செவ்வாய், 27 நவம்பர், 2012

'காணாமல் போனோருக்கான காத்திருப்புக்கள்' (பாகம் 2)

 
மீண்டு(ம்) வருவீரோ.......? (பாகம் 2)

தமிழ் நாட்டின் தர்மபுரியில் கலப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு என்று சாதி வெறியாட்டத்தில் இறங்கிய ராமதாஸின் வன்னியர் அமைப்பு தலித் சமூகத்தின் மீது வன்முறையை ஏவிவிட்டது. இதனால் பல நூறு குடிசைகள் தீக்கிரையாயின. ஈழத்த தமிழர்களைப் பார்த்து மீண்டு(ம்) (எழுந்து) வருவீரோ......? என்று 'வீர' கீதம் பாடிய ராமதாஸ் கோஸ்டியினரே இந்தக் கொடுமையை முன்னின்று நடத்தினர்;. இதில் பல மனித உறவுகள் தீக்கு இரையாயின. இவர்களை தேடி இந்த வன்முறைக்கு எதிராக திரண்ட மக்களும் தமது உறவுகளை தேடி மீண்டு(ம்) வருவீரோ.......? என்ற சோக கீதங்களுக்கு மத்தியில் ராமதாஸின் வன்னியர் சங்க வன்முறையாளரை எச்சரிக்கும் முகமாக மீண்டு(ம்) வருவீரோ.... நீங்கள் என்று எழுச்சி கொள்ளல் வேண்டும், இதற்கான ஆதரவுகளை யாம் யாபேரும் வழங்க வேண்டும்.

இரடண்டாம் உலக் போரில் ஹிட்லரின் நாஜிப் போருக்கு எதிராக சோவியத்தின் மக்கள் படை பனி, குளிர் என்றும் பாராமல் உலகை காப்பாற்ற தந்திரோபாய ஐக்கிய முன்னணி அமைத்து தமது பல இலட்சம் வீரர்களைப் பறி கொடுத்தனர். இன்று வரை சோவியத்துக்கள் ஈடுபட்ட மக்களுக்கான போரின் பின்பு பலர் வீடு திரும்பி வரவே இல்லை. ஆனால் இவர்கள் மீண்டும் வருவார்கள் என்று பல ரஷ்யர்கள் இன்றும் நம்பிக் கொண்டு இருக்கின்றனர். இவர்களும் உலக மக்களைக் காத்த தமது வீரர்கள் மீண்டு(ம்) வருவீரோ......? என்று அவர்களை வரவேற்க 65 வருடங்களாக காத்திருக்கின்றனர் என்பதே வரலாறு.

போரைத் தூண்டும் போர் நினைவு கூரல்கள் வேண்டாம் போர் முரசு கொட்டும் மீண்டு(ம்) வருவீரோ.....? கொண்டாட்டங்கள் வேண்டாம், ஒரு மாதத்தை ஏன் இரு மாதத்தை விணாக்கும் வினையற்ற செயற்பாடுகள் வேண்டாம். சரி பிழையான வழி என்றாலும் எமக்கு வேண்டுமா இந்த மீண்டு(ம்) வருவீரொ.....? என்ற ஏக்கங்களும், எதிர்பார்ப்புக்களும், சோகங்களும், ஏமாற்றங்களும். இவற்றிலிருந்து விடுவிக்க போரை வெறுக்கும், ஆயுதத்தை வெறுக்கும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்போம் . இதில் எனக்கு எதிராக துப்பாக்கி தூக்கிய பரிதியையும் உள்ளடக்கித்தான் கூறுகின்றேன். எனவே மாவீரர் நாளில்? வாரத்தில்? மாதத்தில்? நாம் உறுதி எடுப்போம் மீண்டு(ம்) வாரீரோ.....? என்பதற்கு முற்றுப் புள்ளி வைக்க வாருங்கள் சகாக்களே இனி ஒரு விதி செய்வோம்.

2009 மே 19 இற்கு அண்மித்த நாட்கள் முள்ளிவாய்காலில் இறுதி நாட்கள் வரை புலிகளுக்கு கவசமாக்கப்பட்டவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பரிதேசத்திலிருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு மாறி ஓடிய தினங்கள். இராணுவ வாகனங்களில், பேரூந்தகளில்; வவுனியா முகாங்களுக்கு அழைத்து வரப்பட்டனர். வரும் வழியல் ஓமந்தையில் ஒரு வகை இராணுவச் சோதனைச்சாவடி. சில குடும்பங்களின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பிரிக்கப்பட்டனர். காயப்பட்டவர்கள் குடும்ப உறுப்பினர்களில் இருந்து பிரிக்கப்பட்டு சிகிச்சைகாக வேறு வாகனங்களில் ஏற்றப்படுகின்றனர். இதனால் பிரிய மன இல்லாமல் பிரிந்தன உறவுகள்.

குடும்பத்தின் ஒரு பகுதியினர் ஒரு அகதிகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். காயப்பட்டவர்கள் வவுனியா, அனுராதபுரம் போன்ற ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். எந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்ற பதிவுகள் பெரியளவில் யாரிடமும் இல்லை. இதனால் குடும்ப உறவுகளுக்கு காயப்பட்ட தமது உறவுகள் எந்த ஆஸ்பத்திரியல் எந்த வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் அறிய முடியவில்லை. மறு பக்கத்தில் அகதி முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் எந்த முகாமில் எந்த தற்காலிக கூடாரத்தில் உள்ளனர் என்று தெரியவில்லை. முகாங்களுக்கு வெளியில் உள்ள உறவினர்களுக்கு, நலன் விரும்பிகளுக்கு தமது உறவுகள் எங்கே என்று தெரியாத நிலை, ஏன் இலங்கை அரச அதிகாரிகளுக்கும் யார்? யார்? எங்கே? எங்கே? என்று தெரியாத நிலை. கால ஓட்டத்தில் பிரிவுகள், காயங்கள் சிலரை இல்லாமல் செய்திருக்கலாம்....? செய்திருக்கின்றது நிலமைகள் சீரடைய தொடங்கியதும் குடும்ப உறவுகள் பற்றிய விசாரிப்புக்கள் ஒருவரை ஒருவர் நோக்கி. தொடர்ந்தன 'மீண்டு(ம்) வருவீரோ......? என்ற ஏக்கங்கள்.

பலர் மீண்டும் இணைந்து விட்டனர். சிலர் இன்றும் இணையவில்லை இனி இணையலாம் அல்லது நிரந்தரமாக இணைய முடியாது போகலாம். காரணம் காயப்பட்டவர்களின் மரணம் இவர்களை பிரித்து இருக்கலாம் அல்லது குழந்தைகள் என்றால் தமது உறவுகளை இனம் காணமுடியாத நிலமைகளால் இனம் கண்டு சேரமுடியாத சோகங்கள். ஆனால் இவர்கள் யாபேரும் மீண்டு(ம்) வருவீரோ.....? என்ற ஏக்கத்துடன் காலத்தை கழிக்கும் சோகங்கங்களே இங்கே மிஞ்சிக் கிடக்கின்றது. இனி ஒரு இது போன்ற மீண்டு(ம்) வருவீரோ.....? எமக்கு வேண்டாம்.

இருக்கின்றாரோ என்பதுவும் தெரியாது? இல்லையோ என்பதுவும் தெரியாது? இதனால் இறந்தவருக்கான கிரியைகளை செய்து மன ஆறுதலும் பெற முடியாது . இருக்கின்றார் என்றும் கொண்டாட முடியாத அவலங்கள். இதனை விட துன்பமான நிலைமைகள் ஏதும் மானிட வாழ்வில் இல்லை. இது பிரபாகரனுக்கும் பொருந்தும், பாலகுமாருக்கும் பொருந்தும், பொட்னுக்கும் பொருந்தும், அப்புகாமிக்கும் பொருந்தும், முகமட்டுவிற்கும் பொருந்தும் பொன்னம்பலத்திற்கும் பொருந்தும். ஏன் ஆயிரம் ஆயிரம் அப்பாவி மக்களுக்கும் பொருந்தும். வேண்டவே வேண்டாம் இவ்வகைத் துன்பம். மீண்டும் மீண்டும் உறுதி பூண்போம், உறுதியெடுப்போம் இந்த மாவீரர் நாளில் இதற்கு முற்றுப் புள்ளி வைக்க நாங்கள் தயார். போரை விரும்பும் போர் நோயாளிகளே! நீங்கள் தயாரா....? சொல்லுங்கள் பதிலை.

நாம் போர்குற்றவாளி என்று மகிந்தர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் போவதும் இல்லை. பதிலாக மீண்டு(ம்) வருவாரோ.....? என்று முடிவு தெரியாமல் காத்திருக்கும் தமிழ் மக்கள் பலருக்கும் கணக்கை காட்டி மீண்டு(ம்) வருவாரோ......? என்ற தொடர் ஏக்கப் புள்ளிக்கு முற்றுப் புள்ளி வையுங்கள். இதேபோல முள்ளிவாய்காலுக்கு மக்களை அழைத்துச் சென்ற உங்களை நாங்கள் மக்கள் மன்றில் கழுவில் ஏற்றி தண்டனையும் தரப் போவதும் இல்லை. வேண்டும் என்றால் நிரந்தரமாக நாற்காலிகளை உங்களுக்கே விட்டும் விடுகின்றோம். தயவு செய்து இறந்தவர்களின் கணக்கை காட்டுங்கள் இதன் மூலம் உங்களுடன் விருப்புடன், வெறுப்புடன், நிர்பந்தத்துடன் இணைந்தவர்கள், இணைக்கப்பட்டவர்களின் அன்பு உள்ளங்களின் மீண்டு(ம்) வருவீரோ.... என்ற முடிவில்லாக் கேள்விகளுக்கு முற்றுப் புள்ளி வையுங்கள் உங்களை கெஞ்சிக் கேட்கின்றேன். இதனை செய்யுங்கள் தயவு செய்து செய்வீர்களா.....?

ஈழத் தமிழர் மத்தியில் ஒருபுறம் தமிழ் தேசியம் என்றும் மறு புறம் இணக்க அரசியல் என்றும் இன்னொரு புறம் அமெரிக்கா ஐநா ஊடாக தீர்வை தாம்பாளத்தில் வைத்துத் தரும் என்றும் மக்களை ஏமாற்றும் கூட்டங்களின் கைகளே ஓங்கி ஒலிகின்றன. மறு புறத்தில் 13 வதையும் இல்லாமல் செய்து விடுவோம் என்ற மிரட்டல் வேறு. பெரும் தேசியவாதத்துடன் எவ்வித சமரசமும் இன்றி அதேவேளை குறுத் தேசிய வாததத்திற்குள் வீழ்ந்து விடாமலும் மக்களை வழி நடத்திச் சென்ற கார்த்திகை மாதத்தில் பூத்த மக்கள் போராளியே, மனித நேயம் மிக்கவனே, மக்கள் வாழும் மண்ணை நேசிப்பவனே உன்னை அழிந்தவர்கள் அழிந்து கொண்டிருக்கையிலும் உன்னைப் போன்ற ஒரு தலைவனை இந்த 30 வருட காலத்தில் உருவாக்க முடியவில்லையே என்ற ஏக்கதுடன் உன்னை இன்னமும் நேசிக்கும் மக்கள் மீண்டு(ம்) வருவீரோ...? என்றுஉன்னை ஒத்த தலைமையை எதிர்பார்த்தே இருக்கின்றனர். வரலாறு ஒருபோதும் பின்னோக்கி நகருவதில்லை எமக்கு நம்பிக்கை இருக்கின்றது நாம் மீண்டும் எழுந்து வருவோம் என்று. மீண்டும் பலமாக எழுந்து வருவோம் என்று. அதுவரை விடாப்பிடியாக போராடிக்கொண்டே இருப்போம்.

இந்ததக் கட்டுரையை எழுதத் தூண்டிய செய்தியையும் இத்துடன் இணைக்கின்றேன்

மீண்டும் வருவீரோ.....

20 வருடங்களுக்கு பின்பு இணைந்த 65வயது மகனும் 95 வயது தாயும். இது நடைபெற்றது கைதடி முதியோர் இல்லத்தில். என் நெஞ்சை உருக்கி சம்பவம் இது. மீண்டு(ம்) வந்தீரோ.....? என்பதில் அவர்களிடம் ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இந்த தள்ளாத முதிய வயதிலும்.

செய்தி:

20 வருடத்துக்கு பின்னர் தாயைச் சந்தித்த மகன்முதியோரின் கண்ணீர் சம்பவம்



கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர்; 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித்தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் அண்மையில் கைதடியில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் (வயது - 65) என்பவரே தனது வயது முதிர்ந்த தாயாரான கனகசபை பரமேஸ்வரி (வயது 95) என்பவரை 20 வருடங்கள் கழித்துக் கண்டுகொண்டமையால் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

இரு தசாப்தத்துக்குப் பின்னர் தனது மகனைக் கண்டு தாயாரும் தனது வயது முதிர்ச்சி மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டார்.

இந்தச் சம்பவம் அண்மையில் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் மத்தியில் ஓர் உணர்வுபூர்வமான சந்தோஷத்தை ஏற்படுத்தியதாக இல்லத்தின் அத்தியட்சகர் தெரிவித்தார்.

இந்தச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்டவர் கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன். அவருக்கு இப்போது வயது 65. கடந்த போரினால் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை இழந்த இவர் தனிமையில் தவித்து வந்தார். ஊனமுற்ற நிலையில் இருந்த இவரைப் பராமரிக்க எவரும் இல்லாமையால் அப்பகுதிக் கிராம அலுவலர் மூலம் கைதடி அரச முதியோர் இல்லத்தில் இவர் சேர்க்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னரே அவர் முதியோர் இல்லத்தில் இணைந்துகொண்டார்.

ஏற்கனவே இவரது தாயாரான கனகசபை பரமேஸ்வரி கடந்த 20 வருடங்களாக கைதடி முதியோர் இல்லத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு கண்பார்வை இல்லை. படுத்த படுக்கையிலேயே இருக்கிறார். அவர் அங்கு இருப்பது மகனான அற்புதானந்த ஈஸ்வரனுக்குத் தெரியாது.

இந்த நிலையில், அற்புதானந்த ஈஸ்வரன் முதியோர் இல்ல நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினரைச் சந்திக்கச் சென்றுள்ளார். உறவினர் வீட்டுச்குச் சென்றபோதுதான் தனது தாயார் முதியோர் இல்லத்தில் இருக்கும் விடயம் உறவினர் மூலம் அவருக்குத் தெரிய வந்தது. இதனையடுத்து அற்புதானந்த ஈஸ்வரன் மீண்டும் முதியோர் இல்லத்துக்குச் சென்றார். அவர் முதியோர் இல்ல வாசலிலேயே பலத்த சத்தத்துடன் அழத் தொடங்கிவிட்டார். இதனால், இல்ல நிர்வாகிகள் திகைப்படைந்தனர்.

பின்னர் விடயத்தை விசாரித்தபோதுதான் உண்மை தெரியவந்தது. தனது தாயார் இல்லத்தில் இருக்கும் செய்தியை அவர் இல்ல நிர்வாகிகளிடம் கூறினார். உடனடியாக இந்தத் தகவல் தாயாருக்குத் தெரிவிக்கப்பட்டது. மகனான அற்புதானந்த ஈஸ்வரனும் தாய் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச் சென்றார். அங்கே தாயும் மகனும் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இது அங்கு கூடியிருந்த அனைவரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்ததாக இல்லத்தின் அத்தியட்சகர் கூறினார்.

(சாகரன்)

'காணாமல் போனோருக்கான காத்திருப்புக்கள்' (பாகம் 1)

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல