களின் விடயங்களை கவனிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தமிழோசையிடம் தெரிவித்தார்.

பின்னணி

1940களில் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகள் ஜப்பான் வசம் இருந்தன. ஜெர்மனியில் இருந்து ஜப்பானுக்கு நீர்முழ்கிக் கப்பலில் பயணம் செய்து 1943 இல் ஜப்பானை சென்றார் சுபாஷ் சந்திர போஸ். அதன் பிறகு ராஸ் பிகாரி போசால் உருவாக்கப்பபட்ட இந்திய தேசிய லீக்கின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். நாடு கடந்த அரசாங்கத்தை உருவாக்கிய போஸ், தனி வங்கிகளை, செய்தித் தாள்களை ஆரம்பித்தார். வானொலி மூலம் வெளிநாட்டு இந்தியர்களிடம் பேசினார். படைக்கு ஆள் சேர்த்தார். ஆயுதம் ஏந்தி போருக்கு புறப்படுவோர் திரும்பி வருவது நிச்சயமல்ல என்பதை நேதாஜி தனது வீர்ர்களுக்குத் தெளிவுபடுத்தினார். இருந்தும் இடையூறுகளைப் பற்றி கவலைப் படாமல் அவரின் பின் பல தமிழர்கள் திரண்டனர். பர்மாவில் இருந்த செட்டியார்களோ அவருக்கு பொருளதவி செய்தனர்.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்துக்கு தென் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த தமிழர்கள் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளதாக்க கூறுகிறார் சுபாஷ் சந்திபோஸின் ஒன்று விட்ட கொள்ளுப் பேரனும் அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் பணியாற்றுபவருமான பேராசிரியர் சுகதா போஸ்.

“தெற்காசியாவில் வாழும் இந்தியர்களில் தமிழர்கள்தான் அதிக அளவு இருந்தார்கள். நேதாஜியும் பிரிட்டன் முன்வைத்த மார்ஷியல் ரேஸ் தியரியை நிராகரித்தார். அதாவது சீக்கியர்கள், பத்தான்கள், ராஜபுத்திரர்கள் என சில சமூகத்தினரே சண்டைக்கு லாயக்கு என்று நினைத்து அந்த சமூகத்தினரைத்தான் பிரிட்டிஷ் அரசு அதிக அளவில் இராணுவத்தில் எடுத்தது. ஆனால் நேதாஜியோ அதிக அளவிலான தமிழர்களை தனது படையில் சேர்த்தார். பர்மியத் தமிழர்கள் அதிக அளவில் படையில் சேர்ந்தனர். பெண்கள் படையான ஜான்சி ரெஜிமெண்டில் ஒருசில வங்காளிகளைத் தவிர மற்ற அனைவருமே தமிழர்கள்தான். இந்தப் படையின் தலைவர் லஷ்மி சுவாமிநாதன். சிங்கப்பூரைச் சேர்ந்த சத்யவதி தேவரும், மலேசியாவைச் சேர்ந்த ஜானகி தேவரும் அந்தப் படைப் பிரிவில் முக்கிய பங்காற்றினார். ஜானகி பின்னாளில் மலேசியா செனட்டின் உறுப்பினராக இருந்தார்” என்றார் சுகதா போஸ்.

இரண்டாம் உலகப் போரின் போது மேற்கத்திய இராணுவங்களே பெண்களை போர்க்களத்துக்கு அனுப்பவில்லை. நேதாஜி பெண்களை படையில் சேர்த்தது பெண்களின் சமூக அந்தஸ்த்தை பெருமளவு உயர்த்தியதாக சென்னையில் பிறந்த லஷ்மி சுவாமிநாதன் ஒரு செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

கோஹிமா, இம்பால் போன்ற இடங்களில் முதலில் சில வெற்றிகளைப் பெற்ற இந்திய தேசிய இராணுவம், பிரிட்டிஷாரின் எதிர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் தோல்வியும், விமான விபத்துக்குப் பின் நேதாஜி மறைந்ததாக செய்திகள் பரவியதையடுத்தும் ஐ என் ஏ பெருமளவு சிதைந்து போனது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஐ என் ஏவில் இருந்த பல வீரர்கள் தத்தமது நாடுகளிலேயே இருந்து விட்டனர்.

நேதாஜி மற்றும் இந்திய தேசிய இராணுவத்தின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒரு நினைவுச் சின்னத்தை ரங்கூனில் இந்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் முன்னாள் ஐ என் ஏ வீரர்கள் விரும்புகின்றனர்.

தொடரும்

பிபிசி தமிழோசை
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல