ஞாயிறு, 10 அக்டோபர், 2010

நடிகர் எஸ்.எஸ். சந்திரன் உடல் தகனம் செய்யப்பட்டது

மன்னார்குடியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மரணம் அடைந்த நடிகரும், முன்னாள் அதிமுக எம்.பியுமான எஸ்.எஸ்.சந்திரனின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

700க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன். 67 வயதான சந்திரன், அதிமுகவில் துணை கொள்கைப் பரப்புச் செயலாளராக விளங்கினார்.முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் ஆவார்.

மன்னார்குடியில் அதிமுக கூட்டத்திற்குப் போயிருந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு திரையுலகினர், அரசியல் கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரில் வந்து அஞ்சலி செலுத்தி மாலை அணிவித்தார்.

அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் , அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் பெரும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

திரையுலகிலிருந்து நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், விவேக், குண்டு கல்யாணம், சி.ஆர்.சரஸ்வதி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதேசமயம், நடிகர் சங்கம் சார்பில் யாரும் வந்ததாக தெரியவில்லை.

நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, எஸ்.எஸ்.சந்திரன் குறித்த ஒரு இரங்கல் பாடலை இயற்றி, அதை அவரது வீட்டு முன்பு நின்று பாடி மனம் உருகி பெரும் சோகத்துடன் அதை அவருக்கு காணிக்கையாக செலுத்தினார்.

இதையடுத்து இன்றுகாலை இறுதிச் சடங்குகள் தொடங்கின. சந்திரனின் உடல் ஊர்லவமாக கண்ணம்மாப்பேட்டை மின்சார மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.

தகனத்திற்கு முன்பு மயானத்தில் வைத்து அதிமுக சார்பி்ல் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக தலைவர்கள் பேசினர்.


ஆளும் கட்சியின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் கடமையாற்றிய வீரரை இழந்துவிட்டோம், என்று எஸ்எஸ் சந்திரனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.


எஸ்எஸ் சந்திரன் மரணம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று விடுத்துள்ள இரங்கல் அறிக்கை:

அன்புச் சகோதரர் எஸ்.எஸ். சந்திரன் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

அதிமுக கொள்கைகளையும், ஆளும் கட்சியினுடைய முறைகேடுகளையும் மக்களுக்குப் புரியும் வகையில், எளிமையான முறையில் பட்டி தொட்டியெங்கும் பரப்பி வந்தவர் எஸ்.எஸ். சந்திரன். மக்களை கவர்கின்ற வகையில் மிகவும் ஜனரஞ்சகமாக, நகைச்சுவை உணர்வோடு பேசும் அவருடைய பேச்சுத் திறன் மிகவும் பாராட்டுதலுக்குரியது.

ஓய்வில்லாமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தார். உடல் நலனில் கவனம் செலுத்துங்கள்; ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் அவரிடம் பலமுறை அறிவுறுத்தி இருக்கிறேன். அதையும் பொருட்படுத்தாமல், முழு மூச்சுடன் கட்சிப் பணியாற்றி வந்தார்.

ஆளும்கட்சியின் மிரட்டலுக்கும் அஞ்சாமல் கடமை உணர்வுடன், கட்சிக்காக தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புற பணியாற்றியவர் எஸ்.எஸ். சந்திரன். பலமுறை திமுகவினரின் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளானவர்.

அவருடைய அளப்பரிய கட்சிப் பணியையும், பேச்சுத் திறனையும் பாராட்டும் வகையில், அவரை அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமித்தேன். இது மட்டுமல்லாமல், கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவர்.

அரசியலில் மட்டுமல்லாமல் திரைப்படத் துறையிலும் தன்னுடைய முத்திரையை பதித்த எஸ்.எஸ். சந்திரன், 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர்.

அதிமுகவை பொறுத்த வரையில், அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். திரைப்படத் துறைக்கும் அவருடைய மறைவு மிகப் பெரிய இழப்பு.

அன்புச் சகோதரர் எஸ். எஸ். சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல