சனி, 29 ஜனவரி, 2011

மஹிந்தவிடம் 30 மில்லியன் டொலர் நட்டஈடு கேட்டு அமெ. தமிழர்கள் வழக்கு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக, நீதிக்குப் புறம்பாக நடத்தப்பட்ட கொலைகளுக்காக சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்‌ஷ 30 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என்று கேட்டு அமெரிக்காவில் உள்ள ஈழத் தமிழர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

வோஷிங்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற வழக்குரைஞரான புரூஸ் பெய்ன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். வெளிநாட்டுத் தலைவர்கள், அதிகாரிகளுக்கு எதிராக சித்திரவதைகள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்பில் அமெரிக்காவில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடம்தரும் 1991 சட்டப் பிரிவின் அடிப்படையல் தான் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார் என்று அவர் கூறினார்.

மூன்று பிரதிவாதிகளின் சார்பில் தான் இந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்தார் என்று புரூஸ் பெய்ன் அறிவித்தார்.

"இலங்கையில் மறைக்கப்பட்டிருந்தாலும் கூட, உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்துலகச் சட்டத்தின் சித்திரவதைக்கு உள்ளானோரைப் பாதுகாக்கும் விதியின் பிடியில் இருந்து நீண்ட காலத்திற்கு மஹிந்த ராஜபக்‌ஷவால் தப்ப முடியாது" என்று புரூஸ் தெரிவித்தார்.

வோஷிங்டனில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புரூஸ், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுத் தொடர்பில் மஹிந்த பதிலளிக்க வேண்டும் என்றும் அப்படி நடைபெறாவிட்டால் அவர் இல்லாமலேயே வழக்கைத் தொடருமாறு தான் கேட்பார் என்றும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்காப் படையினர் 2009ஆம் ஆண்டு மேற்கொண்ட வலிந்த தாக்குதல் உள்ளிட்ட மூன்று சம்பவங்களில் தமது உறவினர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ள மூன்று பிரதிவாதிகளும், அதற்கான நட்டஈடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க வேண்டும் என்று கோரி உள்ளனர்.

வழக்குத் தொடர்பில் கருத்துக் கூற வோஷிங்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டது. ஆனால், கொழும்பில் இருந்து பேசிய ஜனாதிபதி மஹிந்தவின் பேச்சாளர், இந்த வழக்கு ஒரு "பிரபலம் தேடும் வித்தை" என்று குறிப்பிட்டார்.

"விடுதலைப் புலிகளின் நிதி உதவியில் கூலிப் படைகள் ஊடகங்களின் பார்வையைத் தம்பக்கம் இழுக்க மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளைக் கவனிக்க எமக்கு நேரமில்லை" என்று ஊடகப் பேச்சாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்தார். ச

சிறிலங்கா அதிகாரிகள் "தனிப்பட்ட பயணம்" என்று கூறும் பயணத்தின் அடிப்படையில் கடந்த வாரம் அமெரிக்கா வந்திருந்தார் மஹிந்த ராஜபக்‌ஷ. ஒரு வார காலம் அங்கு தங்கி இருந்த பின்னர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அவர் நாடு திரும்பினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல