திங்கள், 3 ஏப்ரல், 2017

இந்திய மதமும் சட்டமும்: 8

மனித சட்டங்களை இன/மத சட்டங்களாகவும், தலச் சட்டங்களாகவும் பிரிக்கலாம்.. முன்பு இன முறைச்சட்டங்களே அதாவது மதச்சட்டங்களே இருந்தன. பின் வந்த பாகுபாடுகள் தலம் சார்ந்தவையாக ஆகிவிட்டபடியால், இந்த சட்டங்களும் தலத்திற்கேற்றவாறு மாற வேண்டி இருந்தது. இந்த மத/தல சட்டங்களுக்கு இடையே ஏற்படும் சலசலப்புகளே இப்போது தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.



இது வரை வெவ்வேறு மதங்களின் சட்டங்கள் மனித சமூக செயல்பாடுகளில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்பது குறித்துப் பார்த்து வந்தோம். சென்ற வாரம் இந்து மதச் சட்டங்கள், இந்திய இந்து சட்டங்கள் தோன்றுவதற்கு முன் எப்படி இருந்தன; இந்திய சட்டங்களுக்கு ஏற்ப தன்னை எப்படி மாற்றிக் கொண்டிருக்கின்றன, எந்த இடங்களில் எல்லாம் இந்து மத சட்டத்தில் இந்திய சட்டம் தலையிட முடியாது, எந்த இடங்களில் எல்லாம் இந்திய சட்டம் தலையிடலாம் என பல விஷயங்கள் குறித்துப் பேசி வருகிறோம்.

அதே போல, இந்து மதச்சட்டத்தை விட, அதன் பழக்க வழக்கங்கள் எந்த அளவுக்கு மேலோங்கி நிற்கிறது என்பது குறித்தும் பேசி வருகிறோம்.

அனைவருக்கும் ஒத்த சட்டம் செல்லுமா?:

இந்த வாரம், இந்து என்பவன் யார்? இந்துவிலிருந்து வேறு மதத்திற்கு மாறியவர் சட்ட நிலை என்ன? வேறு மதத்திலிருந்து இந்து மதத்தைத் தழுவியவர் நிலை என்ன? இந்துவிலிருந்து வேறு மதத்தை தழுவி பின் தாய் மதம் திரும்பியவர் நிலை என்ன? அனைவருக்கும் ஒத்த சட்டம் செல்லுமா? என்பதை எல்லாம் குறித்துப் பார்க்கவிருக்கிறோம்.

இந்துக்களுக்கான இந்தியச் சட்டங்கள் கூட இந்து பழக்க வழக்கங்களை அங்கீகரிக்கின்றன. ஆனால், அந்த பழக்க வழக்கமானது காலம் காலமாக அந்த இந்து குழுவில் புழக்கத்தில் இருந்தது என்பதை பிரச்சனைக்குறியவரே நிருபிக்க வேண்டும்.

பழக்க வழக்மே முக்கியம்:

ஒரு இந்து குடும்பம் இந்தியாவின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு இடம் பெயர்ந்தால், தன்னோடு தன்னுடைய பழக்க வழக்கங்களையும் கொண்டு செல்கிறது. ஆனால் அந்த பழக்க வழக்கமானது தான் புறப்பட்ட இடத்தில் இருந்தது எனவும். அதை புலம் பெயர்ந்த இடத்திற்கு தாம் கொண்டு சென்று இடைவெளி இன்றி அந்த வழக்கத்தைக் கடைபிடித்ததையும் அந்த பிரச்னைக்கு உரியவரே நிருபிக்க வேண்டும் என அப்துல்லா எதிர் ஹலிமாபாய் (1916, 18 Bom. L.R. 635) எனும் வழக்கில் ப்ரிவ்யு கவுன்சில் நீதிமன்றம் கருத்துரைத்தது.

ஆண், பெண் இருவருமே இந்துக்களாக இருக்கும்பட்சத்தில் பிறக்கும் குழந்தை இந்துவே. அந்தக் குழந்தை முறை, மணபிறப்பாக இருந்தாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி.

ஆனால், அவர்கள் இருவரில் ஒருவர் இந்துவாகவும் மற்றவர் வேறொரு மதமாகவும் இருந்திருந்தால், பிறந்த குழந்தை இந்துவாகவே வளர்க்கப்பட்டது என்பதை ”குழந்தை இந்து” எனச் சொல்பவர் எவரோ அவரே அதை நிரூபிக்க வேண்டும். அப்படி இந்துவாக வளர்க்கப்பட்டவரே இந்துவாக அங்கீகரிக்கப்படுவார்.

அதே போல தான் இந்துப் பழக்கங்களை ஏற்றுக் கொண்டதை தன் தொடர் நடவடிக்கைகளாலேயே ஒருவர் மெய்ப்பிக்க முடியும்.

ஜேசுதாஸ் வழக்கு:

இதற்கு எடுத்துக் காட்டாக, பாடகர் ஜேசுதாஸ் வழக்கை (1975) எடுத்துக் கொள்ளலாம். அவர் கத்தோலிக்க கிறித்தவர். ஆனால் அவர் சபரிமலை அய்யப்பன் பற்றிய பக்திப் பாடல்கள் பாடுவதை வழக்கமாகக் கொண்டவர். தான் இந்துமத பழக்கங்களை ஏற்றுக் கொண்டதாக விளம்புகை ஒன்றைச் செய்தார். அந்த விளம்புகையே அவர் இந்து என்பதற்கான சான்றாகிவிடுகிறது என கேரளா உயர்நீதிமன்றம் அந்த வழக்கில் தீர்ப்பளித்தது.

வழக்கொன்றில் கைவிடப்பட்ட ஒரு இந்துப் பெண்ணுடன் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவர் ஒருவர் குடும்பம் நடத்தியதில், இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. இவர்கள் இந்து வழக்கப்படியே அவர்களின் தாயாரால் வளர்க்கப்பட்டனர். அந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்தபடியால், மற்றொரு குழந்தைக்கு எஞ்சுனர் உரிமைப்படி இறந்த குழந்தையின் சொத்து போகுமா எனும் கேள்வி எழுந்தது. அதாவது அந்தக் குழந்தைகளுக்கு எந்த மதத்தின் சட்டங்கள் பொருந்தும்? எனும் கேள்வி எழுந்தது. இந்த வழக்கில் குழந்தைகள் இருவரும் முறையற்ற மணபிறப்புக் குழந்தைகள் ஆயினும், தந்தையானவர் கிறித்தவர் ஆயினும், குழந்தைகள் இந்து முறைப்படியே வளர்க்கப்பட்டமையால், அவர்களுக்கு இந்துச் சட்டமே பொருந்தும் என முடிவானது.

ஆக, ஒருவர் இந்து என்பது அவர் எந்த வழக்கப்படி வளர்க்கபடுகிறார், அல்லது எந்த மத சட்டத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது அவரின் நடத்தைகளால் மட்டுமே மெய்ப்பிக்க முடியும்.

கிளை மதங்கள்:

இந்துக்கள் அல்லாத வேறு சிலருக்கும் இந்துச் சட்டமே பொருந்தும். அதாவது இந்து மதத்தில் இருந்து தோன்றிய மதத்தலைவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சில மதங்களான, பெளத்த மதம், ஜைன மதம் சீக்கிய மதம் ஆகியவை இந்து மதத்தின் கிளைப் பிரிவுகளே ஆகும். இம்மதங்கள் இந்து மதத்தில் தோன்றியவர்களால் உருவாக்கப்பட்டவை எனும் காரணம் தவிர, இம்மதங்கள் இந்து மதத்தின் கிளை மதங்களாகப் பார்க்கப்பட இன்னொரு காரணமும் உண்டு.

இந்தியாவில் கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் ஆங்கிலேய அரசு எடுத்த கணக்கெடுப்பில் கிறித்தவர் அல்லாதவர்களைக் கிறித்தவர் ஆக்கும் நோக்கம் இருந்தமையால், கிறித்தவர் அல்லாதவர் எவ்வளவு பேர் எனக் கணக்கெடுக்க வேண்டியதாயிற்று. இந்நிலையில், இந்தியாவில் அன்று இருந்த சொற்ப கிறித்தவர் தவிர, பிரபலமாக இந்து, கிறித்தவ மதங்கள் இருந்தன. எனவே, இவை தவிர உள்ள எல்லாவற்றையுமே அவர்கள் இந்து மதம் என்றே கணக்கெடுத்தனர். அதாவது, இந்தியாவில் இருந்த, இஸ்லாமியர் அல்லாத, கிறித்தவர் அல்லாத, பார்சி/ஜூக்கள் அல்லாத நபர்களை இந்துக்கள் எனக் கணக்கெடுத்தனர்.

நிறுவனம் ஆக்கப்படாத இந்து மதத்தில் மத பதிவேடுகள் ஏதும் இல்லாததாலும், இந்து மதம் சார்பில் பேச ஒரு மதத்தலைவர் என இல்லாததாலும், எவர் இந்துக்கள் எனும் கேள்விக்கு ஆதாரபூர்வமான பதில் சொல்ல இயலாமல் போயிற்று. ஆக, ஆங்கிலேயர் சொன்னபடியே இஸ்லாமியர், கிறித்தவர், பார்சி அல்லாத நபர்கள் இந்துக்கள் ஆயினர்.

இதற்கு அருமையான சான்றாக கீழ்க்கண்ட வழக்கைச் சொல்லலாம்.

ராஜ் குமார்Vs பார்பரா. எனும் இந்த வழக்கில் இந்துத் தாய்க்கும் கிறித்தவத் தந்தைக்கும் பிறந்த குழந்தை இந்து வழக்கப்படி வளர்க்கப்பட்டது. ஆனால், அக்குழந்தை இந்து மதப்படிதான் வளர்க்கப்பட்டது என நிருபிக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை. அதே சமயம் அக்குழந்தை, கிறித்தவ, பார்ஸி, இஸ்லாம், அல்லது ஜூ மதத்தினராக வளர்க்கப்பட்டது என்பதைக் கூறவும் ஆதாரம் ஏதும் இல்லாததால், (இந்து அல்லாத) அக்குழந்தை இந்து என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறி பின் மீண்டும் இந்து மதத்திற்கே திரும்பியவர்கள் இந்துக்களே.

இந்து மதத்தைப் பொறுத்தவரை, அங்கே மத ஏற்பு என்பதோ அதை அங்கீகரிக்க அது இன்ன பிற மதங்களைப் போல நிறுவனப்படுத்தப்படாததால், மதத் தலைவரிடம், மதபதிவேடு ஏதிலும் பதிந்ததால் மதம் மாறிவிட்டார் எனும் வழக்கம் அங்கே இல்லை.

இதனாலேயே தான், ஒருவர் தான் இந்து என்பதை தன் பழக்க வழக்கங்களால் அதை நிரூபிக்க வேண்டியதாகிறது. குறிப்பாக வேற்று மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்கள், இந்துவிலிருந்து வேறு மதம் சென்று பின் தாய் மதம் திரும்பியவர்கள் சில இடங்களில் இந்துவாகவே இருந்தவரும் கூட தான் கைக்கொண்ட இந்து வழக்கங்களை நிரூபிப்பதன் மூலம் மட்டுமே தான் இந்து என்பதை மெய்ப்பிக்க முடியும்.

சொத்துரிமை:

ஆபிரஹாம்Vs ஆபிரஹாம் (1863) எனும் வழக்கில் எம்.ஆபிரஹாம் என்பவரின் முன்னோர்கள் இந்துக்களாக இருந்து கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள். எம். ஆபிரகாம் இறந்ததும், அவரது மனைவி தன் கணவனுக்குச் சேர வேண்டிய சொத்துக்காக அவரது கணவரின் சகோதரர் எஃப். ஆபிரஹாம் என்பவர் மீது வழக்கிட்டார்.

பதிலுரைத்த எஃப். ஆபிரஹாம், தமது மூதாதையர் இந்து மதத்திலிருந்தவர்கள் என்றும் எனவே இந்து கூட்டுக்குடும்ப வழக்கப்படி, எஞ்சுனர் எனும் அடிப்படையில் தனக்கே சொத்தின் முழு உரிமையும் என வாதிட்டார்.

இந்த வழக்கை ஆய்ந்த ப்ரிவ்யு கவுன்சில் நீதிமன்றம் சில விதிகளை வகுத்தது.

ஒரு இந்து கிறித்தவ மதத்திற்கு மாறியபின் அவரது இந்து குடும்ப உறவு அறுந்து விடுகிறது.

அந்த நபர், அந்நிலையில், இந்து சட்டத்தைத் துறந்து விடலாம். ஆனால், அவ்வாறு துறந்துவிட வேண்டும் என கட்டாயம் ஏதும் இல்லை. ஆனால், அவ்வாறு துறந்துவிட்டிருந்தாலும் கூட, அந்த பழைய மதத்தின் சட்டங்களைப் பின்பற்றலாம். அதற்கு கட்டுப்பட்டு நடக்கலாம்.

ஆனால், அவர் மதம் மாறிய பிறகு எந்த சட்டத்தைத் தேர்ந்தெடுத்து அதன் விதிகளைப் பின்பற்றுகிறார் என்பதைத் தெளிவுபடுத்தும் வண்ணம் அவரது நடத்தை அமைய வேண்டும் என மூன்று விதிகளைச் சொன்னது,

இந்த மூன்று விதிகளில்... முக்கியமாக மூன்றாம் விதியை வைத்துப் பார்க்கும்போது, இறந்த எம். ஆபிரஹாம் என்பவர் கிறித்தவ விதிகளையும், அவர்களின் உடை உணவுப் பழக்கங்களையுமே கொண்டுள்ளார். மேலும், ஆங்கிலேய-போர்த்துக்கீசியத் தம்பதிகளுக்குப் பிறந்த பெண்ணையே மணந்து கொண்டுள்ளார். எனவே, இவர் இந்து மத விதிகளைகச் சட்டங்களைக் கைக்கொள்ளவில்லை. கிறித்தவ சட்டத்தின்படியே வாழ்ந்து வந்துள்ளார். ஆகவே, எஞ்சுனர் உரிமை குறித்த இந்து சட்டம் இவருக்குச் செல்லாது. ஆகவே, சொத்து முழுதும் தனக்கே சொந்தம் எனும் எஃப். ஆபிரஹாமின் வழக்கை ப்ரிவ்யு கவுன்சில் நிராகரித்து விட்டது.

இறங்குரிமையின் அடிப்படையில்

: ஆனால், காமுவதி Vs திக்பிஜய் சிங் எனும் வழக்கில் கிறித்தவர்களும் கூட இறங்குரிமையின் அடிப்படையில் சொத்துக்களைப் பெறலாம் என வகை செய்யப்பட்டது. அதாவது, கிறித்தவர்கள் இறங்குரிமையின் அடிப்படையில் சொத்துக்களைப் பெற வகை செய்யும் இந்திய இறங்குரிமைச் சட்டம் 1865 - ப்ரிவ்யு கவுன்சில் முந்தைய வழக்கில் குறிப்பிட்ட மூன்று விதிகளை தேவையற்றதாக்கி விட்டது.

காமுவதி வழக்கில், இந்து மதத்திலிருந்து மாறியவர் இறந்து விட்டார். அவரது சகோதரி அவரது சொத்துக்களில் தனக்கும் இறங்குரிமையின் அடிப்படையில் உரிமை உள்ளது என இந்திய இறங்குரிமைச் சட்டம் - 1865 ந் கீழ் வாதிட்டார். ஆனால், சகோதரர் சொத்து முழுதும் தமக்கே சொந்தம் என வாதிட்டார். ஆனால், அந்த சகோதரரின் வாதத்தை நிராகரித்துவிட்டு, இறந்தவரின் சொத்தில் சகோதரிக்கு சரி பாதி உரிமை உள்ளது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆக, இந்து மதத்தில், வழக்கத்தின் அடிப்படையிலேயே சட்டங்களும் விதிகளும் செயல்படுகின்றன.

இவற்றை நாம் இப்போது அலசுவதன் காரணம், இந்து மதம் திடமான விதிகளைக் கொண்டு இயங்குகிறதா அல்லது, அது காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறதா? மாற்றிக் கொள்ள அங்கே என்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என ஆராய்வதன் மூலமும். அதே போல பிற மதங்களைப் பற்றி, அவற்றின் சட்டங்களைப் பற்றி ஆராய்வதன் மூலம் இந்தியா எனும் பிரதேசத்தில் ஒத்த விதிகளை, சட்டத்தை அமல்படுத்த எந்த அளவு வாய்ப்புள்ளது என நாம் அறியவே.

- ஹன்ஸா
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல