யாழ்ப்பாணம்: ஒரே பார்வையில்
1025 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு (மொத்தமாக)
929 சதுர கி.மீ. நிலப்பரப்பளவு
96 சதுர கி.மீ உள்நாட்டு நீர்நிலைகள்
15520 ஹெக்டேயர் நெற்காணி
1530 ஹெக்டேயர் பயிர் நிலம்
1470 ஹெக்டேயர் தென்னந்தோட்டம்
33720 ஹெக்டேயர் வீட்டுத் தோட்டங்கள்
690 ஹெக்டேயர் கட்டடங்கள்
390 ஹெக்டேயர் தரிசு காணி
இற்றைக்கு 2500 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கொண்டுவாணாலாந்து என்றொரு நிலப்பரப்பு பூமியில் இருந்தது. இந்த நிலப்பரப்பின் எச்சமே இலங்கைத் தீவாகும் என்பது புவிச்சரிதவியலறிஞர்களின் கருத்தாகும். இவ்வாறு கருதப்பட்டாலும் புத்தளத்திலிருந்து முல்லைத்தீவு வரையிலான வடபுற வளைகோட்டிற்கு வடக்கே அமையும் பெரு நிலப்பரப்பும், யாழ்ப்பாணக் குடாநாடும், அதன் அயல் தீவுகளும் கொண்டுவாணாலாந்தின் எஞ்சிய பிரதேசங்களாகக் கொள்ள முடியாது. எனெனில் இவை 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய மயோசீன் என்ற காலத்திற்கு உரியனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனவே இலங்கைத் தீவின் மிக இளமையான நிலப்பரப்பென யாழ்ப்பாணக் குடாநாட்டையே குறிப்பிடமுடியும். இந்தியத் துணைக்கண்டமும் இலங்கையும் ஒரே வகையான அடித்தளப்பாறையிலேயே- அதாவது தொல்காலப் பளிங்குருப்பாறையில்- அமைந்திருக்கின்றன. 100 மீற்றர் சம ஆழக்கோட்டால் இரண்டும் தழுவப்பட்டுள்ளன. என்ன நடந்ததோ ஏது நடந்ததோ பூமித்தாயின் அகம் தன்னை ஒரு தடவை சிலிர்ந்துக் கொண்டதால் கொண்டுவாணாலாந்தில் இந்தியாவுடன் இணைந்திருந்த இலங்கை பிளவுற்று தென் கிழக்காக நகர்ந்து கொண்டதாம். அவ்வாறு பிரிவுற்ற இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு உள்நுழை பாதை திறந்ததால், கொண்டுவாணாலாந்தினைச் சுற்றியிருந்த தேத்தீஸ் என்ற சமுத்திரம் ஒரு தொடுகடலாகப் பாய்ந்து கொண்டது.
இக்கால கட்டத்தில் யாழ்ப்பாணதேசம் தோன்றவில்லை. இலங்கையின் இன்றைய முழுமையான உருவாக்கத்திற்கு 25 மில்லியன் காலத்திற்கு முற்பட்ட மயோசீன் என்ற காலம் மிக முக்கியமானதாகும். இக்கால கட்டத்தில்தான் இலங்கையின் வடமேற்குப் பாகம் உருவானது. இந்தியாவினின்றும் இலங்கை பிரிவுற்று இடையில் உருவாகிய தொடுகடலில் ஆறுகளினால் அரித்துக் கொண்டு வரப்பட்ட மாக்கல், மணற்கல், மணல் மற்றும் பல்வேறு பருப்பொருட்கள் கோடானுகோடி ஆண்டுகளாகக் கொட்டி நிரப்பப்பட்டன. இந்நிரப்பற் செயற்பாடு தொடர்ந்து நிகழ்ந்தது. தெத்தீஸ் கடல் அவற்றினை விழுங்கிக் கொண்டேயிருந்தது. அதன் பசி ஆறிய காலவேளையில் அல்பைன் என்ற மலையாக்கம் நிகழ்ந்தது. தெத்தீஸ் விரிகுடாப்பகுதிகள் மேலுயர்த்தப்பட்டன. அதனால் இலங்கையின் வடமேற்குப் பகுதியும், இந்திய நிலத்திணிவும் மீண்டும் ஒரு தடவை இணைக்கப்பட்டன. புத்தளத்தையும் முல்லைத்தீவையும் இணைக்கும் கோட்டிற்கு வடக்கே பரந்திருக்கும் இலங்கையின் வட மேற்குப்பாகமும், அதற்கு நேர் எதிரில். இந்தியாவில் தமிழ் நாட்டில் காரைக்கால்- சென்னைப் பகுதிகளும் மயோசீன் காலச் சுண்ணக்கற் பகுதிகளாகக் காணப்படுகின்றன. இவ்விரு சுண்ணக்கற் பகுதிகளையும் இணைக்கில், மயோசீன் காலத்தில் மேலுயர்த்தப்பட்ட நிலப்பரப்பினை அடையாளம் காண முடியும். எனவே மயோசீன் கால மேலுயர்த்தலின் பயனாக இந்திய நிலத்திற்கும் இலங்கையின் வடமேற்குப் பாகத்திற்கும் இடையில் நிலப்பாலம் ஒன்று இருந்துள்ளது. “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்ற சுப்பிரமணிய பாரதியாரின் கனவு மனுக்குலம் தோன்றாத அக்காலகட்டத்தில் செயற்பட்டிருந்தது.
மயோசீன் காலத்தின் பிற்பகுதியில் இப்பிரதேசத்தில் கடற்கோள் ஒன்று ஏற்பட்டிருக்க வேண்டும். அதனை லெமூரியாக் கடற்கோள் என்பர். அதனால் பாக்குத் தொடுகடல் பகுதியில் கடல் நீர் மேவி அங்கிருந்த நிலப்பரப்பின் பகுதிகளை விழுங்கிக் கொண்டது. முன்னைய நிலப்பாலத்தின் உயர்பகுதிகள் கடல் நீர் பின்வாங்கியதால் தீவுகளாக எஞ்சின. காரைத்தீவு, வேலணை, மண்டைத்தீவு, எழுவைதீவு, அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, பாலைதீவு, இரணைதீவு, கற்கடகத்தீவு, கச்சதீவு, மன்னார்த்தீவு மற்றும் வலிகாமத்தீவு, வடமராட்சித்தீவு, தென்மராட்சித்தீவு என்பனவும் இந்தியக் கரையில் இராமேஸ்வரத்தீவுகளும் தோன்றின. இவை அனைத்தும் மயோசீன் கால எஞ்சிய சுண்ணாம்புக்கற் பாறைகளாகும். பண்டைய நிலப்பாலத்தின் ஓரளவு உயர்வான நிலப்பகுதிகள் பாக்குத் தொடுகடலில் கடலடித்தள உயர் மேடைகளாக விளங்குகின்றன. வோர்ஜ் கடலடித்தளமேடை, மன்னார்க் கடலடித்தளமேடை, பேதுரு கடலடித்தள மேடை என்பன அவையாம். எல்லாவற்றிற்கும் மேலாக பண்டைய நிலப்பாலத்தின் எச்சமாக தனுஷ் கோடியையும் மன்னாரையும் இணைக்கும் இராமர் அணையின் சிதைந்த பகுதிகள் விளங்கி வருகின்றன.
எனவே, மயோசீன் காலத்தில் மேலுயர்ந்து நிலப்பாலமாகக் காணப்பட்ட நிலப்பரப்பு, அக்கால கட்டத்தின் பின்னர் கடற்கோளிற்குள்ளாக நேர்ந்தது. 1977 களில் பாக்குத் தொடுகடலில் குறிப்பாக காவேரிக் கழிமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பெற்றோலியக் கிணறுகளைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது பாக்குத் தொடுகடலில் ஓர் இறக்கம் பிளவுப்பள்ளத்தாக்கு அமைந்திருப்பது கண்டறியப்பட்டது. இந்தப் பிளவுப்பள்ளத்தாக்கின் ஒரு குறைத்தளம் தலைமன்னாரிலிருந்து மண்டைதீவு நோக்கியும், மற்றைய குறைத்தளம் இராமேஸ்வரத்திலிருந்து பேதுரு கடலடித்தளமேடை நோக்கியும் அமைந்திருப்பது கண்டறியப்பட்டது. எனவே நிலவிறக்கம் ஒன்று இந்த இரு குறைத்தளங்களுக்கும் இடையில் ஏற்பட்டு முன்னைய நிலப்பகுதியின் பகுதிகள் கடலினுள் மூழ்கின என ஊகிக்கப்படுகின்றது. அதில் தவறுமில்லை. இக் குறைத்தளங்களுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி கடலினுள். அமிழ்ந்தபோது அதிலுள்ள அமிழாத உயர்நிலப்பகுதி யாழ்ப்பாணக்குடாநாட்டின் அயற்aவுகள் ஆகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குழாய்க் கிணறுகள் இப்பிரதேசத்தின் மண் படையியல் குறித்து தகவல் தந்துள்ளன. பாக்குத் தொடுகடலில் காவேரிக்கரையிலிருந்து பேசாலை வரையிலான கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல பெற்றோலிய ஆய்வுக் கிணறுகள், முக்கியமாக இலங்கைப்பக்கத்தில் அகழப்பட்ட ஐந்து பெற்றோலியக் கிணறுகள், இப்பிரதேசத்தின் படையமைப்பை அடையாளம் காட்டியுள்ளன. பேசாலைக் கரையில் மூன்றும், கடற்கடத்தீவினை அடுத்து ஒன்றும், நெடுந்தீவினை அடுத்து ஒன்றுமாக ஐந்து பெற்றோலியக் கிணறுகள் துளையிடப்பட்டன. அவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டினதும் அதன் அயற்aவுகளினதும் சுண்ணாம்புக் கல்படையின் தடிப்பு 1000 மீற்றர்களுக்கு மேற்பட்டதென அறிய முடிகின்றது. கேம்பிரியனுக்குரிய அடித்தளப்பாறையின் மீது, பளிங்குருச் சுண்ணக்கல் படையின் மீது நமது தேசம் அமைந்துள்ளது.
நமது பிரதேசம் ஒரு கு¡டாநாடு அல்ல, சுண்டிக்குள மணல் தடை மூலம் பெருநிலத்துடன் ஏற்பட்டிருக்கும் நில இணைப்பு மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு நிலப்பகுதி என இதனைக் கருத வைத்து குடாநாடாகவும் எண்ண வைத்துள்ளது. உண்மையில் நமது தேசம் வலிகாமம் தீவு, வடமராட்சித்தீவு, தென்மராட்சித் தீவு என்ற மூன்று பெருந் தீவுகளையும், காரைதீவு, எழுவைதீவு, அனலைதீவு, வேலணைத்தீவு, மண்டைத்தீவு, நயினாதீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு, பாலதீவு, கச்சதீவு முதலான சிறுதீவுகளையும் மற்றும் எண்ணிறைந்த குட்டித்தீவுக ளையும் மற்றும் எண்ணிறைந்த குட்டித்தீவுகளையும் கொண்டமைந்த நிலப்பரப்பாகும். பண்ணைப்பாலம், பொன்னாலைப்பாலம், வாணர்பாலம், சங்குப்பிட்டிப் பாலம், ஆனையிறவுப்பாலம் மற்றும் சுண்டிக்குளம் மணல் இணைப்பு என்பவற்றினை அகற்றிவிட்டு நோக்கில் நமது தேசம் தனித்தனி தீவுகளாக எஞ்சி நிற்பதைக் காணலாம். அக்காலத்தில் ஊர்காவற்றுறையில் பிரவேசிக்கும் பாய்க்கப்பல்கள் யாழ்ப்பாணக் கடலேரியை ஆனையிறவுக் கடலேரியூடாக கடந்து தடையற்ற சுண்டிக்குளமூடாக இந்து சமுத்திரத்தில் பிரவேசித்துள்ளன.
இனிவரும் பகுதிகளில் யாழ்ப்பாணதேசம் என்ற வார்த்தைப் பிரயோகம் மேற்குறித்த, நிலப்பகுதி அனைத்தையும் குறிக்கும். யாழ்ப்பாணதேசம் 1025 சதுர கிலோ மீற்றர் பரப்பினைக் கொண்டுள்ளது. அதில் 929 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பாகவும், 96 சதுரகிலோமீற்றர் உண்ணாட்டு நீர்நிலைகளாகவும் உள்ளன. யாழ்ப்பாணதேசத்தின் நிலப்பயன்பாட்டைப் பொறுத்தளவில் 15520 ஹெக்டேயர் நெற்பரப்பாகும். 1530 ஹெக்டேயர் பயிர் நிலங்களாகவும், 1470 ஹெக்டேயர் தென்னந்தோட்டங்களாகவும், 33720 ஹெக்டேயர் வீட்டுத்தோட்டங்களாவும் உள்ளன. 690 ஹெக்டேயர். கட்டடங்களாகவும், 390 ஹெக்டேயர் தரிசாகவுமுள்ளன. மொத்தத்தில் யாழ்ப்பாணதேசம் சமதரையாக அமைந்துள்ளது. பெயருக்கு ஒரு மலையாகக் கீரிமலை உள்ளது. யாழ்ப்பாணதேசத்தின் வடகரையோர சுண்ணாம்புக்கல் ஓங்கற் குன்றுகளில் இதுவுமொன்று. எமது தேசத்தில் ஆறுகளும் உள்ளன என்பாற்போல தொண்டைமானாறு, உடுப்பாறு, வழுக்கியாறு என மூன்று ‘ஆறுகள்’ உள்ளன. தொண்டைமானாறும் உப்பாறும் இயற்கையாக அமைந்த உவர்க் கடனீரேரிகளாகும். தொண்டைமானாறு, வலிகாமத்தையும் தென்மராட்சியையும் பிரித்துத் தனித் தீவுகளாக்க முயன்றுள்ளது. அதேபோல உப்பாறு வலிகாமத்தையும் தென்மராட்சியையும் பிரித்துள்ளது. ஆக வழுக்கியாறு மட்டுந்தான், இரசிகமணி கனகசெந்திநாதன் குறிப்பிடுவது போல, யாழ்ப்பாண மாதா மலடி என்ற வசைச் சொல்லுக்குள்ளாகாமல் இருப்பதற் காகப் பெற்றெடுத்த ஒரே ஒரு ஆறாகும். மழை காலத்தில் வெள்ள நீருடன் பெருக்கெடுத்தோடும் அளவெட்டி பினாக்கைக் களத்தில் சேரும் மழை நீர் தென் புறமாகப் பாய்ந்து, ஐந்து கண் மதகைக் கடந்து, நாவலிக் கடலில் சேர்கின்றது. அகன்று பரவி ஓடிய வழுக்கியாற்றை, மண் ணாசை பிடித்த அயல் தோட்டகாரர் தம் தோட்ட நிலங்க ளுடன் நிலமாகச் சேர்ந்து மெலிய வைத்து விட்டார்கள்.
1963 ம் ஆண்டு, நாங்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தோம். இருந்தாற்போல யாழ்ப்பாணத்தைச் சயிக்கில்களில் சென்று சுற்றிப்பார்க்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. நான், க.பரமேஸ்வரன்( பின்னர் வடக்கு கிழக்கு கல்வி செயலாளராக இருந்தவர், க.பரராஜசேகரன் (பின்னர் உதவி அரசாங்க அதிபராக இருந்தவர். இன்று அமரராகிவிட்டார்), எஸ். பத்மநாதன் (பின்னர் வங்கி அதிகாரியாக இருந்தவர். அமராகிவிட்டார்) ஆகியோர் புறப்பட்டோம். “யாழ்ப்பாணத்தில் பார்க்கிறதுக்கு என்ன இருக்கிறது?” என்று நண்பர்கள் கேலி புரிந்தனர். நான்கு நாட்கள் சுற்றினோம்.
Thinakaran
திங்கள், 25 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக