வியாழன், 10 அக்டோபர், 2013

தாலிபன்களால் தாக்கப்பட்ட கசப்பான அனுபவங்கள்...: விற்பனைக்கு வந்தது ‘நான் மலாலா’

தாலிபன்களால் சுடப்பட்டு போராடி உயிர் பிழைத்த சிறுமி மலாலாவின் சுயசரிதைப் புத்தகமான ´நான் மலாலா´ நேற்று விற்பனைக்கு வந்தது.

பாகிஸ்தான் சிறுமியான மலாலா யூசூப்சாய், பெண்கல்விக்காக தொடர்ந்து போராடி வருபவர். இதனால், தாலிபன்களின் கோபத்திற்கு ஆளாகி, தாக்குதலுக்கும் ஆளானார். தலையில் குண்டடி பட்டு உயிருக்கு போராடிய மலாலா, லண்டன் கொண்டு செல்லப்பட்டு அங்கு உயர்சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தார்.

தற்போது லண்டனில் தங்கியிருக்கும் மலாலா, தாலிபன்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் கல்வியை ஊக்குவிக்க வேண்டுமென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தாலிபன்களால் தான் தாக்கப் பட்ட சம்வத்தின் அடிப்படையில் ´நான் மலாலா' என்ற தனது சுயசரிதையை எழுதி வந்தார் மலாலா. இந்நூல் நேற்று விற்பனைக்கு வந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய் கொடுத்து இப்புத்தகத்தின் உரிமையைப் பெற்றுள்ளது.

யார் மலாலா....

நேற்று விற்பனைக்கு வந்த அப்புத்தகத்தில் தாலிபன்களால் தான் சுடப்பட்ட சம்பவத்தை விவரித்துள்ளார் மலாலா. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, `சம்பவத்தன்று நான் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு நபர் வாகனத்தை மறித்து, உங்களில் யார் மலாலா எனக் கேட்டார்.

யாரும் வாயைத் திறந்து பதில் சொல்லாத போதும், சில சிறுமிகள் மட்டும் என்னை தலையை திரும்பி பார்த்தார்கள். அத்தோடு, அந்த மாணவிகள் கூட்டத்திலேயே நான் மட்டும் தான் முகத்திற்கு முக்காடிடாமல் இருந்தேன்.

உடனடியாக தன் கையில் இருந்த பிஸ்டலை உயர்த்தினார் அந்த மனிதர். வண்டிகளில் இருந்த மாணவிகளில் சிலர் பயத்தில் கத்தினார்கள்.

நான் எனது அருகில் இருந்த தோழியின் கைகளைப் பிடித்து பிசைந்ததாக எனது தோழி பின்னர் தெரிவித்தார்.

மேலும், என்னை நோக்கி அந்த நபர் மூன்று முறை சுட்டதாகவும் எனது தோழிகள் தெரிவித்தனர். காதில் ரத்தம் வடிய நான் அருகில் இருந்த தோழி மீது சாய்ந்தேன்.

அடுத்து வந்த சில குண்டுகள் அருகில் இருந்த சிறுமிகள் மீது பட்டதாகவும், என்னைச் சுடும் போது துப்பாக்கி ஏந்தியவரின் கைகள் நடுக்கியதாகவும் தோழிகள் தெரிவித்தனர்' என விவரித்துள்ளார் மலாலா.

பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ள மலாலாவின் பெயர் உலகின் உயரிய பரிசாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள 'நான் மலாலா' என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் நேற்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. பாகிஸ்தானில் கூட இந்த புத்தகம் ரூ.595க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல