வியாழன், 10 ஜனவரி, 2013

காகிதப் புலிகள் சொல்வது போல அயன் பய்ஸ்லி அரிச்சந்திரனா? அல்லது சிறீலங்கா அரசின் முகவரா?

வெறும் வாயைச் சப்பிக் கொண்டிருக்கும் சில வேலைவெட்டி இல்லாதவர்களுக்கு ஒரு பிடி அவல் கிடைத்திருக்கிறது. விடுவார்களா?

சாம்பிராணி இல்லாமலேயே சன்னதம் ஆடுகிறவர்கள் அயன் பெய்ஸ்லி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சை வைத்து வானுக்கும் பூமிக்கும் எம்பி எம்பிக் குதிக்கிறார்கள். சம்பந்தரை சிலுவையில் அறைய ஆணி, சுத்தியலோடு வெளிக்கிட்டுள்ளார்கள்.

முதலில் அயன் பெய்ஸ்லி எப்போது? எங்கே? சம்பந்தரை கண்டு பேசினார் என்பதைக் கூறவில்லை. ஒரு வாதத்திற்கு அவர் சொன்னதை தெய்வ வாக்காகவே எடுத்துக் கொள்வோம். ஆனால் அயன் பெய்ஸ்லி அவர்களது பின்புலம் என்ன?

அயன் பெய்ஸ்லி சிறீலங்கா அரசின் தீவிர ஆதரவாளர். ஏன் அதன் முகவர், பரப்புரையாளர் என்று கூடச் சொல்லலாம். அதே சமயம் வி.புலிகளின் தீவிர எதிர்ப்பாளர்.

கடந்த ஏப்ரில் 03,2012 இல் அயன் பெய்ஸ்லி Commentator என்ற இணையதளத்தில் (The UN is making lasting peace in Sri Lanka less likely) ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் ஜெனீவாவில் (சிறீலங்காவிற்கு எதிராக) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆத்திரமூட்டுவதாக உள்ளது. அந்தத் தீர்மானம் சிறீலங்காவின் உள்நாட்டு அரசியலை வெற்றிகரமாக அனைத்துலக மயப்படுத்துவதின் தொடக்கமாகும். இதே போல் ஆப்பிரிக்காவில் இன்னொரு அமைப்பு தலையிட்டுள்ளது. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றமே அந்த அமைப்பாகும். இது சீர்குறைவாகும். எதிர்மறைப் பயனை விளைவிக்கும். அப்படியான நடவடிக்கை, நல்லநோக்கத்தோடு செய்யப்பட்டாலும் ஏற்கனவே (நாடு) கண்டுள்ள அரிய முன்னேற்றத்தைப் பின்னடையச் செய்யும் வல்லமை உடையது.” (“The resolution passed in Geneva is provocative and effectively commences the internationalisation of the internal politics of Sri Lanka. As we have seen in Africa with similar intervention by another body, the International Criminal Court, this can be destabilising and counterproductive. Such a move, no doubt well intentioned, has the potential to set back the difficult progress that has already been made.” ) எனக் காட்டமாக கண்டித்திருந்தார்.

அய்.நா மனித உரிமை அவையில் சென்ற ஆண்டு மார்ச்சு மாதம் 23 ஆம் நாள் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உறைப்பாக இல்லை என்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்களது கருத்தாகும். போதாக் குறைக்கு அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா மெலினப்படுத்தியது. அப்படிச் செய்ததற்கு இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி மன்றாடும் தொனியில் ஒரு கடிதத்தை மகிந்த இராசபக்சேக்கு அனுப்பியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் அயன் பெய்ஸ்லியோ அந்தத் தீர்மானம் ஆத்திரமூட்டுவதாக உள்ளது என்றும் அது சிறீலங்காவின் உள்நாட்டு அரசியலை வெற்றிகரமாக அனைத்துலக மயப்படுத்துவதின் தொடக்கம் என்றும் சாடுகிறார். போர்க்காலத்தில் அடிக்கடி சிறீலங்காவின் அழைப்பின் பேரில் சென்று வந்த அரசியல்வாதிகளில் அயன் பெய்ஸ்லி ஒருவர். அப்படிப்பட்ட ஒருவரோடு சம்பந்தர் மனம் திறந்து பேசுவார் என எதிர்பார்க்க முடியாது.

வட அயர்லாந்தில் சிறுபான்மை கத்தோலிக்கரும் பெரும்பான்மை புரட்ரெஸ்தானியரும் பிரிந்து நின்று உள்நாட்டு மோதலில் ஈடுபட்ட போது அயன் பெய்ஸ்லியும் அவரது சனநாயக அய்க்கிய கட்சி புறட்ரெஸ்தானிய ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளித்தன.

1921 இல் அயர்லாந்து சுதந்திரம் பெற்றபோது அல்ஸ்ரர் மாகாணத்தை சேர்ந்த ஒன்பது பிரதேசங்களில் ஆறு பிரதேசங்கள் அயர்லாந்து குடியரசில் இருந்து தவிர்த்து வைக்கப்பட்டன. இவை அய்க்கிய இராச்சியத்தின் பிரதேசமாகத் தொடர்ந்து இருந்து வந்தன. வட அயர்லாந்தில் புரட்ரெஸ்தானியர் பெரும்பான்மையராகவும் (62.2) கத்தோலிக்கர் சிறுபான்மையாகவும் (33.5) உள்ளனர். பெரும்பாலான புரட்ரெஸ்தானியர் பிரித்தானியா அரசால் வட அயர்லாந்தில் திட்டமிட்டு குடியேற்றப்பட்டவர்கள். தமிழீழத்தில் சிங்கள அரசுகள் நடத்திய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தோடு இதனை ஒப்பிடலாம்.

இலங்கையில் எப்படி தேசிய சிறுபான்மை இனம் பெரும்பான்மை சிங்கள இனத்தவர்களால் ஒடுக்கப்படுகிறார்களோ, அதே நிலைமைதான் வட அயர்லாந்திலும் உள்ளது. இந்த அடக்கு முறைக்ககு தலைமை தாங்குபவர் அயன் பெய்ஸ்லி ஆவர். சிங்களவர்களுக்கு சிங்கள மேலாண்மை மனோபாவம் இருப்பது போல இவருக்கும் புரட்ரெஸ்தான மனோபாவம் இருக்கிறது. அதன் காரணமாகவே அயன் பிய்ஸ்லி நாடாளுமன்றத்தில் பேசும் போது:

”ஒரு சமயம் ஒரு தமிழ்க் கனவானும் சிங்கள கனவானும் எனது வழிகாட்டிகளாக இருந்தார்கள். இவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டிருந்தவர்கள். எனது பயணம் முடிந்தபோது இந்த இருவரும் கண்ணீர் மல்க ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துத் தழுவிக் கொண்டார்கள். தாஙகள் இப்போது புதிய நாட்டில் புதிய சகோதரர்கள் எனச் சொன்னார்கள். எப்போதும் அய்க்கிய இராச்சியத்தில் நான் கேட்கும் பரப்புரைபற்றி அவர்களிடம் கேட்ட போது அதுபற்றி அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அப்படியான பரப்புரைக்கும் கள நிலை யதார்த்தற்கும் எந்தமாதிரியான சாயலும் இல்லை. வட அயர்லாந்தோடு ஒப்பிடும் போது சிறீலங்கா மோதலுக்குப் பிந்திய காலத்தில் அளப்பரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அதுதான் நான் களத்தில் கண்ட உண்மை. அதனை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். சிறீலங்காவின் கடந்த காலத்தை வைத்து அந்த நாட்டை மூச்சுத்திணற வைக்கக் கூடாது. மாறாக சிறீலங்கா ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி முன்னேற நாம் உதவ வேண்டும்.

அயன் பெய்ஸ்லி தான் யாழ்ப்பாணத்துக்குச் சென்றதாகவும் அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நாடாளுமன்றத்தில் பேசும்போது விரிவாகச் சொன்னார். சம்பந்தரைப் பற்றிச் சொன்னதை மட்டும் எடுத்துக் கொண்டு சிறீலங்கா பற்றியும் புலம்பெயர் தமிழர்கள் பற்றியும் சொன்னதை காகிதப் புலிகள் தங்களுக்கு வசதியாக இரட்டடிப்புச் செய்துவிட்டார்கள். அவரது பேச்சின் முக்கிய பகுதிகளின் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்துவிட்டு அயன் பிய்ஸ்லி காகிதப் புலிகள் சித்தரிப்பது போல் அவர் அரிசந்திரனா? அல்லது குறைந்த பட்சம் அரிச்சந்திரன் வீட்டுக்கு அயலில் குடியிருப்பவரா என்பதை அருள் கூர்ந்து சொல்லுங்கள்.


நான் சிறீலங்காவுக்கு பலதரம் போயிருக்கிறேன். தனிப்பட்ட முறையிலும் அங்கு வணிகத்தில் ஈடுபட்டுள்ள எனது தொகுதி வாக்காளர்களோடும் போயிருக்கிறேன். மேலும் பல கட்சிகள் கொண்ட நாடாளுமன்றக் குழுக்களோடும் போயிருக்கிறேன். எனது அனுபவம் சிறீலங்காவுக்கு எதிரான பரப்புரையாளர்கள் கூறுவதற்கு முற்றிலும் மாறானது. அங்குள்ள மக்கள் கனடாவிலும் பிரித்தானியாவிலும் புலம்பெயர் தமிழர்கள் எனத் தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்டுள்ள யதார்த்தம் புரியாதவர்கள் சொல்வதற்கு முற்றிலும் மாறான செய்தியை என்னிடம் சொன்னார்கள்.

நான் வடக்கில் உள்ள யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருக்கிறேன். யாழ்ப்பாணம் சிறீலங்காவுக்குள் பேரளவு தகராறுக்குட்பட்ட பகுதியாகும். நான் அங்கு புதிய வீட்டுக் குடியிருப்புகளைப் பார்த்தேன். அதில் தமிழர்கள் குடியிருக்கிறார்கள். நான் சில குடும்பங்களோடு தேநீர் அருந்தினேன். அவர்கள் மீன்பிடி மற்றும் பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் என்னிடம் தங்களது கடந்த காலத்தைப் பற்றிப் பேசவில்லை. அதற்கான வாய்ப்பிருந்தும் பேசவில்லை. உண்மையில் நான் கடந்த காலத்தைப் பற்றி பேசமுனைந்தபோது – அவர்கள் மத்தியில் நான் ஒருவனே நின்று கொண்டிருந்தேன் - அவர்கள் தங்கள் எதிர்காலம் பற்றி, அவர்களது பிள்ளைகள் பற்றி மற்றும் புதிய வீட்டுக் குடியிருப்புகள் பற்றிப் பேச விரும்பினார்கள். நாட்டைக் கட்டியெழுப்ப இந்த வீட்டுக் குடியிருப்புத் திட்டங்களுக்கு வேண்டிய நிதியை அய்ரோப்பிய ஒன்றியம் ஊடாக எனது நாடு கொடுத்து உதவியுள்ளது. அவர்கள் எதிர்காலத்துக்கு நகருவது பறறிப் பேச விரும்பினார்கள். நான் தமிழ் மற்றும் சிங்களக் குடும்பங்களை சந்தித்துள்ளேன். அவர்களது ஒட்டுமொத்த விருப்பம் என்னவென்றால் நாட்டின் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புத்தான். நாட்டைப் பிரிக்கிற நோக்கமல்ல. இந்தச் சமூகம் முன்னேற விரும்புகிறது. அவர்கள் கடந்த காலத்தில் நடந்து முடிந்தவற்றைப் பற்றிப் பன்னாட்டு சமூகம் பேசுவதை கேட்க விரும்பவில்லை. அவர்கள் பன்னாட்டு சமூகம் ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி நகர்வதற்கு உதவ வேண்டும் என விரும்புகிறார்கள்.

ஒரு சமயம் ஒரு தமிழ்க் கனவானும் சிங்களக் கனவானும் எனது வழிகாட்டிகளாக இருந்தார்கள். இவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டிருந்தவர்கள். எனது பயணம் முடிந்தபோது இந்த இருவரும் கண்ணீர் மல்க ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துத் தழுவிக் கொண்டார்கள். தாஙகள் இப்போது புதிய நாட்டில் புதிய சகோதரர்கள் எனச் சொன்னார்கள். எப்போதும் அய்க்கிய இராச்சியத்தில் நான் கேட்கும் பரப்புரைபற்றி அவர்களிடம் கேட்ட போது அதுபற்றி அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அப்படியான பரப்புரைக்கும் கள நிலை யதார்த்தற்கும் எந்தமாதிரியான சாயலும் இல்லை. வட அயர்லாந்தோடு ஒப்பிடும் போது சிறீலங்கா மோதலுக்குப் பிந்திய காலத்தில் அளப்பரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அதுதான் நான் களத்தில் கண்ட உண்மை. அதனை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். சிறீலங்காவின் கடந்த காலத்தை வைத்து அந்த நாட்டை மூச்சுத்திணற வைக்கக் கூடாது. மாறாக சிறீலங்கா ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி முன்னேற நாம் உதவ வேண்டும்.(http://www.asiantribune.com/news/2013/01/09/%E2%80%9Csri-lanka-has-made-more-gains-post-conflict-northern-ireland-we-will-give-our-exper)

இதுதான் புலி ஆதரவாளர்களால் அரிச்சந்திரன் என்று புகழப்படும் அயன் பெய்ஸ்லியின் நாடாளுமன்றப் பேச்சு. தீவிர காகிதப் புலி ஆதரவாளர்கள் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வசைபாடும் கூட்டம் அயன் பெய்ஸ்லி பேசிய பேச்சின் இந்தப் பகுதியை வசதியாக மறைத்துவிட்டார்கள். சம்பந்தர் மீது சேறு வாரிப் பூசுவதற்கு அது உதவாது என நினைத்துவிட்டார்கள்.

அயன் பெய்ஸ்லி பேசியதைப் படித்தால் சிறீலங்காவில் பாலும் தேனும் ஓடுகிறது, மானும் சிங்கமும் ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்கின்றன, எலியும் பூனையும் ஒளித்து விளையாடுகின்றன என்றுதான் நினைப்பார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சில தமிழ்க் குடும்பங்களோடு பேசிவிட்டு அதன் அடிப்படையில் சிறீலங்காவின் கள நிலைபற்றி முடிவுக்கு வருவது கடைந்தெடுத்த முட்டாள்த்தனம். அங்குள்ள கள நிலைமையை அறிய வேண்டும் என்றால் கிழமைக் கணக்கில் வன்னி, சம்பூர், மட்டக்களப்பு பிரதேசங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் கூட வடமராட்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் சொந்த வீடு வாசல்களுக்குப் போக முடியாமல் அல்லல்படுகின்றன. மயிலட்டி, மாதகல் போன்ற கிராமங்களை கடற்படை ஆக்கிரமித்துள்ளது. வன்னியில் 75,000 மக்கள் இன்னமும் தங்கள் சொந்தக் காணிகளில் குடியிருத்தப்படவில்லை. சம்பூரில் 4,000 ஏதிலிகள் தெருவோரங்களில் பிச்சைக்காரர்கள் போல் வாழ்கிறார்கள். காரணம் இராணுவம் அதியுயர் பாதுகாப்பு வலையம் என்ற திரைக்குப் பின்னால் அவர்களது காணிகளை ஆக்கிரமித்துள்ளனர்.

சிறீலங்கா இராணுவத்தில் 20 படைப்பிரிவுகள் இருக்கின்றன. இதில் 15 படைப்பிரிவுகள் வடக்கை ஆக்கிரமித்துள்ளன. இரண்டு படைப்பிரிவுகள் கிழக்கில் இருக்கின்றன. மூன்று எஞ்சிய பகுதிகளில் இருக்கின்றன. வடக்கில் 15 படைப்பிரிவுகள் இருந்தால் குறைந்தது 150,000 இராணுவத்தினர் வடமாகாணத்தில் நிலை கொண்டுள்ளனர் என்பது பொருளாகும். இது மிக மிகக் கூடுதலான எண்ணிக்கை கொண்ட இராணுவம் ஆகும். குறிப்பாக வடமாகாணத்தில் அண்ணளவாக 600,000 மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். அதாவது நான்கு குடிமக்களுக்கு ஓர் இராணுவம் என்ற விழுக்காட்டில் படையினர் நிலைகொண்டுள்ளனர். இராணுவம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையீடு செய்கின்றது. இராணுவத்தின் காட்டாச்சியே வடக்கில் நடைபெறுகிறது. சிவில் நிருவாகம் முடக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்கு தீபம் ஏற்றினால் அது பயங்கரவாதம் என இராணுவம் உரகச் சொல்கிறது.

யாழ்ப்பாணத்தில் 551 வீடுகளில் இராணுவம் இன்னமும் நிலைகொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் 308 முகாம்கள் உள்ளன. வடக்கில் 153 கிராம சேவையாளர் பிரிவுகளில் இராணுவ முகாம்கள் உள்ளன.

இரணைமடுவுக்கு மேற்கே, ஏ-9 சாலைக்கு கிழக்கே 4,600 ஹெக்டர் – ஏறத்தாழ 12,000 ஏக்கர் – நிலத்தில் அண்ணளவாக 10,000 வீடுகள் இராணுவத்தினருக்கு கட்டப்படுகின்றன. இது இராணுவம் முகாம்களுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற முறைமைக்கு மாறானது. பத்தாயிரம் வீடுகள் என்பது பாரிய வீடு கட்டும் திட்டம். இதில் குடியிருத்தப்படுகிறவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து வந்த பெரும்பான்மை இனத்தவராக இருக்கப் போகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து தங்கப் போகிறார்கள். அவர்கள் அங்கு நிரந்தரக் குடியிருப்பாளர்கள் ஆக மாறப் போகிறார்கள். அவர்கள் நிரந்தர வாக்காளர்களாக வரப்போகிறார்கள்.

இரணைமடுவில் 25 ஏக்கர் நிலத்தில் இராணுவம் மரக்கறி செய்கை செய்கிறது. தேராவிலில் 150 ஏக்கர் நிலத்தில் இராணுவம் பழத்தோட்டச் செய்கை செய்கிறது. வெள்ளாங்குளத்தில் 600 ஏக்கரில் இராணுவம் காட்டுமுந்திரிகை செய்துள்ளது. முக்கோம்புவில்100 ஏக்கர் நிலத்தில் தென்னம் செய்கையை இராணுவம் மேற்கொண்டுள்ளது. சுன்னாவிலில் 600 ஏக்கரில் இராணுவம் மரமுந்திரிகைச் செய்கையை முன்னெடுத்துள்ளது. இவை எல்லாம் வன்னியில் உள்ளன.

மேற்கூறியவற்றை எல்லாம் அயன் பிய்ஸ்லி கண்டு கொள்ளவில்லை. கண்டுகொண்டாலும் ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை. சிங்களவர்களிடம் எப்படியான மேலாண்மை மனோபாவம் நிலவுகிறதோ அதே மேலாண்மை மனோபாவம்தான் அயன் பிய்ஸ்லி இடமும் காணப்படுகிறது. தோலின் நிறத்தில்தான் வேற்றுமை.

அவசரத்தில் காகிதப் புலிகள் அயர்லாந்து குடியரசுக்கும் வட அயர்லாந்துக்கும் உள்ள வேற்றுமை தெரியாது இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புகிறார்கள். எனக்கு வந்த மின்னஞ்சலில் அயன் பிய்ஸ்லியை உச்சி மீது வைத்து மெச்சியிருக்கிறார்கள்.

“அயர்லாந்தும் விடுதலைக்காகப் போராடிய ஒரு தேசம், அதற்கு மேலாக சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களை அயர்லாந்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்து மரியாதை செலுத்தியது. இந் நிலையில் இத் தேசத்தில் இருந்து வந்த எம்.பி ஒருவரிடம், இரா.சம்பந்தன் அவர்கள் போராட்டத்தைப் பற்றி இவ்வளவு கேவலமாகப் பேசியுள்ளார்….”

இப்படியான ஞானசூனியங்கள், அறிவுக் கொழுந்துகள் இருக்கும் வரை தமிழினம் உய்ய வழியே இல்லை! அயர்லாந்து குடியரசின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் என்ன வேலை என்று கூட எண்ணிப் பார்க்கும் குறைந்த பட்ச அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

அயன் பிய்ஸ்லி வட அயர்லாந்தைச் சேர்ந்த North Antrim தொகுதியில் இருந்து Democratic Unionist Party (DUP) கட்சி சார்பில் போட்டியிட்டு பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்.

இப்போது சொல்லுங்கள் காகிதப் புலிகள் சொல்வது போல அயன் பய்ஸ்லி அரிச்சந்திரனா? அல்லது சிறீலங்கா அரசின் முகவரா?

நக்கீரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல