ஞாயிறு, 10 அக்டோபர், 2010

பொன்சேகா குற்றவாளியென்றால் அவரை நியமித்தவர்களும் குற்றவாளிகளே

ச.வி.கிருபாகரன்


கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆரூடம் கூறப்பட்ட பல விடயங்கள் இன்று நிஜமாகியுள்ளன. அவற்றில் முக்கியமான விடயங்கள் மூன்று.

முதலாவதாக, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவர் யாராக இருந்தாலும், மக்களுக்கு கொடுக்கும் எந்த ஆணையையும் நிறைவேற்றமாட்டார்களென்பது. தேர்தலில் வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஷ, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் பிரகாரம் தமது நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாது செய்வதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தில் தமக்கு ஆதரவாகக் கிடைத்துள்ள மூன்றில் இரண்டு பலத்தை பாவித்து, அரசியல் யாப்பில் மாற்றங்களை மேற்கொண்டு, தனது பதவியை மிகவும் பலப்படுத்தியுள்ளார்.

அடுத்து, ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக நிர்ப்பந்திக்கப்படுவாரெனவும், அவ்வேளையில் ராஜபக்ஷ அரசு பொன்சேகாவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுமெனவும் கூறப்பட்டது. இன்று சரத் பொன்சேகாவுக்கு முப்பது மாதம் கடூழியச் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டு, கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு தடவையும் சர்வதேச பிரதிநிதிகளுடன் தமிழ் மக்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைகள் பற்றி உரையாடும் வேளையில், அவர்களது பதில் “ஸ்ரீலங்காவில் எந்த அரசாங்கத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாத காரணத்தினால், ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எத்த வொரு அரசியல் தீர்வையும் முன்வைக்க முடியாதுள்ளது' என்பார்கள்.

உண்மையைக் கூறுவதனால், பிரித்தானியாவின் தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் லீயோன் பொக்ஸ், ஸ்ரீலங்காவில் இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்குடன், 1997ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மக்கள் முன்னணிக்கும் இடையில் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த பதினைந்து வருடங்களாக “மூன்றில் இரண்டு பெரும்பான்மை' என்ற விடயத்தில் சில உண்மைகள் இருந்தாலும், உண்மையில் இதுவல்ல காரணம் என்பதை ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் கடந்த மாதம் தாம் மேற்கொண்ட 18ஆவது திருத்தச் சட்ட மூலம் நிரூபித்து விட்டார்கள்.

“வண்டிலுக்கு முன் மாட்டை கட்டுவது' போல், பல சகாப்தங்களாக மனித பலியும், இரத்தக் களரியும் கொண்ட இனப் பிரச்சினைக்கு, எந்தவித தீர்வும் காணாத ராஜபக்ஷ, அரசு, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பலத்தை தனது பதவிக்கு பலம் சேர்த்துள்ளார்.

பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையா?

சரத் பொன்சேகா 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், 2009ஆம் ஆண்டு ஜுலை மாதம் வரை ஸ்ரீலங்காவின் இராணுவத் தளபதியாக கடமையாற்றி, அதன் பின்னர் கூட்டுப்படைத் தளபதியாகவும் பதவி வகுத்துள்ளார்.

அப்படியானால் ஓர் ஜனநாயக நாட்டின் சம்பிரதாயங்களுக்கு அமைய, பொறுப்பற்ற மோசடிகள், ஊழல்கள் நிறைந்த தளபதியை சேவைக்கு நியமித்த ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளருமே முதலில் இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்க வேண்டும். மற்றைய ஜனநாயக நாடுகளில் நடப்பது போன்று, மோசடிகள் நிறைந்த தளபதிக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்த அடுத்த நிமிடமே, ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியும், பாதுகாப்பு செயலாளரும் தமது பதவிகளை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

இவ்வேளையில் ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சியினர் என்ன செய்கிறார்கள்? அவர்கள் சரத் பொன்சேகாவின் சிறைத் தண்டனையினை சாதகமாகப் பாவித்து தமது கட்சியை கட்டி எழுப்ப முயற்சிக்கின்றார்கள்

இராணுவப் புரட்சி என்பது உண்மையா ?

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை இலங்கையில் ஓர் இராணுவ புரட்சியும் (1962ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி), இரு வகுப்புவாத கிளர்ச்சிகளும் (1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி, 19871989) நடைபெற்றுள்ளன.

இவை மூன்றும் தோல்வியிலேயே முடிந்தன.

அண்மைக் காலங்களில், அயல் நாடு ஒன்றினால் ஸ்ரீலங்காவில் இராணுப் புரட்சி நடை பெறக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறப்பட்டது. மிக அண்மையில் நடைபெற்ற ஓர் ஊடகவியலாளர் மாநாட்டில், சரத் பொன்சேகா, இராணுவம் கிளர்ந்து எழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த முன்னெச்சரிக்கைகளை நாம் கண்டும் காணாதவர் போல் இருக்க முடியாது.

1971, 19871989ஆம் ஆண்டுகளில் தெற்கில் நடைபெற்று தோல்வியடைந்த கிளர்ச்சிகளில் பங்கெடுத்தவர்கள் யாவரும் தற்பொழுது எங்கே? 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களில் ஒருவரையும், 1987 1989ஆம் ஆண்டு கிளர்ச்சியின் ஒரு சிலரை மட்டுமே நாம் தற்பொழுது வெளிப்படையாக காணக் கூடியாதாகவுள்ளது. அப்படியானால் மற்றை யோர் யாவரும் எங்கு என்பதை ஸ்ரீலங்கா அரசு நன்றாக அறிந்துள்ளது.

இலங்கைத் தீவில் ஏறக்குறைய முப்பது வருடங்களாக நடந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்குடன் அரசு எந்தவித விதிமுறைகளை, தகைமைகளை கடைப்பிடியாது, தெற்கில் யுத்தத்திற்கான ஆள் சேர்ப்பு நடைபெற்றது. அரசாங்கத்தை ஆயுத முனையில் கவிழ்க்க எண்ணியிருந்த தெற்கில் உள்ள சகல இளைஞர்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை சரியான முறையில் பாவித்து தம்மை சகல படைகளிலும் இணைத்துக் கொண்டனர்.

இவ்விடயத்தை நன்கு தெரிந்து கொண்ட காரணத்தினாலேயே சரத் பொன்சேகா, கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஓர் பொது வேட்பாளராக எந்த அரசியல் கட்சியையும் சாராது போட்டியுட்டார். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணையாது, ஜே. வி . பி. யுடனும், ஜே.
வி .பி.யுடன் நெருங்கிய உறவைக் கொண்ட கட்சிகளுடன் மட்டுமே இணைந்து தேர்தலில் போட்டியிட்டார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

ஆபிரிக்கா, பாகிஸ்தான், பிஜி போன்ற பல நாடுகளில் மோசடி, குடும்ப ஆட்சி, கபடத் தனமான நீதித்துறை, சர்வாதிகாரம் போன்றவற்றைக் கொண்ட அரசாங்கங்களின் ஆட்சிகள் இராணுவப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டுள்ளன. ஆகையால் ஸ்ரீலங்காவில் இதுவரையில் ஓர் இராணுவப் புரட்சி ஏற்படவில்லையெனில் அது வியப்புக்குரிய விடயமே.

நிச்சயமாக இராணுவப் புரட்சி என்பது, முப்பது ஆண்டு யுத்தத்தை பார்க்கிலும், மிக மோசமானதாகவே ராஜபக்ஷாக்களுக்கு அமையும். காரணம், எதிரிகள் இவர்களுடன் பயணம் செய்பவர்களாகவும், தினம் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்பவர்களாகவும், இவர்களுடன் சேர்ந்து வசிப்பவர் களாகவும் இருக்க முடியும்.

“முட்டைகள்' யாவற்றையும் ஒரே பெட்டியில் வைப்பது மிக அபாயகரமானது என்பார்கள். நிச்சயம் ராஜபக்ஷாக்கள் இதை அறிந்தவர்களாகவும் தெரிந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

18ஆவது திருத்தச் சட்டம்

காலங்கள் வெற்றிகரமாக உருண்டோடினால் சரத் பொன்சேகா ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா போன்றோர் எதிர்கொண்ட அவல நிலையை மஹிந்த ராஜபக்ஷ தவிர்த்துக்கொள்ள விரும்புவாரேயானால், இவர் தனது இரண்டாவது ஜனாதிபதி பதவி காலத்துடன் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டும்.

இதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பல வருடங்கள் இருப்பதனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் ராஜபக்ஷ தனது மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட தயார்செய்கிறாரென அலட்டி காலத்தைக் கழிப்பதை நிறுத்தி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றிகொள்ளக் கூடிய ஓர் பொது வேட்பாளரை தற்பொழுதே தயார்படுத்த வேண்டும். தற்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்கொள்ளக் கூடியவரானால் அது நிச்சயமாக அந்தப் பெண்மணியாகவே இருக்க முடியும்!

எது எப்படியாயினும் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றாலென்ன, சரத் பொன்சேகா சிறை சென்றாலென்ன, ராஜபக்ஷவும் அப்பெண்மணியும் மூன்றாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கினாõல் தான் என்ன தெற்கில் உள்ள முதுபெரும் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தமிழ் மக்களுக்கு ஓர் இனப்பிரச்சினை உள்ளது என்பதை ஏற்கனவே மறந்துவிட்டார்கள். இவர்கள் யாவரும் கூடிய விரைவில் கூறவிருப்பது என்னவெனில், “தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வை வழங்குவதற்கு, ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களின் சனத்தொகை மிகவும் குறைவாக காணப்படுகிறது' என்பார்கள்.


ச.வி.கிருபாகரன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல