M.G.R. தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகி விட்ட ஆங்கில எழுத்துக்கள்.
எம்ஜிஆர் 100 | 1 - அண்ணா குறிப்பிட்ட 'கவிதை'!
ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்.
தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு. அவருக்கே அமைந்த வசீகரம். இந்த இரண்டும் கூட எல்லா நடிகர்களுக்கும் இருந்து விடலாம். ஆனால், மற்றவர்களுக்கு இல்லாத புகழும் பெருமையும் மக்கள் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஏன்? இவற்றை எல்லாம் தாண்டிய மனிதாபிமானம் என்பதே பதிலாக இருக்கும். இந்த குணத்தால் மக்களை அவர் நேசித்தார். அதனால்தான் மக்கள் அவரை நேசித்தனர். அதனால்தான், இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பற்றினார்.
1917-ம் ஆண்டு ஜனவரி 17ல் பிறந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியுள்ளது. இலங்கையில் கண்டியில் பிறந்து, தந்தையை இழந்து, தாய் மற்றும் தமையனுடன் தமிழகம் வந்து நாடகத்தில் சேர்ந்து சினிமாவில் சிறிய வேடங்களில் தலைகாட்டி, கதாநாயகனாக உயர்ந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, கட்சியின் தலைவராகி, அவர் தமிழக முதல்வரானது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால், எம்.ஜி.ஆரின் இந்த நெடிய சாதனை வாழ்வில் ஊடாடி இருக்கும் சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது அருங்குணங்களை, திறமைகளை, சாதுர்யங்களை, மனிதாபிமானத்தை, பண்பு நலன்களை விளக்கும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். 100 என்ற பெயரில் 100 முத்துக்களை தொகுத்து வாசகர்களுக்கு அளிக்கிறோம்.
‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? என்று பலர் ஆவலாக காத்திருந் தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’
எம்.ஜி.ஆரைப் பாராட்டி அறிஞர் அண்ணா கூறியதுதான் இது. அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’நாடகத்தில் நடிப்பதற்காக நடிகர் டி.வி.நாராயணசாமியால் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தப்பட்டார். சினிமா வில் துணை வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முதலில் ஒப்பந்தமான படம் ‘சாயா'. படத்தின் கதாநாயகி டி.வி. குமுதினி. அப்போதே அவர் புகழ் பெற்ற நடிகை. புதுமுக நடிகரான எம்.ஜி.ஆருடன் நடிப்பதற்கு குமுதினியின் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற சில காரணங்களால் ‘சாயா' படம் நின்று போனது.
பின்னர், தீவிர முயற்சிக்குப் பிறகு வாராது வந்த மாமணிபோல, ஜூபிடர் நிறுவனத்தின் ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்க எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடிக்க வேண்டி இருந்ததால் நாடகத்தில் நடிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால், அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியாமல் போனது. என்றாலும் அண்ணாவோடு எம்.ஜி.ஆருக்கு பழக்கம் தொடர்ந்தது. அவரது பணத்தோட்டம், சந்திரோதயம் புத்தகங்களைப் படித்து அண்ணாவாலும் அவரது கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
திமுக கொடியை முதன்முதலாக திரையில் காட்டியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரே தயாரித்து இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்' படத்தில் ஆணும் பெண்ணும் இருவண்ணக் கொடியை ஏந்தியபடி திரும்புவது போன்ற எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் இலச்சினை (லோகோ) படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் காட்டப் பட்டது. எம்.ஜி.ஆரின் படங்களில் அண்ணாவைப் பற்றியும் திமுக கொள்கைகளைப் பற்றிய வசனங் களும் பாடல்களும் கட்டாயம் இடம்பெற்றன.
அண்ணா தமிழக முதல்வரானதும் சென்னையில் 1968-ம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது, சென்னையில் மையப் பகுதியான அண்ணா சாலையில் (அப்போது மவுண்ட் ரோடு) ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அலுவலகம் எதிரே கையை உயர்த்தியபடி கம்பீரமாக நிற்கும் அண்ணாவின் சிலையை தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். நிறுவினார். சர்.ஏ.ராமசாமி முதலியார் சிலையை திறந்து வைத்தார்.
உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்.
பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,
‘அறிந்ததனை அறிந்தோர்க்கு
அறிவிக்கும் போதினிலே
அறிந்ததுதான் என்றாலும்
எத்துணை அழகம்மா? என்று
அறிந்தோரையும் வியக்க வைக்கும்
அருங்கலையே கவிதையாகும்’
... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று.
தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா.
மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா!
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
‘நம்நாடு’ படத்தில் ... ‘வாங்கய்யா.... வாத்தியாரய்யா....’ பாடல் காட்சி.
எம்ஜிஆர் 100 | 2 - எம்.ஜி.ஆரின் அக்கறை
M.G.R. படங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு, அவர் தனது திரைப்படங்களில் பாடிய பாடல்கள், பேசிய வசனங்கள் பின்னாட்களில் அப்படியே நடந்தது வரலாறு. அதற்கு ஓர் உதாரணம்தான் ‘திருவளர்ச் செல்வியோ... நான் தேடிய தலைவியோ...’ என்று ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் கதாநாயகி ஜெயலலிதாவைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடிய பாடல்.
ஜெயலலிதா அரசியலுக்கு வந்து சிறந்து விளங்குவார் என்பதை முதலில் கணித்ததும் எம்.ஜி.ஆர்தான். ரேகை சாஸ்திரப்படி அவருக்கு கொஞ்சம் கைரேகை பார்த்து பலன் சொல்லத் தெரியும். இதே ‘ராமன் தேடிய சீதை’ படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு நாள் ஜெயலலிதாவின் கைரேகையைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர், ‘‘அம்மு (ஜெயலலிதா) நீ அரசியலுக்கு வருவாய்’’ என்று கூறினார்.
அப்போது ஜெயலலிதா அதை மறுத்தார். ‘‘நானாவது அரசியலுக்கு வரு வதாவது? அதற்கு சான்ஸே இல்லை’’ என்றார். எம்.ஜி.ஆர். விடாமல், ‘‘எழுதி வைத்துக்கொள் அம்மு. நான் சொல்வது நிச்சயம் நடக்கும்’’ என்றார். என்ன நடந்தது என்பதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே.
எம்.ஜி.ஆர். நடித்த ‘பாக்தாத் திருடன்’ படத்தில் பாலையாவின் ஜோடியாக ஜெயலலிதாவின் தாயார் சந்தியா நடித்திருப்பார். படப்பிடிப்பைக் காண 11 வயது சிறுமியான ஜெயலலிதாவும் வந்திருந்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆரை முதல்முறையாக பார்த் தார். ஜெயலலிதாவின் துறுதுறுப்பும் சுட்டித்தனமும் எம்.ஜி.ஆரை கவர்ந்து விட்டது. அடுத்த சில ஆண்டுகளில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிப்போம் என்று ஜெயலலிதாவுக்கு அப்போது தெரியாது. எம்.ஜி.ஆருக்கே அது தெரியாது. பின்னர், இந்த ஜோடி எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியிலும் திரை யுலகிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
‘அம்மா என்றால் அன்பு... ’ பாடல் ஒலிப்பதிவில் கே.வி. மகாதேவன், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.
சத்யா மூவிஸ் பேனரில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்து எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா, வாணி நடித்த திரைப்படம் ‘கண்ணன் என் காதலன்’. படத்தில் ஜெயலலிதா கால் ஊனமுற்றவரைப் போல நடிப்பார். ஒரு நாள் காலை படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மதியம் எம்.ஜி.ஆர். புறப்படத் தயாரானார். மதியம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. காரில் ஏறும்போது இயக்குநரிடம் ‘‘மதியம் என்ன காட்சி எடுக்கப் போகிறீர்கள்?’’ என்று கேட்டார்.
‘‘சக்கர நாற்காலியில் இருந்து மாடிப் படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி...‘‘இயக்குநரிடம் இருந்து பதில் வந்ததும் காரில் ஏறப்போன எம்.ஜி.ஆர். இறங்கிவிட்டார். ‘‘அது ரிஸ்க்கான காட்சி. நானும் உடன் இருக்கிறேன். அந்தப் பெண் (ஜெயலலிதா) விழுந்து விட்டால் என்ன ஆவது?’’ என்று கூறி வந்துவிட்டார்.
படியில் உருள்வது டூப்தான் என்றாலும் படியின் விளிம்பு வரை சக்கர நாற்காலியில் ஜெயலலிதா வரவேண்டும். சில அங்குலங்கள் கூடுதலாக நாற்காலி நகர்ந்தாலும் ஜெயலலிதா விழுந்துவிடுவார். எனவே, முன்னெச்சரிக்கையாக நாற்காலி சரியான தூரத்துக்கு மேல் நகர முடியாத படி நாற்காலியின் பின்னே கயிறு கொண்டு கட்டச் செய்தார் எம்.ஜி.ஆர்.
ஒத்திகையின்போது அந்த நாற்காலியில் எம்.ஜி.ஆர். தானே அமர்ந்து படியின் விளிம்பு வரை நகர்ந்து பார்த்து, அதற்குமேல் நாற்காலி உருண்டுவிடாமல் பின்புறம் கயிறு இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதா என்று ஒருமுறைக்கு 10 முறை உறுதி செய்த பின்னர்தான் ஜெயலலிதா நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அந்த அளவு உடன் நடிப்பவர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.
ஜெயலலிதா இனிமையாகப் பாடக் கூடியவர். அதை அறிந்து ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘அம்மா என்றால் அன்பு...’ பாடலை இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இசையில் ஜெயலலிதாவைப் பாடச் செய்தவர்தான் எம்.ஜி.ஆர்தான்.
1971-ம் ஆண்டு ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது. திரையுலகிலும் அரசியல் உலகிலும் யாரும் தொட முடியாத உச்சத்துக்கு எம்.ஜி.ஆர். சென்றதன் காரணம் என்ன? ‘பாரத்’ விருது பெற்றதற்காக நடிகர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் அதற்கான காரணத்தை ஜெயலலிதா தெளிவாக விளக்கினார். அவரது பேச்சு:
‘‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ‘பாரத்’ விருது பெற்றதில் ஆச்சரியம் இல்லை. அந்த விருதை அவர் பெறாவிட் டால்தான் ஆச்சரியம். தனக்கென்று அமைத்துக் கொண்ட கொள்கைகளை எம்.ஜி.ஆர். யாருக்காகவும் விட்டுக் கொடுத்தது இல்லை. அந்த பிடிவாத குணம்தான் அவரை சிறந்த நடிகராக்கி உள்ளது.
மக்களிடம் எம்.ஜி.ஆர். இவ்வளவு புகழடைந்திருப்பதற்கு என்ன காரணம்? ‘மக்களிடம் லட்சியத்தின் காரணமாக எவர் பெருமையடைகிறாரோ அவர்தான் சிறந்த கலைஞராக இருக்க முடியும்’ என்று ரஷ்ய எழுத்தாளர் மாக்காமோன் கூறியுள்ளார். அந்தப் பெருமைக்கு பாத்திரமாக எம்.ஜி.ஆர். இருக்கிறார். சிறந்த அரசியல்வாதியாகவும் லட்சியத் தில் தூய்மை உள்ளவராகவும் இருப்பதால்தான் இவ்வளவு பெரு மையும் எம்.ஜி.ஆருக்கு கிடைத் திருக்கிறது.’’
ஜெயலலிதாவைப் பற்றி எம்.ஜி.ஆர். கணித்தது சரி. எம்.ஜி.ஆர். பற்றி ஜெயலலிதா கூறியிருப்பது மிகச் சரி.
எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ சூப்பர் ஹிட். 2014-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறை யில் வெளியான அந்தப் படம் சென்னையில் வெள்ளிவிழாவை கடந்து 190 நாட்கள் ஓடி மறுவெளியீட்டில் வெள்ளி விழா கண்ட திரைப்படம் என்ற சாதனை படைத்தது. வெள்ளிவிழாவை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் ‘‘எனது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட படம்’’ என்று குறிப்பிட்டார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெயலலிதா. மொத்தம் 28 படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
தொடரும்..







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக