சனி, 4 செப்டம்பர், 2010

கழுத்து வலி என்பது முதுகுத்தண்டு பாதிப்புக்கான எச்சரிக்கை

உடலின் எந்தப் பகுதியில் வலி வந்தாலும் அதைக் கவனிக்கிற நாம், கழுத்து வலியை மட்டும் அவ்வளவாக பெரிதுபடுத்துவதில்லை. ஏதோ ஒரு பெயின் பாம் அல்லது சுளுக்குக்கான மாத்திரையுடன் சமாளிக்கப் பார்க்கிறோம். வலி முற்றி, கழுத்துக்கு பட்டை போட வேண்டிய அளவுக்கு வரும் வரை, அதன் தீவிரம் பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் கழுத்து வலி என்பது, முதுகுத் தண்டு பாதிப்புக்கான எச்சரிக்கை மணி என்கிறார்கள் மருத்துவர்கள்.

“கழுத்து வலி என்பது சின்ன வயசு, நடுத்தர வயசு, முதியவர்கள் என்று எந்த வயதிலும் வரலாம். விடலைப் பருவத்துல வரும் கழுத்து வலிக்கான காரணம், அதிகப்படியான உபயோகம். பாடசாலையில் முதல் பெஞ்சில் உட்கார்ந்து, போர்டை அண்ணாந்து பார்க்கிறது, தரையில் உட்கார்ந்து எழுதுவது, சரியான நிலையில் உட்காராத நிலையில் வலி வரலாம்.

கம்பியூட்டரை சரியான பொசிஷன்ல வைத்து உபயோகிக்காதது, எப்போ பார்த்தாலும் லேப் டொப் முன்னாடியே இருக்கிறது, படுத்துக் கொண்டு கம்பியூட்டரை உபயோகிக்கிறது இதெல்லாம் இளம் வயதினருக்கு வரும் கழுத்து வலிக்கான காரணங்கள்.

கழுத்தின் பக்கத்தில் உள்ள தசைகள் சோர்வுற்று, கழுத்து எலும்பின் மத்தியில் உள்ள சவ்வில் அழுத்தம் அதிகமாகும். “செர்வைகல் டிஸ்க்'னு சொல்லப்படும் இந்த சவ்வு விலகி, பக்கத்துல உள்ள நரம்புகளை அழுத்துவதால் கழுத்து வலிஏற்படலாம். அப்படி உண்டாகிற வலி, கைகளுக்கும், கால்களுக்கும் பரவலாம். வயதானவர்களுக்கு வரக்கூடிய கழுத்து வலி “செர்வைகல் ஸ்பான்டி லைட்டிஸ்'னு சொல்லப்படுகிறது. 50 பிளஸ்ல வரக்கூடியது இது. கழுத்தில் மொத்தம் 7 எலும்புகள் இருக்கும்.

ஒவ்வொன்றுக்கும் இடையில் இணைப்புகளும், சவ்வும் இருக்கும்.
முதுமையின் காரணமாக தேய்மானம் ஏற்படும்போது, அது பக்கத்தில் உள்ள தண்டுவடம் (ஸ்பைனல் கோர்ட்) மற்றும் நரம்புகளில் அழுத்தத்தை அதிகமாக்கி, கை, கால்களுக்கும் வலியைத் தரும். தண்டு வடம் பாதிக்கப்படுகிற இந்த நிலைக்கு “செர்வை கல் மைலோபதி' என்று கூறப்படும். நரம்புகளும் வரும் வழி சிறுத்துப் போய், கை, கால்கள் சோர்வுற்று, அந்தப் பகுதிகளில் உணர்ச்சிகளும் குறையும். சின்னப் பொருட்களைக் கூடப் பிடிக்க முடியாமல் தவற விடுவது, சாவியால பூட்டைத் திறக்க முடியாதது, புத்தகத்தைப் பிடித்துக்கொண்டு படிக்க முடியாது என்று மறைமுக அறிகுறிகளை உணர்வார்கள் பாதிக்கப்பட்டவர்கள். தண்டுவடம் பாதிக்கப்படுவதால் கால்களும் சோர்வாகி, நடை மாறலாம்.

பாதங்களிலும் உணர்ச்சி குறையலாம்.

இன்னும் தீவிரமானால், சிறுநீர் கழிப்பதிலும் பிரச்சினை வரலாம். கழுத்து வலி வரும் போது, அது சாதாரண வலியாகவோ, சுளுக் காகவோதான் இருக்கும் என்று நினைத்து அலட்சியப்படுத்த வேண்டாம். 5 நாட்களுக்கு மேலும் வலி தொடர்ந்தாலோ, வலியோடு கூடவே காய்ச்சலோ, பசியின்மையோ இருந்தாலோ, உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டியது அவசியம்'' என்கிறார்கள் மருத்துவர்கள்.

கழுத்து வலி வராமலிருக்க சில பொதுவான டிப்ஸ்கள்:

படிக்கும் பிள்ளைகள் படிக்கவும், எழுதவும் மேசையை உபயோகிக்கலாம். நிற்கிறபோது, நடக்கிற போது, உட்கார்ந்திருக்கிறபோது, கம்பியூட்டர் மொனிட்டரை பார்க்கிறபோதெல்லாம் சரியான பொசிஷனைப் பின்பற்ற வேண்டியது அவசியம். தூங்கும்போது 2, 3 தலையணை உபயோகிக்கக் கூடாது. மெல்லிசான ஒரே ஒரு தலையணை போதும். படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கிறது, டி.வி பார்க்கிறது, கம்பியூட்டர் உபயோகிக்கிறதெல்லாம் கூடவே கூடாது.

சாதாரண சுளுக்கா இருக்குமோ என்கிற எண்ணத்தில் கண்டவர்களிடம் சுளுக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. அது கழுத்து நரம்புகளையும் பாதிக்கும். புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு கழுத்து எலும்பு சவ்வு பாதிப்புகளில் அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கல்சியம் அதிகள்ள உணவுகள் தினசரி உணவில் இருக்கவும். கழுத்து தசைகளை பலப்படுத்தும் பயிற்சிகளையும், தோள்பட்டைகளுக்கான பயிற்சிகளையும் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு செய்வது மூலமாக, வலி வருமுன் இந்நோயை காக்கலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல