சனி, 4 செப்டம்பர், 2010

முஸ்லிம் பெண்களின் உரிமையும் விவாகரத்து முறைமையும்

ஒரு விரிவான கண்ணோட்டம்

இஸ்லாமிய சட்டம் திருமணத்தினை ஒரு ஒப்பந்தமாகவே கருதுகின்றது. இதன் காரணமாக தம்பதிகள் இருவரினதும் சம்மதத்தின் வாயிலாக அதனை முடிவுறுத்திக்கொள்ளவும் அனுமதியளிக்கின்றது. பொதுவான சட்ட நடைமுறைகளுக்கு மாற்றமாக இஸ்லாம் பெண்களுக்கும் விவாகரத்து கோருவதற்கான வாய்ப்பினை உரிமையளித்துள்ளது. `குல்உ' எனும் விவாகரத்து முறைமையின் மூலமாக தன் திருமண ஒப்பந்தத்தினை முடிவுறுத்திக் கொள்ள ஒரு பெண் உரிமை பெற்றுள்ளாள்.

மகிழ்ச்சியுடன் உறவு நடாத்துகின்ற இருவர்க்கிடையில் அவ்வப்போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் தவிர்க்க முடியாததாக மாறுகின்ற வேளை, அது வாழ்வில் பல பிரச்சினைகளை தோற்றுவித்துவிடுகின்றது. எவ்வாறாயினும் சில சந்தர்ப்பங்களில் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு அம்சமாக விவாகரத்து அமைந்துவிடுகின்றது. எப்போதும் திருமணத்தினை முடிவுறுத்திக்கொள்ள முடியாத ஒரு விடயமாக கையாள்வது கடினமாகும். ஏனைய சமயங்கள் அதனை ஒரு புனிதத்துவமிக்க விடயமாக எப்போதும் கருதுவதனால் திருமணம் மிகவும் இறுக்கமானதாகவும், முடிவுறுத்திக் கொள்வதற்கு மிகவும் சாத்தியப்பாடுகள் இன்றியதாகவும் பிரயோகப்படு த்தப்படுகின்றது. ஆனால் ஒரு ஒப்பந்தம் என்ற வகையில் முடிவுறுத்தப்படக்கூடிய அனைத்துவகை இயற்கையான அம்சங்களினையும் கொண்ட விடயப் பரப்பாக அது காணப்படுகின்றது. இன்று ஆணாதிக்க சமூகத்தினரால் அடிக்கடி தவறாக பிரயோகிக்கப்படுகின்ற ஒரு விடயமாக விவாகரத்து முறைமை காணப்படுகின்றது. காரணம், கணவன் மனைவி இருவருக்கிடையில் மீள் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் ஏனைய சமூக உறுப்பினர்களினால் உருமாற்றப்படுகின்றன. இவை அதிகமாக, மனித உரிமைகள் பற்றிய ஆர்வலர்களாக, நவீனத்துவ சிந்தனையின் இருப்பிடங்களாக தங்களை உருப்படுத்திக் கொண்டவர்களினாலேயே மேற்கொள்ளப்படுவது மிகவும் சிந்திக்கவேண்டிய ஒன்றாகும்.

இஸ்லாமிய சட்டம் திருமணத்தின் மூலமாக தம்பதிகள் இருவர்க்கிடையிலும் சம வாய்ப்பினையும், சுதந்திரத்தினையும், உயர் தராதரத்தினையும் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்ற அதேவேளை, விவாகரத்தினையும் அனுமதித்துள்ளது. ஆனாலும் இஸ்லாம் அனுமதித்துள்ள விடயங்களுள் மிகவும் வெறுக்கத் தக்கதாகவே அதனை கருதுகின்றது.

அல்குர்ஆன் திருமணத்தினை ஒரு பலம் பொருந்திய உடன்படிக்கையாகவே எடுத்துரைக்கின்றது. எனவே, விவாகரத்து என்பது சாதாரண விடயம் ஒன்று அன்றி அசாதாரண ஒரு நிகழ்வாகவே கருதப்படுகின்றது. அது சில வேறுபட்ட நிலைகளில் மாத்திரம் பிரயோகிக் கப்படவேண்டிய சிறப்புக்குரியதாகும். இஸ்லாம் அதனை எந்த ஒரு நிலையிலும் ஏற்படுத்திக்கொள்வதற்கான ஊக்கத்தினை அளித்திருக்கவில்லை. இங்கு விவாகரத்து என்பதனை இஸ்லாமிய சட்டம் இறை விசுவாசத்தினதும், கடமைப்பாட்டினதும் நடைமுறைக்கு மாற்றமானதாக வலியுறுத்துகின்றது. அத்தோடு விவாகரத்து பெறுவதற்கான உதவிக்கு அழைக்கும் செயற்பாட்டினை முற்றாக தடை செய்துள்ளதனையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. மட்டுமன்றி தனது மனைவி மீது அவதூறுகளை கூறுவதனையும் அவளுக்கு வழங்கப்பட்டவைகளை மீண்டும் பெற்றுக்கொள்வதனையும் இஸ்லாம் தடைசெய்கின்றது. இவ்வாறாக கணவன் மனைவிக்கிடையில் பிணக்குகள், பிளவுகள் ஏற்படும்வேளை மத்தியஸ்தர்களை நியமிக்குமாறும் இஸ்லாமிய சட்டம் வலியுறுத்துதுகின்றது.

இவ்வாறு நியமிக்கப்படும் மத்தியஸ்தர்களது பங்களிப்பு என்ன? இவ்வாறானவர்களது நியாயங்கள், தீர்மானங்கள் இரு தரப்பினரையும் பிணிக்குமா? அல்லது பரிந்துரைகளாக மாத்திரம் கருதப்படக்கூடியதா? என ஆராய்வோமானால், இவை தொடர்பில் சட்டவியலாளர்களிடையில் வேறுபட்ட கருத்துக்களை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இமாம் ஷாபிஈ அவர்கள் அவ்வாறானவர்களது தீர்மானம் பிணிக்கக் கூடியது எனக் கூறும் அதேவேளை, இமாம் அபூஹனீபா அவர்களது எண்ணம் இதற்கு மாற்றமாக காணப்படுகின்றது. இங்கு இமாம் ஷாபிஈ அவர்கள் தனது கருத்திற்கு ஆதாரமாக ஆட்சியாளராக திகழ்ந்த அலி(றழி) அவர்கள் மத்தியஸ்தர்களது தீர்மானத்தினை நடை முறைப்படுத்தியதனை எடுத்துக் காட்டுகின்றார்.

இக்குறித்த வசனம் விவாகரத்து பற்றிய பிரச்சினை எழுகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை முறை பற்றி தெரிவிக்கின்றது. இது கணவன் தன் மனைவியினை புறந்தள்ளுவதற்கானதல்ல, அதனை தீர்மானிப்பது நீதிபதியின் பாற்பட்டதாகும். பொதுவாக விவாகரத்து பற்றின விடயங்கள் பகிரங்கப்ப டுத்தப்படக் கூடாது. பிணக்கிலுள்ள கணவனது தரப்பிலிருந்து ஒருவரையும், மனைவியினது தரப்பிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக நீதிபதி நியமிப்பது அவசியம். இவ்விரு மத்தியஸ்தர்களும் பிணக்கினது உண்மை நிலையினை கண்டறிய முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களினுடைய நோக்கம் கட்டாயமாக இரு தரப்பினரினையும் ஒன்று சேர்த்து சமாதானம் செய்வதாக அமைய வேண்டும். இங்கு ஒருங்கு சேர சமாதானப் படுத்துவதற்கான எல்லா நிலமைகளும் தோல்வியுறுமானால், விவாகரத்திற்கான அனுமதி இறுதியாக வழங்கப்படும். என்றாலும், விவாகரத்திற்கான இறுதித் தீர்மானம் என்பது அதனை முன்மொழிய சட்ட ரீதியாக அனுமதி அளிக்கப்பட்ட நீதிபதியில் தங்கியுள்ள விடயமாகும்.

இஸ்லாம் பெண்களது நலன் பற்றி அதிக அக்கறையுடன் செயற்படுகின்றது. அவளது பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதன் மூலமாக சம வாய்ப்பினை வழங்குகின்றது. பெண்களை அடிமைப்படுத்துகின்ற ஒரு சமூகத்தில் இந்நடவடிக்கை நிச்சயமாக புரட்சிகரமானதொரு விடயமாகும். இங்கு கணவனுடன் ஏற்பட்ட பிணக்கினை தீர்த்துக்கொள்ள தன்னுடைய மத்தியஸ்தரை கணவனுக்கெதிராக முன்னிலைப்படுத்துவது அக்குடும்ப சச்சரவினை முடிவுறுத்திக் கொள்வதற்கு மிகவும் உன்னதமானதும், குறிப்பிடக் கூடியதுமான செயற்பாடாகும். பெண்கள் எவரும் தமது குடும்ப நிலமை, அந்தஸ்து என்பதற்கு அப்பால் விவாகரத்து நடவடிக்கையில் பங்கு கொள்வதற்கு இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கின்றது. இதனால் பெண்கள் தமக்கான மத்தியஸ்த பிரதிநிதிகளை தெரிவது மட்டுமல்லாது தமது விவாகரத்து தொடர்பான செயல் முறையில் கூட பங்கு கொள்ள முடியும். இவ்வுரிமையை பிரயோகிக்கும் போது எதுவித சாதி, வகுப்பு, அந்தஸ்து என்ற அடிப்படையிலான தயவு தாட்சண்யங்களும் காட்ட முடியாது. இவ்வேற்பாடுகள் இஸ்லாமிய சட்ட முறைமையில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இவைகள் உருக்குலைக்கப்படுகின்ற வேளையிலேயே அதிகமான விவாகரத்துக்கள் அர்த்தமற்றவையாக, அநியாயமாக மாறிவிடுகின்றன.

விவாகரத்து என்பதற்கு இஸ்லாமிய சட்டத்தில் `தலாக்' என்ற சொல் பிரயோகிக்கப்படுகின்றது. அராபிய இலக்கணத்தில் தலாக் என்பது பிரிக்கக்கூடிய (அவிழ்க்கக்கூடிய) கட்டு(சுருக்கு) அல்லது, விடுபாடுடைய உடன்படிக்கை எனப் பொருள்படுகின்றது. `தலாக்' எனும் சொல்லானது `இத்லாக்' எனும் அராபிய அடிச்சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். `வேறாக பிரிந்து செல்லல்' அல்லது `திருமண ஒப்பந்தத்திலிருந்து பிரிந்து கொள்ளல்' என்பன இதன் பொருளாகும். இதனால் `தலாக்' என்பது `திருமணப் பிணைப்பில் இருந்து வெளியேறுதல்' அல்லது `சுதந்திரமாதல்' என கூறப்படுகின்றது. `இத்லாக்' என்றால் விட்டு செல்லல், கைவிடுதல் என பொருளாகின்றது.

விவாகரத்து (தலாக்)

நடபடிமுறை

தலாக் முறைமை பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

"தலாக்கை இரு முறைதான் கூறலாம். பின்னும் (தவணைக்குள்) முறைப்படி தடுத்து (மனைவிகளாக) வைத்துக் கொள்ளலாம் அல்லது (அவர்கள் மீது யாதொரு குற்றமும் சுமத்தாமல்) நன்றியுடன் விட்டுவிடலாம்."

இங்கு தெளிவாக காணப்படுகின்ற விடயம் தலாக் இரு முறை முன் மொழியப்பட முடியுமானது என்பதாகும். இந்நிலமையில் அவ்விவாகரத்து மீள (முடிவுறுத்திக் கொள்ள) முடியுமானதாக காணப்படுகின்றது. இதன் பின்னராக குறிப்பிட்ட எஞ்சிய காலத்தினுள் அம்மொழியப்பட்ட விவாகரத்தினை மீண்டும் வறிதாக்கிக் கொண்டு தம்பதிகள் ஒன்று சேர வழி வகைகளை மேற்கொள்ள முடியும். இஸ்லாமிய சட்டமானது அடிப்படையில் ஒரு ஆணினது பூரண பாதுகாப்பின் கீழ் தமது வாழ்வியலை ஒரு பெண் கொண்டு நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதனால் இஸ்லாமிய சட்டத்தில் விவாகரத்து என்பது இரு முறை மட்டும் மொழியப்பட க்கூடியதாயும், அவ்வாறின்றி மூன்றாம் முறையும் விவாகரத்தினை முன் மொழிவார்களாயின் அது மீள (முடிவுறுத்திக் கொள்ள) முடியாத தம்பதிகள் இருவரும் சில நிபந்தனைகள் நிறைவேறாத வரை மீண்டும் கணவன் - மனைவி உறவினை கட்டிக்காக்க இயலாத நிலைக்கு இட்டுச் செல்லும். இவ்வாறு விவாகரத்திற்கான மூன்றாவது மொழிவுகளும் நிறைவேறிய பின்னர், விவாகரத்தான பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றாலே ஒழிய, முந்திய கணவன் அவளை மீள திருமண பந்தத்தில் இணைத்துக் கொள்ள முடியாது. இச் சந்தர்ப்பத்தில் மாத்திரமே ஒருத்தி தனது முந்திய கணவனை மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும்.

இவ்வாறான மிகவும் இறுக்கமான நிலைமை இஸ்லாமிய சட்டத்தில் உள்ளாக்கம் பெற்றிருக்க காரணம் விவாகம், விவாகரத்து தொடர்பாக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகத்தினை தடுத்து நிறுத்துவதற்கேயாகும்.

கணவன் ஒருவன் மூன்றாவது முறையும் மொழிவதென்பது விவாகரத்திற்கான அறுதியும், இறுதியுமான நிலமையினை வெளிப்படுத்துகின்றது. எனிலும் விவாகரத்திற்கான மொழிவுகள் மூன்றும் ஒரே தடவையில் மேற்கொள்ளப்பட வேண்டுமா? அல்லது வெவ்வேறான சந்தர்ப்பங்களில் இடம்பெற வேண்டுமா? என்பது தற்போது நடைமுறையில் காணப்படுகின்ற பிரச்சினையாகும். விவாகரத்திற்கான மொழிவுகள் மூன்றும் ஒரே தடவையில் இடம்பெறுவதும், மீண்டும் அப்பெண் வேறு ஒரு நபருடன் திருமண உறவுகொண்டு வாழ்ந்து விவாகரத்து செய்த பின்பே மீள முந்திய கணவனால் அவளுடன் மண வாழ்வில் ஈடுபடமுடியும் என்பதும் இன்று எமது காதி நீதிமன்றுகளில் காணப்படுகின்ற வழக்கமான நடைமுறையாகிவிட்டது. இந் நிலைமை காதி நீதிபதிகள் பக்கச்சார்பாகவும், நடுநிலைமை அற்றவர்களாயும் செயற்படவும், அதேவேளை இலகுவாக விவாக துஷ்பிரயோக நிகழ்ச்சி நிரல்களை கணவான்கள் மேற்கொள்ளவும் உறுதுணையாக அமைகின்றது.

மேலும், இஸ்லாமிய சட்டத்தினால் மிகவும் இறுக்கமானதாயும், வெறுப்பானதாயும் கருதப்படுகின்ற விவாகரத்தினை, இன்று மிகவும் சகாய நிலையில் பெற்றுக்கொடுக்கவல்ல ஒரு வாய்ப்பான சந்தையாக காழி நீதிமன்றுகள் முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளதை எனலாம். காரணம், நியமிக்கப்படுகின்ற நீதிபதிகள் நாட்டின் முஸ்லிம் சட்டத்தினுடைய உள்ளடக்கங்களினை சரியான வகையில் விளங்கிக் கொள்ளாதவர்களாயும், மேலும் முஸ்லிம் சட்டம் தொடர்பிலும் அவை தொடர்பிலுள்ள இஸ்லாமிய சட்ட நிலமை குறித்தும் போதிய பயிற்சியோ, அறிவோ அற்றவர்களாகவும் அவர்கள் காணப்படுகின்றனர். இவை காழி நீதிபதிகள் தெரிவுசெய்யப்படுகின்ற முறைமைகளில் உள்ள வழுக்களாக காணப்படுகின்றன.

பொதுவாக, விவாகரத்து பெற்ற ஒரு பெண் குறித்த `இத்தா' காலம் முடிவடைந்த பின் மீண்டும் ஒருவருடன் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளலாம். விவாகரத்தான பெண் வேறு ஒருவரை மணந்து, அம்மனிதராலும் மீண்டும் விவாகரத்து பெற்றார் எனில், குறித்த பெண் பிந்திய கணவனுடன் உடலுறவு கொண்டிராத வரை, தனது முந்திய கணவனை மீண்டும் மணம் முடிக்க இயலாது. இந்நிலைமை முந்தய கணவனுடன் மீண்டும் பந்தத்தில் இணைவதாக இருப்பின் காணப்படுகின்ற நிபந்தனைகளாகும்.

தற்கால சூழ்நிலையில், விவாகரத்திற்கான மொழிவுகள் மூன்றும் ஒரே தடவையில் மேற்கொள்ளப்பட வேண்டுமா? என்பது பற்றி பல்வேறுவகையான கருத்துக்கள் நிலவுகின்றன. மறுபுறமாக இஸ்லாமிய சட்டம் இவை தொடர்பில் தெளிவான விளக்கங்களை கொண்டுள்ளபோதும் கூட, இன்று எமது சமூகத்தில் காணப்படுகின்ற விவாகரத்துக்களுள் மிகவும் அதிமானவை இத்தகைய இஸ்லாமிய சட்டத்திற்கு மாற்றமான விவாகரத்து முறைமை கொண்டே கையாளப்படுகின்றன. இதனால் தற்காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் விவாகரத்து மிகவும் இலகுவான ஒரு விடயமாக நோக்கப்படும் அதேவேளை ஏனைய சமூகத்தவரினால் முஸ்லிம்களின் விவாகம் மற்றும் விவாகரத்து விடயங்கள் விமர்சனத்திற்குரியதாயும் அமைந்துவிட்டது எனலாம். இந்நிலைமை இவை தொடர்பில் இஸ்லாமிய சட்டம் கொண்டுள்ள எற்பாடுகளை முழுமையாக முறியடிப்பதாகவும், அதன் குறிக்கோள்களை அடைவதில் தடைகளை உண்டுபண்ணுகின்றனவாயும் அமைந்துவிடுகின்றன.

இஸ்லாமிய சட்டவியல் அறிஞர்கள் இதனை சட்டத்திற்கு மாற்றமான ஒரு செயற்பாடாகவே (ஆச்ஞ'ச்டூஆடிஞீ'ச்ட) கருதுகின்றனர். இஸ்லாமிய சட்டவியலின் முக்கியத்துவம் பெற்ற அறிஞர்களாக கருதப்படுகின்ற இமாம் அபூ ஹனீபா மற்றும் இமாம் மாலிக் என்போர் மூன்று மொழிவுகளையும் ஒரே தடவையில் மேற்கொள்வதனை சட்டத்திற்கு மாற்றமான ஒரு விடயமாக கருதுவதுடன், அனுமதிக்ககூடிய ஒரு விடயமல்ல எனவும் கூறுகின்றனர். பிரபல சட்ட அறிஞரான இமாம் அஹ்மத் ஹன்பல் அவர்களும் இக்கருத்துடன் உடன்படுகின்றார். ஆனாலும் இஸ்லாமிய சட்டவியலின் அடுத்த முக்கிய அறிஞராக கருதப்படுகின்ற இமாம் ஷாபி அவர்கள் இவ்வகையான விவாகரத்தினை அனுமதிப்பதுடன், அது கணவனின் உரிமை எனவும் குறிப்பிடுகின்றார். பொதுவாக நபி (ஸல்) அவர்களது காலப்பகுதியிலும் அவர்களது தோழர்களது காலப்பிரிவிலும் மூன்று மொழிவுகளையும் ஒரே தடவையில் மேற்கொண்டதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை. மாறாக, அவ்வாறு விவாகரத்திற்காக ஒரே தடவையில் மேற்கொள்ளப்படும் மூன்று மொழிவுகளும் ஒரு மொழிவாகவே கொள்ளப்பட்டது.

அல்குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் இவ்வாறான செயற்பாடு குறித்து எடுத்துரைக்கப்படவில்லை என்பதோடு இஸ்லாமிய சட்டத்தில் முடிவுறுத்தக்கூடிய விவாகரத்து `ஜ தலாக் ரஜ்-இ' (கீஞுதிணிஞிச்ஞடூஞு) வகையே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒரே தடவையில் மூன்று மொழிவுகளையும் மேற்கொள்வது பற்றியோ அல்லது தலாக் அல்- பத்தாஹ் எனும் வகை முறிக்க முடியாத (ஐணூணூஞுதிணிஞிச்ஞடூஞு) விவாகரத்து பற்றியோ எவ்வித கருத்துக்களும் கூறப்படவில்லை. இவ்வாறு மூன்று மொழிவுகளும் ஒரே தடவையில் பிரயோகிக்கப்படினும் அதனை ஒத்த மொழிவாகவே கருத வேண்டும். கணவன் விவாகரத்தினை முறித்துக் கொண்டு மீண்டும் தனது மனைவியுடன் திருமண பந்தத்தில் இணைந்து வாழ உரிமையுள்ளவன் என்பது இங்கு முக்கியப்படுத்தப்படும் அம்சமாகும்.

மேற்போந்தவற்றிலிருந்து ஷாபி பிரிவினை தவிர்ந்த ஏனைய பிரிவுகளினது சட்டவியலாளர்கள் மூன்று மொழிவுகளையும் ஒரே தடவையில் மேற்கொள்வதனை சரி காணவில்லை. பதின்நான்காம் நூற்றாண்டின் சிறந்த இஸ்லாமிய சட்டக் கலை நிபுணரான இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூட இவ்வகை விவாகரத்து முறை சட்ட வலிதுடமை பெறாது எனக் கூறுகின்றார்.

இஸ்லாமிய சட்ட ஏற்பாட்டின் கீழ் `அல்-தலாகுல் மர்ரதானி' என்பதன் மூலம் தெளிவுபடுத்தப்படுவது `ஒரு தடவையில் ஒரு தலாக்' என்பதாகும். `முர்ரதானி' என்பதன் அடிச்சொல்லான `மர்ரதம்' என்ற சொல் மூலம் (இரு முறை) அங்கு இரு தலாக் மொழிவுகளுக்குமிடையில் கால இடைவெளி இருப்பதனை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். எனவே, இரு மொழிவுகளையும் ஒரே தடவையில் மேற்கொள்ள முடியாது என்பது சட்டத்தின் பொருளாகும். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு மொழிவே அமைதல் வேண்டும். இந்நிலைமையில், பெண்களின் கனவான்கள் பின்னும் சமாதானத்தை விரும்பினால், அவர்கைளை மீண்டும் மனைவிகளாக திருப்பிக் கொள்ள கனவான்களுக்கு உரிமையுண்டு. ஆண்களுக்கு பெண்கள் மீதுள்ள உரிமை போன்றே பெண்களுக்கும் உண்டு. இங்கு ஒருவர் தனது மனைவியின் நல்ல பல குணாம்சங்களை பற்றி சிந்திக்கவும் அவளது காதலை புரிந்துகொள்ளவும், அவளது அன்பின் ஊடாட்டங்களை நினைவு கூரவும் இஸ்லாமிய சட்டம் வாய்ப்பளிக்கின்றது.

மூன்று தடவை தலாக் மொழிவதற்கான எவ்வித ஆதாரங்களும் இஸ்லாமிய சட்டத்தில் தெளிவாக இல்லை. அதே சமயம், ஒவ்வொரு `துஹ்ர்' காலப்பகுதியிலும் (மாதவிடாய்த் தவணைக்காலம்) தலாக் மொழிவு கூறப்படல் வேண்டும் என்பது முற்றிலும் பிழையான செயற்பாடாகும். பெண்ணின் மூன்று துஹ்ர் காலங்கள் முடிந்திருக்கும் வரைக்கும் ஒரு தலாக் மொழிவே மேற்கொள்ளப்பட்டிருக்கும். இங்கு துஹ்ர் காலங்கள் ஒவ்வொன்றிலும் தலாக்கிற்கான மொழிவு மேற்கொள்ளப்பட வேண்டும் எனும் அவசியமில்லை.

விவாகரத்தினைப் பெற்ற பெண் மூன்று துஹ்ர் காலங்களுக்கு இத்தா அனுஷ்டிக்க வேண்டும். இதன் பின்னர் அப்பெண் வேறு ஒரு திருமண ஒப்பந்தத்தினுள் நுழைய விரும்புவாளாயின், அவள் சுதந்திரமானவள். இதன் காரணமாக தலாக் மொழிவு ஒரு தடவை மாத்திரமே என்பதுடன், குறித்த `துஹ்ர்' கால(ங்கள்)ம் முடிவடைந்த பின்னர் மேலும் ஒரு தடவைக்கு மேலதிகமாக அது இருக்காது. இவ்வேளையில் இவர்கள் தமது மனங்களை உறுதியான முறையில் மாற்றிக்கொண்டு தங்களது உறவினை விலக்கிக்கொள்ள அல்லது மீண்டும் ஒன்று பட்டு பரஸ்பரம் புரிந்துணர்வுடன் அன்பாக வாழ்வதற்கான சுமுகமான வழிவகைகளை தேடிக்கொள்ளலாம். இந்நடைமுறையே இஸ்லாமிய சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையாகும்.

இதுவரை காலமும் எமது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இன்றியமையாத ஒரு சட்டமாக இத்தலாக் முறைமை கருதப்பட்டு வருவதுடன் இதுவே இன்று அதிகமாக பிரயோகிக்கப்படுகின்ற ஒன்றாகவும் காணப்படுகின்றது. நாம் மிக நெடுங்காலத்திற்கு இத்தலாக் மொழிவு முறையினை நடைமுறையில் கொண்டிருப் போமானால், அது பெண்கள் தொடர்பிலான பல அசௌகரியங்களுக்கு வழி சமைக்கும் என்பதில் ஐயமில்லை. இந்நடைமுறைகளினால் பெண்கள் சமூகத்திற்கு இழைக்கப்படும் பல்வேறு வகையிலான அநீதிகளை நாம் இன்று நேரடியாக அவதானித்து வருகின்றோம். ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் அநீதியிழைக்கப்படுதற்குக் காரணமாயுள்ள, வழக்கத்திலுள்ள இத்தலாக் முறைமை யானது மிகவும் தன்னிச்சையானதும், தவறான வழிக்கு இட்டுச் செல்லக் கூடியதுமாகும்.

கணவனது அசமந்தமான போக்கின் காரணமாக, விளையாட்டாகக் கருதி அதன் தாற்பரியத்தினை உணராது, மன உளைச்சலினால் அல்லது கோப நிலைமை தணியாத வேளை மூன்று மொழிவு களையும் ஒரே தடவையில் கூறுவாரானால், அப்பெண் மீள (முடிவறுத்திக்கொள்ள) முடியாத (Irrevocable) விவாகரத்தினை பெற்றுக் கொள்வாள். மேலும் கணவன் அறிவுள்ள நிலைக்குத் திரும்பும்போது எதுவித கைங்கரியமும் மேற்கொள்ள வழியில்லை. ஏனெனில் அத்தலாக் சட்ட தராதரம் பெற்றதாக கருதப்படுகின்றது. இதே நிலைமையில் மனைவிக்கும் அநாதரவே கிட்டும். இவ்வாறான நிலமைகளின் போது, கணவன் விரும்பினாலும் குறித்த நிபந்தனைகள் நிறைவேறாதவரை அவளை மீள மனைவியாக்கிக் கொள்ள முடியாது.

இன்று எமது முஸ்லிம் சமுகத்தில் மிகப்பரவலாக நிகழ்கின்ற விடயம் யாதெனில் கணவன்மார்களுக்கு அடிபணியத் தவறிய அல்லது தவறுகின்ற மனைவியர்கைளைத் தண்டிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தலாக் முறைமை யினை அதிகமான ஆண்கள் பிரயோகித்து வருகின்றனர். இதுவே எமது முஸ்லிம் சட்டத்தின் வழுவாய் அமைந்து விடுகின்றது. இஸ்லாமிய சட்டத்தில் விவாகரத்து தொடர்பான பிரயோகமானது, திருமணத்தில் மட்டுமன்றி விவாகரத்து தொடர்பிலும் பெண்களுக்கு சமமான வாய்ப்பும் தகுதியும் வழங்கப்படுவதிலேயே தங்கியுள்ளது.

மேற்குறிப்பிட்டது போன்று, விவாகரத்து வழக்கொன்றில் மத்தியஸ்தர் நியமிக்கப்படுவதனை இஸ்லாமிய சட்டம் வலியுறுத்துகின்றது. வழக்குத் தொடர்பான இறுதித் தீர்மானத்தினை காழி நீதிபதி அல்லது காழி நீதிமன்று வெளியிடும். எவ்வாறாயினும், தற்கால சூழ்நிலையில் நிலைமை வேறுபட்டதாக உள்ளது. விவாகரத்து தொடர்பில் முழுமையான கட்டுப்பாட்டை கணவன் கொண்டுள்ளதாக கருதப்படுகின்றது. எந்தவொரு மனநிலையிலும், எந்தவொரு சூழ்நிலையிலும் அக்கணவன் வழக்கத்திலுள்ளது போன்று தலாக்,தலாக்,தலாக் என கூறுவதனூடாக தனது மனைவியினது வாழ்க்கைக்கு முத்திரை பொறித்துவிடுகின்றான். இத்தகைய மொழிதலுக்கு எதிரான எதுவித நிவாரணமுமின்றி அவள் கைவிடப்படுகின்ற நிலமையினை நாம் நடைமுறையில் அவதானிக்கின்றோம்.

இஸ்லாமிய சட்டமானது விவாகரத்தானது துஹ்ர் எனும் காலத்திலேயே வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது. கடுமையான இவ்வலியுறுத்தலுக்கு காரணம், இந்நிலமையில் கணவன் தனது மனைவியுடன் உறவு கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்பதுடன் இவை விவாாகரத்திலிருந்து இருவரும் விடுபட்டுக்கொள்ள வாய்ப்பாக அமையும் என்பதனாலாகும். பெண்ணின் மாதவிடாய் காலப்பகுதியில் கணவன் அவளை விட்டு உடலுறவில் தவிர்ந்து இருப்பதனால் விவாகரத்திற்கு அதிகமான வாய்ப்பு அங்கு காணப்படும். இது சாதாரண மனித அறிவிற்குட்பட்ட வியூகமாக இருப்பினும், இச்செயல் நிச்சயமாக விவாகரத்தினைத் தடுக்க வழிகோலுவதுடன் மனிதனின் இயற்கை சுபாவத்தினை கருத்திற்கொண்டதாக இச்சட்ட ஏற்பாடு காணப்படுகின்றது.

பொதுவாக `விவாகரத்தான பெண் மூன்று மாதவிடாய்த் தவணைக் காலத்திற்குக் காத்திருக்க வேண்டும்' எனக் கூறப்பட இரு காரணங்கள் இருக்கின்றன. அப்பெண் கருவுற்றிருப்பின் அதனை இக்குறித்த காலப்பிரிவினுள் நிரூபணமாக்கிக்கொள்ளலாம். கணவன் மீள சமாதானமாக விரும்புவானாயின் அதற்கான போதுமான காலமாக இவை காணப்படும். இவைகூட மீள முடியாத விவாகரத்துக்கு (தலாக் அல்-பத்தா) அனுமதிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதற்கு சான்றாகும்.

ஆண்களைப் போன்றவாறே பெண்களும் இஸ்லாமிய சட்டத்தில் சமமானவர்களாக கருதப்படுகின்றனர். கணவன் மீள அவளை அழைக்கின்ற வேளை ஒரு பெண் மீண்டும் அவரோடு சேர்ந்து வாழ மறுப்பாளாயின், அவளது விருப்பிற்கு மாற்றமாக அப்பெண் வலுக்கட்டாயப்படுத்தப்பட முடியாது. ஆரம்பத்தில் கணவன் ஒருவனுக்கு தனது மனைவியை மீண்டும் அழைத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ள வேளையிலும், அவ்வழைப்பை நிராகரிக்கும் உரிமையினை மனைவிக்கும் வழங்கியுள்ளது. என்றாலும், தலாக் காலத்தின் பின்னர், மனைவி ஒருத்தி கணவனின் வேண்டுகோளின்பேரில் மீள சென்று அவருடன் வாழ்க்கை நடாத்த விரும்புவாளாயின், அதனை தந்தையோ, சகோதரர்களோ, அல்லது ஏனைய அவளது குடும்பத்தவர்களோ நிராகரிக்கவியலாது.

இதனால் மனைவி ஒருத்தி தனது முந்திய கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீளச் செல்வதோ அல்லது அவ்வாறு செல்ல தனது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதோ, அவளது உரிமை தொடர்பில் பாதுகாப்பா னதாகும். மாறாக அவள் கட்டாயப்படுத்த ப்பட முடியாது. ஓவ்வொரு சந்தர்ப்பங் களிலும் அவளது உரிமை நிலை நாட்டப்படல் வேண்டும் என இஸ்லாமிய சட்டம் வலியுறுத்துகின்றது.

பொதுவாக ஆண்கள், பெண்கள் மீது அதிக உரிமைகளை கொண்டிருப்பினும், விவாகரத்து தொடர்பிலான சட்ட ஏற்பாடுகள் யாவும் அவர்களை அன்பாக நடத்துமாறே கூறுகின்றன. இன்னும் கணவன் மரணித்த பின்பு கூட மனைவியினை வீட்டிலிருந்து வெளியேற்றக் கூடாது என வலியுறுத்துகின்றது. அவள் தனது கணவனது மரணத்தின் பின்னர், குறைந்தது ஒரு வருட காலத்திற்கு அக்கணவனது வீட்டில் வாழ உரிமையுடையவள் என அல்குர்ஆன் கூறுகின்றது.

குறிப்பாக விவாகரத்து பெற்ற ஒரு பெண் இத்தாவுக்குரிய காலம் முடிவடைவதனுள் ஒரு ஆண் மகன் அவளை மணம் பேச முற்படலாம். இந்நிலைமை அவளது மனதில் மாற்றங்களை கொண்டுவர இடமுண்டு. இதன் காரணமாகவே இஸ்லாமிய சட்டமானது, கணவன் விவாகரத்து செய்த பின்பு மூன்று மாத காலத்திற்கு தனது பராமரிப்பிலேயே மனைவியை வைத்துக்கொள்ளும்படி கட்டளையிடு கின்றது. ஆனாலும் குறித்த மூன்று மாத காலம் முடிவடைந்த பின்பு அவள் தனக்கான வேறு ஒரு கரத்தினை பற்றிக்கொள்ள எந்தத் தடையும் கிடையாது. எனவே இச்சட்ட ஏற்பாட்டினை சமூக நோக்கில் அவதானிக்கும் போது, இங்கு பெண்களின் உரிமை தொடர்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது தெளிவானதாகும்.

திருமணம் ஒன்றினை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உறுதியிழக்கும் நிலையில் ஒரு பெண் வருத்தமுறுவதனை அவதானிக்கலாம். இந்நிலமை சில வேளை அவளது கருத்துக்களுக்கும், அபிலாசைகளுக்கும் மதிப்பளிக்காத ஒரு நிலைமையாகவும் இருக்கும். இஸ்லாமிய சட்டம் ஓரு பெண்ணை நாகரிகமான வகையில் விடுவித்துக் கொள்ளும்படி பணிப்பதுடன் அவளை கௌரவமான முறையில் பராமரிக்குமாறும் வேண்டுகின்றது. இவை முஸ்லிம்கள் யாவருக்கும் பொதுவான சட்டங்களாகும். விவாகரத்தான பெண் ஒருத்திக்கு நியாயமான வகையில் பராமரிப்பு செலவினை வழங்குவதே முறையானதாகும்.

இஸ்லாமிய சட்டமானது விவாகரத்தான ஒரு பெண்ணின் மூன்று மாதவிடாய் காலம் (இத்தா காலம்) முடியும் வரையே பராமரிப்பு வழங்கப்பட வேண்டும் என எந்தவொரு வரையறையையும் விதித்திருக்கவில்லை. ஆனாலும் இன்று முஸ்லிம் சமூகத்தில் இத்தா காலம் முடிந்ததற்கு மேலதிகமாக பராமரிப்பபுக்கான எந்தவொரு அவசியமும் கிடையாது, இவ்வாறாக பணிக்கவும் முடியாது எனும் வகையான வாதம் பிரபல்யம் பெற்று விளங்குவதனை காணலாம். பராமரிப்பு தொடர்பான நடவடிக்கையினை வரையறை செய்யும் வண்ணமான எந்தவொரு சட்ட ஏற்பாடுகளும் காணப்படவில்லை. அதாவது, சட்டம் பராமரிப்பு தொகையினையோ அல்லது அதற்கான கால அளவினையோ வரையறுக்கவில்லை.

இங்கு பராமரிப்பு தொடர்பிலான அல்குர்ஆன் வசனங்களில் மத-ஆ, ம-அருப்க எனும் இரு வகையான மூலச்சொற்கள் கையாளப்பட்டுள்ளன. இவை அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் பலரினால் பல்வேறாக விரிவுரையாக்கம் செய்யப்பட்டுள்ளன. யூசுப் அலி அவர்கள் `மத-ஆ' என்பதனை `பராமரிப்பு' எனவும், `ம-அருப்' என்பதனை `அளவான' எனவும் விளக்கியுள்ளார். முகம்மட் ஆஸாத் என்பவர் ம-தஆ என்பதற்கு `பராமரிப்பு' எனவும், ம-அருப் என்பதனை `கௌரவமான வகையில்' எனவும் விளக்கியுள்ளார். `மர்மதுக்கே பிக்தால்' இதனை விரிவுரையாக்கம் மேற்கொள்கையில் `மத-ஆஉன் பில்மஅருப்' என்பதனை `கனிவான முறையிலமைந்த பராமரிப்பு' எனக் குறிப்பெழுதுகின்றார்.

இவ்வாறாக பராமரிப்பு தொடர்பிலான கருத்துக்கள் வேறுபடுவதனை காணலாம். ஆரம்ப கால சட்ட அறிஞர்கள் இத்தா காலம் முடியும் வரையே பராமரிப்பு வழங்கப்படல் வேண்டும் என்ற கருத்தினை கொண்டிருந்தனர். எனினும் மேற்கூறிய அல்குர்ஆன் வசனங்கள் குறிப்பிட்ட காலம் தொடர்பிலோ அல்லது பராமரிப்பின் வரையறை தொடர்பிலோ எந்தவகையான ஏற்பாடுகளும் இல்லை. இவை மனித தேவையின் நிமித்தமும், வேறுபடும் மனித வாழ்வின் அடிப்படைகளிலும் தங்கியிருக்கும் பொருட்டு விடப்பட்டுள்ளது எனலாம்.

பராமரிப்பு தொடர்பில் எதுவித வரையறைகளோ, மட்டுப்பாடுகளோ கிடையாது. அது ஒவ்வொருவரினதும் தேவை, உடற்பலம், ெ
பாருளாதார செழிப்பு என்பனவற்றினை பொறுத்து வேறுபடலாம். ஆனால் விவாகரத்து பெற்றவர் பராமரிப்பு என்ற கடப்பாட்டுடன் பிணைக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகின்றது. ஒருவர் தன் மனைவியினை போதுமான வகையில் பராமரிக்க தவறுகையில் அவள் நீதிமன்றினூடாக தனது உரிமையினை நிலைநாட்டிக் கொள்ளலாம். இவ்வாறாக கோரப்படும் பராமரிப்பானது அவனது மனைவி என்ற நிலைமையில் மட்டுமன்றி, விவாகரத்தின் பின்னரும் அவளுக்கு உரித்தானதாகும். இஸ்லாமிய சட்ட அறிஞரான அபூ யூசுப் அவர்கள் `கணவன் தன் மனைவியினை விட்டுப் பிரிந்த பின்பும் அவளுக்கானவற்றை அளிக்க வேண்டும்' எனக்கூறுகின்ற அதேவேளை முஹம்மத் என்பவரது கருத்து இதற்கு மாற்றமானதாக உள்ளது. இவ்வாறான கருத்து நிலைமைகளில் இருந்து, மனைவியினது பராமரிப்பினை வழங்காது நிறுத்துவது மிகவும் பலவீனமான ஒரு நிலைமையாகும்.

கணவன் ஒருவன் தனது மனைவியினை விவாகரத்து செய்ய முற்படுவாரெனில் மேற்கண்ட வகையில் பராமரிப்பிற்கான கொடுப்பனவினை வழங்க தயாராதல் வேண்டும் என்பது இங்கு உட்கிடையாக வெளிப்படுகின்ற ஏற்பாடாகக் காணப்படுகின்றது. ஆயினும் இஸ்லாமிய சட்டமானது கணவன் மனைவி தமக்குள் விவாகரத்து மேற்கொள்வதனை ஒருபோதும் விரும்புவதில்லை. அவள் விவாகரத்தான பின்பும் அவளுக்கான கொடுப்பனவை முறையாக அளித்தல் வேண்டும். சில குறிப்பிட்ட காரணங் களின் விளைவாக, சில வேளை ஒரு திருமணம் அல்லது மேற்கொள்ளப்படும் விவாகரத்து முழுமை பெறாத நிலைமை ஏற்படும். கணவன் ஒருவன் தான் அளித்த `மஹர்' (Bridal money given by the husband to the wife at the time of the marriage) தொகையில் பாதியளவை மட்டுமே விவாகரத்தின் போது பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் அத்தொகையினை கூட விட்டுவிடுவது சிறப்பானதென சட்டம் எடுத்துரைக்கின்றது. மஹர் தொகை அளிக்கப்படாத திருமணம் எவ்வகையிலும் வலிதான தன்மையினை பெறாது. தனது வசதி வாய்ப்புக்கு ஏற்ற விதத்திலும், தனது சம்பாத்திய த்தியத்திற்கும் செல்வத்திற்கும் தகுந்த வகையிலும், பாவனைக்கு உதவும் வகையிலுமான ஏதாவது ஒன்றை திருமணம் மேற்கொள்கையில் மணமக ளுக்கு அளிப்பது மணமகனது கடமை யாகும்.

திருமண வாழ்வு பூர்த்தி பெறுகின்ற விடத்து, கணவன் அம்மஹர் தொகையில் பாதியளவு அல்லது அதற்கு கூடுதலாக தனது மனைவிக்கு அன்பளிப்பு செய்தல் வேணடும். மனைவியுடன் கனிவோடு நடந்து கொள்வதும், அவளை அன்பான முறையில் விடுவித்துக் கொள்வதும் அவசியம். அவளை மீள அழைத்துக்கொள்வது உடல் மற்றும் உள ரீதியில் துன்புறுத்தும் நோக்கிலமைந்து விடக்கூடாது. ஆனால் அவளுடன் மிக கனிவுடனும், போதுமான மதிப்புடனும், புகழுடனும் குடும்ப வாழ்வை நடாத்த வேண்டும். தனது மனைவியை விவாகரத்து செய்யும் நிலைமை தோன்றினும் கூட, இத்தா காலம் முடியும் வரையான காலப்பகுதிக்கு கணவன் தனது சொந்த வீட்டிலேயே அவளை வைத்து பராமரிக்க வேண்டும். இவ்வேளை அவளது தராதரம், மேன்மை என்பன மதிக்கப்படுகின்றதா? என்பதை அவதானிப்பது அவசியம். குறித்த மனைவி கர்ப்பவதியாயிருப்பாளாயின் குழந்தையின் பிறப்பு வரை அவள் கணவனது வீட்டிலேயே வைத்து பராமரிக்கப்படல் வேண்டும். குழந்தை பிறந்த பின்பும் கணவன் தனது நிலைப் பாட்டில் உறுதியாக இருப்பானாயின், அவனது குழந்தைக்காக கவனிப்பு செலவு வழங்குவதனையும் புறக்கணிக்க முடியாது.

இவ்வாறாக, தலாக் முறைமை தொடர்பில் இஸ்லாமிய சட்டத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ள ஏற்பாடுகள் யாவும் பெண்கள் சமூகத்திற்கு அதிக மதிப்பினை அளிப்பதாகவே காணப்படுகின்றன. அவள் எதுவித துன்புறுத்தல்களுக்கோ, உடல் உள ரீதியிலான கொடுமைப்படுத்தலுக்கோ உள்ளாகக் கூடாது என்பதில் இச்சட்டங்கள் மிகவும் கரிசனை யாவுள்ளன என்பது திண்ணமாகும். பெண்களை அன்பான முறையில் திருமண பந்தத்தில் இருந்து விடுவிப்பதன் மூலமாக உணர்வு ரீதியிலாக ஏற்படும் துன்புறுத்த ல்கள் கூட ஒழிக்கப்படுகின்றன. ஆனாலும் துரதிஷ்டவசமான நிலைமை யாதெனில் முஸ்லிம்களின் தற்கால நடைமுறை செயற்பாட்டிற்கும், இஸ்லாமிய சட்டங்களுக்குமிடையில் காணப்படும் பாரிய இடைவெளியேயாகும். முஸ்லிம்கள் இவை பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதையே இதன் மூலம் அடையாளம் காண முடிகின்றது.

எனவேதான், முஸ்லிம் பெண்கள் தமக்களிக்கப்பட்டுள்ள உரிமைகளை மிகவும் ஆழமாக அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இவை இன்றைய மேலைத்தேய சிந்தனைவாத போக்கில் இலகுவான காரியமல்ல என்றபோதிலும், மிகவும் பெறுமதியும், பெரும் மதிப்பும் பெற்ற ஒன்றாகும் என்பதனை பெண்கள் சமூகம் மறந்து செயற்படுதலாகாது.

Zஸகி இஸ்மாயில்
(கொழும்பு பல்கலைக்கழகம்)
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல