திங்கள், 3 ஏப்ரல், 2017

இந்திய மதமும் சட்டமும்: 7 (தலம் சார்ந்தவையா? இனம் சார்ந்தவையா?)

ஒரு நாட்டில் பொது சிவில் சட்டம் வேண்டும் எனில் அந்த நாட்டின் மதங்களைப் பற்றி நன்கு அலச வேண்டியதாகவே இருக்கிறது. அதற்கு அந்தப் பகுதியின் வரலாறு கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டியதாகிறது.



ஏனெனில், பண்டைய காலத்தில் அன்றாட வாழ்க்கை முறையின் விதிகள் மதக்கோட்பாடுகளால் நெறிப்படுத்தப் பட்டிருந்தன. ஆட்சியோ, சமூக அமைப்போ, மதத்தின் செல்வாக்கு அதிகமாகவே இருந்தது.

இந்தியாவில் மிக முக்கிய மதங்கள் எனில், இந்து, கிறித்தவ, இஸ்லாமிய மதங்களைச் சொல்லலாம். இந்து மதம் இங்கேயே தோன்றியதுதான். ஆனால், இஸ்லாமும், கிறித்தவமும் இந்தியாவின் வெளியில் இருந்து வந்தன என்று சொல்வதாயின் இந்தியா எனும் நிலப்பரப்பு எதை எல்லாம் உள்ளடக்கியது மற்றும் அது எந்தக் காலத்தில் என்பதையும் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.

ஆதிக்கம் இருந்ததா?:
இன்றைய தேதியில் இந்தியாவில் இருக்கும் முக்கிய மதங்கள் என இந்து, இஸ்லாம், கிறித்தவத்தைச் சொல்வோமாயின், அந்த மதங்களின் மதக் கோட்பாடுகள் எப்படி இருந்தன எந்த அளவிற்கு பொது ஜனம் மற்றும் ஒரு அரசின் செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தியது என்பதைப் பற்றி அறிய வேண்டியிருக்கிறது.

பொதுவாக, மனிதர்கள் தம்மை தலத்தின் அடிப்படையில் அடையாளப் படுத்திக் கொள்வதுண்டு. மனிதரிடையேயான பிரிவுகளும் 'இன்னாட்டவன்' எனும் அடிப்படையிலேயே இருக்கிறது. அதாவது, இந்தியன், பாகிஸ்தானியன் என்பது போல. இது பொது விதிதான் என்றாலும், பல மனிதக் குழுக்கள் தன்னை தல அடிப்படையில் அல்லாமல், இன அடிப்படையில் அடையாளப் படுத்திக் கொள்வதும் உண்டு. உதாரணமாக, இஸ்லாமியன், இந்து இப்படியாக.

அடையாளம் இந்தியனா?
: ஒரு இந்திய இந்து, தன்னை முதலில் இந்தியனாக அடையாளப்படுத்திக் கொள்கிறானா? அல்லது இந்துவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறானா என்பதில்தான் அவனுக்கான சட்டங்கள் எது என்பது தெளிவாகும். இதைப் போலவே, ஒரு இந்திய இஸ்லாமியன் தன்னை இந்தியன் என முதலில் அடையாளப்படுத்திக் கொள்கிறானா? அல்லது தன்னை ஒரு இஸ்லாமியனாக அடையாளப் படுத்திக் கொள்கிறானா? என்பதைப் பொறுத்தே அவனுக்கான சட்டம் அமையும்.

இந்தியன் என்றால் இந்தியாவில் இருக்கும் சட்டங்களும், இந்து அல்லது இஸ்லாமியன் எனில் அந்த மதச் சட்டங்களும் பொருந்தும். ஆனால், இந்தியச் சட்டம் எனத் தனியாக ஒன்றில்லை. அது இந்தியாவில் இருக்கும் இந்து, இஸ்லாமிய, கிறித்தவர்களுக்கானதாக அமைய வேண்டியிருப்பதால், இந்த மதங்களின் அடிப்படைக் கூறுகளும், அந்தக் கூறுகள் அந்த மதச் சட்டங்களை எல்லாம் ஒன்று படுத்தி தொகுப்பாகவோ, இருக்க வேண்டும். இது போக இன்னும் சில மதங்களும், மதமே அற்றவர்களும் கூட இத் தலத்தில் /நிலப்பரப்பில் உண்டு. அவர்களுக்கும் பொறுத்தமாக இருக்க வேண்டும்.

இந்து ஒரு வாழ்க்கை முறை:
எனவே, இந்த மதங்களின் சட்டங்கள் அல்லது விதிகள் என்ன சொல்கின்றன என அறிய வேண்டியிருக்கிறது. அதை ஆராய்ந்தால் மட்டுமே பொதுவான இந்தியாவிற்கென சிவில் சட்டம் வர இயலுமா/ இல்லையா? எனும் கேள்விக்கு விடை காண முடியும்.

இந்து மதத்தைப் பொறுத்தவரை, இது கிறித்தவ, இஸ்லாமிய மதத்தைப் போல நிறுவப்பட்ட ஒன்றல்ல தெளிவாகச் சொல்ல வேண்டுமேயானால் இது ஒரு மதமே அல்ல. ஒரு வாழ்க்கை முறை. இந்து மதத்திற்கென்று ஒரு தலைவரோ, ஒரு வழிகாட்டி நூலோ இல்லை.

சிந்து நதி தீரத்திற்கு அப்பால் வாழ்ந்தவர்கள் சிந்துக்கள் @இந்துக்கள் என அன்றைய இந்தியப் பகுதியை அடுத்திருந்த பாரசீகத்தாரால் அழைக்கப்பட்டனர். அவர்களின் வாழ்க்கை முறையே இந்து மதம் எனப் பின்னர் ஆனது.

இந்துக்கள் தனக்கான விதிகளை பல்வழியில் பெற்றார்கள். அவற்றை அடிப்படையில் ஸ்ருதி என்றும் ஸ்ம்ருதி என்றும் கூறலாம். ஸ்ருதி என்பது கடவுள் சொன்னதாக அமைந்தது. நால்வகை வேதங்களூம், உபநிஷத்துக்களும் இதில் அடங்கும். இவற்றில் சட்ட சம்பந்தமான தகவல்களை விட சமய சம்பந்தமான தகவல்களே அதிகம் இடம் பெறுகின்றன.

தர்ம சாஸ்திரங்கள்:
ஸ்ம்ருதி என்பது முனிவர்கள் அருளியவை. இதில் சட்டத்தின் கூறுகள் சற்றே அதிகம் எனலாம். இவற்றில் சூத்திரங்கள், தர்ம சாஸ்திரங்கள் என இருவகை உண்டு. தர்ம சாஸ்திரங்களில் அதிக அளவில் சட்டக் கூறுகள் உண்டு.

தர்ம சாஸ்திரங்களில் முக்கியமானவை 

1) மனுஸ்ம்ருதி: மேக்ஸ்முல்லர் இதன் காலம் கி.மு.200 என்கிறார். 18 தலைப்புகளில் 2694 ஸ்லோகங்களினைக் கொண்ட இதில் கூட்டாண்மை, கொடை, கூலி, ஒப்பந்தம், கணவன்-மனைவி, பாகப்பிரிவினை, மரபுமுறை இறங்குரிமை, தாக்குதல், அவதூறுகூறுதல், திருட்டு, பிறன்மனை புணர்தல் ஆகிய தலைப்புகள் முக்கியமானவை ஆகும்.

2) யாஞ்ஞவல்க்ய ஸ்ம்ருதி: இது கி.பி. 2-ம் நூற்றாண்டினது. இதற்கான உரையிலிருந்து (விஞ்ஞானேஸ்வரர் எழுதிய) சில தகவல்கள் கிடைக்கின்றன. ஆச்சாரா எனும் மதசடங்குகள் பற்றியும், உதாரணமாக திருமணத்தின் போது இந்து மணமக்கள் ஹோமத் தீயைச் சுற்றி எடுத்து வைக்கும் 7 அடிகள் பற்றியும், வ்யவஹாரா எனும் மதச்சார்பற்ற நிகழ்வுகளான, நீதிமன்ற நடைமுறைகள், பாகப்பிரிவினை, திருட்டு, கொள்ளை போன்றவை பற்றியும் கூறப்பட்டுளன. பிராய்ச்சித்தா எனும் மூன்றாவது பகுதியில் இவற்றிற்கான பிராயச்சித்தங்களும் வரையறுக்கப்பட்டுள்ளது.

3) நாரத ஸ்ம்ருதி: இது ஓரளவிற்கு இன்றைய உரிமையியல் நடைமுறைச் சட்டத்தை ஒத்திருக்கிறது. கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த ஸ்மிருதி தான் ஓரளவிற்கு சட்டத்தொகுப்பிற்கு ஈடாகச் சொல்ல முடிகிறது.

4) இது போன்ற ஸ்ம்ருதிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விஷயங்களைப் பற்றிச் சொல்வனவாக இருந்தமையால், அந்த குழப்பங்களைக் களையும் பொருட்டு, பொதுவாக இவற்றிலிருந்து எடுக்கப்பட்டதாக உரைத் தொகுப்புகள் கற்றறிந்தோரால் இயற்றப்பட்டன. அந்த உரைகளில் மிக முக்கியமானவை என மிதாக்ஷரம், மற்றும் தயாபாகத்தைக் குறிப்பிடலாம். மிதாக்ஷரம் என்பது யாக்ஞவல்ஞ ஸ்ம்ருதிக்கு எழுதப்பட்ட உரை. இந்த உரை, இன்றைய வங்காளம், அஸ்ஸாம் நீங்கலாக பிற பாகங்களில் இதில் கூறப்பட்ட பழக்கங்கள் புழக்கத்தில் இருந்தன, இருக்கின்றன. தயாபாகம் என்பது, பல ஸ்ம்ருதிகளுக்கான உரைத் தொகுப்பாக அமைகிறது.

5) இவை எல்லாவற்றையும் தவிர அந்தந்த பகுதிகளிலும் நிலவி வரும் பழக்கவழக்கத்தின் அடிப்படையிலும் விதிகள் உருவாகின்றன. அதாவது ஒரு குறிப்பிட்ட ஊரிலோ, ஜாதியிலோ, குடும்பத்திலோ, நிலப்பரப்பிலோ பன்னெடுங்காலமாக தொடர்ந்து இருந்து வரும் பழக்கமே விதிகளாகிறது. இந்த விதிகளே அந்த இனமுறைச் சட்டத்தின் முன்னோடி. இது ஒரு எழுதப்படாத சட்டம்.

ஆனாலும், இந்த விதிகளுக்கு மாறாக வழக்கம் ஒன்று இருக்கும்பட்சத்தில் அது நிரூபிக்கப்படும் பட்சத்தில் அந்த வழக்கமே நீதி என ஏற்றுக் கொள்ளப்பட்டே வந்திருக்கிறது. ஆதலால், இந்த இந்து தர்மத்தைப் பொறுத்தவரை, சமூகச் செயல்பாடுகளுக்கும், ஆட்சிமுறைக்கும் இந்த ஸ்ம்ருதி, ஸ்ருதி போன்றவை முன்னோடிதான் எனினும், பகுதி,குடும்ப,ஊர் பழக்கமே மேலோங்கும்.


வழக்கங்கள் நீதியாகுமா?:
இந்த வழக்கங்கள் நீதி என ஏற்கப்படுவதற்கு சில விதிகள் உண்டு.

அதாவது, இந்த நூல்கள் ஒன்றை விதி எனச் சொல்கையில், அப் பகுதி, குடும்ப, ஊர்,-ல் வேறொன்று வழக்கமாக இருப்பின் அந்த வழக்கமே பின்பற்றப்படலாம். ஆனால் அந்த வழக்கமானது கீழ்கண்டவைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

அந்த வழக்கமானது, தொன்மையானதாக இருக்க வேண்டும். அதாவது அந்த வழக்கம் எப்போது தோன்றியது எனத் தெரியாதவாறு மிக மிகத் தொன்மையானதாக இருக்க வேண்டும். தொடர்ந்து இடைவெளியின்றி அந்த வழக்கம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நியாயமானதாக இருக்க வேண்டும். குழப்பமற்று தெளிவானதாக இருக்க வேண்டும். ஒழுக்கக்குறைவானதாகவோ, பொது நலத்திற்கு ஊறு விளைவிப்பதாகவோ, ஒரு தனி மனிதரின் கருத்தாகவோ இருக்கக்கூடாது. அந்த வழக்கமானது தன்னிச்சையாக மக்களால் எந்த வற்புறுத்தலுமின்றி பயன்படுத்தப்பட்டு வந்திருக்க வேண்டும். அந்த வழக்கத்தால் தங்களுக்கு நன்மை என மக்கள் கருத வேண்டும். அரசு இயற்றிய எந்த சட்டத்திற்கும் எதிரானதாகவும் இருக்கக்கூடாது.

இவை அனைத்தும் இருப்பது நிருபணமானால் மட்டுமே அந்த வழக்கத்தை நீதி என ஏற்கலாம்.

சட்டமும் வழக்கமும்:
இன்றும் கூட இது போன்ற வழக்கங்கள் ஏற்கப்படுகின்றன என்பதற்கு உதாரணமாக, இந்து திருமணச் சட்டம் 1955, -ன் பிரிவு படி, தடுக்கப்பட்ட உறவு முறையாக தந்தை வழியில் 5 தலைமுறைக்குள் உள்ளவர்களையும், தாய் வழியில் 3 தலைமுறைக்குள் உள்ளவர்களையும் திருமணம் செய்யக்கூடாது. ஆனால் அந்தச் சட்டத்திலேயே அப்பகுதியில் நிலவுகின்ற வழக்கப்படி மேற்படி சட்டத்தில் கூறப்பட்டுள்ளவர்களைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருக்குமேயானால், அதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே அத்தை மகளை மணத்தல் போன்றவை சட்ட அங்கீகாரம் பெறுகின்றன. இந்த வழக்கம், "வழக்கம்' எனும் கூறுகளுக்குட்பட்டதாக பன்னெடுங்காலமாகவே இருந்து வருவதால் ஏற்கப்படுகிறது.

இந்துக்களில் மத சட்டம் என தீவிரமாக பின்பற்றப்படுவது என ஒரு வழிகாட்டி நூல் இல்லை. இருக்கும் சில நூல்களும், அப்படியே பின்பற்றப்படும் எனச் சொல்ல முடியாது. ஏனெனில் வழக்காறு அதற்கு மாறாக இருப்பின் அதுவுமே சட்டத்தில் ஏற்கப்படுகிறது.

சட்டத்தை விட வழக்கமே மேல்:
வழக்கொன்றில் (Collector of Madras Vs Moottoo Ramalinga Sethupathy [or] Ramnad Case) ராமநாதபுர ஜமீந்தார் தனது ஜமீன் சொத்தை விட்டுவிட்டு இறந்துவிடுகிறார். அவருக்கு ஆண் வாரிசு இல்லை. இவர் தனது மனைவி ராணி பர்வதவர்த்தினிக்கு தத்தெடுப்பதற்கு உயில் வழி அதிகாரம் எதையும் வழங்கி இருக்கவில்லை. இந்நிலையில், ராணி, ஜமீந்தாரின் சபிண்டா உறவினர்களின் சம்மதத்துடன் ஓர் ஆண் குழந்தையைத் தத்தெடுத்தார். ஆனால் ராணி இறந்த பின் மதுரை கலெக்டர் அந்த தத்தெடுப்பை ஏற்காமல், அந்த ஜமீனை வாரிசில்லாச் சொத்து என அறிவித்து அந்தச் சொத்தை அரசுக்குச் சொந்தமாக்கி விட்டார். இதை எதிர்த்து ராணியால் தத்தெடுக்கப்பட்ட மகன் தனது தத்தெடுப்பு செல்லத்தக்கதே என அறிவிக்கக்கோரி வழக்குத் தொடர்ந்தார்.

பிரிவ்யு கவுன்சில் இவ்வழக்கை ஆய்கையில், 'ஒரு பெண் தன் கணவரின் அனுமதி இல்லாமல் எடுத்த தத்து செல்லாது என மத விதி இருந்தாலும், கணவரின் சபிண்டா உறவின் அனுமதியோடு தத்தெடுத்தல் என்பது நடை முறை வழக்கமாக இருக்கையில் அது செல்லக்கூடிய தத்துதான் என அந்த வழக்கின் நீதிபதி சர் ஜேம்ஸ் கோல்வில்லி குறிப்பிட்டார்.

ஆக இந்து தர்மத்தைப் பொறுத்தவரையில், மத நூல்கள் சொல்வதை விட வழக்கத்தில் உள்ள விதிகளே மேலோங்கி இருக்கின்றன.

இதே போல, இந்து மதத்திற்கு மாறியவர்கள், இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்கு மாறியவர்கள், வேறு மதங்களில் சட்டமாக எதைக் கொண்டிருக்கிறார்கள் என எல்லாவற்றையுமே அலசி ஆராய்வதே இன்றைய முக்கிய பேசு பொருளான 'பொது சிவில் சட்டம்' பற்றிய ஓர் முடிவுக்கு நாம் வர முடியும்.


- ஹன்ஸா
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல