இன்றைய உலகின் இணையற்ற சக்தி எதுவென்றால், அது இணையம் (Internet) எனலாம்.
இது உலகின் எந்தவொரு மூலையில் இருப்பவரும் இன்னொருவருடன் தொடர்பு கொண்டு, தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு களம் அமைத்துக் கொடுக்கிறது.
இதன் காரணமாக, பூகோள எல்லைகளைத் தாண்டி, ஒட்டுமொத்த மனிதகுல நாகக வளர்ச்சியில் இணையத்தின் தாக்கம் அபரிமிதமானதாக மாறியுள்ளது.
சர்வதேச சமூகத்தின் மீது செல்வாக்கு செலுத்த முனையும் அரசியல், சக, பொரு ளாதார சக்திகள் இணையத்தின் ஆற்றலை உணர்ந்திருக்கின்றன.
இத்தகைய சக்திகள் தமது நோக்கங்க ளையும், தேவைகளையும் நிறைவேற்றும் பிரதான கருவியாக இணையத்தைப் பயன் படுத்தத் தொடங்கியிருக்கின்றன.
இதனால், அரசியல், சமூக, பொருளாதார துறைகளில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் எதிரெதிர் சக்திகளின் போராட்ட களமாக இணையம் மாறியுள்ளது.இத்தகைய சக்திகள் நாடுகளாக இருக்கலாம். அரசியல், சமூக இயக்கங்களாக இருக்கலாம். ஏன், வணிக நிறுவனங்களாகவும் இருக்கக்கூடும்.
இன்று சீனாவுக்கும், கூகிள் என்ற நிறுவனத்திற்கும் இடையில் உருவாகியுள்ள போராட்டத்தின் மூலாதாரம், களமும் இணையமே.
சகல துறைகளிலும் துரித வளர்ச்சி கண்டு, அரசியல் பொருளாதாரத் துறைகளில் உலகை ஆட்டிப்படைக்கும் வல்லரசாக பரிணமித் துள்ள சீனா. உலகெங்கிலும் வியாபித்துள்ள சர்வதேச தகவல் வலைப்பின்னலில், அதிகளவு இணையப் பாவனையாளர்கள் நாடும் சக்தியாக வளர்ந்துள்ள கூகிள் (Google Incorporated) நிறுவனம்.
இந்த இரண்டு சக்திகளுக்கும் இடையிலான போராட்டத்தை அறிந்து கொள்ள வேண்டு மாயின், இணையத்தில் கூகிளின் வகிபாகம் பற்றிய புரிந்துணர்வு அவசியம்.
சர்வதேச தகவல் வலைப்பின்னலில் எழுத்தாகவும், படங்களாகவும், இசையாகவும் பல்வேறு வடிவங்களில் தகவல்கள் வியாபித்திருக்கின்றன.
இந்தத் தகவல்களில் இருந்து தமக்குத் தேவைப்படுவதை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு தேடல் பொறிமுறை (Search Engine) அவசியம். அதனை கூகிள் முதலான நிறுவனங்கள் வழங்குகின்றன.
கூகிளின் இணையத்தளத்திற்கு சென்று தாம் தேட விரும்பும் விடயத்தைக் குறிப்பிட்டால், அது பற்றிய சகல தகவல்களையும் கூகிள் பட்டியலிடும்.
ஒவ்வொரு நாட்டு மக்களதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, கூகிள் மொழிகளின் அடிப்படையில் வேறுபட்ட இணையத்தளங்களை பேணுகிறது.
உதாரணமாக, கூகிள் நிறுவனம் சீனர்களுக்காக நடத்தும் இணையத் தளத்தில் மாண்டன் போன்ற மொழிகளைப் பயன் படுத்தி தகவல்களைத் தேடலாம்.
அது தவிர, கூகிள் நிறுவனம் இணையப் பாவனையாளர்களுக்கு மின்னஞ்சல் வசதிகளையும் வழங்குகிறது.
இணையப் பாவனையாளர்கள் கூகிளின் ஜீமெயில் இணையத்தளத்தில் கணக்கைத் திறந்து இணையவழியிலான அஞ்சல் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம்.இத்தகைய மின்னஞ்சல் கணக்குகளின் ரகசியத்தன்மை பேணப்பட வேண்டும் என்பது சர்வதேச தகவல் வலைப்பின்னலின் முக்கியமான விதி முறை.
2006ஆம் ஆண்டு சீனாவிற்குய பிரத்தியேக இணையத் தளத்தை (google.cn) ஆரம்பித்தபோது, சீனாவின் நிபந்தனைகளுக்கு கூகிள் நிறுவனம் உடன்பட்டது.
இந்த இணையத்தளத்தில் சீனாவின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய தகவல்களை தேட இடமளிக்கக்கூடாது என்பது முக்கியமான நிபந்தனை.
உதாரணமாக, 1989ஆம் ஆண்டு தியனமென் சதுக்கத்தில் சீன அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் பற்றிக் குறிப்பிடலாம்.
சீனாவின் கம்யூனிஸ ஆட்சியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீது கவச வாகனங்களை ஏற்றி அவர்களை கொன்றொழித்ததாகக் குற்றம்சுமத்தப்படுகிறது.
இது பற்றிய படங்களை கூகிளின் இணை யத்தளத்தில் எவரேனும் தேடினால், அவற்றை வழங்கக்கூடாது என்பது சீனா அரசாங்கத்தின் நிபந்தனையாகும்.
இத்தகைய தணிக்கை விதிறைகளுக்கு உட்பட்டு சீனாவில் கால்பதித்த கூகிள் நிறுவனம், கடந்த 12ஆம் திகதி புதிய பிரச்சினையை அறிவித்தது.
கம்யூனிஸ ஆட்சியை எதிர்க்கும் சீனாவின் மனித உரிமை ஆர்வலர்கள் கூகிளில் பேணும் மின்னஞ்சல் கணக்குகள் ஊடுருவப்பட்டதாக (Hacked) அந்நிறுவனம் கூறியது.
கணக்குகளை ஊடுருவி, தகவல்களைத் திருடிய நபர்கள் சீனாவில் இருந்தே கைவriசையைக் காட்டியிருக்கிறார்கள் என்பது கூகிளின் குற்றச்சாட்டு.
தமது இறையாண்மைக்கு எதிராக செயற்படும் நபர்களின் தகவல்களை அறிய சீன அரசாங்கமே இதனைச் செய்ததாக கூகிள் நிறுவனம் கூற முற்படுகிறது.
மின்னஞ்சல் தகவல்கள் திருடப்பட்டமை பற்றி விசாரிக்கா விட்டால், சீனாவிற்குரிய பிரத்தியேக இணையத் தளத்தை மூடிவிடப் போவதாக கூகிள் எச்சரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்த அமெரிக்கா, கூகிளின் வலைப் பின்னல் மீதான தாக்குதல்கள் (Cyber Attacks) பற்றி சீனா விசாரிக்க வேண்டும் என்றது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர், கூகிளின் கோரிக்கையை ஆதரித்துப் பேசியதுடன் நில்லாமல் இணையத்தின் மீதான கட்டுப் பாடுகளை நீக்குமாறும் பாடம் போதித்தார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைக்க வேண்டாமென சீன அரசாங்கம் பதிலளித்தபோது, அதிபர் பராக் ஒபாமா அதனிடம் விளக்கம் கோரினார்.
தற்போது, இந்த விவகாரம் அமெரிக்க சீன ராஜதந்திர உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பிரச்சினையாக வளர்ந்துள்ளது.
அமெக்கத் தலைவர்கள், இந்தப் பிரச்சினையில் தமது பக்க வாதத்தை நியாயப்படுத்துவதற்காக இணையத்தின் தகவல் சுதந்திரம் பற்றிப் பேசுகிறார்கள்.
சீன அரசாங்கமோ, தமது நாட்டின் அரசியல், சமூக பரப்பெல்லையில் செயற்படும் எந்தவொரு நிறுவனம் தமது சட்டதிட்டங்களை மதிக்க வேண்டும் என்கிறது.பூகோள எல்லைகளைக் கடந்த இணையம் என்ற சக்தியின் இயல்புகளின் ஊடாக ஆராய்ந்தால், இதில் எந்த வாதம் சரியானது என்பதை நிர்ணயிப்பது சற்று கடினம்.
ஆனால், ஜனநாயக தாராளமயவாதம் பற்றி பேசும் மேற் குலக நாடுகள் தகவல் சுதந்திரத்தை எவ்வாறு பேணுகின்றன என்பதையும் பார்த்தாக வேண்டும்.
அமெரிக்காவில் தேசப்பற்றின் பெயரால் அங்கீகக்கப்பட்ட சட்டத்தையும், (Patriotic Act), பிட்டனின் புலனாய்வு ஆற்றல் பிரமாண சட்டத்தையும் (Regulation of Investigatory Powers Act) பிரஸ்தாபிப்பது அவசியமாகிறது.
இந்த சட்டதிட்டங்கள், உளவறியும் நோக்கங்களுக்கு எந்தவொரு நபரது அந்தரங்கத் தகவல்களையும் ஊடுருவி, அவற்றைப் பெறமுடியும்.
அமெரிக்காவோ, பிரிட்டனோ எவரையேனும் பயங்கரவாதிகளாகக் கருதினால், அந் நாடுகளின் புலனாய்வு சேவைகள் சந்தேக நபர்களின் மின்னஞ்சல்களை ஊடுருவமுடியும்.
அது மாத்திரமன்றி, மேற்குலக நாடுகளின் அரசுகள் கேட்ட போதெல்லாம், தமது வாடிக் கையாளர்கள் பற்றிய அந்தரங்கத் தகவல்களை கூகிள் நிறுவனம் பெற்றுக் கொடுத்ததை பத்திரிகைகளும் அம்பலப்படுத்தியுள்ளன.
ஆனால், நல்லதோ, கெட்டதோ தமது தேசிய நலனுக்கு எதிராக செயற்படும் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் விதிறைகளை அனுசரிக்குமாறு சீனா கோரும்போது, கூகிள் நிறுவனத்திற்கு கோபம் வருகிறது. ஆரம்பத்தில் "வஞ்சகம் வேண்டாம்' (Dont´t be evil) என்ற பொன்மொழியுடன் செயற்பாட்டைத் தொடங்கிய கூகிள் நிறு வனம், மேற்குலகிற்கு ஒரு கொள்கையையும், சீனாவிற்கு ஒரு கொள்கையையும் கடைப்பிடிப்பதே விந்தை.
கூகிள் என்பது கலிபோர்னியாவில தலைமை அலுவலகம் அமைத்து செயற்படும் அமெரிக்க பொது நிறுவனமாக இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான பலப்பரிட்சையில் யார் சரியாக இருந்தாலும், யார் தவறாக இருந்தாலும், சர்வதேச நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கும் கூகிள் நிறுவனம் சரியான பாதையை அனுசரிப்பது கட்டாயமானது.
உண்மையில், சீன அரசாங்கமே கூகிளின் வலைப்பின்னல் மீதான தாக்குதல்களின் (Cyber Attacks) பின்னணியில் இருந் தாலும், தகவல்களை அறியத்தருவது பற்றிய தமது கடமையை மதித்து சீனாவின் பொது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.
அதனை விடுத்து, சீனாவில் இருந்து வெளியேறுவதால் அதன் மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதைத் தவிர, வேறெதும் நடக்கப் போவதில்லை.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை
திங்கள், 25 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக