புதுவை இரத்தினதுரை தனது குடும்பத்திற்காக மத்தியகிழக்கு நாடொன்றுக் குச்சென்று உழைத்து திரும்பிய பின்னர், விடுதலைப்புலிகளினால் ஈர்க்கப்பட்டு அவர்களின் கலை. பண்பாட்டுக்கழகத்தினை வளர்த்தார். 1986 இல் நான் அவரை இறுதியாகச்சந்தித்தபோது அவருக்கு தனித்தமிழ் ஈழம்தான் கனவு. அவரின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
அவர் ஒருகாலத்தில் மாக்ஸீயம், கம்யூனிஸம் பேசியவர். எழுதியவர். அதிலிருந்து முற்றாக விடுபட்டாரா? என்பது எனக்குத்தெரியாது. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையை விட்டும் அதன் கொள்கைகளை விட்டும் இறுதிவரையில் அவர் விடுபடவில்லை.
அதிதீவிரவாதிகள் சந்தர்ப்பவாதிகளாக மாறிவிடுவார்கள் என்று மேதை லெனின் சொல்லியிருக்கிறார். இயல்பிலேயே மென்மையான குணமுள்ள எங்கள் புதுவையும் ஒரு கட்டத்தில் வெளியே வரலாம் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.
1987 இல் நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் அவருடன் தொடர்புகள் ஏதும் இன்றி மிகுந்த சோர்வுடன் இருந்தேன். எனினும் எதிர்பாராதவிதமாக அவரது இயக்கத்தின் தமிழ்த்தாய் வெளியீடாக வந்த நினைவழியா நாட்கள் கவிதைத்தொகுப்பின் பிரதியொன்றை அவுஸ்திரேலியாவில் நீண்டகாலம் வதியும் நண்பர் சண்முகம் சபேசன் எனக்குத்தந்தார்.
சபேசன் விக்ரோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் முக்கியஸ்தர். அத்துடன் பிரதி புதன் கிழமைதோறும் இங்கு ஒலிபரப்பாகும் 3CR தமிழ்க்குரல் வானொலியின் ஊடகவியலாளராகவும் பிரதான ஒலிபரப்பாளராகவும் பணியிலிருப்பவர். அரசியல் கருத்துக்களுக்கு அப்பால் எனது நல்ல நண்பர்.
அவரிடமும் மற்றும் ஒரு நண்பரான யாதவனிடமும் அவ்வப்போது புதுவை பற்றி கேட்டறிவேன். அவர்களும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக இருந்த ஜெயக்குமாரும் (இவர் மறைந்துவிட்டார்) அவ்வப்போது மண்ணுக்கு சென்று வருபவர்கள். அவர்கள் இலங்கை சென்று திரும்பினால், இலங்கை சென்று வந்ததாகச்சொல்ல மாட்டார்கள். மண்ணுக்கு சென்று வந்ததாகவே சொல்வார்கள். அந்தளவுக்கு ஈழமண்ணில் அவர்களுக்கு பற்றிருந்தது. ரணிலின் புண்ணியத்தினால் சமாதான காலம் வந்தபோது அவர்கள் தம்முடன் மேலும் பலரையும் அழைத்துக்கொண்டு மண்ணுக்குச்சென்று மீண்டு வந்தனர். பிரபாகரன் நடத்திய உலகப்பிரிசித்தம் பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டையும் கண்டு களித்தனர்.
ஆனால் 2009 மே மாதத்தின் பின்னர் மகிந்தரின் புண்ணியத்தினால் மண்ணுக்குச்செல்லமுடியாத நிலைக்கு ஆளாகிவிட்டனர். ஜெயகுமார் என்ன புண்ணியம் செய்தாரோ, அவர் ஆழமாக நேசித்த மண்ணின் பேரவலத்தை அறியாமலேயே மறைந்துவிட்டார்.
புதுவை இயக்கத்தில் இணைந்த காலப்பகுதியில் அவரது வயதை ஒத்த பலர் ஆயிரக்கணக்கில் புலம்பெயர்ந்துகொண்டிருந்தனர். ஏராளமானவர்கள், மாணவர்கள் என்ற ரீதியில் நோர்வேக்கு படையெடுத்தனர். பலர் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் கனடாவுக்கும் புலம்பெயர்ந்தனர். ஐரோப்பிய நாடுகளுக்குச்சென்றவர்கள் நாட்டுக்கு நாடு எல்லை தாண்டி ஓடினர். ஏஜன்ஸிகளை நம்பிப் புறப்பட்டு நிர்க்கதியாக அலைந்தவர்களும் இதில் அடக்கம். புலப்பெயர்வும் ஒருவகையில் கொடுமைதான் என்பதை அனுபவித்தால்தான் புரிந்துகொள்ளமுடியும்.
இவ்வாறு ஓடிக்கொண்டிருந்தவர்களைப்பற்றியும் புதுவை எள்ளிநகையாடி ஒரு கவியரங்குப்பாடல் புனைந்துள்ளார்.
யு.கே.க்குப்போக யூ.ரி.ஏ ஏறாமல்
ஏ.கே. தூக்கி இறந்தவர்கள் எத்தனைபேர்.....
இங்கே பற்பலர் பேசிக்களித்தனர்
எம்நாடு எரிகையில் ஓடிப்பறந்தனர்
சங்கமாடிய தமிழ் எனப்பேசிய
தம்பிமார் எல்லாம் கடலைக்கடந்தனர்
ஆனால் வெளிநாட்டில் வதியும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் தார்மீக ஆதரவும் நிதியுதவியும் அவரது இயக்கத்துக்குத்தேவைப்படும் சூழல் தோன்றியதனால் குறிப்பிட்ட கவிதையை பின்னாட்களில் மறைத்துவிட்டார். அவருடைய எந்தவொரு கவிதைத்தொகுப்பிலும் இது இடம்பெறவில்லை.
மெல்பனில் வதியும் நண்பர் யாதவன் மண்ணுக்குச்சென்றிருந்தவேளையில் புதுவையை சந்தித்து நல்லதொரு நேர்காணலை பதிவுசெய்துகொண்டு வந்து, சபசேன் நடத்தும் தமிழ்குரல் வானொலிக்கு வழங்கியிருந்தார். அதனை செவிமடுத்திருக்கிறேன். புதுவை அதில் புலம்பெயர்ந்த தமிழர்களை வாய் இனிக்க புகழ்ந்துரைக்கின்றார்.
இலங்கையில் நான் பெரிதும் நேசித்த கவிஞர்கள் மூவர். அவர்கள் புதுவை இரத்தினதுரை, சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன். இவர்கள் மூவரும் வௌ;வேறு இயக்கங்களை சார்ந்து நின்றபோதிலும், ஈழத்து இலக்கியத்திற்கு கிடைத்த கொடைகள் என்று என்னால் கூறமுடியும். இவர்கள் மூவரையும் இலங்கை மண்ணில் ஒன்றாக சந்திக்க முடியாதுபோனாலும் அவுஸ்திரேலியாவில் நான் சம்பந்தப்பட்ட தமிழ் எழுத்தாளர் ஒன்று கூடல் நிகழ்வுகளிற்காவது அழைப்பதற்கு பெரிதும் விரும்பியிருந்தேன். எனது விருப்பத்தை கனடாவில் சேரனிடமும் இலங்கையில் ஜெயபாலனிடமும் நேரடியாகச்சொல்லியிருக்கின்றேன். ஆனால் புதுவையிடம் சொல்லுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. காரணம் வன்னியில் அவரது இருப்பிடம் தெரியாது. தொலைபேசி இலக்கமும் தெரியாது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக எனக்கு புதுவையின் தொலைபேசி இலக்கம் கிடைத்தது.
அவரது உறவினரும் அவுஸ்திரேலியா சிட்னியில் வானொலி ஊடகவியலாளராக பணியிலிருந்தவருமான ரகுராம் என்பவர் என்னுடன் தொடர்புகொண்டு, புதுவையின் புலுனிக்குஞ்சுகளும் பூவரசம் வேலியும் நூலின் வெளியீட்டுவிழா மெல்பனில் நடக்கும்போது உரையாற்றுவதற்கு அழைப்பு விடுத்தார்.
எனக்கு அந்த அழைப்பு ஆச்சரியமாக இருந்தது.
2001 ஆம் ஆண்டு முதல் தடவையாக இந்தக்கண்டத்தில் வதியும் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், தமிழ் ஊடகவியலாளர்களை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒன்றுகூடச்செய்வதற்காக தமிழ் எழுத்தாளர் விழாவை நான் தொடக்கியபோது தமிழ்த்தேசியம் பேசிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் அதனை முற்றாக பகிஷ்கரித்தனர். அத்துடன் விழாவுக்கு வரவிருந்தவர்களையும் நிகழ்ச்சிகளில் பங்குபற்றவிருந்தவர்களையும் விழாவுக்கு செல்லவிடாது தடுத்தனர். வந்த சிலரையும் அழைத்து விசாரித்தனர்.
இந்த மேலாதிக்கப்போக்கு 2009 வரையில் தொடர்ந்தது. எனினும் 2001 ஆம் ஆண்டு முதல் அவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் எழுத்தாளர் விழா தொடர்ந்து நடந்து கொண்டுதானிருந்தது. அவர்களின் பகிஷ்கரிப்பை நான் பொருட்படுத்தவில்லை. அதனால்தான் 2011 இலும் பகிஷ்கரிப்பு, பேரலையென உலகெங்கிலுமிருந்து வந்துற்ற சமயத்திலும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை, பின்வாங்காமல் திட்டமிட்டபடி நடத்த முடிந்தது.
என்றாவது ஒருநாள் புதுவையை சந்திப்பேன். எமது இலக்கியப் பணிகளை பகிஷ்கரித்தவர்களின் உள்ளத்தையும் புறத்தையும் காண்பிப்பேன் என்று காத்திருந்தேன். அத்தகைய காத்திருப்பின்போதுதான், “புதுவையுடன் பேசுங்கள். அவரது நூல் வெளியீட்டில் நீங்களும் உரையாற்றவேண்டும் என்று அவர் விரும்புகிறார்” என்று அழைத்தார் ரகுராம்.
புதுவையுடன் நீண்ட நேரம் பேசினேன். அன்றையதினம் வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாத மறக்கமுடியாத நாள். அவருடைய கணீரென்ற குரலை கவியரங்கு மேடைகளில் கேட்டு இன்புற்றிருக்கின்றேன்.
தொலைபேசியில் அந்த கணீர் குரல் இல்லை. அவரும் என்னைப்போன்று இருதய சத்திர சிகிச்சைக்கு ஆளாகியிருந்தார். பேராசிரியர் மௌனகுருவும் இச்சிகிச்சைக்குட்பட்டிருந்த வேளையில், நான் இலங்கையில் நின்ற வேளையில், அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ளவைத்து பேசச்செய்த இனிய நண்பர் ராஜஸ்ரீகாந்தன் பற்றி நான் எழுதியிருந்த நூலை புதுவையும் படித்திருக்கிறார்.
நாங்கள் இருதயசிகிச்சையால் ஒரு வர்க்கத்தினர்களாகிவிட்டோம் என்று சிரித்துக்கொண்டு சொன்னார்.
“அவுஸ்திரேலியாவுக்கு ஒரு தடவை வாடாப்பா... பார்க்க ஆசையாக இருக்கிறது. உனக்கு இங்கே எண்ணிறந்த ரசிகர்கள் இருக்கிறார்கள்” என்றேன்.
ஒரு தடவை ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்ததாகவும் அதன் பின்னர் அங்கு செல்ல விசா கிடைக்கவில்லை என்றும் சொன்னார். “அவுஸ்திரேலியாவில், எதற்கும் ஜெயக்குமாரிடம் சொல்லு. நான் வருவேன்.” என்றார்.
நானும் சொன்னேன். “ ஆகட்டும் பார்க்கலாம்” என்று காமராஜர் பாணியில் ஜெயகுமார் சொன்னார்.
ரகுராம் திட்டமிட்டவாறு மெல்பனில் புதுவையின் புலுனிக்குஞ்சுகளும் பூவரசம் வேலியும் நூல் வெளியீடு வெகு விமரிசையாக நடந்தது. அச்சமயம் யாழ். மாவட்ட எம்.பி.யாக இருந்த கஜேந்திரனும் இந்நிகழ்வில் கலந்து உரையாற்றினார்.
எனக்கு “ அதென்ன புலுனிக்குஞ்சுகள்’’ என்று எதுவும் புரியவில்லை. சிட்னியிலிருக்கும் கவிஞர் அம்பியை தொடர்புகொண்டு கேட்டேன்.
அது குழைக்காட்டுப்பிரதேசத்தில் வாழும் ஒருவகை பறவையினம்” என்றார்.
“அது என்ன குழைக்காட்டுப்பிரதேசம்?” என்று அவரிடமே கேட்டேன்.
“ ஓ...நீ...நீர்கொழும்பு அல்லவா...? தெரிய நியாயமில்லைத்தான். அதடாப்பா... தென்மராட்சிப்பக்கங்களைத்தான் குழைக்காட்டு பிரதேசம் என்பர்” என்று விளக்கம் அளித்தார்.
புதுவைக்காக காத்திருப்பது போன்று, அந்த புலுனிக்குஞ்சுகளை பார்ப்பதற்காகவும் காத்திருக்கின்றேன்.
குறிப்பிட்ட நூல் வெளியீட்டுவிழாவில் புதுவையுடன் எனக்கிருந்த நட்பு, உறவு பற்றி விரிவாகவே சொல்ல நேர்ந்தமைக்கு, அந்தச்சபையில் தமிழ்தேசிய நேசிப்பாளர்கள் அதிகம்பேர் இருந்ததும் ஒரு காரணம். தனிப்பட்ட விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் எவரையும் நேசிக்கவிரும்பும் ஒருவர் பழிச்சொற்களுக்கும் ஆளாவதுண்டு.
யாழ்;ப்பாணத்திலிருந்து புலிகளினால் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டபோது, அதனைக்கண்டித்து எமது அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றியதுடன், வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீண்டும் யாழ்;ப்பாணத்திற்கு திருப்பியழைக்கவேண்டும் என்ற எமது கோரிக்கையையும் விடுத்திருந்தோம். இத்தகவல் இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் செய்தியாக வெளியானதும், பல அநாமதேய தொலைபேசி அழைப்புகள் எனக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன. அத்துடன் நண்பர் டொக்டர் நடேசன் நடத்திய உதயம் இருமொழி மாத இதழின் ஆசிரியர் குழுவிலும் நான் பணியாற்றினேன். அதனால் நான் சம்பந்தப்பட்ட எந்தவொரு விடயத்தையும் இந்த தமிழ்தேசியவாதிகள் ஒன்றில் பகிஷ்கரித்தார்கள் அல்லது அவதூறு செய்தார்கள். என்மீது பிரதேசவாதமும் கக்கினார்கள்.
புலிகள் மறையும்வரையில் காத்திருந்து அவர்களின் மறைவின் பின்னர் நான் இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியதாக பிரபல புளுகர் பொன்னுத்துரை விஷம் கக்கியிருந்தார். புலிகள் உச்சத்தில் வாழ்ந்த காலப்பகுதியிலேயே நாம் யாழ்ப்பாணத்தில் மாநாடு நடத்தி, அதில் புதுவையையும் பேசவைத்திருக்கின்றோம் என்ற உண்மை தாய்நாட்டையே பலவருடங்கள் சென்று பார்க்காத அந்தப் புளுகருக்குத் தெரியாது,
என்றாவது ஒரு நாள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெறும், அதில் நான் நேசிக்கும் மேலே குறிப்பிட்ட மூன்று கவிஞர்களையும் கலந்துகொள்ளச்செய்யவேண்டும் என்ற கனவில் வாழ்ந்திருக்கின்றேன்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் செயற்குழுக்கூட்டத்தில் வன்னியில் போரினால் அகதிகளாகி முகாம்களில் அடைபட்ட தமிழ் மக்களின் தேவைகளை கவனிப்பதற்காக எமது அமைப்பின் அனுசரனையுடன் இலங்கையில் இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் ; (Voluntary Organization For Vulnerable Community Development -VOVCOD) வேண்டுகோளை நிறைவேற்ற அன்று கூடியிருந்தோம். தினம் தினம் வன்னியிலிருந்து கிடைக்கும் செய்திகளினால் நாம் பதறிக்கொண்டிருந்தவேளையில் நிதியுதவி அனுப்பி பாதிக்கப்பட்டவர்களின் சில அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அன்று சந்தித்தோம்.
மறுநாள் திட்டமிட்டவாறு நிதியுதவி அனுப்பினோம்.
செயற்குழுக்கூட்டம் 16 ஆம் திகதி முடிந்து வீடுதிரும்பி தொலைக்காட்சியில் செய்திகளை அவதானித்துக்கொண்டிருந்தபோது, போர் முடிந்துவிட்டது என்று தொலைபேசி தகவல் ஒன்று வந்தது. முடிந்தது என்றால் எல்லாம் முடிந்தது என்ற அர்த்தம்தான்.
என்னால் நம்பமுடியவில்லை. இலங்கையிலும் லண்டனிலும் சில தமிழ் ஊடகவியலாளர்கள் அந்தச்செய்தியை ஊர்ஜிதப்படுத்த முடியாத தகவல் என்று சொன்னார்கள். நண்பர் நடேசன், தமிழ் நாட்டிலும் இங்கிலாந்திலும், இலங்கையிலும் தொடர்ச்சியாக தொடர்பிலிருந்து தகவல் அறிந்து ஊர்ஜிதப்படுத்தினார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து லண்டன் பி.பி.சியில் குமரன் பத்மநாதன் தலைவரின் மறைவை ஊர்ஜிதம் செய்தார். அதுவரையில் மௌனம் காத்த சம்பந்தன் ஐயா, விவேகமற்றவர்களின் முடிவு என்று தீர்ப்பு வழங்கினார் அதே பி.பி.ஸியில்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் ஆற்றல் மிக்க பல படைப்பாளிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் இருந்தனர். அவர்கள் என்னவானார்களோ என்ற கவலையில் நானிருந்தமையால் அவர்களின் பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு இலங்கையிலிருக்கும் ஊடகவியலாளர்கள் சிலருடன் தொடர்ச்சியாக தொடர்பிலிருந்தேன்.
நான் கவலையுடன் தேடிக்கொண்டிருந்தவர்களில் புதுவை முதன்மையானவர். புதுவையினதும் எனதும் நல்ல நண்பர் மாத்தளை செல்வா என்ற விக்கிரமசிங்கா என்பதை முன்னைய அங்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். அவர் மலையக மக்கள் முன்னணித்தலைவர் அமைச்சர் சந்திரசேகரனின் பொது மக்கள் தொடர்பாளர் (P.R.O)
அவருடன் தொடர்புகொண்டு சரணடைந்தவர்களில் புதுவையும் இருக்கலாம். அதனால் முடிந்தவரையில் அமைச்சரின் செல்வாக்கை பயன்படுத்தி புதுவையையும் மற்றவர்களையும் விடுவிக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.
விக்கிரமசிங்கா தனிப்பட்ட விஜயம் மேற்கோண்டு அவுஸ்திரேலியா வந்தபோது எனது இல்லத்தில் ஒருநாள் தங்கினார். அவரிடம் புதுவையின் மனைவியின் தங்கையின் தொலைபேசி இலக்கம் பெற்று உரையாடினேன். அவரை எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும். அவர்களின் திருநெல்வேலி வீட்டுக்கு அருகில்தான் கவிஞர் ஈழவாணனின் வீடும் அமைந்திருந்தது. 1984 இல் ஈழவாணன் மறைந்தபோது அங்குசென்றிருக்கின்றேன். அதனால் அவர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.
முருகபூபதி – அவுஸ்திரேலியா
(தொடரும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக