ஞாயிறு, 25 நவம்பர், 2012

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி-8

விடுதலைப் புலிகள் விருந்தோம்பலில் கைதேர்ந்தவர்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. விடுதலைப் புலிகளின் விருந்தோம்பல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் நேரடியாக அனுபவித்தும் அறிந்தும் இருக்கின்றனர். அத்தோடு குறிப்பாக சமாதான ஏற்பாட்டாளர்களாக இருந்த நோர்வே குழுவினர் மற்றும் ஜப்பானிய தூதுவர் யசூசி அகாசி போன்றவர்களிடம் கேட்டால் விடுதலைப் புலிகளின் விருந்தோம்பல் தொடர்பில் அவர்கள் இன்றில்லாத சூழ்நிலையிலும் மனமார பாராட்டியே புகழ்வார்கள்.

விடுதலைப் புலிகளின் விருந்தோம்பல் அத்தகைய சிறப்புடையதாகவே இருக்கும். குறிப்பாக ஜப்பானிய தூதுவர் யசூசி அகாசியிற்கு மிகவும் பிடித்த உணவாக வான்கோழியில் வைக்கப்படும் சூப் என்று தெரிந்து அவருக்கு அது செய்து தரப்பட்டது. இவ்வாறு நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக்சொல்கைமிற்கு வான்கோழியில் செய்யப்படும் உள்ளிக்கறி நன்றாகப் பிடிக்குமாம். விடுதலைப் புலிகளின் சமையற் கலையில் நிபுணராக இருந்த பிருந்தாபன் என்ற விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக போராளியே குறிப்பாக தூதுவர்கள் மற்றும் விசேட விருந்தினர்கள் வன்னிக்கு வருகின்ற பொழுது உணவு சமைப்பதற்குரிய மெயின் பொறுப்பை எடுத்துக் கொள்வார்.தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த பிருந்தாபன் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனிடம் நேரடியாக இருந்து சமையற் கலையை கற்றவராவார். விடுதலைப் புலிகள் போரியல் துறையில் தங்களது இயக்கத்தை வளர்த்தது போன்றே சகல துறைகளிலும் பலரையும் வளர்த்திருந்தனர். இவ்வாறு சமையற் கலையை பிரபாகரன் நேரடியாகவே தங்களது குறித்த தலைமைச் செயலக போராளிகளிற்கு கற்பித்து வந்தார். இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தவேளை வன்னிக் காடுகளில் விடுதலைப் புலிகள் மறைந்திருந்தபொழுது பிரபாகரனுடன் தளபதிகள், போராளிகள் ஆகியோர் நெருக்கமாக இருக்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. இந்த நாட்களில் உணவிற்கு பெரும் அல்லற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் வன்னிக்காட்டில் மிருகங்களை வேட்டையாடியே உணவாக உட்கொண்டு வந்தனர்.

சில நாட்களில் விடுதலைப் புலிகளின் போராளிகள் வெளிப்பகுதிக்கு வந்து உணவுப்பொருட்களை எடுத்துச் செல்கின்ற பொழுது அந்த நாட்களில் இன்றைக்கு தலைவர்தான் சமைக்க வேண்டும் என தளபதிகள் கூறிவிடுவார்கள். இவ்வாறு கூறினால் காட்டில் வேட்டையாடப்படும் இறைச்சியை வைத்து பிரபாகரன் ஊர்க்கறி என்று ஒரு கறியை சமைத்தால் அங்குள்ள போராளிகள் அனைவரும் சுவைத்து உண்பார்களாம். இவ்வாறு விடுதலைப் புலிகளின் உணவு விடயம் தொடர்பில் முன்னாள் தளபதிகளும், போராளிகளும் பல கதைகளை சுவாரசியமாக கூறுவார்கள். சுவையான உணவைத் தேர்ந்து உண்பதிலும் பிரபாகரன் பிரியமானவர்.

வான்கோழி என்பது சர்வதேச உணவுப் பிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சுவையுள்ள உணவாகும். குறிப்பாக விண்வெளிக்கு ஆய்வுகளை நடத்தச் செல்பவர்கள் வான்கோழியை தமது விருப்பத்திற்குரிய உணவாக கூறுவதைக் கேட்டிருக்கிறோம். மேற்குலக நாடுகளில் வான்கோழி ராஜதந்திரிகளாலும், கோடீஸ்வரர்களாலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாக இருந்தது, இதன் பெறுமதியும் மேற்குலகில் கூடுதலாகவே இருந்து வருகிறது.

ஆனால் தென்னாசிய நாடுகளில் வான்கோழி பெரியளவில் முக்கியத்துவம் மிக்க உணவாக கருதப்படுவதில்லை என்பதுடன் இது தென்னாசிய நாடுகளில் இதன் விலையும் கூடுதலாக இருப்பதில்லை. குறிப்பாக வன்னிப்பகுதியில் மற்றைய கோழிகளைப் போலவே வான்கோழிகளும் பொதுமக்களின் வீடுகளில் சாதாரணமாகவே வளர்க்கப்பட்டு வந்தது. ஊர்க்கோழியை விட ஒருமடங்கு கூடுதலான விலைக்கு இந்த வான்கோழி விற்கப்பட்ட போதிலும் வான்கோழியின் உணவின் சுவை தெரியாமல் மக்கள் இதனை பெரியளவில் வாங்குவதுமில்லை.

விடுதலைப் புலிகளின் பண்ணைகளிலும், அவர்களின் உணவு ஒழுங்குபடுத்தப்படும் இடங்களிலும் வான்கோழி கூடுதலாக வளர்க்கப்பட்டது. இவ்வாறு வளர்க்கப்பட்டு வந்த வான்கோழியை விடுதலைப் புலிகள் தமது விருந்துபசார நடவடிக்கைகளிற்காக பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக அரச தூதுக் குழுவினர், மதத் தலைவர்கள், சமாதானக் குழுவினர், ஊடகவியலாளர்கள் ஆகியோரிற்கு விடுதலைப் புலிகளால் உணவு விருந்து அளிக்கப்படுகின்ற பொழுது வான்கோழி முக்கிய உணவாக இருக்கும். ஆனால் தமிழ்தேசியக் கூட்டமைப்பினரை விடுதலைப் புலிகள் 11 தடவைகள் உத்தியோக பூர்வமாகவும், மறைமுகமாகவும் வன்னிப்பகுதிக்கு அழைத்து சந்திப்புகளை நடத்தியிருந்த போதிலும் ஒருபோதுமே அவர்களிற்கு வான்கோழி உணவாக பரிமாறப்படவில்லை.
காரணம் இவஎகளை விடுதலைப் புலிகள் ஒரு வேண்டா விருந்தாளிகளாக எண்ணினார்கள் அவ்வாறே கையாண்டார்கள் என்பதை உடனிருந்தவர்கள் அறிவார்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் கூட்டமைப்பினர் சந்திப்பினை நடத்திக்கொண்டிருந்த பொழுது பிரபாகரன் ஆனந்தசங்கரியையும், சுரேஸ் பிரேமச்சந்திரனையும் பார்த்தவுடன் புன்முறுவலுடன் வந்த பிரபாகரனின் முகம் உடனடியாகவே இறுக்கமடைந்ததை அங்கிருந்தவர்கள் தெளிவாக அவதானித்திருந்தனர். உடனடியாக அருகில் இருந்த தமிழ்ச்செல்வன் சிரித்தவாறு சமாளித்துக்கொண்டு பிரபாகரனை நிதானப்பட வைத்துவிட்டு சந்திப்பை தொடர்ந்து நடத்த வழிசெய்தார்.

இருந்த போதும் சங்கரியை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்த பிரபாகரன் சுரேசையும் மனதுக்குள் துரோகியைப் பார்த்து சிரிக்கிறேன் என எண்ணியவாறு தலைவர் சிரித்தார் என அந்த நாட்களில் வன்னியில் புலிப்போராளிகள் நையாண்டியாக கூறுவார்கள். அந்தளவிற்கு கூட்டமைப்பினர் மீது புலிகளிற்கு நம்பிக்கை இல்லாமலே தங்களது அரசியல் தேவைகளுக்காக கூட்டமைப்பினரைக் கையாண்டு வந்தனர்.

புலிகள் எண்ணியது போன்று கூட்டமைப்பினரும் நம்பகத் தன்மையுடன் அன்றும் நடக்கவில்லை, இன்றும் நடக்கவில்லை. புலிகள் அழிவின் விளிம்பில் நின்ற இறுதித் தருணத்தில் புலிகளின் இறுதி முடிவு பற்றிய செய்தி விரைவாக வரவேண்டுமென்று காத்திருந்தவர் சம்பந்தன் என்றால் சிங்கள மக்கள் இப்பொழுது நம்ப மறுப்பார்கள். பாராளுமன்றத்தில் தன்னை ஒரு பிரபாகரன் போன்று கற்பனை பண்ணியவாறு சம்பந்தன் உரையாற்றி வருவதையே அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் சம்பந்தன் புலிகள் அழிய வேண்டும் என்றே விரும்பியிருந்தார் என்பது ஒன்றும் தமிழ்மக்களுக்கு இரகசியமல்ல. இவர்களின் பம்மாத்து அரசியலை நன்றாக அன்றைய நாட்களிலேயே பிரபாகரன் கணித்து வைத்திருந்ததால் இவர்களுக்குரிய உணவு பரிமாறும் விடயத்தில் கூட பிரபாகரன் சாதுரியமாக நடந்து வந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு ஊகங்களையும் கருத்துக்களையும் எழுதிவந்த ஊடகங்கள் அன்றைய நாட்களில் விடுதலைப்புலிகள் கூட்டமைப்பினரை எவ்வாறு கையாண்டு வந்தனர் என்பதை சுதந்திரமாக எழுதாமல் விட்டமையானது விடுதலைப் புலிகளின் அழிவிற்கு ஏதோ ஒரு விதத்தில் வழிகோலியது என்பது மட்டுமல்லாமல் கூட்டமைப்பினர் புலிகளையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றுவதற்கு வழிசெய்து விட்டது. அன்றைய நாட்களில் கூட்டமைப்பினர; திரைமறைவில் மேற்கொண்டுவந்த நடவடிக்கைகளை ஊடகங்கள் வெளிப்படையாக எழுதியிருந்தால் கூட்டமைப்பினரை ஒன்றில் புலிகள் திருத்தியிருப்பார்கள் அல்லது மக்கள் திருத்தியிருப்பார்கள்.

இது இரண்டுமே இல்லாமல் கூட்டமைப்பினரது செயற்பாடுகளையும் புலிகளது செயற்பாடுகளையும் தமிழ் ஊடகங்கள் மிகைப்படுத்தி எழுதி வந்தமையால் கூட்டமைப்பினர் இறுதி நாட்களில் அரசுடன் இணைந்து புலிகளை அழிப்பதற்கு வழிகோலியதுடன் நிற்காமல் தற்போது தமிழ்மக்களையும் படுகுழியில் வீழ்த்துவதற்கு தயாராகி வருகின்றனர்.

அன்றைய நாட்களில் புலிகளின் ஊடகப் பலம் அசுர பலமாகவே காணப்பட்டது. வன்னியில் புலிகளின் வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள் பத்திரிகைகள் என பல்வேறு ஊடக வலையமைப்புகளை புலிகள் பேணிவந்தனர். குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, அம்பாறை, மன்னார், கொழும்பு போன்ற பகுதிகளில் கூடுதலான பணத்தை வாரியிறைத்து தமது செய்தியாளர்களை புலிகள் கையாண்டு வந்தனர். யாழ்ப்பாணத்தில் புலிகளிற்காக செயற்பட்டுவந்த ஊடகவியலாளர்கள் ஊடகத்துறையுடன் மட்டும் நிற்காமல் படைத்துறை சார்ந்த செயற்பாடுகளிலும் புலிகளிற்கு புலனாய்வுத் தகவல்களை பரிமாறி வந்தனர்.

யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றிற்கு ஊடகவியலாளர்களே தகவல்களை புலிகளின் புலனாய்வுத்துறைக்கு அளித்திருந்தனர். அரச ஊழியத்துடன் ஊடக சம்பளத்தையும் பெற்றவாறு தமிழர்கள் பலரின் உயிரிழப்பிற்கு குறித்த மாநகர சபையில் பணியாற்றிய ஊடகவியலாளர் ஒருவரே பிரதான சூத்திரதாரியாக இருந்தார். யார் இந்த அரச சம்பளத்தை பெற்றவாறு அரசுக்கு எதிராக செயற்பட்டதுடன் புலிகளின் ஊடகங்களின் தூணாக விளங்கிய ஊடகவியலாளர் என அறிய உங்களிற்கும் ஆவலாக இருக்கும். இதைவிட தமிழ் ஊடகங்களை அழித்த சில ஊடகங்களின் வரலாற்றை பார்ப்பதற்கும் ஆவலாக இருக்கும். தொடர்ந்து பார்ப்போம்.

வே.அர்ச்சுணன்

(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல