14 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது:
எந்திரன் சினிமா, `ஜுகிபா' சிறுகதையில் இருந்து திருடப்பட்டது
போலீஸ் கமிஷனரிடம், எழுத்தாளர் புகார்
நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் `எந்திரன்' சினிமாவில் வரும் கதை, `14 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய சிறுகதையில் இருந்து திருடப்பட்டது' என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எழுத்தாளர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
புனைப்பெயரில்
வாரப்பத்திரிகை ஒன்றில் பணியாற்றும் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்ற அமுதா தமிழ்நாடன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் சிறுவயதில் இருந்து கவிதைகள், கதைகள், நாவல்கள் எழுதி வருகிறேன். அமுதா தமிழ்நாடன் என்ற புனைப்பெயரில் நான் எழுதி வெளியான கதைகள், கவிதைகளுக்கு பாராட்டுகள், பரிசுகள் பெற்றுள்ளேன்.
ஜுகிபா-எந்திரன்
அந்த வரிசையில் நான் எழுதிய `ஜுகிபா' என்ற சிறுகதை இனிய உதயம் என்ற இலக்கிய பத்திரிகையில் கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியானது. பின்னர் அதே கதை, 2007-ம் ஆண்டில் சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் `திக் திக் தீபிகா' என்ற புத்தகத்திலும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட `எந்திரன்' என்ற சினிமாவை பார்த்த எனது வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், கடிதம் மூலமாகவும் என்னை தொடர்பு கொண்டு பேசினர். எனது படைப்பான `ஜுகிபா' என்ற சிறுகதையை அப்படியே எந்திரன் படத்தில் எடுத்து உபயோகித்து இருக்கின்றனர் என்று தெரிவித்தனர்.
சினிமாத்தனத்தை சேர்த்து
எனவே நானும் `எந்திரன்' படத்தை தியேட்டரில் பார்த்தேன். அதைப்பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தேன். எனது `ஜுகிபா' கதையை மூலக்கதையாக வைத்து, சினிமாத்தனமான பாட்டு, சண்டை, கிராபிக்ஸ் காட்சிகளை சேர்த்து எந்திரன் சினிமாவை உருவாக்கி இருப்பது தெரிய வந்தது.
பதிவு செய்யப்பட்ட பத்திரிகையில் வெளியானதை அடுத்து, நான் எழுதிய `ஜுகிபா' கதையின் காப்புரிமை எனக்கு சொந்தமானதாகும். ஆனால் என்னிடமோ, எனது கதையை வெளியிட்ட இனிய உதயம் பத்திரிகை வெளியீட்டாளரிடமோ அந்த கதையை பயன்படுத்த முன்அனுமதி பெறவில்லை.
மோசடி நோக்கத்தில்
மோசடி செய்து லாபம் சம்பாதிக்கும் கெட்ட உள்நோக்கத்தில் சினிமா இயக்குனர் சங்கர், தான் 1997-98-ம் ஆண்டில் இந்த கதையை கற்பனை செய்ததாக பொய் கூறி `எந்திரன்' படத்தை உருவாக்கி இயக்கி இருக்கிறார்.
`சன் பிக்சர்ஸ்' நிறுவனமும், அதன் நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன் தயாரிப்பாளராக செயல்பட்டு கூட்டுச்சதி செய்து `எந்திரன்' படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிட்டு உள்ளனர்.
இதன் மூலம் காப்புரிமை சட்டத்தின் (1957) 63-ம் பிரிவின்படி கிரிமினல் குற்றம் புரிந்துள்ளனர். எனவே சங்கர் மற்றும் கலாநிதிமாறன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
3 ஆண்டு ஜெயில்
இந்த புகார் மனுவுடன் அவர் கதை வெளியாகி இருந்த பத்திரிகையின் நகலையும் ஆரூர் தமிழ்நாடன் இணைத்திருந்தார். வக்கீல்கள் கே.இளங்கோவன், எட்விக், சிவகுமார் ஆகியோருடன் வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகார் கொடுத்தார்.
பின்னர் நிருபர்களுக்கு வக்கீல் எட்விக் அளித்த பேட்டி வருமாறு:-
காப்புரிமை சட்டத்தை அவர்கள் மீறியுள்ளனர் என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. இது கிரிமினல் குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை உண்டு. இதுதவிர சிவில் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்.
இந்த புகார், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசின் சைபர் குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வேறு மொழியில் வெளியாகி இருக்கும் `எந்திரன்' சினிமாவை எதிர்த்தும் வழக்கு தொடர இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினத்தந்தி



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக