வியாழன், 20 பிப்ரவரி, 2014

ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலை: இடைக்கால தடை 3 பேருக்கா? 7 பேருக்கா?

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தொடர்பாக, மத்திய அரசின் மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.



சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவு, மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார்.

மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட தண்டனை குறைக்கப்பட்ட மூவரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று அவசரமாக மனு தாக்கல் செய்தது. மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் மோகன் பராசரன் தாக்கல் செய்த அந்த மனுவில், “ராஜிவ் காந்தி கொலை வழக்கை மத்திய புலனாய்வு துறை விசாரித்த நிலையில், வழக்கில் தண்டனை பெற்றவர்களை மாநில அரசு விடுவிக்க முடியுமா?” என்று விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில், நண்பகல் 12.45 மணிக்கு விவாதம் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், 3 நாட்களில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்தது.

“தமிழக அரசு, இந்த மூன்று பேரின் விடுதலை தொடர்பாக, விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை” என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை வருகிற மார்ச் மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இப்போது, மற்றொரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரது விடுதலைக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்க பட்டுள்ளது. அப்படியானால், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவதில் சிக்கல் இல்லையா? அல்லது அவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்துமா? என்பதுதான் குழப்பம்!

Viruvirupu
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல