திங்கள், 3 ஏப்ரல், 2017

ஜெர்மனி விமான நிலையத்தில் இந்தியப் பெண்ணுக்கு அவமரியாதை: அறிக்கை கோரினார் சுஷ்மா

 image source: google
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை யின்போது இந்தியப் பெண் ஒருவரை ஆடைகளை களையச் செய்யுமாறு வற்புறுத்தி அவமானப்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிக்கை கோரியுள்ளார்.



ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரக அதிகார் ரவீஷ் குமாருக்கு அனுப்பியுள்ள ட்வீட்டில், பிராங்க்பர்ட் சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியை இணைத்து இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கோரியுள்ளார்.

நடந்தது என்ன?

ஸ்ருதி பஸப்பா, பெங்களூருவில் இருந்து ஐஸ்லாந்து நாட்டுக்கு தனது கணவர் மற்றும் 4 வயது மகளுடன் சென்றிருக்கிறார். ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் வழக்கமான பாதுகாப்பு பரிசோதனைகளின்போது அவருக்கு ஃபுல் பாடி ஸ்கேன் என அழைக்கப்படும் முழு உடல் ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அதன்பின்னர், சந்தேகம் இருப்பதாகக் கூறி ஸ்ருதியை தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்ற விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் அவரை ஆடைகளை களையுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

முழு உடல் ஸ்கேன் பரிசோதனையில் சந்தேகத்துக்கு இடமாக ஏதுமில்லையே என ஸ்ருதி கூறியும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடைகளை களைந்து சோதனை நடத்த வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். அப்போது, ஸ்ருதி நீங்கள் வேண்டுமானாலும் என் உடலில் ஏதாவது மறைத்து வைத்திருக்கேனா எனத் தடவிப் பார்த்து தேடிக் கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார். ஆனால், அவர்கள் ஏற்கவில்லை.

எனக்கு வயிற்றுப்பகுதியில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அதனால் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் அதற்கான மருத்துவச் சான்றிதழை தருவதாகவும் கூறியிருக்கிறார். அதையும் அவர்கள் ஏற்கவில்லை.

இந்த வாக்குவாதங்கள் அத்தனையும் அவரது 4 வயது மகள் கண் முன்னாலேயே நடந்துள்ளது.

பாதுகாவலர்கள் மிகவும் கெடுபிடி காட்டவே, ஸ்ருதி தனது கணவரை அழைத்துவருமாறு கூறியிருக்கிறார். அவரது கணவர் ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவரைப் பார்த்தவுடன் பாதுகாப்பு அதிகாரிகள் சற்று கெடுபிடிகளை தளர்த்தியுள்ளனர்.

இவை அனைத்தையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஸ்ருதி பஸவப்பா, "என்னிடம் அவ்வளவு கெடுபிடி காட்டிவிட்டு, எனது கணவர் ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததுமே ஆடைகளை களையச் சொல்லாமல் உடலில் தடவிப் பார்த்து சோதனையை முடித்துக் கொண்டனர். இது இனவெறி ரீதியான தாக்குதலே" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு தொடர்பாக வெளியான செய்திகளை சுட்டிக் காட்டிய சுஷ்மா விரிவான விளக்கமளிக்குமாறு ஜெர்மனிக்கான இந்திய தூதரக அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல