திங்கள், 3 ஏப்ரல், 2017

இந்திய மதமும் சட்டமும்: 3 (தத்தெடுப்பு, வளர்ப்பு மற்றும் பராமரிப்பு)

இந்து தத்தெடுப்பைப் பொறுத்தவரை, இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்1956, இயற்றப்படும் முன் தொகுக்கப்படாத பழைய சட்டமே இருந்தது. இது இந்துக்களுக்கானது.



ஆனால், இந்த சட்டம் வந்த பின் இந்துக்களுக்கான தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பில் வேறு சில மாற்றங்கள் வந்தன.யார் தத்தெடுக்கலாம், தத்து கொடுக்கலாம் என்பது குறித்த வரைமுறைகள் மாறின. இச்சட்டம் வருவதற்கு முன்பு ஆண்கள் மட்டுமே தத்தெடுக்கலாம்.

அதுவும் ஆண் குழந்தையை மட்டுமே தத்தெடுக்கலாம். கணவன் தத்தெடுத்து குழந்தையை மனைவியே வளர்த்தாலும், அதற்கு மனைவியின் அனுமதி தேவையில்லை. ஆனால் இவையெல்லாம் இந்த சட்டத்திற்குப் பின் மாறுதல் கண்டன.சட்டப்பூர்வ தத்தெடுப்பிற்கு, ஒரு சட்டப்பூர்வ ஒப்பந்தத்திற்குத் தேவையானவைகளே அதிகம் தேவையாக இருக்கிறது. புத்தித் தெளிவோடு இருக்கின்ற உரிமை வயது வந்த எந்த ஒரு இந்து ஆண் ஒரு மகனையோ, மகளையோ தத்தெடுக்கலாம். மனைவி இருந்தால் அவள் ஒப்புதலோடு மட்டுமே தத்தெடுக்க முடியும்.

தத்தெடுப்பது பெண் எனில், இதே, பழைய சட்டத்தில் ஒரு மனைவி தன் கணவனுக்காக தத்தெடுக்கலாம், ஆனால் புதிய சட்டத்தின்படி தனக்காகவும் தத்தெடுத்துக் கொள்ளலாம்.அதே போல தத்துக் கொடுக்க, கொடுக்கப்படும்
குழந்தையின் தாய், தந்தை தவிர காப்பாளராக இருந்தால் மட்டுமே தத்துக் கொடுக்க இயலும்.குழந்தையின் தந்தை, தன் மனைவியின் ஒப்புதலோடு மட்டுமே தத்துக் கொடுக்கலாம். அதே போல, மனைவி தன் கணவனின் ஒப்புதலோடு மட்டுமே தத்துக் கொடுக்கலாம். அல்லது, துணை, உலகப்பற்றைத் துறந்திருந்தாலோ, பித்துநிலையினன்/ள் என நீதிமன்றம் அறிவித்திருந்தாலோ, அனுமதி இன்றி தத்துக் கொடுக்கலாம்.

தத்தெடுக்கும் சடங்கு தேவையில்லை.ஒரு இந்து தத்தெடுக்கப்பட வேண்டும் எனில், அவர் ஏற்கனவே தத்தெடுக்கப்பட்டிருக்கக்கூடாது, திருமணம் ஆகி இருக்கக்கூடாது, 15 வயது பூர்த்தியாகி இருக்கக்கூடாது.தத்து எடுக்கும், தத்து எடுக்கப்படும் குழந்தை இருவரில், தந்தை - மகள், தாய்-மகனுக்கிடையே 21 வயது வித்தியாசம் இருக்க வேண்டும்.

ஆனால், தத்தெடுக்கப்பட்ட நபர் தான் பிறந்த வீட்டில், எந்த உறவுகளை மணந்து கொள்ள முடியாதோ அதே நபர்களை தத்துப் போன பின்பும் மணக்க இயலாது. தத்துக்கு முன் அந்த நபருக்கு வந்த சொத்துக்கள் அனைத்தும் தத்துக்குப் பின்பும் அந்த நபருக்கே சொந்தம். அந்த சொத்தோடு கூடவே கடமைகள் ஏதுக் கூறப்பட்டிருப்பினும் அந்தக் கடமைகளையும் அவர் செய்து முடித்தேயாக வேண்டும்.

ஆக, குழந்தை தத்தெடுப்பு என்பது இச்சட்டத்திற்குப் பிறகு இந்துக்களைப் பொறுத்தவரை மதச் சடங்கு என்பதை விட, அது ஒரு ஒப்பந்தமாகவே இருக்கிறது.இந்து மதத்தில் தத்தெடுப்பு என்பது 'கொள்ளி போடவும் சொத்தைப் பேணவும் மகனால் மட்டுமே முடியும். மகனால் கொள்ளி போடப்படுவதே சரியானது எனும் நம்பிக்கையின் பால் ஏற்பட்ட ஒன்று. எனவே, கொள்ளி போட ஆண் பிள்ளை இல்லாதவர்கள் ஆண்பிள்ளையைத் தத்தெடுப்பது என ஆரம்பிக்கப்பட்டடு பின்னாளில் இதற்கென சட்டம் வந்ததும் கொஞ்சம் மாற்றம் கண்டது.

அதே போல, தனித்து விடப்பட்ட குழந்தைகளை, அதன் காப்பாளரின் மூலம் தத்தெடுப்பது பிரியத்தில் செய்யப்படுவதேயன்றி, மதக் கடமையில்லை.ஆனால், இஸ்லாத்தில் தத்தெடுப்பதற்கு இது போன்ற மத நம்பிக்கைக் காரணங்கள் இல்லாததாலும், அந்த மதமே தாய், தந்தை, பிள்ளைகள் தவிரவும் உள்ள ஏனைய உறவினர்களையும், ஏழைகளையும் காப்பாற்றுதல் என்பது ஒவ்வொரு இஸ்லாமியனுக்குமான மதக் கடமையாக சொல்லப்பட்டிருப்பதால் அங்கே தத்தெடுப்பது என்பது இந்து மதத்தைப் போலில்லை.ஒவ்வொரு இஸ்லாமியரும், தடுக்கப்பட்ட உறவு(திருமணத்திற்கு) முறையில் உள்ள ஏனைய உறவினர்களைப் பராமரிக்க வேண்டும் என அந்த மதச் சட்டம் கூறுகிறது.

ஆனால், அந்த உறவினர் இறந்து போனால் அவர்களிடமிருந்து இறங்குரிமையில் கிடைக்கவுள்ள சொத்தின் பங்கிற்கு/விகிதத்திற்கு பராமரித்தால் போதுமானது.வசதியுள்ள ஒவ்வொரு இஸ்லாமியனும், உறவல்லாத மற்ற ஏழைகளை தனது வருமானத்திலிருந்து இரண்டரை சதவீதத் தொகையில் பராமரிக்கக்கடமைப் பட்டவனாகிறான்.இங்கே சமூகக்கடமையை, மதம் வலியுறுத்துகிறது.ஆனால், இஸ்லாம், கிறித்தவ, பார்ஸி இனத்தார்களின் தனிச் சட்டம் தத்தெடுப்பை அங்கீகரிக்கவில்லை.

ஆனால், தத்தெடுக்க வேண்டும் எனில் அவர்கள் Guardian and Wards Act 1890 ன் கீழ்தான் அதைச் செய்ய வேண்டும் அல்லது Juvenile Justice Act of 2000 கீழ் தான் தத்தெடுக்க முடியும்.எனினும் இஸ்லாத்தை பொறுத்தவரையில், அது இந்துக்களின் தத்தெடுப்பு போன்றது அல்ல. தந்தை எவர் எனத் தெரியாத குழந்தைகளை நீதிமன்ற உத்தரவு பெற்ற பின் பராமரிக்கலாம் அவ்வளவே.

Ms. Shabnam Hashmi வழக்கில், All India Muslim Personal Law Board ஒருவரின் குழந்தை ஒரு போதும் அடுத்தவரின் குழந்தை ஆகாது. பராமரிப்பு வேண்டுமானால் அடுத்தவர் செய்யலாம் என வாதிட்டது. ஆனால், இந்த வழக்கின் பின் தான், எந்த மதத்தவரும், Juvenile Justice Act of 2000 ன் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் எனும் நிலை வந்தது. [அதே போல ஐக்கிய நாடுகள் சபை kafala எனும் sponsorship system ஐ ஏற்கிறது. (இது முழு தத்தெடுப்பு அல்ல.) ]மொஹம்மத் அலஹாபாத் கான் எதிர் மொஹம்மத் இஸ்மாயில் கான் எனும் வழக்கில் தத்தெடுப்பு இஸ்லாத்தில் ஏற்கப்படவில்லை.

அதற்கு ஒப்பான எதுவும் இஸ்லாத்தில் கிடையாது எனச் சொல்லப்பட்டது.
கிறித்தவ சட்டமும் தத்தெடுப்பைப் பற்றிப் பேசவில்லை. கிறித்தவர் தத்தெடுக்க வேண்டும் எனில், Guardian and Wards Act 1890ன் கீழ் தான் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவு பெற்றபின், குழந்தையைப் பராமரிக்கலாம். இஸ்லாமிய, கிறித்தவ, பார்ஸி இனங்களில் இது மாதிரியான பராமரிப்பு என்பது குழந்தை மேஜர் ஆகும் வரை மட்டுமே.

அதன் பின் அந்தக் குழந்தை அதிலிருந்து விடுபட்டுவிடலாம். (Foster care)இந்திய கிறித்தவர்கள் இந்திய இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்கள். எனவே, சில பழக்கங்கள், நம்பிக்கைகள் இந்துக்களுடையதாக இருக்கின்றன. கேரள கத்தோலிக்க கிறித்தவர்களிடையே ஒரு தத்தெடுப்பு பழக்கம் இருந்திருக்கிறது.

அதாவது, பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள ஒருவர், தன் மகள்களை மணமுடித்துக் கொடுக்கையில், தன் கடைசி மகளின் கணவனை தன் வாரிசாக ஏற்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இந்த கடைசி மருமகன் தன் மாமனாரின் வீட்டிலேயே வாழ்ந்துவருவார். குடும்பப் பெயராகத் தன் மாமனாரின் குடும்பப் பெயரையே ஏற்கிறார்.

இந்த வித்தியாசமான பழக்கம் கேரளாவின் பல இடங்களில் முன்பு இருந்திருக்கிறது.கேரள சிரியன் கிறித்தவர்களில் முன்பு வேறொரு பழக்கமும் இருந்திருக்கிறது. குழந்தை இல்லாதவர்கள் சர்ச் பிஷப்பிடம் எவரை தத்தெடுக்க விரும்புகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு, அத சர்ச் ஏற்றால், பிஷப் அதற்கான சர்டிஃபிகேட்டை அளிப்பதன் மூலம் தத்தெடுப்பு நடந்திருக்கிறது.

ஆனால் பொதுவாக கிறித்தவ, பார்ஸி தனிச் சட்டம், தத்தெடுப்பை அங்கீகரிக்கவில்லை. ஆனால் விரும்புபவர்கள் Guardian and Wards Act 1890ன் கீழ் அல்லது Juvenile Justice Act of 2000 அதைச் செய்து கொள்ளலாம் என சட்டம் அங்கிகரிக்கிறது.ஆக தத்தெடுப்பைப் பொறுத்தவரை, இந்து மதத்தில் இருக்கும் நம்பிக்கை, பிரியம், காரணமாகவும் தன் விருப்பத்தின் பேரில் செய்யப்படுகிறது.

மதம் அதற்கு இடமளிக்கிறது. சட்டமும் அதை அங்கீகரிக்கிறது.இஸ்லாமிய, கிறித்தவ, பார்ஸிகளுக்கான தனிச்சட்டங்களில் தத்தெடுப்பு அங்கிகாரம் இல்லை. ஆனாலும், தத்தெடுப்பு குறித்த இந்திய சட்டத்தின் கீழ் நீதிமன்ற அங்கீகாரம் பெற்று, ஒரு குழந்தைப் பராமரிப்பைச் செய்யலாம். ஆனால் அது குழந்தை மேஜர் ஆகும்வரையே.எல்லாருக்கும் பொதுவான ஒரு தத்தெடுப்புச் சட்டத்தை உருவாக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஒவ்வொரு மதத்தின் பார்வையும் தத்தெடுப்பு எனும் விஷயத்தில் வெவ்வேறு மாதிரி இருக்கிறது என்பதை நாம் இங்கு உணரலாம்.

- ஹன்ஸா

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல