வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

என்றும் வாழும் லெனின்!

‘லெனின் அடக்கம் செய்யப்பட்டார்!’ - இன்னும் சில தினங்களில் பத்திரிகைகளில் வெளியாக உள்ள இந்த தலைப்பு, வெறும் செய்தியாக இருக்கலாம். ஆனால் ‘88 ஆண்டுகளுக்குப் பிறகு...’ என்பது வரலாறாக இருக்கும்!


1924-ல் தனது 53வது வயதில் இறந்தார் லெனின். அப்போதைய சோவியத் யூனியனின் தலைவராக இருந்த ஸ்டாலினின் உத்தரவுப்படி, இத்தனை ஆண்டுகளாக லெனினின் உடல் அடக்கம் செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது. ரஷ்யாவுக்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும் லெனினின் பதப்படுத்தப்பட்ட உடலைப் பார்த்துவிட்டு வருவது என்பது புனிதப் பயணத்திற்குச் சென்று வருவதற்குச் சமமானதாக இருந்தது.

ரஷ்யாவின் கலாசார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, லெனினின் உடல் இன்னும் சில தினங்களில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

லெனினின் உடல் அடக்கம் செய்யப்படும் இந்த நேரத்தில் அவர் எவ்வாறு மரணத்தைத் தழுவினார் என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தாக வேண்டும். அமெரிக்காவில் உள்ள மெரிலாந்து பல்கலைக்கழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல், மாவீரன் அலெக்ஸாண்டர், இசை மேதை மொசார்ட், எழுத்தாளர் எட்கர் ஆலன் போ போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பதைப் பற்றி ஒவ்வொரு வருடமும் அந்தப் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் நடக்கும். 19வது கருத்தரங்க நிகழ்வில் லெனினின் மரணம் பற்றி ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அந்தக் கருத்தரங்கில் இரண்டு கேள்விகள் முன் வைக்கப்பட்டன. இவ்வளவு இளைய வயதில் அவருக்கு எப்படி பக்கவாதம் ஏற்பட்டது? வரலாற்றுக்குத் தெரிந்த மரணத்தை விட, லெனினின் மரணத்தில் அறியப்படாத ரகசியங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பவைதான் அந்தக் கேள்விகள். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பேராசிரியர் டாக்டர் ஹேரி வின்டர்ஸ் மற்றும் பீட்டர்ஸ்பர்கைச் சேர்ந்த ரஷ்ய வரலாற்றாய்வாளர் லெவ் லூரியும் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

"லெனினுக்கு தலை சாதாரண அளவை விட மிகப்பெரிதாக இருந்தது. அதனால் சிறு வயதில், தன் தலையின் அளவைக் குறைக்க அடிக்கடி தரையில் முட்டி மோதுவார். அதனால் அவருக்கு நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். அல்லது, பரம்பரையாகவே அவருக்குச் சில நோய்கள் இருந்திருக்கலாம். அதனால் அவர் மரணமடைந்து இருக்கலாம். இந்த கூற்றை நிரூபிக்க தகுந்த சாட்சியங்கள் லெனினின் குடும்பத்திலேயே இருக்கின்றன. அவரின் தந்தை 54 வயதில், மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் இறந்தார். லெனினுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஏழு பேர். அதில் இரண்டு பேர் பிறந்த சில நாட்களில் இறந்துவிட்டார்கள். மீதம் இருந்தது மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். அதில் ஒரு சகோதரர் மூன்றாம் அலெக்சாண்டர் பேரரசைக் கவிழ்க்கச் சதி தீட்டியதாக உள்ளே தள்ளப்பட்டு 21வது வயதில் கொல்லப்பட்டார். இன்னொரு சகோதரர் தன் 19வது வயதில் டைபாய்டு தாக்கி இறந்தார். இன்னொரு சகோதரர் ‘ஸ்டெனோகார்டியா’ எனும் நோயால் இறந்தார். அது என்ன வகையான நோய் என்பது இன்று வரையிலும் யாராலும் தெளிவாக்கப்படவில்லை. ஒரு சகோதரி, பக்கவாதத்தால் இறக்க, இன்னொரு சகோதரி மாரடைப்பால் இறந்தார்.

இது தவிர, லெனினின் 48வது வயதில் அவரைக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தன்னுடைய நுரையீரல் பகுதியில் ஒன்றும் கழுத்துப் பகுதியில் ஒன்றுமாக இரண்டு தோட்டாக்களை ஏந்தினார். இறுதி வரையிலும் அந்தத் தோட்டாக்களுடனேயே வாழ்ந்திருக்கிறார் லெனின். அதனால் உடலில் விஷத்தன்மை ஏற்பட்டு மரணித்திருக்கலாம்!" என்று முடிக்க, வரலாற்றாய்வாளர் லூரியின் தகவலோ அதிர்ச்சி அடைய வைக்கிறது.

"லெனினுக்குப் பிறகு தலைமை இடத்தைப் பிடிக்க ஸ்டாலின் மிக ஆவலாக இருந்தார். இன்னும் சொல்லப்போனால் தான் தலைமையிடத்தைப் பிடிக்கத் தனக்குத் தடையாக இருப்பதே லெனின்தான் என்று கறுவிக்கொண்டிருந்தார் ஸ்டாலின். அதனால் அவரைப் போட்டுத்தள்ள நல்ல நேரம் ஒன்றுக்காகக் காத்திருந்தார். என்னதான் உடல் நலிவுற்று இருந்தாலும், ஸ்டாலின் மீது அரசியல் சார்ந்து ஒரு தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு இருந்தார் லெனின். அப்போதைய சோவியத் யூனியன் அரசாட்சி என்பது இப்படியான 'மாஃபியா சதி' போன்றுதான் இயங்கி வந்தது.

லெனினின் திட்டத்தை அறிந்துகொண்ட ஸ்டாலின் பொலிட்பியூரோவுக்கு 1923ல் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதில் 'மார்ச் 17, சனிக்கிழமை அன்று தோழர் க்ரூப்ஸ்கயா லெனின் (லெனினின் மனைவி) வேண்டுகோளாக, ஸ்டாலினுக்கு அனுப்பிய உயர்மட்ட ரகசியச் செய்தி இது: ‘ஸ்டாலினாகிய நான் லெனினின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு பொட்டாசியம் சயனைடைச் செலுத்த வேண்டும்’. என்னால் இந்தக் கட்டளையைத் தட்ட முடியவில்லை. எனினும், மனிதநேய அடிப்படையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கும் சமயத்தில் இதை நான் செய்வேன்’ என்று எழுதப்பட்டு இருந்தது. லெனினுக்கு அடுத்தபடியாக இருந்த ஸ்டாலினின் வாக்கை அன்று எவராலும் மீறி இருக்க முடியாது. ஆனால் விஷம் கொடுத்துத்தான் லெனின் சாகடிக்கப்பட்டார் என்பதை யாராலும் உறுதி செய்ய முடியாது. காரணம், அன்று பிரேத பரிசோதனை மூலம் விஷத்தன்மையை அறிய முடியும் என்றாலும், லெனினின் உடலில் எந்த விதமான பரிசோதனையையும் மேற்கொள்ளக் கூடாது என்று ஆணையிடப்பட்டது. ஆகவே, இன்று வரையிலும் லெனின் எப்படி இறந்தார் என்பது மர்மமாகவே இருக்கிறது!" என்கிறார் லெவ் லூரி.

மரணம் எவ்வளவு மர்மமானதாக இருந்தாலும், மறைந்தவன் மகத்தானவன் என்பதில் சந்தேகமே இல்லை.!

Vikatan
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல