திங்கள், 25 ஜனவரி, 2010

உங்கள் கழுத்தையும் கவனியுங்கள்


பொதுவாக ஒரு பெண்ணிடம் இன்னொரு பெண் பேசும்போது அனேகமாக கழுத்தைப் பார்த்து... அவர் போட்டிருக்கும் நகைகளை பார்த்து பேசுவது வழக்கம். ஆனால் பெண்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்துக்கு மட்டும் கொடுப்பதில்லை. சில பெண்களுக்கு முகம் 20 வயது போல் தோற்றமளித்தால், கழுத்து 35 வயது போல் காட்சியளிக்கும். நிறைய ஆபரணங்களைப் போட்டு கழுத்து கறுத்துப் போயிருக்கும். இல்லாவிட்டால் வியர்வையால் சுருங்கிக் காட்சியளிக்கும்.


முகத்தின் பளபளப்புக்காக பிளிச்சிங், பேஷியல் என்று செய்துகொள்பவர்கள் கழுத்தை மட்டும் கண்டுகொள்ளாமலே விட்டுவிடக் கூடாது. கழுத்துப் பகுதியில் எண்ணெய் சுரப்பிகள் மிகவும் குறைவாக இருப்பதால், இப்பகுதி சட்டென்று தளர்ந்து போய்விடும். இதனால் தான் முகம் இளவயது போல் தோற்றமளித்தாலும், கழுத்து முது மையை காட்டுகிறது. கழுத்தை கவனிக்காமல் விட்டுவிட்டு முகத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தூக்கலாக மேக்அப் செய்து கொண்டால், முகத்திற்கு பொருத்தமற்றதாக கழுத்து காணப்படும்.

இதன் விளைவால், என்னங்க முகத்துக்கு பெயிண்ட் அடிச்சிருக்கீங்க?!' என்று தோழிகள் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். தோழிகள் உங்களை கிண்டலடிக்காமல், பாராட்டும் படி உங்கள் கழுத்து பளிச்சிட இதோ டிப்ஸ்:
கழுத்துக்கென்றே வகைவகையான ஸ்பெஷல் பிளீச் இருக்கிறது. சிலரின் கழுத்து வறண்டு போயிருக்கும். சிலருக்கு ஜீவனே இல்லாமல் இருக்கும். அவர்கள் முதலில் தயிரை கழுத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவேண்டும். பின்னர், மிதமான சுடுதண் ணீரால் சற்று அழுத்தித் தேய்த்துக் கழுவினால், கழுத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும்.

வெய்யில் தொடர்ந்து கழுத்தில் விழுந்தால் கழுத்துப்பகுதி கறுத்துவிடும். தலைடியில் இருக்கும் எண்ணெய் பசை கூட கழுத்தில்பட்டு கறுக்கவைத்துவிடும். இதற்கு வெள்ளச்சாறு சிறந்த நிவாரணம்.

வெள்ளச்சாறை கழுத்தில் அடிக்கடி தேய்த்து வந்தால் வறண்டு போன கழுத்து ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

கழுத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதானவர் போல் காட்சியளிப்பவர்கள் குளிப்பதற்கு முன்னால், எலுமிச்சைச் சாறில் கஸ்தூரி மஞ்சளை அரைத்துக் குழைத்துக் கழுத்தில் நன்றாக பூசி, பத்து நிமிடம் ஊற விட வேண்டும். பின்பு மிதமான சுடுநீரில் கழுத்தைக்கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும். கழுத்து மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் பளபளப்பாக தோன்றும்.

சில பெண்களுக்கு கழுத்தில் வரிவரியாக காணப்படும். இவர்கள், முட்டையின் வெள்ளைக் கருவுடன், இரண்டு சொட்டு கிளிசரின், ஒரு சொட்டு பன்னீர் சேர்த்து கழுத்தில் பூச வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் கழுத்திலுள்ள வரிகள் மறைந்து, சங்கு கழுத்து போல் காட்சிதரும்.

சிலர் நல்ல நிறமாக இருப்பார்கள். அவர்கள் கழுத்து மட்டும் நிறம் குறைந்து கறுத்துப்போயிருக்கும். கழுத்து நிறைய சங்கிலி போடுவதால் கழுத்தில் முடிச்சு முடிச்சாக காணப்படும். அதே போல் கவரிங் சங்கிலிகள் போடும் பெண்களுக்கும் கழுத்து கறுப்பாகிவிடும். இவர்கள் அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து தொடர்ந்து கழுத்தில் தேய்த்து வரவேண்டும்.

முடிச்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விடும். இதனால் கறுத்துப் போன கழுத்து பளிச்சென்று மாறிவிடும்.

முகத்துக்கு ஏற்ற அழகை கழுத்தும் பெற்றிருந்தால் மட்டுமே பெண்கள் முழு அழகுடன் திகழ முடியும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல