வியாழன், 10 ஜனவரி, 2013

றிசானா நபீக் மரணத்தை வெல்லுமா….? மனித நேயம்

(றிசானாவிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இக் கொடூரச் செயலை உலகமே வன்மையாக கண்டிக்கும் இவ்வேளையில் றிசானாவின் விடுதலையை வேண்டி நம்பிக்கையுடன் கார்திகை 2010இல் எழுதிய கட்டுரையை இன்று தேவை கருதி மீண்டும் பிரசுரிக்கப்படுகின்றது)

மனித நேயமும், மிருக குணமும் கலந்து படைக்கப்பட்டதுதான் மனிதன். இதில் மிருக குணத்தை அடக்கி மனித நேயத்தை மேலோங்கச் செய்வதே மனிதன் ‘மனிதன்’ ஆக வாழ்வதற்கான வழி முறையாகும். ஆனாலும் மிருக குணம் சில வேளைகளில் மேலோங்கி இருப்பதுவும் அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளுமே மனிதன் குற்றங்கள் புரிவதற்கும், கொலைகள் செய்வதற்கும் காரணமாக அமைகின்றது. இதே போல் மிருக குணம் அடக்கப்பட்டு மனித நேயம் மேலோங்கி நிற்கும் போது குற்றங்கள், கொலைகளை தவிர்த்து அவற்றை தடுத்து நிறுத்தும் மகாத்மாவாக மாறுகின்றான். மனித குல மீட்சிக்காக தன்னை அற்பணிக்கும் மக்கள் தொண்டனாக மாறுகின்றான் மனிதன். இதன் தொடர்சியாக அவன் மக்கள் தலைவனாக மாறுகின்றான்.

தவறு விடும் மனிதனை திருத்தி மீண்டும் மனிதனாக மாற்றுவதற்கு உருவாக்கப்பட வேண்டியனவே சட்டங்களும், அதனை ஒட்டிய சம்பிரதாயங்களும், ஒழுங்கு முறைகளும் ஆகும். மாறாக மனிதன் திருந்துவதற்கு வாய்ப்பு அழிகப்பட்டாத சட்டங்களும், சம்பிரதாயங்களும், ஒழுங்கு முறைகளும் மனிதனை வெறும் நரபலியிடுவதைப்போல்தான் ஆகிவிடும். இதுதான் குற்றத்திற்கு இறுக்கமான தண்டனை வழங்கும் சவூதி அரேபியாவில் மரணதண்டனைத் தீர்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் றிசானா நபீக்கிற்கும் அமைந்து விடுமோ என்று சர்வதேச மனித நேயசக்திகள் பயப்படும் நிகழ்வாக இன்று எம்முன்னே உள்ளது.குற்றவாளிகள் விசாரிக்கப்படும் போது வெறுமனவே என்ன குற்றத்ததை செய்தார் என்று மட்டும் பார்க்காமல் குற்றம் சாட்டப்பட்டவரின் சமூகப் பின்னணி, பொருளாதார பின்னணி, வயது எல்லைகள், உடல், மன நிலைகள், என்ன சூழ்நிலையில் அந்த குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது என்பன நிச்சயமாக கருத்தில் கொள்ளப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ் அணுகு முறையே குற்றத்திற்கான சரியான தண்டனை வடிவத்தை தீர்மானிப்பதற்கு ஏதுவாக இருக்கும். இதன் அடிப்படையில் வழங்கப்படும் தண்டனைகள் சமூகத்திலுள்ளவர்களுக்கு ஒருபாடமாக அமையணும். தண்டனை பெறுபவர் தனது தவற்றை உணர்ந்து திருந்தி மீண்டும் சமூகத்தின் நற் பிரஜையாக மாறுவதற்கும் வழி சமைக்கும். மாறாக கல்லால் அடித்து கொல்லுதல், உடல் உறுப்புக்களை பகுதியாக துண்டித்து எடுத்தல், சவுக்கால் அடித்துக் கொல்லுதல் போன்றவை மனித நாகரித்தது உகந்ததா? மனிதன் திருந்துவதற்கு வாய்பழிக்குமா? என்பது கேள்விக்குறியே?

ஒரு தனிமனிதனின் தவறு ஒரு சமூகத்தின் அல்லது பெரும் மனிதக் குழுமத்திற்கு அல்லது ஒட்டு மொத்த மனித குலத்திற்கு தீங்காக அமையுமாயின் அவ் தனிமனிதனின் தவற்றிற்கான தண்டனை குறைந்த பட்சம் இந்த நவீன உலகில் ஆயுள் தண்டனையாக அமையலாம். (கவனிக்க மரண தண்டனை அல்ல). ஆனால் ஒரு தனி மனிதனின் தவறு ஒரு சில மனிதர்கள் அல்லது ஒருவருக்கு மட்டும் இழப்பாக அமையுமாயின் தவறு விட்ட மனிதனுக்கான உச்ச தண்டனை ஆயுள் தண்டனையாக அமையலாம். ஆனால் அதுவே மரண தண்டனையாக அமைதல் ‘நெற்றிக் கண்ணைக் காட்டி அந்த சிவனே செய்தாலும் தண்டனை வழங்குபவன் நீதிமான் அல்ல. மாறாக குற்றத்தை செய்தவன் மீண்டும் திருந்தி வாழுவதற்குரிய வாய்பை கொடுக்க மறுக்கும் குற்றவாளியாகவே தண்டனை கொடுத்தவரை பார்க்கப்படுவதில் நியாயங்கள் நிறையவே உள்ளன. இவற்றின் அர்த்தம் குற்றச் செயல்களை அல்லது குற்றம் செய்தவர்களை நியாயப்படுத்துவது அல்லது ஏற்றுக்கொள்வது என்று அர்த்தப்படாது.

இதுவே இன்று றிசானா நபீக் விடயத்தில் சவூதிஅரேபிய நீதித்துறையில் நடக்கின்றது. மனிதன் தன் குற்றத்தை உணர்ந்து மீண்டும் மனிதனாக வாழ்வதற்குரிய வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். அதுவும் தற்போது உள்ள வசதி வாய்ப்புக்கள் உள்ள நவீன உலகில் சிறைக் கூடங்களில், சீர்திருத்தப்பள்ளிகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டவரை பராமரித்து, அவர்களுக்கு போதித்து, நெறிப்படுத்தி நல் வழிப்படுத்த வாய்புகள் இருக்கும் போது பராமரித்து வைத்திருக்க இடமில்லாமல் ஒருவரை அழித்தல் எந்த மதத்திற்கும் ஒவ்வாதது விடயமாகும். ஏன் இதனை சவூஅரேபிய போன்ற நாட்டு அரசுகள் புரிந்து கொள்ளவில்லை என்பது புரியாத புதிர் அல்ல.

பிறப்பில் யாவரும் ஒன்றே என்று இஸ்லாம் மதமும் ஏற்றுக் கொள்ளும் சவூதி ஆளும் வர்க்கமாகிய அரசர் மட்டும் எப்படி இவ்வளவு பெரிய சொத்திற்கு அதிபதியாகினார் என்று பார்த்தால் பிறரின் உழைப்பை சுரண்டி தான் கொழுத்ததால் ஏற்பட்டது இது என்பது புரியும். இந்த உழைப்பைச் சுரண்டலால் எத்தனை ஆயிர் உழைக்கும் மக்கள் குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டு மடிந்திருப்பார்கள். எனவே தண்டனையென்று வந்தால் அதிக பட்டச தண்டனை சவூதி ஆளும் வர்க்கதிற்கும், அரச குடுமபத்திற்குமே அதுவும் அதிக பட்ச தண்டனையாக ஆயுள் தண்டனைதான் மரண தண்டனை அல்ல வழங்கப்பட வேண்டும். இவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு உழைப்பில் ஈடுபடுத்தி வேர்வை சிந்த வைக்கும் தண்டனைகளை சிறைகளில் வழங்கி இவர்களில் மேலோங்கி நிற்கும் பிறரின் உழைப்பைச் சுரண்டும் மிருகத்தை கொல்ல வேண்டும்.

எனவே சர்வதேச மனிதநேய சமூகமே திரண்டு எழுவீர் மனுஷியாக மாற விரும்பும் றிசானா நபீக்கை காப்பாற்ற. நாமும் உங்களோடு தோள் கொடுத்து நிற்கின்றோம் ஒரு பெரும் சமூகக் குழுவின் அழிவிற்கு காரணமாக இருப்பவர்களுக்கு அதிக பட்டச தண்டனைகளையும், தனியான சிலரின் பாதிப்புக்களுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு குறைந்த பட்ச தண்டனையான நன்நடத்தை நெறிகளையும் போதிப்பதற்கு சீர்திருத்த பள்ளிகளில் சேர்பதற்கும் ஆவன செய்வோம்

ஈழவிடுதலைப் போராட்டத்திலும் கோழி திருடினவனும், இளநீர் புடிங்கியவனுக்கும் மின்சாரக் கம்பத்தில் கட்டி மண்டையில் போட்டு சந்தோஷம் அடைந்த கூட்டங்கள் ஏழை உழைக்கும் மக்களின் வயிற்றில் ஆண்டாண்டு காலமாக ஏகபோகம் நடத்தியவர்களிடம் குறைந்த பட்ச தண்டனையாக வரி வசூல் பண்ணி அனுமதிப்பத்திரம் வழங்கி வாழ்த்தி அனுப்பிய தவறுகள் தாராளமாகவே நடைபெற்றன. இவர்கள்தான் சமூகத்தின் முதன்மைக் குற்றவாளிகள். தண்டனையென்று வந்தால் இவர்கள் தான் முதுகு வளைத்து உழைக்க நிர்பந்திக்கும் தண்டனையை இவர்களுக்கு முதலில் வழங்க வேண்டும். பிறரின் உழைப்பில் வாழ்ந்த இவர்களுக்கு வியர்வையின் மகிமை உணர்தப்பட வேண்டும். இதுதான் சரியான சமூகநீதி வழங்கும் தண்டனையாக அமையும்.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் படைகளை அனுப்பி தலிபான் என்று சொல்லிக் கொண்டு அப்பாவிப் பொதுமக்களை சங்காரம் செய்யும் கூட்டங்கள் தான் பல ஆயிரம் மக்களின் மரணத்திற்கு காரணமானவர்கள். பாலஸ்தீன மக்களை வாழ்நாள் முழுவதும் அகதி முகாம் வாழ்வில் வாழ வழிவகை செய்யும் மேய்ப்போர்களே உண்மையான சமூக விரோதிகள், குற்றவாளிகள். இவர்களுக்கு நாம் அதிக பட்ச தண்டனையை வழங்குவோம்.

தனது 17 வயதில் பாலகியாக வேலைக்கு அனுப்பப்பட்ட றிசானா நபீக் இற்கு மரணதண்டனை ஏற்புடையது அல்ல. மாறாக 17 வயது ‘பாலகியை’ தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய வறுமைச் சூழலை ஏற்படுத்திய சமூக கட்டமைப்பை தூக்கிப்பிடிக்கும் அந்த ஆளும் வர்க்கமும், அதற்கான முதலாளி வர்க்கமுமே றிசானா நபீக் விடயத்தில் நிஜக் குற்றவாளிகள். யாருக்கும் தைரியம் இருப்பின், மனித நேயம் இருப்பின் இவர்களை தண்டியுங்கள். றிசானா நபீக் போல் உலகெங்கும் வறுமையின் நிமிர்த்தம் குழந்தை தொழிலாளியாக தம்மை ‘அர்ப்பணித்து’ தம்மை அழித்துக் கொள்ளும் லட்சோதி லட்சம் குழந்தைகளை காப்பாற்றுவோம். மலையகத்திலிருந்து வீட்டுஎடு பிடி வேலைகளுக்காக கொண்டுவந்து உணவு வழங்காமல், 18 மணி நேரத்திற்கு மேலாக வேலையும் வாங்கி, தூங்குவதற்கு நாய்க் கொட்டிலை மட்டும் கொடுத்து, வளர்ந்த பின்பு கட்டிலில் படுத்திய கொடுமைக்கார்கள் பலர் எம்மத்தியிலும் உள்ளனர். அவர்களை இழுத்து வாருங்கள் தண்டனை வழங்குவோம். மலையகத்திலிருந்த வந்த இந்தப் பத்தினி தனக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கு எல்லாம் கொலைகள் செய்திருந்தால் பத்தினியை தண்டிப்பதா? கட்டிலில் படுத்தியவரை தண்டிப்பதா? சமூக நீதிமான்களே! தீர்ப்பை உங்கள் கையில் விட்டு விடுகின்றேன். இக் கொடுமைக்காரர்களுடன் ஒப்பிடுகையில் றிசானா நபீக் ஒன்றும் குற்றவாளியில்லையே….?

புலிகளின் போர்க்காலத்தில் ‘லபக்’ என்று படையில் சேர்த்து விடுவார்கள் என்று அஞ்சி சிறுவயதிலேயே தாயாக்கப்பட்ட வன்னிக் குழந்தைகள் ஏராளம். ‘நேற்று’ வரை முகாங்களில் தங்கியிருந்த ‘குழந்தைத் தாய்கள்’ இதற்கு சாட்சியங்கள். இவர்களை இந்நிலைக்கு வலிந்து தள்ளியவர்களை உலகெங்கும் தேடி இழுத்து வாருங்கள். தடுப்பு முகாங்களிலிருந்து வெளியே எடுத்து வாருங்கள். இவர்களுக்கு மக்கள் மன்றங்களின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவோம். றிசானா நபீக் என்ற பெண்ணை குற்றம்? செய்யும் சூழ்நிலைப் பொறிக்குள் தள்ளியவர்களை முடியுமானால் தண்டிப்போம்.

(கார்த்திகை 05, 2010)

(சாகரன்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல