போருக்குப் பிந்திய ஒரு சூழலில், ‘அடுத்தது என்ன?’ என்று திடமாகத் தீர்மானிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருந்துவரும் காலகட்டம் இது. தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று தாங்கள் நம்பிய அல்லது நம்பவைக்கப்பட்டவைகள் தலைகீழாக மாறியிருக்கும் ஒரு நிலைமையை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் புரியாத புதிய சூழலுக்குள், நிலையான அமைதியைக் காண, தமிழர்கள், அவர்களுடைய தரப்புக்கள், புலம்பெயர் தமிழர்கள், இலங்கை அரசாங்கம் என எல்லோரும் செய்யவேண்டியவை குறித்து, இலங்கை அரசியல் தீர்வு விடயத்தில் அதிகளவு அனுபவம் கொண்ட, இலங்கையின் முன்னாள் சமாதான முயற்சிகளின் அனுசரணையாளரும், நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹேய்ம் சில ஆலோசனைகளை முன்வைக்கிறார்.
டென்மார்க் அரசாங்கத்தின் அனுசரணையுடன், ஊடகக் கல்விப் பயணம் ஒன்றை மேற்கொண்டு, டென்மார்க், பிறசல்ஸ், நோர்வே ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்த 21 இலங்கை ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது, அவர் தமது இந்த யோசனைகளை மனந்திறந்து பகிர்ந்துகொண்டார்.
ஜுன் 25ம் திகதி நோர்வேயிலுள்ள வெளிநாட்டு அமைச்சு அலுவலகத்தில் சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அவர் பகிர்ந்துகொண்ட முக்கியமான சில விடயங்களை தமிழ் வாசகர்களுக்காக இங்கே தொகுத்துத் தருகிறேன்.
சமாதான அனுசரணையாளர்
இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதி சந்திரிகாவின் அழைப்பை ஏற்று, ரணில் விக்கிரமசிங்ஹா, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகிய அனைவருடனும் நேரடியாக உறவாடி தாம் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி எரிக் சொல்ஹேய்ம் சுருக்கமாகச் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அனுசரணையாளராகச் செயற்படவேண்டும் என்று, முரண்பாட்டுடன் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புக்களும் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இதில் தாம் ஈடுபட்டதாகக் கூறும் அவர், சம்பந்தப்பட்ட இரு தரப்புக்களுமே போரை ஒரு தெரிவாக எடுத்துக்கொண்டபோது, தாம் ஒதுங்கிவிட நேரிட்டதாக விளக்கினார்.
2002 – 03 வரையிலான காலகட்டத்தில் சமாதான முயற்சிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டதாகக் கூறும் அவர், 2004 – 05 காலப்பகுதியில் அது படிப்படியாக வீழ்ச்சியடைந்து, 2006இல் மாவிலாறு சம்பவத்துடன் போரை நோக்கி நகர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். எனினும், மோதல் ஆரம்பித்த பின்னரும் இரண்டு தரப்புக்களுடனும் தாம் தொடர்ந்து தொடர்பிலிருந்ததாக அவர் மேலும் கூறுகிறார்.
சொல்லியும் கேட்கவில்லை
2009 ஜனவரியில் அரசாங்கப் படைகள் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோதே நடைமுறை அர்த்தத்தில் போர் முடிவடைந்துவிட்டது என்று கூறும் அவர், அதன் பின்னர், அரச தரப்பின் வெற்றியைத் தவிர வேறெதற்கும் சாத்தியமிருக்கவில்லை என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்ததாகவும் சொல்கிறார். அந்தச் சந்தர்ப்பத்தில், போரை நிறுத்தி, மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் சொல்கிறார்.
“ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர முன்வருமாறு நானும், நோர்வே அரசாங்கமும் விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். அந்த நேரத்தில் அது நடந்திருந்தால், ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை அல்லது அமெரிக்கா அல்லது இந்தியா அல்லது யாராவது ஒருவரின் கண்காணிப்பின் கீழ் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும்” என்கிறார் எரிக் சொல்ஹேய்ம்.
தொடர்ந்தும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்புக்களை ஆராயுமாறு கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் தாம் பல தடவைகள் கூறியதாகவும், எனினும், துரதிர்ஷ்டவசமாக, பல்வேறு காரணங்களினால், விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிடுகிறார்.
இறுதி நாளான மே 17ம் திகதி நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் தொலைபேசியில் தொடர்புகொண்டு சரணடைவதற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறு தம்மிடம் கோரியமை மிகவும் காலம் பிந்தி விடுக்கப்பட்ட கோரிக்கை என்கிறார் சொல்ஹேய்ம். அந்த நேரத்தில் அவ்வாறான ஒரு சரணடைவை ஒழுங்குபடுத்த முடியாது என்பதை அவர்களுக்கு தான் சொன்னதாகவும், அப்போதிருந்த நிலைமையை அவர் விளக்கினார்.
“சரணடைய விரும்பினால் வெள்ளைக்கொடி மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் சரணடையும் நோக்கத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி அதனைச் செய்யும் வழிவகையைக் கண்டுபிடிக்குமாறு அவர்களிடம் நான் அப்போது சொன்னேன். அத்துடன், அரசாங்கத்துக்கும் இந்தத் தகவலைத் தெளிவாக அறியத்தந்தேன்” என்று கூறிய அவர், எனினும், சில மணி நேரங்களின் பின்னர் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக தமக்கு அறியத்தரப்பட்டதாகவும் சொன்னார்.
இந்த விவகாரமே இப்போது ஐ.நா. விசாரணைக்குழு அமைப்புக்குக் காரணமாகியிருக்கிறது என்று கூறிய சொல்ஹேய்ம், இதுதொடர்பில் ஒரு சுயாதீன விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
தோற்றது ஏன்?
சரி, சமாதானப் பேச்சுவார்த்தைகளின் இறுதி நாட்களில் உண்மையில் என்ன நடந்தது? அது பின்னடைவைச் சந்திக்கக் காரணம் என்ன என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விரிவான பதில்தர அவர் விரும்பவில்லை. இலங்கையில் தமது சமாதானச் செயற்பாடுகள் தொடர்பாக இந்திய ஆய்வாளரான நாராயணசுவாமி மற்றும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஆகியோர் புத்தகங்களை வெளியிடவிருப்பதாகக் கூறிய அவர், தமது பங்குக்கு நோர்வே அரசாங்கமும் சமாதான முயற்சிகளின் சாதக பாதக அம்சங்களை மீளாய்வு செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சமாதான முயற்சிகளில் தாம் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் இலங்கை ஊடகங்களாலும் தாம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறிய அவர், விமர்சனங்களைத் தாம் எப்போதும் வரவேற்கின்றபோதும், சில ஊடகங்கள் அப்பட்டமான பொய்ப்பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததாகக் குறைப்பட்டார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தொலைக்காட்சி உபகரணங்களைத் தாம் வழங்கியதாக கருணா ஒரு தடவை சொன்ன பொய்யை பெரிதுபடுத்திச் செய்தி வெளியிட்ட ஊடகங்கள், பின்னர் அது பொய்யான ஒரு தகவல் என்று கருணா உறுதிப்படுத்தியபோது, அதுகுறித்து எதுவுமே பெரிதாக அலட்டிக்கொள்ளாததை இதற்கு ஒரு உதாரணமாக அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இலங்கையில் உண்மையாகச் சமாதானம் தோற்றுப்போகவில்லை என்று வாதிடும் அவர், 2002 போர்நிறுத்த உடன்படிக்கையின்போதும், அதன்பின்னர் சுனாமித் தாக்கத்தின்போதும் சமாதானத்தை ஏற்படுத்தக் கிட்டியிருந்த சந்தர்ப்பங்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
மீண்டும் ஒரு சந்தர்ப்பம்
இப்போது மீண்டும் சமாதானத்துக்கான ஒரு அரிய சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது என்கிறார் சொல்ஹேய்ம். அதிகூடிய பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத் தேர்தலிலும் அவருடைய கட்சி பெற்ற பெருவெற்றியினால் அதிக பலம் பெற்றிருப்பதாகக் கூறும் அவர், இந்தப் பலம்; பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு உதவும் என்று வாதிடுகிறார்.
“முதலில் போரில் வெற்றியீட்டிய அவர் (ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ), பின்னர் தேர்தலிலும் வெற்றிபெற்றார். இப்போது அவர் மிகப் பலம்பொருந்திய நிலையிலுள்ளார். அவருக்கு முடிவெடுக்கும் முழு அதிகாரமும் உண்டு. அதைப் பயன்படுத்தி, தமிழர்களுடைய இனச்சிக்கலுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வை அவரால் ஏற்படுத்த முடியும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் சொல்ஹேய்ம்.
இந்தியாவின் தென் மாநிலங்கள், மலேசியா ஆகிய நாடுகளைப் போன்று இலங்கையிலும் சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
புலம்பெயர் மக்கள்
போர்க்காலத்தில் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய புலம்பெயர் தமிழர்கள் இப்போது மாறுபட்ட சிந்தனைகளுடன் இருப்பதாக, புலம்பெயர் தமிழர்கள் பற்றிய தமது மனப்பதிவை வெளியிட்ட சொல்ஹேய்ம், எந்த வகையிலும் மீண்டும் போர் பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதை, அவர்களுடனான ஒரு சந்திப்பின்போது தாம் திட்டவட்டமாகத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
“தமிழர்களுடைய உரிமைகள் வென்றெடுக்கப்படவேண்டும் என்பதற்கு பரந்தளவு உலக ஆதரவு உண்டு. ஆனால், போருக்கு ஒருபோதும் ஆதரவு கிட்டாது. இலங்கை அரசாங்கத்துடன் பேசி பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சி எடுக்கப்பட்டால் அதற்கு நாமும் ஆதரவு வழங்குவோம்” என்று விளக்கினார் சொல்ஹேய்ம்.
தேர்தலில் அதிகளவு வாக்குகளை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பிரதான அதிகாரம் மிக்க தரப்பாகக் கருதப்பட்டு, அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்கிறார் சொல்ஹேய்ம்.
எனினும், இலங்கையில் வாழும் மக்களுக்கே தீர்வு அவசியம் என்பதை வலியுறுத்தும் அவர், தமக்கு எத்தகைய தீர்வு தேவை என்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்றும் அழுத்தமாகக் கூறினார். புலம்பெயர் மக்கள் இதற்குத் தமது ஆதரவை வழங்கவேண்டும் என்றும் அவர் சொன்னார்.
பெரும்பாலான இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களிலிருந்து வெளியேறிவிட்டது குறித்துத் தமது மகிழ்ச்சியை வெளியிட்ட சொல்ஹேய்ம், சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு நோர்வேயும் உதவிகளை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
இலங்கையின் சுபீட்சமான எதிர்காலம் குறித்து தாம் மிகுந்த நம்பிக்கையுடனிருப்பதாகக் கூறிய அவர், ஆசியாவில் அதிகூடிய கல்வியறிவு மட்டத்தைக் கொண்ட இலங்கையானது, சிங்கப்பூர், மலேசியா, தென்னிந்திய மாநிலங்கள்போல் பொருளாதார ரீதியாக முன்னேறி, உல்லாசப் பயணிகளால் வர்ணிக்கப்படுவதுபோன்று உண்மையிலேயே ஒரு சொர்க்காபுரியாகக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருப்பதாகக் குறிப்பிட்டார்.
எனினும்………
“சொர்க்காபுரி என்பது மண் மட்டுமல்ல. அதன் மக்களும்தான். வாய்ப்புக்களை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்” என்று கூறி சந்திப்பை முடித்துக்கொண்டார் சொல்ஹேய்ம்.
பயன்படுத்துவோமா…?
(18-07-2010 ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் வெளியானது)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக