சனி, 20 அக்டோபர், 2012

எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் தலைவர் கேபி கொழும்பிலிருந்து முன்பு கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வன் வசித்த வீட்டுக்கு சென்றுள்ளார்


 

தற்போது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு காவலின் கீழ் வைக்கப்பட்டுள்ள கேபி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் கடந்தவாரம் அதிகாரிகளினால் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னர் கொழும்பின் புறநகர் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர், இனி கிளிநொச்சி நகர எல்லைக்குள் வசிப்பார். கேபி வசிக்கும் வீடு, அவரால் நிறுவப்பட்டுள்ள வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (நேர்டோ) எனும் நிறுவனத்தின் தலைமை செயலகமாகவும் செயற்படும்.

கேபி மற்றும் நேர்டோ அலுவலகம் என்பன அமைந்துள்ள கட்டிடம் ஒரு இரண்டு மாடிக் கட்டிடமாகும், அதில்தான் எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் அரசியல் பொறுப்பாளர் சுப்பையா பரமு தமிழ்ச்செல்வன் ஒருகாலத்தில் குடியிருந்தார். அது கிளிநொச்சி தெற்கிலுள்ள திருவையாறு பிரதேசத்தில், இரணைமடு சந்தியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. அந்தவீடு ஏ – 9 நெடுஞ்சாலை என்றழைக்கப்படும் யாழ்ப்பாணம் - கண்டி வீதியிலிருந்து சுமார் 100 – 150 மீற்றர் உட்புறமாக தொண்டமான் ஒழுங்கையில் கிட்டத்தட்ட நான்கு ஏக்கர் சுற்றளவுள்ள இடத்தில் அமைந்துள்ளது.

உண்மையில் இது முரண்பாடானதாகவும் மற்றும் மாறிவரும் சூழ்நிலைகளின் ஒரு அடையாளமாகவும் உள்ளது, ஏனெனில் ஒருகாலத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் ஆயுதக் கொள்வனவுத் தலைவராக இருந்த கேபி, எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் அரசியல் பொறுப்பாளராக இருந்த எஸ்பி. தமிழ்ச்செல்வன் வசித்த வீட்டுக்கு இப்போது இடம் பெயர்ந்துள்ளார். எல்.ரீ.ரீ.ஈயின் செழுமைக் காலங்களில் அந்த வீடு தமிழ்ச்செல்வனின் வசிப்பிடமாகவும் மற்றும் அலுவலகமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கீழ்தட்டில் அநேக வதிவிட அறைகள் உள்ள அதேவேளை மேல்தட்டின் பெரும்பகுதி ஒரே நேரத்தில் சுமார் 175 – 200 பேர்கள் கொள்ளக்கூடிய ஒரு கூட்டம் நடைபெறும் மண்டபமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்துத்தான் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியற் பிரிவின் பொறுப்பாளர் 2007ம் ஆண்டு தனது மரணத்தை எதிர்கொண்டார். அப்போது அவர் அந்த சுற்றுவட்டத்திற்குள் அமைந்துள்ள ஆனால் பிரதான வீட்டிலிருந்து சற்று தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழியொன்றினுள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

2007 நவம்பர் 2,அதிகாலை முதல் வெளிச்சத்தின்பொழுது இஸ்ரேலிய தயாரிப்பான கபீர் குண்டு வீச்சு விமானங்களும் மற்றும் ரஷ்யன் சுப்பர்சோனிக் மிக் 27 விமானமும் இரணைமடு கிழக்கு, தெற்கு, கிளிநொச்சி நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளான ஆனந்தபுரம் மற்றும் திருவையாறு பகுதிகள் மீதும் வான் தாக்குதலை நடத்தின. எல்.ரீ.ரீ.ஈயின் அரசியற் பிரிவுக்கு தலைமை தாங்கிவந்த 40 வயதான சுப்பையா பரமு தமிழ்ச்செல்வனும் அவருடன் சேர்த்து மற்றும் ஐவரும் அந்த வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். மரணத்தின் பின் தமிழ்ச்செல்வன் எல்.ரீ.ரீ.ஈயின் தலைவரால் பிரிகேடியராகப் பதவி உயர்த்தப்பட்டார்.
திருவையாறு குண்டுத் தாக்குதலில் தமிழ்ச்செல்வனுடன் சேர்த்து கொல்லப்பட்ட மற்றவர்கள், முத்துக்குமாரு சௌந்தரக்கிருஸ்ணன் என்ற லெப். கேணல் அன்புமணி, தர்மராஜா விஜயகுமார் என்கிற மேஜர் மிகுதன், கருணாநிதி வசந்தகுமார் என்கிற கப்டன் கலையரசன், பஞ்சாட்சரம் சஜீபன் என்கிற லெப்.ஆட்சிவேல், மற்றும் முத்துக்குமாரக் குருக்கள் சிறீகயந்திரிநாத சர்மா என்கிற லெப். மாவைக்குமரன் ஆகியோராவர். அவர்கள் அனைவரும் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களாவார்கள்.

மாவைக்குமரன் ஒரு பிராமண பூசகரின் மகனாவார். கலையரசன் அல்லது நேதாஜி என்றழைக்கப் படுபவர், ஆட்சிவேல் மற்றும் மாவைக்குமரன் ஆகியோர்கள் தமிழ்ச்செல்வனின் மெய்ப்பாதுகாவலர்கள். அலக்ஸ் என்றும் அழைக்கப்படும் அன்புமணி மற்றும் மிகுதன் ஆகியோர் அரசியற் பிரிவை சேர்ந்தவர்கள்.

அன்புமணி அல்லது அலெக்ஸ் என்பவர் ஒரு புகைப்பட தொழில் நிபுணரும் பல ஊடகவியலாளர்களுக்கு நன்கு தெரிந்தவரும் ஆவார். அவர் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியற் பிரிவின் மூலோபாய தொடர்பாடல் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர். தமிழ்ச்செல்வனின் நெருங்கிய உதவியாளரான அன்புமணி, அரசியற் பொறுப்பாளரின் ஐரோப்பிய பயணங்களின் போதெல்லாம் அவருடன் பயணம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டு திரைப்பட நடிகரும், இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான, செபஸ்ரியன் சீமோன் அல்லது செந்தமிழன் சீமான், அலெக்ஸ் அல்லது சௌந்தரராஜன் என்பவரது விதவை மனைவியைத்தான் கூடிய சீக்கிரம் திருமணம் செய்ய உள்ளார். ஸ்ரீலங்கா உல்லாசப் பயணிகளும் மற்றும் யாத்திரிகர்களும் தமிழ் நாட்டில் திட்டமிட்டு தாக்கப்படும் விடயத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சிதான் முன்னணியில் நின்று வருகிறது. சீமானின் சிங்கள எதிர்ப்பு கருத்துக்களின் சீற்றம் நன்கு அறியப்பட்டிருந்ததால் அவரையே கனடா அங்கிருந்து நாடுகடத்தியதுடன், மற்றும் அமெரிக்கா அவருக்கு உள்நுழைவதற்கு அனுமதி மறுத்திருந்தது.

தமிழ்ச்செல்வன்

1967ம் ஆண்டு பிறந்த தமிழச்;செல்வன் யாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள மட்டுவில் கிராமத்தை சேர்ந்தவர். அவர் 1983ல் எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்ததுடன் புலிப் போராளிகளின் நான்காவது குழுவில் ஆட்சேர்க்கப்பட்ட இவர் தமிழ்நாடு திண்டுக்கல் அருகேயுள்ள திருமலை முகாமில் பயிற்சி பெற்றவர். எல்.ரீ.ரீ.ஈயின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவர் மனைவி மதிவதனி ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்த போது அவர்களின் மெய்ப்பாதுகாவலராகப் பணியாற்றியிருந்தார். அப்போது அவரது இயக்கப் பெயர் தினேஷ் என்பதாகும்.

அவர் எல்.ரீ.ரீ.ஈயில் தென்மராட்சி பகுதிப் பொறுப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட தளபதி, உட்பட பல பொறுப்பான பதவிகளில் இருந்துள்ளார். 1993 நவம்பர் 11ல் நடைபெற்ற பூனகரிப் போரில் காயமடைந்ததின் பின்னர் தமிழ்ச்செல்வனின் காலில் ஒரு நிரந்தர ஊனம் ஏற்பட்டதினால் அவர் ஒரு ஊன்றுகோலின் உதவியால் மட்டுமே நடக்கும்; நிலைக்குள்ளானார். அதன் பின்னர் அவர் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு ஸ்ரீலங்காவுக்குள் நடைபெற்ற அநேக பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார்.

தமிழச்;செல்வனும் அவருடன் இருந்தவர்களும் உறக்கத்திலிருக்கும்போதே கொல்லப்பட்டார்கள். அந்த நாட்களில் மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரே இடத்தில் ஒவ்வொரு நாளும் உறங்குவதில்லை. தமிழ்ச்செல்வனும் வழக்கமாக மூன்று நான்கு வௌ;வேறு இடங்களில் மாறி மாறி உறங்கி வந்தார். சம்பவம் நடைபெற்ற இரவு அரசியல் பிரிவுத் தலைவர், பூனகரியிலிருந்து கிளிநொச்சிக்கு வந்தபடியால் திருவையாறு வளாகத்தில் அமைந்துள்ள பதுங்கு குழியில் படுத்து உறங்கினார். குண்டு வீசும் ஜெற் விமானங்கள் பதுங்கு குழியினை தகர்க்கும் சக்திவாய்ந்த குண்டுகளை வீசி இலக்கை வெற்றிகரமாக தகர்த்தன.

பதுங்கு குழியின் முழுக் கட்டமைப்புமே குண்டுவீச்சினால் தகர்த்தெறியப்பட்டது. அந்த குண்டு காலை 6மணிக்கு சில நிமிடங்கள் கழித்து குறிப்பிட்ட இலக்கை தாக்கியது. எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு நிலத்தை தோண்டி சிதைவுகளில் இருந்து உடல்களை வெளியே எடுப்பதற்கு பல மணித்தியாலங்கள் பிடித்தன. தமிழ்ச்செல்வனின் உடல்தான் கடைசியாக தோண்டி எடுக்கப்பட்டது. எனினும் பிரதான வீடு; சில சிறிய உடைவுகளுக்கு உட்பட்ட போதிலும் கிட்டத்தட்ட அப்படியே இருந்தது.

இந்த வீட்டில்தான் இப்போது நேர்டோ அலுவலகம் செயற்படப் போகிறது. தற்பொழுது நேர்டோ அலுவலகம் கிளிநொச்சியின் வேறு இடத்தில் செயற்பட்டு வருகிறது. கேபி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனும் இதே இடத்தில்தான் வசிக்கப் போகிறார். கேபி பாதுகாப்புக் காவலில் உள்ளபடியால், அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தரப்பினரின் விசேட இராணுவப் பிரிவும், அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமில் தங்கியிருக்கும். கேபி மற்றும் நேர்டோ உறையும் அந்த வீட்டில் பாதுகாப்பு பிரிவினர் ஒரு சுழற்சி அடிப்படையில் பணியாற்றுவார்கள்.

இந்த வளாகத்தை இனி கேபி நேர்டோவின் நாளாந்த அலுவல்களை நடத்துவதற்குப் பயன்படுத்துவார். நேர்டோ, சிறுவர்களும் சிறுமிகளுமான அனாதைகளை பராமரித்தல், உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு உதவுதல், கல்வி வசதிகளை முன்னேற்றுதல், கணணிப் பயிற்சிகள், ஆங்கில வகுப்புகள், தொழில்நுட்ப மற்றும் கைவினைத் தொழில்கள் சமையல் மற்றும் தையல் வகுப்புகள் மற்றும் மாதிரிப் பண்ணைகளை நடத்துதல், இளம் சிறுவர்கள் உள்ள விதவைகளுக்கு உதவுதல், சலுகை குறைவினால் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், மாற்றுத் திறனாளிகள் வயது போனவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவுதல் உட்பட்ட ஏராளமான செயற்பாடுகளில் ஈடுபடும்.

நேர்டோ

நேர்டோ அமைப்பும் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் பிரதிநிதிகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது. தொண்டர் அடிப்படையில் பணியாற்றும் இந்தப் பிரதிநிதிகள் நேர்டோவின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவைப்படும் அதிகளவிலான நிதியினைச் சேகரித்து வழங்குவதற்கான பெரும் பொறுப்பினைக் கொண்டுள்ளார்கள். இந்தப் பிரதிநிதிகள் பெரும்பாலும் பிரித்தானியா,அவுஸ்திரேலியா,கனடா,அமெரிக்கா,நோர்வே,பிரான்ஸ் சுவிட்சலாந்து, ஜேர்மனி மற்றும் சில மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் போன்றவற்றை தளமாகக் கொண்டு இயங்கி வருகிறார்கள்.

நேர்டோவில் கேபி எனப்படும் பத்மநாதன் தனது தகுதியின்படி ஒரு செயலாளராக முக்கிய பங்கு வகிக்கிறார். வழக்கமாக அவர் கொழும்பிலிருந்தபடி விவகாரங்களை ஒருங்கிணைத்து வந்தார், ஆனால் இப்போது பெருமளவு பணிகளை கிளிநொச்சியிலிருந்தே செய்யப்போகிறார். நேர்டோவின் பெரும்பான்மையான பணிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலேயே ஏற்றெடுக்கப்பட்டுள்ளன, அதன் மத்திய நிலையம் கிளிநொச்சி நகரத்தில் அமைக்கப்பட்டு ஏனைய இடங்களுக்கான பணிகளை மேற்கொள்ள உதவும். கிளிநொச்சியில் கேபிக்கு செயற்படுவதற்கான பாரியளவு சுதந்திரம் உள்ளது. கொழும்பில் அவர் மக்களுடன் அனுமதிக்கப்பட்ட கூட்டங்களை மட்டும் பாதுகாப்பு அமைச்சின் வளாகத்துள் வைத்து வழக்கமாக நடத்துவார், ஆனால் இப்போது நேர்டோ அலுவலகத்தில் வைத்து நேரடியாக மக்களுடன் சந்திப்புக்களை நடத்துவதற்கு அவருக்கு அதிகளவு சுதந்திரம் உள்ளது. எனினும் அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பதோடு, அவர் பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழேயே இருப்பார், அதற்கு அவர் ஒழுங்கான முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கான இந்த மாற்றம்,கேபி எனப்படும் செல்வராசா பத்மநாதனின் வாழ்க்கைப் பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். கேபி எனும் பட்டப்பெயரை சுவீகரித்துக் கொண்ட, 57வயதான இவர், முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி வளாகத்தில் பட்டதாரி மாணவனாக இருந்த காலத்தில் பத்மநாதன் என்கிற பெயர் கொண்ட ஏனையவர்களிலிருந்தும் இவரை வித்தியாசப்படுத்தி அறிந்து கொள்வதற்காக கண்ணாடி அணிவது காரணமாக, கண்ணாடி என்கிற பெயரால் அழைக்கப்பட்டு வந்தார். கண்ணாடி பத்மநாதன் என்பதன் சுருக்கமே கேபி என்றிருந்தாலும், சில ஊடகங்கள் அவரை குமரன் பத்மநாதன் என்பதன் சுருக்கமே கேபி என்று குறிப்பிடுகின்றன. இவைகளின் விளைவாக அவரது செல்லப்பெயரான கேபி என்பதே அவரது இயக்கப் பெயராகவும் மாறியது. செல்வராசா பத்மநாதன் எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டு தேட்டங்களுக்கு பொறுப்பான பதவிக்கு உயர்ந்தார். கேபியின் கீழிருந்த எல்.ரீ.ரீ.ஈயின் இந்தப் பிரிவு கேபியின் திணைக்களம் என்றே சாடைமாடையாக குறிப்பிடப்பட்டு வந்தது. ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் ஆயுதக் கொள்வனவுத் தலைவராக இருந்த இந்த மனிதர் புலிகளின் சர்வதேச தலைராக மாறினார். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவுக்குப்பிறகு சேவை மூப்பின் அடிப்படையில் அவரது இடத்துக்கு தெரிவானார். மீள்கட்டமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈயில் பத்மநாதன் என்கிற கேபி தலைமை செயலராக நியமிக்கப் பட்டார். இந்தப் பதவியும் தலைவர் என்பதற்கு ஒத்ததாகவே இருந்தது. இந்த உயர்ச்சியை சுலபமாக உட்கொள்ளவியலாத இவருக்கு எதிரான நெடியவன் என்கிற பேரிpன்பநாயகம் சிவபரன் என்பவரின் தலைமையின் கீழ் உள்ள குழவினர் கசப்புடன் இதை எதிர்த்தார்கள்.

எனினும் எல்.ரீ.ரீ.ஈயின் தலைவர் எனும் கேபியின் மகிழ்ச்சியான கணங்கள் மிக மிக குறகியதாக இருந்தன.ஒரு சடுதியான நடவடிக்கையுடாக குறிப்பிடத்தக்க அசாதாரணமான கால அளவிற்குள் ஆகஸ்ட் 2009ல் பத்மநாதன் மலேசியாவில்; வைத்து கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்காவுக்கு அனுப்ப பட்டார். அப்போதிருந்து ராஜபக்ஸ ஆட்சியினரால் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டு வருகிறார்.

கடந்த காலங்களில் டெய்லி மிரர் பத்திரிகைக்கு எழுதியுள்ள கட்டுரைகளில் இந்தப்பத்தி வலியுறுத்தியுள்ளது,பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுடன் கேபி உருவாக்கியுள்ள கள்ளத் தொடர்பு, முன்னாள் எல்.ரீ.ரீ.ஈயின் தலைவருக்கு அழுத்தங்களை தாக்கும் சக்தியுள்ளதாக,உயிர் வாழ ஏதுவானதாக,தடுப்புக் காவலில் உள்ள துன்பங்கள் எல்லாவற்றையும் மென்மைப்படுத்த உதவியாய் உள்ளது என்று. அது அவருக்கு பலமூட்டும் ஒரு மூலவளம்கூட.கேபி மலேசியாவில் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்பட்டபோது, பரபரப்பூட்டும் நிகழ்ச்சிகள் நிறைந்த அவரது வாழ்க்கையில் அது ஒரு தாழ்வான நிலையாக இருந்தது.ஆனால் ஏறக்குறைய அழிவின் வாய்க்குள் அகப்பட்டபோதும் ஒரு புதிய வாழ்வினுக்கான குத்தகையை அதிலிருந்து பெற்றுக் கொண்டார்.

கோட்டபாயா

இதற்கு முந்தைய கட்டுரைகளில் கேபி கொழும்புடன் ஒத்துழைப்பதற்கான முடிவை மேற்கொண்டதின் பின்னணியை பற்றி இந்த பத்தி கோடிட்டுக் காட்டியிருந்தது. கேபியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணம்,பாதுகாப்புச் செயலாளர் மற்றும் உளவுத்துறை தலைவர் ஜெனரல்.கப்பில ஹெந்தாவிதாரண ஆகியோரை தன்னை மதிப்புள்ள ஒரு சொத்தாக கருதப்பட வேண்டும் என்று இணங்க வைப்பதில் அவர் வெற்றி கண்டதேயாகும். தன்னுடைய ஒத்துழைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் உளவுத்துறை பணிப்பாளர் ஆகியோரை சம்மதிக்க வைக்க அவரால் முடிந்தது. அதன்பின்னர் தனது நடத்தை மூலமாக அவர்களது நன்மதிப்பையும் நம்பிக்கையையும் அவர் சம்பாதித்துக் கொண்டார்.

கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதின் பின்னர், தனது உயிர்வாழ்தலுக்கு ஏற்ற யதார்த்த நடைமுறைகளை பின்பற்றுவதே கேபிக்கு முக்கிய விடயமாக இருந்தது. விதியானது மிகவும் மோசமான ஒரு அடியை அவருக்கு வழங்கியிருந்தது.கற்பனை செய்ய முடியாத விடயங்களே நடைபெற்றன. மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் ஸ்ரீலங்கா மில்லியன் கணக்கான சிங்கப்பூர் டாலர்கள் செலவில் நடத்திய ஒரு இரகசிய நடவடிக்கை மூலம் அவரை கைப்பற்றியது. சிங்கத்தின் குகைக்குள் அவர் வசமாகச் சிக்கிக் கொண்டார். வெளியேறுவதற்கு ஒரு வழியும் இருக்கவில்லை.

இரண்டு தெரிவுகளே அங்கிருந்தன. ஒன்று குறைந்த எதிர்ப்பினைக் காட்டும் பாதையை பின்பற்றுதல்.ஒருவகை ஒத்துழைப்பை வழங்குதல். மற்றது பணியமறுத்து எதிர்ப்புக் காட்டுவது. முதலாவது வகை உயிர்வாழ்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும். ஆனால் பின்னையது உயிராபத்து விளைவிக்கக்கூடியது,அல்லது ஒருவேளை தீவிர விசாரணைகள் அளவற்ற சித்திரவதைகள் என்பனவற்றின் பின்னர் மரணம் அல்லது நீண்ட சிறைவாசத்தை தரக்கூடியது.

மிகவும் முக்கியமாக எல்.ரீ.ரீ.ஈ வதம் செய்யப்பட்டுவிட்டது. விடுதலைக்கு வேண்டி யுத்தமோ அல்லது ஆயுதப் போராட்டமோ இப்பொழுது நடைபெறவில்லை.கேபின் தலைவரான பிரபாகரனே இப்போது உயிருடன் இல்லை. ஒருவேளை தலைவர் உயிருடன் இருந்து சண்டை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தாலாவது,எதிர்த்து நின்று ஆபத்தை ஏற்று துன்பப்படுவதில் ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அப்படியான ஒரு நிலையில் எதிர்த்து நிற்பது அல்லது உயர்ந்து வரும் அலைகளுக்கு எதிராக எதிர்நீச்சல் போடுவதில் ஏதாவது நோக்கம் இருக்கிறதா? நீரோட்டத்துடன் சேர்ந்து செல்லும் முடிவையே கேபி தேர்ந்தெடுத்தார்.

தவிரவும் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்னும் முடிவிற்கு கேபி வந்திருந்தார். தனது தலைமைத்துவத்தின் கீழ் உள்ள எல்.ரீ.ரீ.ஈயினர் வழிமுறைகளை மாற்றி வன்முறையற்ற ஜனநாயக உத்திகளையும் மற்றும் முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று கேபி விரும்பினார். இந்த மாறுபட்ட அணுகுமுறை கேபிக்கும் மற்றும் நெடியவன் தலைமைதாங்கும் கஸ்ட்ரோ பிரிவினருக்கும் இடையில் மோசமான வேறுபாடுகளை உருவாக்கியது. இப்போது அவையெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது மற்றும் யதார்த்தத்தில் கேபிக்கு இப்போது ஹொப்சனின் தெரிவு மட்டுமே உள்ளது.

அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதன் மூலம் கேபி தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ளவில்லை ஆனால் படிப்படியாக அதிகாரத்தையும் பெற்று வருகிறார். அரசாங்கத்திடமிருந்து சில சக்திகளை அவரால் பெற்றுக்கொள்ள முடியுமாயின் பின்னர் அந்த அதிகாரத்தை தமிழ் மக்களின் நலன்களுக்காக பயன்படுத்த முடியும். ஆயுதப்போராட்டம் முடிவடைந்து விட்டது,மற்றும் எல்.ரீ.ரீ.ஈ அழிக்கப்பட்டு விட்டது. இருக்கின்ற ஒரே தெரிவு அரசாங்கத்துடன் கூட்டுச்சேர்ந்து தமிழ் மக்களுக்கு உதவி செய்வதுதான். அரசாங்கத்தின் அனுமதி அல்லது உதவியின்றி ஆக்கபூர்வமான எதையும் அடையமுடியாது.

விதியின் விசித்திரமான திருப்பம் காரணமாக குறுகிய காலம் எல்.ரீ.ரீ.ஈயின் புதிய தலைவராக இருந்த கேபி குறிப்பிடத்தக்க உருமாற்றம் அடைந்து,கொழும்பு அரசாங்கத்துடன் ஒத்துழைக்க ஆரம்பித்தார். தொடர்ச்சியாக ஆயுதங்களை கொள்வனவு செய்து அவற்றை கப்பலில் அனுப்பி யுத்தம் என்கிற நெருப்பு அணையாமல் காத்துவந்த மனிதர்,இப்பொழுது நீறு பூத்த நெருப்பாக இருக்கும் அந்த கசப்பான மோதலை குளிர்வித்து வருகிறார்.

ஆக்கபூர்வமானவைகள்

உருவக வடிவத்தில் மற்றும் மொழியியல் தன்மையில் கேபி இப்போது ஒரு சூழ்நிலை கைதியாக உள்ளார். சுதந்திரமாக இருந்த கேபி தன்னுடைய சாமர்த்தியம், ஆற்றல் மற்றும் முயற்சிகளை அழிக்கும் நோக்கத்துக்காக பயன்படுத்தினார். எனினும் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் கேபி, ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். ஒரு தத்துவ உணர்வில் கூறுவதானால், கேபி கட்டப்பட்டு இருந்தாலும், மீட்புப் பாதையில் உண்மையான சுதந்திரத்துடன் நடமாடுகிறார்.

எல்.ரீ.ரீ.ஈ தமிழ் மக்களுக்கு திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாதளவுக்கு தீங்குகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் கேபியும் ஒரு முக்கிய பங்;கினை வகித்துள்ளார். இப்போது சின்னா பின்னமாகியுள்ள தமிழ் மக்கள் மோசமாக உருவாகியுள்ள சூழ்நிலையில் உடைந்துபோன துண்டுகளை பொறுக்கியெடுத்து ஒன்றுதிரட்டி வாழ்க்கையை ஓட்ட முயற்சித்து வருகிறார்கள். தமிழர் விடுதலை என்கிற பெயரால் உடைத்து நொறுக்குவது எப்போதும் சுலபமானது, ஆனால் ஆபத்தில் சிக்கியுள்ள கப்பலை கரைசேர்ப்பதுபோல தமிழர்கள் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பாரிய முயற்சி தேவையாக உள்ளது.

தமிழர்களின் துயரம் நிறைந்த இக்கட்டான நிலை கண்டு மனச்சாட்சி உறுத்தல் காரணமாக கேபி வேதனைப்படுவது நன்கு தெரிகிறது இதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். இந்த துயரமான விவகாரங்களின் பெரும் பகுதிக்கான பழியினை ஏற்றுக் கொள்ளவேண்டிய பொறுப்பு எல்.ரீ.ரீ.ஈக்குரியது என்பதை அவர் உணர்ந்துள்ளார். கைது நிலையில் இருந்தபோதிலும் தன்னுடைய திறமைக்கு ஏற்றவகையில் மக்களின் துயர நிலையினை ஒழிப்பதற்கான ஒரு முயற்சியை அவர் ஆரம்பித்துள்ளார்.

இந்த முயற்சியின் முக்கியபடியாக இருந்தது அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒன்றை அமைத்ததுதான். அந்த தொண்டு நிறுவனத்தின் பெயர்தான் வடக்கு – கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (நேர்டோ)என்பது.

நேர்டோவை ஆரம்பிப்பதன் மூலம் கேபியின் முழு அக்கறையும், தமிழ் மக்களுக்கு கௌரவமான வாழ்வை மீண்டும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உதவி புரிவதிலேயே இருந்தது. இடம் பெயர்ந்த தமிழர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு மீளக்குடியமர வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது.வடக்கு மற்றும் கிழக்கில் அபிவிருத்தியை பெருக்கி ஒரு பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த அவர் விரும்பினார். தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் விரைவாக விடுதலை செய்யப்;பட்டு சமூகத்துடன் ஒன்றிணைக்கப் படவேண்டும் என்றும் அவர் விரும்பினார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நேர்டோ எனும் புதிய தொண்டு நிறுவனத்தை உருவாக்கியது இந்த இலக்குகளை விரைவாகவும் திறமையாகவும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே. இந்த நோக்கத்துக்காக வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் மற்றும் பிற தரும ஸ்தாபனங்கள் என்பனவற்றின் உதவிகளையும் சேவைகளையும் பெறலாம் என்று கேபி நம்பினார். வெளிநாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சார்பான சக்திகள் என்பனவற்றிடமிருந்து ஒரு கணிசமான தொகை நிதியம் இதற்குள் பாய்ச்சப்படும்; என்பதில் அவர் நன்னம்பிக்கை உடையவராக இருந்தார். இதன் நோக்கம் புலம்பெயர் புலி மூலகங்கள், வடக்கு – கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையை மேலுயுயர்த்துவதில் ஆக்கபூர்வமான ஒரு பங்கினை வகிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும் என்பதே.

நேர்காணல்

இந்தப் பத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் நேர்டோ நிறவனம் முறைப்படி பதிவு செய்யப்பட்ட சிறிது காலத்துக்குள் நீண்ட தொலைபேசி உரையாடல் மூலமாக கேபி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை நேர்காணல் செய்திருந்தது. நான்கு பகுதிகளாக நடத்தப்பட்ட நேர்காணல் தொடர்ந்து நான்கு பகுதிகளாக, 2010 ஆகஸ்ட் “டெய்லி மிரர்” பத்திரிகையின் சனிக்கிழமை பதிப்புகளில் பிரசுரமானது. அந்த நேர்காணலில் கேபி நேர்டோவின் எதிhகால திட்டங்கள் மற்றும் நம்பிக்கைகள் பற்றி தான் மிகவும் நம்பிக்கை கொண்டிருப்பதை வெளிப்படுத்தினார். அதில் சில பொருத்தமான மேற்கோள்கள் கேள்வி – பதில் வடிவில் கீழே தரப்பட்டுள்ளது.

கேள்வி: இது தொடர்பாக உங்களை ஊக்குவித்தது எது?

பதில்: ஒருவேளை இன்றிருக்கும் முன்னாள் புலித் தலைவர்கள் இடையில் மூத்த தலைவன் நானாகத்தான் இருப்பேன். தமிழ் மக்கள் இன்று இருக்கும் துயரமான நிலையைக் காணும்போது நான் மிகவும் குற்ற உணர்வை அனுபவிக்கிறேன். இந்த இளைஞர்களின் விதியினைக் காணும்போது நான் மிகவும் வேதனையையும் சங்கடத்தையும் உணர்கிறேன். இந்தப் பிள்ளைகளில் பலரும் தங்கள் விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக ஆட்சேர்ப்பு செய்யப் பட்டவர்கள் என்பதை என்னால் மறுத்துரைக்க முடியாது. வன்னியில் உள்ள பொதுமக்களை பார்க்கும் போது நானும் எனது தவறை உணர்ந்து அளவுகடந்த கழிவிரக்கமடைகிறேன். ஒரு காலத்தில் அவர்கள் வளமோடு வாழ்ந்தவர்கள்,ஆனால் போரின் காரணமாக இப்போது கொடிய வறுமையை அனுபவிக்கிறார்கள். இதன் காரணமாக குறைந்தது என்னால் இயன்றளவு அவர்களுக்கு உதவி செய்வதன் மூலமாக நான் சில பிராயச்சித்தங்களை செய்ய விரும்புகிறேன்.

இதுதான் என்னை ஊக்கப்படுத்தியதுடன் வடக்கு – கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பையும் (நேர்டோ) அமைக்கத் தூண்டியது.6,ஜூலை 2010 ல் அது முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நோக்;கி நகர்வதற்காகவும், உள்ளக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் புனர்வாழ்வு பெறுபவர்களை சந்திப்பதற்கான வழிகளை ஏற்படுத்துவதற்கான பாதுகாப்புத் தரப்பினரது அனுமதியும் கிடைத்துவிட்டது.

கேள்வி: உங்கள் திட்டங்கள் அற்புதமாக உள்ளன ஆனால் இவைகளை நடைமுறை படுத்துவதற்கான வளங்கள் உங்களிடம் உள்ளனவா?

பதில்: இன்னும் இல்லை,ஆனால் நாங்கள் இப்போது ஒரு கருநிலையில்தான் உள்ளோம்.முதலாவதாக அபிவிருத்தியை பொறுத்தமட்டில் நமது மக்கள் பல பல தசாப்தங்கள் பின்னோக்கிய நிலையில் இருக்கிறார்கள் என்கிற யதார்த்த நிலையை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு வடக்கில் தொடரூந்து பாதைகள் இல்லை. எங்கள் கல்விப் பராம்பரியத்தையிட்டு எமது சமூகம் மிகவும் பெருமை கொண்டிருந்தது. இன்று எமது பாடசாலைகள் அழிக்கப்பட்டு கல்வி கற்பதற்காக மாணவர்கள் மரங்களின் கீழ் குந்தியிருக்க வேண்டியவர்களாக உள்ளனர். ஏழ்மை, சீருடை, பாதணிகள், பாடப்புத்தகங்கள், போன்றவை கிட்டாத காரணங்களினால் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிப்பதில்லை.

ஆனால் எங்கள் திட்டங்கள் வெளிப்படையானவை மற்றும் வெளிநாட்டிலுள்ள எங்கள் சக தமிழர்களிடமிருந்து ஏராளமான உதவிகள் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம், மக்களும் அந்த செய்தியை அறிவார்கள். எற்கனவே வெளிநாட்டில் வாழும் தகமையுள்ள சிலர் தாமாகவே முன்வந்து தங்களது கல்வி மற்றும் தொழில் திறமைகளை தன்னார்வ அடிப்படையில் வழங்குவதற்கு சம்மதித்துள்ளார்கள். வேறு சிலர் சில விசேட திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதாக வாக்களித்துள்ளார்கள். எங்கள் மக்களின் துணையுடன் நேர்டோ படிப்படியாக நல்லபடி செயற்படும் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை உள்ளது.

பிரச்சாரம்

கேள்வி: பிரச்சினை என்னவென்றால் கூச்சல் போடும் தமிழ் புலம் பெயர்ந்தவர்களில் ஒரு பிரிவினர், தங்களிடமுள்ள ஊடகங்களிடம் செல்வாக்கினை பயன்படுத்தி உங்களுக்கும் மற்றும் நேர்டோவுக்கும் எதிராக கடுமையான பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. நீங்கள் அரசாங்கத்தின் கைக்கூலி என்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமிருந்து பணத்தை கவர்ந்தெடுத்து அதை அரச கருவூலத்தில் சேர்ப்பதற்கு வடிகுழாயாக பயன்படுத்தப்படும் ஒரு சதி முயற்சிதான் நேர்டோ என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். இப்படியான பகைமை நிறைந்த சூழலில் வெற்றி பெறமுடியும் என்று எப்படி நீங்கள் நம்புகிறீர்கள்?

பதில்: ஆம். தற்போதைய காலநிலையை பற்றி நீங்கள் சொன்னது சரிதான் ஆனால் இது ஒரு தற்காலிகமான நிலை என்றுதான் நான் எண்ணுகிறேன். ஒரு விடயம் எதிர்மறையான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடும் இந்தப் பிரிவினர் மிகச் சிறுபான்மையானவர்கள், ஆனால் நீங்கள் சொன்னதைப்போல வெளிநாட்டிலுள்ள தமிழ் ஊடகங்கள்மீது அவர்களுக்கு ஏகபோக உரிமை உள்ளது,அதனால் அவர்களது உண்மையான பலத்தையும் மீறிய ஒரு தாக்கத்தை அவர்களால் காட்ட முடிகிறது. ஆனாலும் இன்னமும் அவர்கள் சிறுபான்மையானவர்களே மற்றும் அவர்களது பிரச்சாரம் பொய்மையையும், போலித்தன்மையையும் அடிப்படையாகக் கொண்டது.

ஆனால் நான் சத்தியத்தின்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். முதலாவதாக எங்கள் திட்டங்கள்,செலவுகள்,மற்றும் பெறப்பட்ட மற்றும் செலவான பணத்துக்கான கணக்குகள் என்பனவற்றுக்கான ரசீதுகளை வழங்குவதற்கு மேலதிகமாக அவற்றை எங்கள் இணையத்தளம் மூலமாகவும் வெளியிடலாம் என நம்பியுள்ளோம். நியாயமான எல்லாக் கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளிப்போம். இந்த விடயங்களில் நாங்கள் திறந்த வழியில் வெளிப்படையாக பணியாற்றுவதை மக்கள் மேலும் மேலும் காண முடிவதால் இந்த பொய்யான பிரச்சாரத்தால் தாக்குப்பிடிக்க இயலாமற்போகும்.

இரண்டாவதாக எந்கள் நிதியையும் உதவிகளையும் பெறும் பயனாளிகள் வெளிநாட்டிலுள்ள தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உண்மை நிலையினை அறிவிப்பார்கள் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த மக்கள் எங்கள் நியாயமான முயற்சிகள் பற்றிய விரிவான காரணிகளை தெரிவிக்கும்போது பரப்பப்படும் அந்த பொய் தகவல்கள் யாவும் அம்பலமாகிவிடும்.

மூன்றாவதாக நாங்கள் புலம்பெயர் அங்கத்தவர்களை ஸ்ரீலங்காவுக்கு வந்து நிலமைகளை நேரிடையாக அவதானிக்கும்படி அவர்களை ஊக்கப்படுத்துவோம். முதற்கண் நிலமைகளை நேரில் பார்த்து அவர்களது சொந்த முடிவுகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். மறைப்பதற்கு எங்களிடம் எதுவுமில்லை. எங்களை தொடர்பு கொண்டால் மக்கள் வடக்கு மற்றும் கிழக்குக்கு பயணம் செய்வதற்கான உதவிகளை வழங்கவும் நேர்டோ தயாராக உள்ளது. தேவைப்பட்டால் ஒரு நேர்டோ பிரதிநிதியை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் நிறுத்தலாமா என்றுகூட நாங்கள் ஆலோசித்து வருகிறோம். எனவே படிப்படியாக உண்மை வெளிப்படுவதோடு நேர்டோவும் வெற்றி பெறும்.

நன்னம்பிக்கை

கேள்வி: நீங்கள் அனைத்தும் நன்மையில் முடியும் என்கிற நன்னம்பிக்கை உடையவராக காணப்படுகிறீர்கள். புனர்வாழ்வு பெற்ற சிலரை நீங்கள் சந்தித்த ஒரு காணொளியினை நான் பார்த்தேன், அதில் “நம்பிக்கைதான் வாழ்க்கை “ என்று நீங்கள் சொல்கிறீர்கள். உங்கள் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது,ஆனால் அத்தகைய வலிமையான முரண்பாடுகளுக்கு எதிராக வெற்றி பெறமுடியும் என நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: பிரபாகரனால் 1983ல் வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவை மேற்கொள்ளும் பணி என்னிடம் தரப்பட்ட வேளையில்,நான் அதற்கு முற்றிலும் புதியவனாக இருந்தேன். நான் மிகவும் சாதாரண பின்னணியிலிருந்து வந்தவன். எனது தந்தைக்கு அரசியல் உணர்வு இருந்தபோதும் அவர் ஒரு சாதாரண மீனவர். நான் பிரபலமான உயர்தட்டு பாடசாலைகளில் கல்வி கற்கவில்லை. எனது ஆங்கில அறிவு மிகவும் பலவீனமாக இருந்தது. ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவை தவிர நான் வேறிடங்களுக்குச் சென்றதில்லை. ஆயத வர்த்தகத்தில் எந்தவித முக்கிய தொடர்பையும் கொண்டிராத உலக அனுபவமற்ற இயக்கமாக எல்.ரீ.ரீ.ஈ அப்போது இருந்தது.

இருந்தபோதும் என்னுடைய துறையை மெதுவாகவும் சீராகவும் நான் வளர்த்துக்கொண்டேன். உலகளாவிய அடிப்படையில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ஆயுதங்களை பெற்று அவற்றை ஒழுங்காக வடக்கு மற்றும் கிழக்குக்கு கப்பலில் அனுப்பி எல்.ரீ.ரீ.ஈயின் சக்தியை ஒரு கட்டம் வரை நான் விரிவாக்கினேன்.நான் வெளிநாட்டு கொள்வனவுக்கு பொறுப்பாக இருந்தவரை எல்.ரீ.ரீ.ஈ யினால் யுத்தத்தை வெற்றிகரமாகத் தொடர முடிந்தது,ஏனெனில் என்னால் ஆயுதங்களை தொடர்ச்சியாக கொள்வனவு செய்ய இயலுமாக இருந்தது.
மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தும் ஒரு பணியில் அப்போது என்னால் வெற்றிபெற முடியுமாயின் மக்களுக்கு உதவுவதையும் கடந்த காலத்தை போல மக்களை அழிக்காமல் அதற்குப் பதிலாக உயிர்களை மீளக் கட்டியெழுப்பும் இந்தப் புதிய பணியில் ஏன் என்னால் வெற்றிபெற முடியாது?

கேள்வி: உங்களை அதைரியப்படுத்தும் விதமாக நான் பேசவில்லை. உங்கள் திறமையையும் ஆற்றலையும் கூட நான் சர்ச்சைக்கு உள்ளாக்கவில்லை, ஆனால் இங்குள்ள மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால் இங்கு நீங்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளீர்கள், நீங்கள் ஒரு சுதந்திர மனிதராக இல்லை. முன்னைய காலங்களைப் போல உங்களால் சுதந்திரமாக நகர்ந்து காரியங்களை செய்ய முடியாது. மேலும் இப்போது உங்களுக்கு வயதாகிவிட்டது, மற்றும் திடமான ஆரோக்கிய நிலையிலும் நீங்கள் இல்லை. தவிரவும் அங்கு உங்களுக்கு எதிராக வெறியோடு சில பரப்புரையாளர்கள் தீவிரமாக உழைத்து வருகிறார்கள. அதனால்தான் நான் சந்தேகம் கொள்கிறேன்?

பதில்: நீங்கள் ஒரு நல்ல குறிப்பை சொன்னீர்கள்,ஆனால் நான் வெற்றி பெறுவேன் என்றே நான் உணர்கிறேன். ஆம், தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் மற்றும் தேவைப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் செல்ல முடியாமல் தொலைபேசி,தொலைநகல்,ஸ்கைப் மற்றும் இணையத்தளம் போன்றவற்றால் காரியங்களை நடத்துவதும் சற்று விரக்தியடைய வைப்பதுண்டு.நான் அந்த இடத்தில் இருந்தால் காரியங்களை விரைவாக செய்து முடிக்கலாம் என்பதையும் நான் அறிவேன், அனால் யதார்த்தத்துக்கு நான் முகம் கொடுத்தே ஆகவேண்டும். நான் தடுப்புக் காவலில் இருக்கலாம் ஆனாலும் குறைந்தது மக்களுக்கு பயன்தரும் வகையில் சிலவற்றை செய்வதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருக்கிறதே என்று எனக்குள்ளேயே நான் எண்ணிப் பார்ப்பதுண்டு.

சந்தர்ப்பம்

எனது இதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு விடயத்தை நான் உங்களிடம் சொல்ல வேண்டும். இது எனது மூன்றாவது பெரிய பணியும் அதற்கான சந்தர்ப்பமும் ஆகும். முதலாவது பணி ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக பிரபாகரனால் நியமிக்கப்பட்டது. அதில் நான் வெற்றி பெற்றேன். இரண்டாவது பணி, ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி தலைமையையும் மற்றும் இயக்கத்தையும் காப்பாற்றுவதற்காக நான் இயக்கத்தில் திரும்பவும் இணைந்துகொண்டது. அந்தப் பணியில் நான் தோற்றுப் போயவிட்டேன். இப்போது இது எனது மூன்றாவது பெரிய பணி. இதில் மக்களுக்கு உதவி செய்வதே எனது நோக்கம் மற்றும் கண்ணோட்டம் ஆகும். நான் ஒரு இயக்கத்துக்கு ஆயுதம் வழங்கவோ அல்லது அதை காப்பாற்றவோ முயற்சிக்கவில்லை. இந்த முறை நான் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப உதவும் மதிப்புமிக்க உன்னத பணியில் ஈடபட்டுள்ளேன். எனவே நிச்சயம் நான் அதில் வெற்றி பெறுவேன்.

கேள்வி: மக்களுக்கு உதவும் உங்கள் பணியில் எந்தவித தடைகள் கட்டுப்பாடுகள் இன்றி ஈடுபடுவதற்காக உங்களை விடுதலை செய்யும்படியான ஒரு வேண்டுகோளை ஏன் நீங்கள் முன்வைக்கக்கூடாது?

பதில்: இரண்டு காரணங்களுக்காக இப்போது அப்படியான ஒரு வேண்டுகோளை நான் எழுப்ப மாட்டேன்.முதலாவது ஆயிரக்கணக்கான முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் இன்னமும் விடுதலை செய்யப்படாமல் உள்ள நிலையில் நான் ஒரு சுதந்திர மனிதனாக இருக்க விரும்பவில்லை. நிலமைகள் சீரடைந்து முன்னாள் அங்கத்தவர்களில் பெரும்பகுதியினர் விடுவிக்கப்பட்டு அல்லது நீதி மன்றங்களின் முன் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டால், அப்போது நானும் விடுதலையாவதுபற்றி சிந்திக்கலாம்.

மற்றது,அப்படிச் செய்வதினால் அரசாங்கத்துக்கு சில தர்மசங்கடங்கள் நேரலாம். ஏற்கனவே அரசாங்கம் குறிப்பாக பாதுகாப்பு செயலர் எனது விடயம் சம்பந்தமாக எதிர்க்கட்சியினரால் பலத்த கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார். அதை மேலும் சிக்கலாக்க நான் விரும்பவில்லை. பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி குறிப்பிட்ட நேரம் வரும்போது, முழு எல்.ரீ.ரீ.ஈ யினர் பற்றி பாதுகாப்பு செயலாளரோடு ஆலோசனை நடத்தி ஒரு கொள்கைத் தீர்மானம் மேற்கொள்வார் என நான் நினைக்கிறேன். எனது விதி என்னவென்று எனக்குத் தெரியாது. அதுவரை இந்த சூழ்நிலைகளில் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன்.

கேள்வி: அரசாங்கம் இப்போது வெறுமே உங்களை பயன்படுத்திவிட்டு பின்னர் தூக்கியெறிந்து விடும் என்று சிலர் சொல்கிறார்களே இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நான் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை மற்றும் விசுவாசம் என்பவற்றுடன் பணி செய்பவன். அப்படி நடக்கும் என்று நான் எண்ணவில்லை. ஆனால் ஒரு விவாதத்துக்காக அப்படி நடக்கலாம் என்று சொன்னாலும். அப்போதும் இப்போது நான் செய்வதைப்போல சிலபேருக்கு உதவி செய்யும் விடயத்தில் நான் வெற்றி பெற்றவனாகவே இருப்பேன். அது போதும் எனக்கு.

இந்த வார்த்தைகளை கேபி வெளிப்படுத்தி இரண்டு வருடங்களும் இரண்டு மாதங்களும் கடந்து விட்டன. இதுவரை நேர்டோ நடத்திய செயற்பாடுகள் என்ன? இந்தப் பத்தி வெளிப்படுத்திய சந்தேகங்கள் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளனவா?

அங்குலிமாலா பரம்பரையினை போன்று ஏற்பட்டுள்ள கேபியின் உருமாற்றம் பற்றின ஒரு விரிவான பதிலினை வேண்டி பல இதயங்கள் துடிக்கின்றன. கேபியின் விடயத்தை கோட்டபாயப ராஜபக்ஸ கையாளும் விதம், ராஜபக்ஸஆட்சியின் வரவேற்கத்தக்க சாதனைகளில் ஒன்று என்று இந்தப் பத்தியும் அபிப்ராயப்படுகிறது. கேபி மற்றும் நேர்டோ என்பனவற்றால் தற்போதைய சூழலில் முன்னேற்றத்தை அடைய முடிந்ததா அல்லது அடைய முடியவில்லையா என்பதை இனிவரும்; கட்டுரைகளில் இந்தப் பத்தி மதிப்பீடு செய்யும்.

டி.பி.எஸ்.ஜெயராஜ்

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல