செவ்வாய், 20 மே, 2014

ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் குறைப்பிரசவ முயற்சியின் உடற்கூற்றியல் (1)

பகுதி - 1

தேவிகன் - அப்பன் - கோபி மூவர் குழாத்தின் தலைமையில் ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் புலம் பெயர்ந்தவர்களின் மூன்றாவது முயற்சி எப்படி முறியடிக்கப்பட்டது - கட்டுரையின் மூன்றாவது பகுதி

ஜெயகுமாரி பாலேந்திராவினை கைது செய்து தடுத்து வைத்ததின் விளைவாக அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்து பெரும் கூக்குரல் எழுந்தது. ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் ஆகியோர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் நன்கு அறியப்பட்ட பங்கேற்பாளர்களாக இருந்ததால் இந்தக் கைதுக்கு ஒரு எதிர்மறை ஒளி பாய்ச்சப்பட்டது. மனித உரிமையை பாதுகாப்பவர்களை அச்சுறுத்தி அவர்களை மௌனமாக்கும் முயற்சிக்காக மனித உரிமைகள் ஆர்வலர்களை அரசாங்கம் வேட்டையாடுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ க்கு புத்துயிர் ஊட்ட முயற்சிப்பவர்களுடன் ஜெயகுமாரிக்கு தொடர்பு உள்ளதாக சாட்டப்படும் குற்றச்சாட்டு பாதுகாப்பு தரப்பினரின் கற்பனையில் உருவான கட்டுக்கதை என்று அலட்சியமாக புறந்தள்ளப் பட்டது.



ஜெயகுமாரி பாலேந்திராவின் கைது சில மணித்துளிகளுக்குள்ளேயே சர்வதேச மயமாக்கப் பட்டுவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் ஜெனிவாவிலுள்ள ஐநா வளாகத்தில் வைத்து இந்தக் கைது பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டார். பிரித்தானிய தமிழர் பேரவை, பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன்பாக ஜெயகுமாரி மற்றும் அவரது மகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி சேவை, ஆhப்பாட்டங்களில் பங்கெடுத்த பின் தான் பின்தொடரப்பட்டு வருவதாக ஜெயகுமாரி ஏற்கனவே வழங்கியிருந்த ஒரு நேர்காணலின் ஒளிப்பதிவுக் காட்சியை ஒளிபரப்புச் செய்தது.

ஓன்றுக்கொன்று தொடர்பான இரட்டை இயக்கமாகிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்(ஏ.சி.ரி.சி) மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி(ரி.என்.பி.எப்) மார்ச் 15 அன்று வவுனியா நகரத்தில் இந்தக் கைதுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தியது. இதில் சுமார் 50 பேர் வரை பங்கேற்றார்கள். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் காணாமற்போன நபர்களின் குடும்ப அங்கத்தவர்களாகும். பாhளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், விநோ நோகரதலிங்கம் வடக்கு மாகாணசபை அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டனீஸ்வரன், மற்றும் ரி.என்.ஏ வடக்கு மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி குணசீலன் போன்ற பல அரசியல்வாதிகளும் இதில் பங்கேற்றார்கள். இதில் பங்கேற்ற மற்றவர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் முன்னணி மனித உரிமைகள் ஆர்வலரான பிறிற்றோ பெர்ணாண்டோ ஆகியவர்களும் அடங்குவர்.

ஜெயகுமாரி பாலேந்திராவின் கைதினை தொடர்ந்து வடக்கில் மேலும் பல கைதுகள் மேற்கொள்ளப் பட்டன. காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு புலனாய்வாளர்கள், ஜெயகுமாரி பாலேந்திரா மற்றும் மேலும் பளையில் கைது செய்யப்பட்ட சுவரொட்டி ஒட்டியவர்கள் இரண்டு பேர்,ஆகியவரிடமிருந்து சேகரித்த தகவல்கள் மூலமாக 24 மணித்தியாலங்களுக்குள் இரு பாலாரையும் சேர்ந்த டசனுக்கு மேற்பட்டவர்களைக் கைது செய்தனர். இவர்களில் மாதினி ரவீந்திரன் என்பவரது வீட்டு வளவில் வைத்து கண்ணிவெடிகள்,கிரனைட்டுகள்,வெடிபொருட்கள் மற்றும் உலோக கண்டுபிடிப்பு கருவிகள் அடங்கிய பீப்பாய் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களின் விபரம் தமிழ் ஊடகங்களில் வெளியாகியிருந்தது, இது அரசாங்கம் மனித உரிமை ஆர்வலர்களை ஒடுக்க முயற்சிக்கிறது என்கிற குற்றச்சாட்டை நிரூபிக்கும் புதிய ஆதாரமாக பிரச்சார ஆலைகளினால் மேற்கொள்ளப்பட்டது.

கிளிநொச்சி

அரசாங்கம் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்களை சுற்றி வளைக்கிறது என்கிற குற்றச்சாட்டு;க்கு மார்ச் 16ல் நடத்தப்பட்ட புதிய முன்னேற்றங்களால் மேலும் புதிய உந்துதல்கள் ஏற்பட்டுள்ளன. இரண்டு பிரபலமான மனித உரிமை ஆர்வலர்கள்,ஒரு சிங்கள கத்தோலிக்க சமய குரு, மற்றவர் சிங்கள தமிழ் கலப்புள்ள பெற்றோரைக் கொண்ட கத்தோலிக்க மதகுரு ஆகிய இருவரும் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டார்கள். றுக்கி மற்றும் பிதா பிரவீண் என நன்கு அறியப்பட்ட முறையே திரு.குருகுலசூரிய றுக்ஷான் பெர்ணாண்டோ மற்றும் வண.பிதா. பிரவீண் மகேசன் செல்லத்துரை என்கிற பெயர்களைக் கொண்ட இருவரும் கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் ஒரு உண்மை அறியும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்கள். றுக்கி பெர்ணாண்டோ தற்சமயம் கொழும்பை தளமாகக் கொண்ட “இன்போர்ம் மனித உரிமைகள் ஆவண மையத்தின்” மனித உரிமைகள் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். பிதா. பிரவீண் மகேசன் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட சமாதானம் மற்றும் நல்லிணக்க மையத்தின் (சி.பி.ஆர்) பணிப்பாளராக கடமையாற்றுபவரும் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பகுதியில் உள்ள அமைதிபுரம் தேவாலயத்தின் பங்குத் தந்தையும் ஆவார்.

கிளிநொச்சியில் ஒரு உண்மையறியும் பணியில் ஈடுபட்டிருந்த இந்த இரட்டையர்கள், மாதினி ரவீந்திரன் மற்றும் கோபி என்கிற பொன்னையா செல்வநாயகம் கஜீபனின் தாயாரான ராசமலர் செல்வநாயகம், ஆகிய இருவரினதும் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு மனித உரிமை ஆர்வலர்களும் தர்மபுரத்தில் உள்ள ஜெயகுமாரி பாலேந்திராவின் வீட்டுக்கு போக முயற்சித்ததையிட்டு பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் அடைந்தார்கள். அந்த இருவரும் பாதுகாப்பு தடைச் சட்டத்தின் (பி.ரி.ஏ) கீழ் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் வைத்து விசாரணை செய்யப்பட்ட பின்னர் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்கள்.

அந்த இருவரினதும் குறிப்பாக றுக்கி பெர்ணாண்டோவினது கைது மனித உரிமை ஆர்வலர்கள் வட்டாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களது விடுதலையை கோரி ஏராளமான விண்ணப்பங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த எழுத்தாளர்கூட ஸ்ரீலங்காவில் அக்கறையுள்ள நபர்களால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பம் ஒன்றில் கையெழுத்திட்டிருந்தார். ஒரு சர்வதேச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டது. உண்மையில் ஜெயகுமாரி, றுக்கி பெர்ணாண்டோ, மற்றும் பிதா.பிரவீண் மகேசன் ஆகிய மூவரும் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டது பிரச்சார முழக்கத்தில் ஒரு அடிப்படையை ஏற்படுத்த உதவியது. “கிளிநொச்சியில் கைது செய்த மூவரையும் விடுதலை செய்” என்பதே அந்த முழக்கம். எனினும் அந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டு நடத்துவதற்கு அவசியம் எற்படவில்லை. அந்த இருவரையும் மார்ச் 19ல் நீதவான் முன்னால் ஆஜராக்கி மேலதிக விசாரணைகள் நிலுவையில் இருக்க அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அதேவேளை மனித உரிமைகள் பரப்புரையாளர்கள் அவர்களது விடுதலை தங்களது போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று சித்தரித்த போது, பாதுகாப்பு வட்டாரங்கள் அவர்கள் இருவரும் சந்தேகத்தின் பேரில் மட்டுமே கைது செய்யப்பட்டதாகவும், விசாரணையின்போது கைதானவர்கள்; ஒரு உண்மை அறியும் பணியிலேயே ஈடுபட்டதாக நம்பிக்கையை ஏற்படுத்தியதால் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக கருத்து தெரிவித்தன. எனினும் கைது செய்யப்பட்ட றுக்கி பெர்ணாண்டோ சர்வதேச ஊடகங்களான சி.என்.என் மற்றும் பி.பி.சி என்பனவவற்றில்;; அவரது தடுப்புக் காவல் பற்றி நேர்காணல் செய்யப் பட்டபோது, கொழும்பு அதிகாரிகள் அந்தச் சம்பவம் பற்றி றுக்கி மற்றும் பிதா.பிரவீண் ஆகிய இருவரும் வெளியே பேசுவதற்கு தடைவிதித்த ஒரு நீதிமன்ற தடை உத்தரவை பெற்றார்கள்.

கடும் நடவடிக்கை

அரசாங்கம் மனித உரிமைகள் பாதுகாவலர்களை இலக்கு வைக்கிறது, மற்றும் எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர்ப்பு எனச் சந்தேகப்படுவது ஒரு சுயசேவை நாடகம் என்று பரிகாசமாக அலட்சியப் படுத்தப்பட்டாலும், பாதுகாப்பு தரப்பினர் ஒரு மனதாக தங்கள் விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈயின் மீள்எழுச்சி என்பது பொதுவாக நாட்டிற்கும் மற்றும்; குறிப்பாக தமிழர்களுக்கும் பேரழிவு என்றே அர்த்தம். இதன்படி பல்வேறு புலனாய்வு முகவர்களும் தங்கள் வளங்களை ஒன்றுதிரட்டி காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருடனும் இணைந்து மிகக் கடும் நடவடிக்கையில் இறங்கினார்கள். அதேவேளை தேசிய, இராணுவ மற்றும் காவல்துறை புலனாய்வு பிரிவுகள் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டன, அதை நிறைவேற்றுவதற்கு வேண்டிய மனித வளங்களை இராணுவம் அவர்களுக்கு வழங்கியது. இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது, எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு முயற்சிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்புகள் முக்கியமான நாடுகளின் இராஜதந்திர அதிகாரிகளிடம் வழங்கப்பட்ட விடயம்.

பாதுகாப்பு தரப்பினரின் கடும் நடவடிக்கை, சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளுடன் ஆரம்பமாகியது. தகவல்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட இடம் பாதுகாப்பு சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காக இலக்கு வைக்கப்பட்டது என்றால், பாதுகாப்பு படையினர் திடீரெனப் பாய்ந்து இலக்கு வைத்த இடங்களை சுற்றி வளைத்துக் கொள்வார்கள்;. அதன்பின் அனைத்து இளைஞர்களும் விளையாட்டு மைதானம் ஒனறுக்கோ அல்லது திறந்த வெளி ஒன்றுக்கோ தங்கள் அடையாள ஆவணங்களுடன் வரவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்படும். அடையாள ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு அவர்களும் விசாரிக்கப்படுவார்கள். சந்தேகத்துக்கு இடமானவர்கள் உள்ளுர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப் படுவார்கள். அதன்பின் சிலர் தனிமைப் படுத்தப்பட்டு பயங்கரவாத புலன்விசாரணைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், அதேவேளை மீதமுள்ளவர்கள் விடுவிக்கபடுவார்கள். அதேவேளை இந்த நடவடிக்கை தொடரும்போது, வீட்டுக்கு வீடு தேடுதல் நடவடிக்கை மற்றொரு மட்டத்தில் இடம்பெறும்.

இந்த வகையான சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் வடக்கு பிரதான நிலப்பகுதியான வன்னியின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்றது. வவுனியா ஒட்டுசுட்டான், விஸ்வமடு,தர்மபுரம்,புதுக்குடியிருப்பு,மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அநேக கைதுகளும் இடம்பெற்றன. எனினும் இதனுடன் ஒப்பிடும்போது, யாழ்ப்பாண குடாநாட்டில் ஒரு பெரிய நடவடிக்கையை தவிர அநேகமாக இத்தகைய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் பெரிதாக இடம்பெறவில்லை.

ஒரு பெரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்றது.அந்த குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கோபி ஒளிந்திருக்கிறார் எனும் துப்பு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்தது. நூற்றுக்கணக்கான வாலிபர்கள் சுற்றி வளைக்கப்பட்டு, ஒரு விளையாட்டு அரங்குக்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப் பட்டார்கள். வீட்டுக்கு வீடு தேடுதல் மேற்கொள்ளப்பட்டு அங்கு குடியிருக்கும் குடும்ப அங்கத்தவர்களைத் தவிர ஏனைய வெளியாட்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். அந்த பிரதேசத்தில் வதியாதவர்களை அடையாளம் காட்டுமாறு கிராமசேவகர்கள் கேட்கப்பட்டார்கள். அப்படி அடையாளம் காட்டப்பட்டவர்களில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர். இது பிடிபட்ட பரிசுப் பொருளாக மாறியது. அது கோபி அல்ல, அனால் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவரான கந்தன் என்பவராவார். அவர் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் முயற்சியில் கோபியுடன் நெருங்கிச் செயற்பட்டவராவார் மற்றும் தகவல்களை சேகரிக்க ஒரு முக்கிய ஆதாரமாக இருப்பார் என்பதும் நிரூபணமாகியது.

ஒட்டுசுட்டான்

பொன்னையா செல்வநாயகம் கஜீபன் என்கிற கோபி, மற்றும் அப்பன் என்கிற நவரட்னம் நவநீதன் ஆகியவர்களின் பெயர்கள் அடங்கிய தேடப்படுபவர்கள் பற்றிய புதிய சுவரொட்டிகள் பரவலாக வெளியிடப்பட்டன. இந்த சுவரொட்டிகள் அதிக ஆர்வத்தையும் பரபரப்பையும் தூண்டிவிட்டன. எனினும் மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் பகுதியில் ஒரு எதிர்பாராத தாக்கம் ஏற்பட்டது. அடையாளம் தெரியாத நபர் அல்லது நபர்கள் திட்டமிட்;டு முறையாக ஒட்டுசுட்டான் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த இந்த தேடப்படுபவாகள் பற்றிய சுவரொட்டிகளை பொதுவாகக் கிழித்து சேதப்படுத்தி இருந்தார்கள்.

இதைப்பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது, அந்தப் பகுதியில் வசிப்பவர்களிடமிருந்து அதிகாரிகளுக்கு மேலதிக தகவல்கள் கிடைத்தன. அத்தகைய தகவல்களின்படி காவல்துறை இராணுவ நபர்களுடன் இணைந்து ஒரு தேடுதல் நடவடிக்கையை, ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள கூளாமுறிப்பு கிராமத்தில் மேற்கொண்டது. சலுஜன்(24), கமலதாஸ்(19), சுரேசன்(25), மற்றும் நஜீகரன்(25) என்கிற நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு ஒட்டுசுட்டான் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அந்த இளைஞர்களை விடுதலை செய்யம்படி ஒரு கூட்டம் திரண்டது. அவர்கள்மீது நடத்தப்படும் விசாரணைகள்; முடிவடைந்த பின்னர் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு விடுவிக்கப் படுவார்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்ட பின்னர் கூட்டம் கலைந்து சென்றது.

இந்த சம்பவத்தின் விளைவாக முன்னேற்றமான விடயமாக ஒட்டுசுட்டான் வாசிகளிடையே சாதகமான தாக்கம் ஏற்பட்டது. கோபியின் அங்க அடையாளங்களை ஒத்த நபர் ஒருவர் ஒட்டுசுட்டானில் கனரக வாகனங்களை நிறுத்துமிடத்தில் தனது வாகனத்தை றிறுத்தியுள்ளார் என்கிற துப்பு அதிகாரிகளுக்கு கிடைத்தது. சோதனைகள் மேற்கொண்டபோது, அந்த வளாகத்தில் கோபிக்கு சொந்தமான பார ஊர்தி ஒன்று நிறுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் நடத்தப்பட்ட தேடுதல்கள் அப்பனால் இயக்கப்பட்டு வந்த முச்சக்கர வண்டியொன்றும் அங்கு நிறுத்தப்பட்டிருப்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனங்கள் பற்றி நெருக்கமாக கண்காணித்து அது சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடத்தியபோது அந்த இரண்டு வாகனங்களும் ஒரு புகழ்பெற்ற நிதி நிறுவனம் மூலம் வாங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

கைதுகளும் அது தொடர்பான விசாரணைகளும் ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர்ப்பு ஏற்படுத்துவதற்கான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவு படுத்தின. உலகத் தமிழ் புலம்பெயர் அமைப்புகளில் உள்ள புலி சக்திகள் இதற்குப் பின்துணை வழங்கியுள்ளதுடன் நிதியும் வழங்குவாகவும் மேலும் தெரியவந்தது. இதில் மிகவும் சுவராஸ்யமான ஒரு விடயமாக இந்த புத்துயிர்ப்பு முயற்சிக்கு பரந்த அளவிலான கணணிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அநேகமாக சந்தேகத்துக்கு இடமான முறையில் கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரும் கணணி அறிவு பெற்றவர்களாகவே இருந்தார்கள். இவர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து இணையத் தளங்கள் மூலமாக தொடர்பு கொண்டிருந்தார்கள் மற்றும் கூட்டான ஒரு பிரிவாக இருக்கவில்லை. விசாரணைகளின் விளைவாக பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் 64 கணணிகள் கைப்பற்றப்பட்டன. இவைகளில் சில இன்னும் முற்றாகப் பரிசீலிக்கப்பட வேண்டியிருந்தாலும் இவற்றிலிருந்து அளவுக்கு அதிகமான தகவல்கள் பெறப்பட்டு விட்டன.

- டி.பி.எஸ் ஜெயராஜ்

 பகுதி -2
 பகுதி -3


(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல