சனி, 1 மே, 2010

பெண் அடிமைத்தனம்

பெண் விடுதலை தொடர்பில் தந்தை பெரியார் சொன்ன கருத்துக்கள் சில:

பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில் அநேக சங்கங்களும் முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள்போலக் காட்டிக்கொண்டு பாசாங்கு செய்து வருகின்றார்கள்.

ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காகப் பெண்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல் மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளைப் பலப்படுத்திக்கொண்டே போகும் என்பது பொதுவான அபிப்பிராயம்.

ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெறமுடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக்கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும் பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும்.

அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகி விட்டாலும் கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது. அந்த ‘ஆண்மை’ உலகத்தில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உலகத்தில் ‘ஆண்மை’ நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. “ஆண்மை”யால் தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள். சுதந்திரம், வீரம் முதலிய குணங்களை உலகத்தில் “ஆண்மை”க்குத் தான் அவைகள் உண்டென்று ஆண்மக்கள் முடிவு கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாயிருக்கிறார்கள். ஏனெனில் இன்னமும் பெண்களுக்கு தாங்கள் ஆண்களைப் போல முழு விடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கை அமைப்பின் தன்மையே தங்களை ஆண் மக்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதன் அறிகுறியாய்க் கருதிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியெனில், பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்.

ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாது என்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமானால், பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கின்றார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்லும் இடமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.

அன்றியும், பிள்ளை பெறும் தொல்லையானால் தங்களுக்கும் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாகிவிடுகிறது.

பெண்களின் அடிமைத்தன்மை பெண்களை மாத்திரம் பாதிப்பதில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது.

என்று இற்றைக்கு பல தசாப்தங்களுக்கு முன்னால் தந்தை பெரியால் கூறிச் சென்றிருக்கிறார். ஆனாலும் இன்னமும் அது குறித்த பிரக்ஞை எமது சமூகத்தின் மத்தியில் ஏற்படாதது கவலைக்குரியது.  பெண்கள் மீது ஆண்டாண்டு காலமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்தும் விதிக்கவே எமது சமூகம் விரும்புகின்றது.

அவை சற்றும் தளர்த்தப்படுவதை சகித்துக்கொள்ள முடியாதவர்களாகவே நாம் இருக்கின்றோம். இந்நிலையில் பெரியார் அன்று சொன்ன கருத்துக்கள் எம்மால் இன்று சகித்துக் கொள்ள முடியாதவைதான்.

பெண் விடுதலை பேசுபவர்கள், அதற்காகப் போராடுபவர்கள் என்றாலே இன்னமும் அவர்கள் குடும்பத்தைக் குலைப்பவர்கள் என்ற மனப்பாங்கும், அவர்கள் தொடர்பான பயமும்தான் எமது சமூகத்தில் நிலவுகின்றது.

பால்நிலை, பாலியல் சமத்துவம் என்றாலே எமது சமூகத்தில் இன்னமும் பேசப்பட முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.

உண்மையில் பிள்ளைகள் சிறுவயதில் இருந்தே இதுகுறித்த ஆரோக்கியமான சிந்தனைகளுடன் எந்தவிதப் பாகுபாடுமின்றி வளர்க்கப்பட்டால் நிச்சயம், பால்நிலை சமத்துவமுடைய ஒரு சமுதாயத்தை எதிர்காலத்தில் கனவு காணலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல