தொட்ட தொடர் சனியாய்
தொடர்ந்து.. தொடர்ந்து....
தொடர் கதையாகலாம்!
துவள வேண்டாம்
தோழர்களே
துடித்தெழுவோம்... நாம்...
துடித்தனத்தோடு
அடம்பன் கொடி கூட,
திடம் குறைந்த தாயினும்
கடம்ப மரத்தையும்
கட்டியிழுக்கும்
திரண்டு திண்மையானால்
புரண்டு புரண்டு
பஞ்சணையைப்
புண்படுத்தியது போதும்!
புறப்படுங்கள்
பொழுது படுவதற்குள்
அடுத்த கட்ட ஆட்டத்திற்கு!
நாய்க்கொரு காலம்
நல்லதானால்,
நரிக்கொரு காலம்
நலம் பயக்காதா எனின்...?
நடந்த தெல்லாம்
நல்லதாகவே இருக்கட்டும்!
நடக்கப்போவதை நாம்
நட்புறவாய் யோசிப்போம்!
கொள்கையளவில் நாம்
கூறுபட்டாலும்,
குறிக்கோளை ஒன்றாக்கி,
கூட்டு முயற்சியோடு
ஏறினோம்... வழுக்கு மரத்தில்
மேலும்... மேலும்... ஏறினோம்
கொடிக் கம்ப உச்சிப்
புதையலுக்காய்!
நடந்தது என்ன?
அவலை நினைத்து
உரலை இடித்த கதையானது
நமது முயற்சி!
நாம் போட்ட திட்டங்கள்
நம்மை
நாடிய அடிமட்டங்களால்
தவிடு பொடியானது
இருந்தும் என்ன....?
இடுப்பொடி பட நாம்
குப்புற இருந்தாலும்
மீசையில் மண் ஒட்டவில்லை
பார்த்தீர்களா?
முதலில்
வழித்துத் துடைத்திருக்க வேண்டும்
வழுவழுப்பான மசகினை
வழுக்கு மர மசகு
துடைக்காத பிசகு நம்மில்தான்!
தோழர்களே!
புறப்படுவோம் - இனி
அடுத்த கட்ட ஆட்டத்திற்கு
ஏறாவூர் அனலக்தர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக