பொன்னாடையே வேண்டாம் எனக் கூறும் ஒரு சாரார். பொன்னாடை தேவைதான் என்று கூறும் இன்னுமொரு சாரார். இவர்களுக்கிடையே நின்று சில கருத்தாடல்களைப் பகிர்வது பொருத்தமென்று தோன்றுகின்றது.
இலக்கிய வரலாற்றில் எமக்குக் கிடைத்த தடயங்களில் ஒன்றுதான் பொன்முடி, பொன் வாழ்த்து, பொன் அணி, பொன் முடிப்பு, பொற்கிளி, பொன்னாடை முதலியன இலக்கிய ரசனைக்குள் ஊடுருவும் போது எம்மால் இவற்றை அவதானிக்க முடிகின்றது.
இப்போது இருப்பது போன்றல்லாது அன்று இலக்கியம் படைப்பதென்பது புனிதமான பணியாகவே மதிக்கப்பட்டது. அவ்வாறான படைப்பிலக்கியக்காரர்களை வாழ்த்திப் போற்றுவதற்காய் பொன் முடிகளையும் பொற்காசுகளையும் மன்னர்களும் புரவலர் உள்ளிட்ட மற்றோரும் அள்ளி வழங்கினர். இத்தொடரில் மன்னர்களின் அளப்பரிய சேவைகளும் மக்களால் உவந்தேற்கப்பட்ட போது அவர்களையும் கெளரவிப்பதற்கான ஏற்பாடுகள் வலுப்பெற்றன.
இந்நிலையில் புலவர்களையும் புரவலர்களையும் பெரும் பேறாகக் கருதிப் போர்த்தப்பட்டதே பொன்னாடை. இலக்கியங்களை அதி உச்சமாக மதித்த சோழர் ஆட்சிக் காலத்தில் பொன்னாடைகளும் பட்டங்களும் தட்டுப்பாடின்றிப் பரிமாறப்பட்டன.
இக்காலங்களில் போர்த்தப்பட்ட பொன்னாடைகளில் தங்கமும் மணிகளும் பதிக்கப்பட்டிருந்தன என்கின்ற வரலாறுகளும் உண்டு. அலங்காரம் செய்யப்பட்ட ஆடையாகவும் அணியப்பட்டும் வந்திருக்கின்றது. எது எப்படி இருந்தும் பொன்னாடை என்ற முதுசொம் உயர்நிலையாளர்க ளால் எமது பரம்பரையினர் கைவசம் வந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
திருமாலைக் குறித்து வரும்பீதாம்பரன் என்ற சொல்லின் அடியாக வந்த பீதாம்பரம் என்ற சொல்லே பொன்னாடையைக் குறிக்கும் தமிழ் வழக்காகும். இதிலிருந்து தமிழ் சமய - சமூகப் பண்பாட்டிலும் இவ்விடயம் மதிக்கப்பட வேண்டியதொன்று என்பதனையும் ஏற்றுக் கொள்ள முடிகின்றது.
இலக்கியம், அரசியல், பொருளியல், சமூகவியல், ஊடகம் எனத் துறை சார்ந்த வல்லுநர்களையும் சமூக சேவையில் தம்மை அர்ப்பணம் செய் தோர்களையும், இன்னும் பொருத்தம் மிக்கவர்களையும் கெளரவிப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட ஒன்றாக பிற்காலத்தில் பொன்னாடை விளங்கியது. இந்நிலைமை இன்று மாறிக் கொண்டு வருகின்றது என்பதனை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது. பொன்னாடையோ பாராட்டுகளோ மக்களின் மனதை வென்று எம்மை வந்தடைய வேண்டும். தாமே பொன்னாடையினை வாங்கிக் கொடுத்ததோ, ஏற்பாட்டாளர்களிடம் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு சொல்லியோ பெறப்படும் பொன்னாடைகளோ ‘பிணத்தின் மீது தூவப்படும் மல்லிகை’ போன்றதுதான்.
பொன்னாடைகளுடன் பட்டங்களை வழங்குவதென்பதும் இலக்கிய மரபு. கம்பனுக்கும் ஒட்டக் கூத்தருக்கும் புகழேந்திப் புலவருக்கும் வழங்கப்பட்ட உயர் பட்டம் கவிச்சக்கரவர்த்தி. இத்தனைக்கும் இவர்கள் செய்த சாதனை வரலாற்றில் இன்று வரை நீடித்து நிற்கும் இலக்கியங்கள் பலவற்றை எம் கைகளில் தவழ விட்டமையே. இப்பட்டங்களையே மிகைத்துவிடும் அளவிற்கு மிகப் பெரும் பட்டங்கள் இன்று வழங்கப்படுகின்றன. ஏதோ இரண்டு கவிதைத் தொகுதிகளையோ நாவலையோ சிறுகதைத் தொகுதிகளையோ எழுதியமைக்காக எம்மவர்களுக்கு வழங்கப்படும் பட்டங்கள் எம்மை மிரள வைப்பதாக உள்ளன.
எழுத்தாளர்கள், துறைசார்ந்தோர் கெளரவிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. தன்னை இத்துறைகளில் ஈடுபடுத்தி சமூகத்திற்காய் உழைக்கும் இவர்கள் புனிதமானவர்கள். இவர்களைப் பாராட்டாமல் ஒரு சமூகம் மறந்திருப்பது தகாது ஆயினும் இப்பாராட்டுக்கள் கேலிக்குரியதாக மாறி வருவது தான் வேதனைக்குரிய விடயம்.
ஒரு பட்டமோ பொன்னாடையோ பெறும் போது அவர் அதற்குப் பொருத்தமானவராக இருக்க வேண்டும். அவருக்கு கொடுக்கப்பட்ட கெளரவம் அவரது மரணத்தின் பின்னரும் ஞாபக மூட்டப்பட வேண்டும். இது அல்லாமல் மேடையில் ஒருவரை அழைத்து பட்டங்களை வழங்கும் போதும், பொன்னாடை போர்த்தும் போதும், அப்பட்டத்தைக் கொண்டு அழைக்கும் போதும் சமூகம் அவரை ஏளனமாகப் பார்க்குமானால் அது பொன்னாடையோ பட்டமோ அல்ல. அது வெறும் சருகுதான் என்பதனை நாம் உணர வேண்டும்.
பொன்னாடை போர்த்துகின்றவர்களும் பட்டங்களை வழங்குகின்றவர்களும் உண்மையான தகுதியாளர்களைக் கேலி செய்யாத விதத்தில் தன் தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்பாட்டாளர்கள் இதனை உணராத போது இதனைப் பெறுகின்றவர்களாவது தான் இதற்குப் பொருத்தமானவரா? என்பதனைச் சுய விசாரணை செய்து கொள்ள வேண்டும். மேலும் பொன்னாடை விடயத்தில் மிகவும் ஆழமான சமூக சிந்தனையுடன் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு.
பொன்னாடை போர்த்தப்படுவதைவிட அதனைப் பெறாமல் இருப்பதே கெளரவம் என்ற நிலை வருங்காலத்தில் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. பொன்னாடையா? ஐயோ! வேண்டாம் எனக் கூறும் காலம் வந்துவிடக் கூடாது.
துறைசார்ந்தவர்களையும், சமூகத் தரத்திலிருந்து மக்களின் உள்ளங்களைத் தொட்டவர்களையும் கெளரவிப்பது தொடர வேண்டும். இக்கெளரவங்கள் மூலம் எதிர்காலச் சமூகம் படிப்பினைகளைப் பெற வேண்டும். இம்மாற்றங்களைச் செய்வதற்கான ஊடகமாகப் பொன்னாடை மாற வேண்டும். மதிப்பிழந்து கொண்டு வரும் பொன்னாடை கெளரவத்தைப் பாதுகாத்துப் பொருத்தமானவர்களிடம் ஒப்படைக்க உறுதிபூணுவோம்.
ஜெஸ்மி எம். மூஸா


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக