வியாழன், 29 ஜூலை, 2010

ஆடிவேல் ரதபவனி ஆரம்பித்த வரலாறு

இலங்கை எங்கும் வேலுக்கு அரோஹரா எனப் பண்டுதொட்டு கோஷமிட்டு வழிபடுவது குறிப்பாக ஆடி மாதத்திலேயேயாகும். அரோஹராச் சத்தம் வானைப் பிளக்குமளவுக்கு கோஷமிடப்படுவது பக்திமிகு வேல் வழிப்பாட்டினால் ஆகும். இதற்கான காரணம் ஆடிப் பூரணையோடு வருவது கதிர்காம உற்சவம்.

கதிர்காம உற்சவம் நிகழும் காலத்தில் இலங்கையின் நான்கு திசைகளில் வாழும் வேலவனின் அடியார்கள் விரத அனுட்டானத்துடன் கால் நடையாகவே தமது திருத்தல யாத்திரையை மேற்கொண்டனர். பின்னர் புகையிரதம், பேரூந்து, வான் முதலானவற்றில் பிரயாணஞ் செய்து கதிர்காமத்தை அடைந்து வழிப்பட்டனர். அவ்வாறு திருத்தல யாத்திரையின் போது அவர்களால் முருகனை மனதார வாழ்த்தி எழுப்பும் கோஷமே “அரோஹரா” இக் கோஷமானது யாத்திரை மேற்கொள்ளும் சகல கதிர்காமக் கந்தன் அடியார்களாலும் எழுப்பப்படும் ‘அரோஹரா’ கோஷம் ஆகும்.

வேல் உண்டு. வினை இல்லை என நாம் வேலனை வழிபடுகின்றோம். கதிர்காம வேல், தில்லை மண்டூர் வேல், திருகோணமலை வேல், செல்வச்சந்நிதி வேல், மாவிட்டபுரம் வேல், மலையகத்துவேல், கொழும்பு மாநகர் வேல் என வேலவன் எங்குமே வீற்றுள்ளான். வேல் தனிவேலாக உள்ளது.

அதேபோல ஆறு மூலைகளைக் கொண்ட வேலும் வழிபாட்டில் பண்டு தொட்டு இருந்து வருகின்றது. சிவபெருமானின் ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்களையும் அதோ முகம் எனப்படும் முகத்தையும், கொண்டதே ஆறு முகங்களை- ஆறு மூலைகளைக் கொண்ட வேலாகும். கிராமம் முதல் தலைநகர் வரை இவ்வாறு வேல் வழிபாடு இருந்து வருகின்றது.

ஆடிமாதத்தில் கதிர்காமக் கந்தன் உற்சவத்தோடு வருவது ஆடிவேல் விழா. சம்மாங்கோட்டில் வர்த்தகத்துக்காக வந்த பெருமக்கள் தமது வழிபாட்டிற்காக வேலை வைத்து வணங்கினர். இவர்கள் கதிர்காம உற்சவத்தைத் தர்சிக்க பாத யாத்திரையாக காவடி முன்செல்ல வேலைத் தாங்கி அரோஹரா கோஷமிட்டுக் கதிர்காமஞ் சென்று மாணிக்க கங்கையில் நீராடி முருகப் பெருமானை வழிபட்டு வந்தனர்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டித் தெருவில் வேலை வைத்து கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்தை அமைத்து வழிபட்டுவந்தனர். இவர்கள் வருடா வருடம் வேலோடு சென்று கதிர்காம வேலவனை தர்சித்து வருவது வழக்கமாக இருந்தது.

பிரித்தானியர் ஆட்சியின் போது நாட்டில் ஏற்பட்ட ‘கொலரா’ நோயால் கதிர்காம யாத்திரை தடைப்பட்டது. இதன் காரணமாக சம்மாங்கோட்டினரால் முதலாம் குறுக்குத் தெருவில் வேல் வழிபாட்டு விழா ஆரம்பிக்கப்பட்டது. நாட்டுக் கோட்டை நகரத்தாரால் செட்டித்தெருவில் வேல் வழிபாட்டு விழா மேற்கொள்ளப்படலாயிற்று. இவ்வாலயங்களில் வேலவனுக்கு வழுவாது விழாக்கள் நடைபெற்றன.

எனவே கதிர்காம உற்சவ காலத்தில் கொழும்பு மாநகரில் வேல்விழா ஆரம்பமாயிற்று. முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வேலவன் காவடி முன்செல்ல மங்கள வாத்தியம் முழங்க நகர் பவனியாக வெள்ளவத்தை சம்மாங்கோட்டார் ஸ்ரீமாணிக்க விநாயகர் ஆலயஞ் சென்று அங்கு தங்கி அருள் பாலித்து நான்காம் நாள் மீண்டும் சம்மாங்கோட்டார் ஆலயத்தை வேலவன் வீதியுலாவாக வந்து சேர்வது வழக்கமாகும்.

அதேபோன்று நாட்டுக் கோட்டை நகரத்தார் செட்டித் தேருவில் இருந்து வேலவனை மங்கள வாத்திய சகிதம் பம்பலப்பிட்டி கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்திற்கு வீதியுலாவாக - நகர் உலாவாக எடுத்துச் சென்று நான்காம் நாள் மீண்டும் நகர் வலமாக செட்டித்தெரு ஆலயத்துக்கு எளுந்தருளச் செய்தனர். 1902 முதல் வேல், வெள்ளி இரதத்தில் வருவது ஈண்டு குறிப்பிடுதல் சாலப் பொருந்தும்.

இவ்விரு ஆலய பரிபாலகர்கள் கதிர்காம வேலவனின் புகழ்பாட வேலவனின் பேரருளை அடியார்களுக்கு விளக்க இலங்கை, இந்திய ஆன்மீகச் சொற்பொழிவாளர்களை வரவழைத்து மக்களுக்கு நல்ல விளக்கங்களைக் கொடுத்தனர். சிறந்த கர்நாடக வித்துவான்களை வரவழைத்து இசையால் ஞான வாழ்வுக்கு வித்திட்டனர். காரைக்குறிச்சி முதலான நாதஸ்வரக் கலைஞர்கள் மூலம் மனதிலே மனநிறைவை ஏற்படுத்தி மங்கள வாழ்வுக்கு வித்திட்டனர்.

வேலனுக்கு அரோஹரா, முருகனுக்கு அரோஹரா... வெற்றி வேல் முருகனுக்கு... அரோஹரா... “ என்ற பக்திமிகு இசை இன்றும் எல்லோருடைய காதிலும் ரீங்காரங் செய்கின்றது. இதுயார் குரல்... முருபக்தை பெங்களூர் ரமணி அம்மாளுடையது ஆகும். இஃது இப்பொழுது இசைத் தட்டிலும் சீ டியிலும் உள்ளது. கேட்ட மாத்திரத்தே முருகா... வேலா... என வாய் முணுமுணுக்கச் செய்யும்.

இவ்வாறு பலநோக்கிலும் அருட்சக்திவாய்ந்த வேல் விழா 1983 முதல் இடம்பெறவில்லை. இருந்தும் 2002-முதல் 2004 வரை ஓரளவு நடைபெற்றது.

என்றாலும் இவ்வாண்டு 2010 ஆடிவேல் விழா பழையபடி வேலின் பெருமையால், களைகட்டியது. அதி உத்தம ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய ஆடிவேல்... வேல் முருகன் சம்மாங்கோட்டாரினால் வேல் காவடியோடு நகர் வலம் வந்தார். வெள்ளி இரதத்தின் மீது அமர்ந்து நகரத்தார் வேல்விழா சிறப்பாக அமைந்தது.

முன்னைய காலங்களில் மஹாதேசாதிபதி, பிரதமர் , பொலிஸ் மா அதிபர், திணைக்களங்கள், அமைச்சுக்கள், வங்கிகள், இந்தியத் தூதுவர் முதலான பலரும் நிறைகுடம் வைத்த வேலவனை வரவேற்று வழிபட்டனர்.

அதே போன்று இவ்வாண்டும் மங்கள வாத்தியம். மலையாள வாத்தியம், கன்டிய வாத்தியம், காவடி நடனம், கரகம் பாலிக்கும் நடனம் முதலான பலப்பல அம்சங்களோடும் வேல்காவடியுடன் இரதமும், வெள்ளி இரதமும் நகர் வலம் வந்து சகல அடியார்களுக்கும் மனநிறைவைக் கொடுத்தது.

அவ்வேளையில் வழமை போல நமது அதி உத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும், பாரியாரும், ஆளுநர் முதலான பல அரச அதிகாரிகளுடன் தமது இல்லத்தில் முன்பாக அர்ச்சனைத் தட்டைக் கொடுத்து அர்ச்சித்து வழிபட்டு பஞ்சாராஷ்தியைத் தொட்டுக் கும்பிட்டுத் தமக்கும் நாட்டு மக்களுக்கும் வேலவனின் நல்லாசியைப் பெற்றனர்.

அதேபோன்று பொலிஸ் மா அதிபர், இந்தியத் தூதுவர், அமைச்சர்கள், திணைக்களங்கள் முதலானவற்றில் கடமையாற்றும் சகல அடியார்களும் ஆடி வேல் விழாவில் பங்குகொண்டு ரிழிபட்டனர்.

ஆடிவேல் விழா வேலவனின் விழா. வேல் உண்டு. வினை இல்லை என்பார்கள். வேலை நாம் வழிபடும் போது எமது மனதிலே ஆணவம் விலகுகிறது. ஞானம் பிறக்கின்றது. எனவே ஞாலம் எல்லாம் போற்றும் ஞான விழாவாக ‘ஞானவேலின்’ விழா அமைகின்றது.

‘ஞான வேலுக்கு அரோஹரா”

இந்து வித்தியாநிதி,
பிரம்மஸ்ரீ சோ. குஹானந்த சர்மா,
அகில இலங்கைச் சிவப் பிரமான சங்கக் காரியதரிசி.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல