செவ்வாய், 25 மார்ச், 2014

ஜெனிவாவில் பிளவுபட்டு நிற்கும் தமிழர் தரப்பு


ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 25ஆவது கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் சமகாலத்தில் கடந்த வியாழக்கிழமை ( மார்ச் 20) ஐக்கிய நாடுகள் சபை உலக மகிழ்ச்சி தினத்தையும் கொண்டாடியது.உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் ஒன்றையும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருந்தது.



உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ள சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமை கூட்டத்தொடரில் அதிகம் பேசப்படும் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் நாடுகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் இலங்கை உலக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 137ஆவது இடத்திலேயே உள்ளது. 156 நாடுகள் மதிப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இலங்கை 137ஆவது இடத்தைதான் பெற்றிருக்கிறது. டென்மார்க், நோர்வே, சுவிட்சர்லாந்து, ஆகிய ஐரோப்பிய நாடுகள் மகிழ்ச்சியான நாடுகள் என முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ள அதேவேளை உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் கடைநிலை வரிசையின் இருபது இடங்களில் ஒன்றையே இலங்கை வகித்து வருகின்றது. தென் ஆசிய பிராந்திய வலயத்தில் இலங்கை மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றது.

மகிழ்ச்சி அற்ற நாடு என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் சிறிலங்காவிலிருந்து மகிழ்ச்சியான நாடு என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் சுவிட்சர்லாந்திற்கு வந்திருக்கும் சிறிலங்கா குழுவுக்கு இங்கும் மகிழ்ச்சியான நிலை காணப்படவில்லை என்பதை தான் அண்மைய நாட்களாக ஜெனிவாவில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது தெரிகிறது.

கடந்த 3ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 25ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான போதிலும் இறுதி மூன்று நாட்களான 26ஆம், 27ஆம், 28ஆம் திகதிகள் சிறிலங்காவை பொறுத்தவரை மகிழ்ச்சியாக இருக்கப்போவதில்லை என்பது மட்டும் உண்மை.

26ஆம் திகதி இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறார். அன்றைய தினம் இந்த அறிக்கை தொடர்பான வாதங்கள் நடைபெற உள்ளன. இந்த அறிக்கையை ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்திருக்கிறது. சிறிலங்கா இதனை நிராகரித்த போதிலும் இந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக அன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மனித உரிமை பேரவை ஆணையாளரால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை மீது விவாதம் நடைபெறுமே ஒழிய வாக்கெடுப்பு நடத்தப்படுவது கிடையாது. சிறிலங்கா அரசு இதனை விரும்பாவிட்டாலும் மனித உரிமை பேரவை அந்த அறிக்கையை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளும். இந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயக்கும் நிறுவனங்கள் உட்பட இலங்கைக்கு உதவி வழங்கும் உலக வங்கி போன்ற பெரிய நிறுவனங்களும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் சிறிலங்காவை அசைக்க முடியாது என சிறிலங்கா தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களும் பரிந்துரைகளும் சிறிலங்காவுக்கு உவப்பானதல்ல. மாறாக இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறினால் நெருக்கடிகளை எதிர்நோக்குவது தவிர்க்க முடியாததாகும்.

27ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை அமெரிக்கா சமர்ப்பிக்க உள்ளது. இதன் மீதான வாதங்கள் அன்றைய தினம் நடைபெற்று அன்றே வாக்கெடுப்பு நடத்தப்படலாம். அல்லது மறுநாள் 28ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படலாம்.

இந்த வாக்கெடுப்பில் இன்றைய நிலையில் அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகிறது. பொதுவாகவே அமெரிக்கா வெற்றி பெறக் கூடிய சூழல் இருந்தால் மட்டுமே பிரேரணையை முன்வைப்பது வழமை. இதனால் தான் இந்த பிரேரணையில் என்ன உள்ளடக்கம் இருக்கிறது என்று கவனத்தை செலுத்துவதை விட இது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரேரணையின் சில வாசகங்களை மாற்றி நெகிழ்வுப் போக்கை அமெரிக்கா கடைப்பிடிக்கிறது என தமிழர் தரப்பில் உள்ள சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த பிரேரணைக்கு எதிராக சிறிலங்காவும் சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகளும், இப்பிரேரணைக்கு ஆதரவாக அமெரிக்கா கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தமிழர் தரப்பில் உள்ள ஒரு சாராரும் உள்ளனர்.

இந்த பிரேரணையை சிறிலங்கா அரச தரப்பு எதிர்ப்பதை போல தமிழர் தரப்பு ஒன்றும் எதிராக பேசி வருவதை அவதானிக்க முடிகிறது. இதன் மூலம் ஜெனிவாவில் தமிழர் தரப்பு பிளவு பட்டு நிற்பதையே காணமுடிகிறது.

இந்த பிரேரணையை முற்றாக எதிர்க்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் தமிழீழ பேரவை, ஒருதரப்பாக இயங்குகின்றனர். இவர்களின் நிகழ்ச்சி நிரலிலேயே வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது.

இந்த பிரேரணையை ஆதரிக்கும் தரப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலக தமிழர் பேரவை, ஆகியோர் காணப்படுகின்றனர்.
அமெரிக்காவின் பிரேரணை வரைவு தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா.மனித உரிமை பேரவையின் 12ஆம் இலக்க அறையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இப்பிரேரணையை ஆதரிக்கும் தரப்பாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் பேசும் போது கடந்த 3ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்ட முதலாவது வரைபை விட இந்த வாரம் வெளியிடப்பட்ட இரண்டாம் வரைவு வலுவுள்ளதாக இருப்பதாக தெரிவித்தார்.

முதலாவது வரைவில் சர்வதேச விசாரணை பொறிமுறை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும் இரண்டாவது வரைவில் அது தெளிவாக்கப்பட்டு அந்த விசாரணையை நடத்தும் அதிகாரத்தை ஐ.நா.மனித உரிமை ஆணையாளருக்கு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.

நடந்த போர்க்குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டும் என இருந்த சொற்பதம் விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என மாற்றப்பட்டிருக்கிறது.

மனித உரிமை பேரவை ஆணையாளருக்கு விசாரணை நடத்த அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்விக்கு இடமில்லாத வகையில் இப்பிரேரணை அமைந்திருப்பதாகவும், சுயாதீன நிபுணர் குழுவின் ஒத்துழைப்பு தொடர்பாக இரண்டாம் வரைவில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தடயங்கள் சாட்சியங்களை பரிசோதிக்கும் போது வெளியில் இருந்து சர்வதேச நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்ளவும் சுயாதீனமான நிபுணர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளவும் புதிய வரைவில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இந்த பிரேரணையில் முக்கிய குறைபாடு தமிழர் பிரச்சினை மதச்சிறுபான்மை இனத்தின் பிரச்சினையாக சுருக்கப்பட்டிருக்கிறது என்று இப்பிரேரணை ஆதரிக்கும் தரப்பான நாடுகடந்த தமிழீழ அரசாங்க தகவல்துறை அமைச்சரான சுதன்ராஜ் கூறுகிறார்.

ஆனால் இந்த பிரேரணை சிறிலங்கா அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்கும் நோக்குடன் கொண்டுவரப்பட்டிருக்கிறது என இந்த பிரேரணையை நிராகரிக்கும் தமிழர் தரப்பு கூறுகிறது.

இந்த வரைவு முழுமையான சர்வதேச விசாரணையை கோரிய வரைவு என கூற முடியாது என ஜெனிவாவில் தற்போது தங்கியிருக்கும் யாழ். பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைகள் பேரவை எந்தத் தரப்பினரையும் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்ல தகைமையற்றது. குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தகைமை சர்வதேவ நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. அதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்பது சட்டத்தரணி குருபரன் போன்றவர்களின் வாதம்.

இந்த பிரேரணையில் பிரதான பந்தியில் இலங்கை மீண்டும் தனக்கான உள்ளக விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதில் எட்டாவது பிரிவில் ஐ.நா.மனித உரிமை பேரவையின் ஆணையாளர் தொடர்ந்து இலங்கையில் நடைபெறும் தேசிய செயல்முறைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் சர்வதேச விசாரணைக்கு தலைமை தாங்குமாறும் கேட்டிருக்கிறது.

ஆனால் அந்த சர்வதேச விசாரணையின் தன்மை, காலவரையறை, எதனை செயற்படுத்துவது என்பது குறித்து எந்த தெளிவும் இல்லாமல் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை விசாரணை நடத்துமாறும், அந்த விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை தொடர்பாக 27ஆவது கூட்டத்தொடரில் வாய்மொழி மூல அறிக்கையையும் 28ஆவது கூட்டத்தொடரில் எழுத்து மூல அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு இந்த பிரேரணை கோரியிருக்கிறது. இது இந்த பிரேரணையின் பலவீனத்தை காட்டுகிறது என்றும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மேலும் ஒரு வருடகால அவகாசத்தை வழங்கும் நடவடிக்கை என்றும் இப்பிரேரணையை எதிர்க்கும் தரப்பு கூறுகிறது.

உண்மையில் இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் உள்நாட்டில் முரண்பட்டு நிற்பது போலவே ஐ.நா.மனித உரிமை பேரவையில் அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணை விடயத்திலும் தமிழர் தரப்பு முரண்பட்டு நிற்கிறது.

இலங்கையிலிருந்து வந்த தமிழர் தரப்பும் சரி, மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சரி, ஒன்றுபட்டு சர்வதேச சமூகத்திடம் ஒரு திடமான கோரிக்கையை முன்வைக்கும் வகையில் செயற்படுவதாக தெரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் குருபரன் போன்றவர்கள் இராஜதந்திரிகளை சந்தித்து நிலைமைகளை விளக்கும் ஆற்றல் கொண்டவர்களாக காணப்படுகின்ற போதிலும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி போன்றவர்கள் வேடிக்கை பார்க்க வந்து சென்றவர்களை போலவே காணப்பட்டனர்.

ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் ஜெனிவாவுக்கு சுமந்திரனுடன் வந்த அனந்தி சசிதரன் இம்முறை அவருடன் முரண்பட்ட நிலையிலேயே ஐரோப்பாவில் இருக்கும் விடுதலைப்புலிகள் தரப்பின் நிகழ்ச்சி நிரலிலேயே செயற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

கடந்த முறை ஜெனிவாவுக்கு வந்து வேடிக்கை பார்த்து விட்டு சென்றதாக ஆனந்தி முன்னர் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்திருந்தார். இம்முறை அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் தமிழில் பேசி சாதனை படைத்துள்ளார் என்று சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அனந்தி ஐ.நா.மனித உரிமை பேரவையில் தமிழில் பேசி சாதனை படைத்தார் என பிரமிப்பவர்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நடைமுறை என்ன என்பது தெரியவில்லை என்றே தோன்றுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் மூன்று தரப்பினர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உறுப்பு நாடுகள், மனித உரிமை அமைப்புக்கள் மனித உரிமை அமைப்பு தொடர்பான அரசசார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஊடகவியலாளர்கள்.

இது தவிர நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றோ மாகாணசபை உறுப்பினர்கள் என்றோ அல்லது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என்றோ மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியாது.

சுமந்திரனாக இருக்கட்டும், அனந்தியாக இருக்கட்டும் அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலமாக இருக்கட்டும், இவர்கள் அனைவரும் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊடாக அவர்களின் பிரதிநிதிகளாகவே கலந்து கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமகாலத்தில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் உள்ள சுமார் 20க்கு மேற்பட்ட அறைகளில் கூட்டங்கள் நடைபெறுவது வழமை. இந்த கூட்டங்களை நாடுகள் அல்லது மனித உரிமை அமைப்புக்கள் ஏற்பாடு செய்வதுண்டு.

பணம் இருந்தால் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக முறைசார கூட்டம் ஒன்றை மனித உரிமை பேரவை அறை ஒன்றில் ஏற்பாடு செய்ய முடியும். அப்படி அறைகளில் நடைபெறும் கூட்டங்களில் பேசிவிட்டு மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் பேசினோம் என பிரமை ஏற்படுத்தும் சம்பவங்களையும் இங்கு காணமுடிகிறது.

லண்டனில் இருக்கும் ஜனனி ஜனநாயகம் என்பவரின் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு 22ஆம் இலக்க அறையில் ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றிலேயே அனந்தி தமிழில் உரையாற்றியிருந்தார். இதனையே மனித உரிமை கூட்டத்தொடரில் அனந்தி தமிழில் பேசி சாதனை படைத்தார் என சில ஊடகங்கள் பிரசாரம் செய்திருந்தன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரதான கூட்டத்தில் தமிழுக்கு மட்டுமல்ல ஐ.நா.மனித உரிமை பேரவை அமைந்திருக்கும் சுவிட்சர்லாந்தின் பெரும்பான்மை மாநிலங்களில் பேசப்படும் ஜேர்மன் மொழிக்கும் இடமில்லை.

பிரதான கூட்டத்தொடரில் பேசுவதற்கு ஆங்கிலம், பிரென்ஸ், சீனா, அரபு, ரஷ்ய மொழிகள் மட்டுமே அங்கீகாரம் உண்டு. இந்த ஐந்து மொழிகளை தவிர ஐரோப்பிய மொழிகளான ஜேர்மன், இத்தாலி, டெனிஸ், உட்பட உலகத்தில் உள்ள வேறு எந்த மொழிக்கும் அங்கு இடம் இல்லை. நிலமை இவ்வாறு இருக்கும் போது மனித உரிமை கூட்டத்தொடரில் அனந்தி தமிழில் பேசி சாதனை படைத்தார் என பிரசாரம் செய்பவர்களின் நோக்கம் தான் புரியவில்லை.

இது தவிர மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை உறுப்பினர் என அனந்தி தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாலும் அவரை ஐரோப்பிய நாடுகள் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாகவே பார்ப்பார்கள் என்பதுதான் உண்மை. விடுதலைப்புலிகள் இன்று இலங்கையில் அழிக்கப்பட்டாலும் ஐரோப்பிய நாடுகளும் சரி அமெரிக்கா கனடா போன்ற நாடுகளும் சரி அந்த அமைப்பை தடை செய்த அமைப்பாகவே வருடாவருடம் பிரகடனம் செய்து வருகின்றன.

இந்த பிரேரணையில் கூட அரசாங்கத்திற்கு சமாந்தரமாக விடுதலைப்புலிகளும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்றும் மாநிடத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்தார்கள் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இருதரப்பும் இழைத்த குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்பதே மேற்குலக நாடுகளின் நிலைப்பாடாகும்.

இது தவிர அறைகளில் முறைசார வகையில் நடத்தப்படும் கூட்டங்களில் எந்த மொழியிலும் பேசலாம். இந்த கூட்டங்களில் பேசி விட்டு ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடரில் பேசியதாக பிரமை ஏற்படுத்துவதிலும் சிலர் முன்நிற்பதை அவதானிக்க முடிகிறது.

ஜெனிவா ஐ.நா.மனித உரிமை பேரவையில் 27ஆம் திகதி முன்வைக்கப்படும் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படுவது சிறிலங்காவுக்கு கசப்பாக இருந்தாலும் ஜெனிவாவில் தமிழர் தரப்பு முரண்பட்டு நிற்பது சிறிலங்கா தரப்புக்கு இனிப்பான விடயம் தான்.

 - இரா.துரைரத்தினம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல