சனி, 1 மே, 2010

சீசரைக் கொல்ல அமைக்கப்பட்ட வியூகம்

இன்றைய மனிதனுக்கு நேற்றைய உலகம் சேர்த்து வைத்து கோர்த்துக் கொடுத்திருக்கும் காலப் பதிவேடு.

அன்றைய மனிதன் இப்படி வாழ்ந்தான்... வளர்ந்தான்... வீழ்ந்தான் என்று, இன்றைய மனிதனுக்கு அது பாடம் சொல்கிறது. நாம் வாழ்க்கையை திருத்திக்கொண்டு வீழ்ச்சியை தவிர்க்க வழிகாட்டுகிறது.

சிறுவயதில் இருந்தே சரித்திரப் பாடங்களைப் படிக்கிறோம், பரீட்சையில் மதிப்பெண் வாங்க மட்டும்! ஆனால் சரித்திர பாடங்கள் தரும் முன்னுதாரணங்களை வாழ்க்கையில் பயன்படுத்தாமலே விட்டுவிடுகிறோம்.

மண்ணாசை, பொன்னாசை, பதவி ஆசை போன்ற அத்தனைக்கும் ஆசைப்பட்ட சரித்திர மன்னர்கள் அவைகளை அடைவதற்காக கையில் எடுத்தது கொலை ஆயுதத்தை! பதவிக்காக அன்றைய மன்னர்கள் மட்டுமல்ல, இன்றைய மனிதர்களும் அந்த கொலை ஆயுதத்தைத்தான் கையில் தூக்குகிறார்கள்.

சதி செய்து வீழ்த்துகிறார்கள். காலம் அவர்களை கண்ணிமைக்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு மரணத்தை உருவாக்குகிறவருக்கு, அதைவிட மோசமான மரணத்தை இன்னொரு கட்டத்தில் வழங்கி, காலம் கணக்கை சரிசெய்து விடுகிறது. ஒருவனை வீழ்த்த இன்னொருவன் எப்படி வியூகம் அமைக்கிறானோ, அது போன்ற வியூகத்தில் இயற்கையே அவனை சிக்கவைத்து சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுகிறது.

மாவீரன் பாம்ப்பேயின் மரணத்திற்கு காரணமான ஜூலியஸ் சீசரைக் கொல்ல மரணம் எப்படி வியூகம் அமைக்கிறது பாருங்கள்....!! ‘திடீரென்று வரும் மரணமே சிறந்தது...’ என்று பேச்சுவழக்கில் நண்பனிடம் கூறிவிட்டு சீசர் இரவில் அரண்மனைக்கு திரும்புகிறார். தூங்குகிறார். அருகில் படுத்திருந்த அவருடைய மனைவி கல்பூர்ணியா கெட்ட கனவு கண்டு துடித்து விழிக்கிறாள். கிட்டத்தட்ட அந்த நேரத்தில்தான் சீசரை எப்படி கொல்வது என்று அவருடைய எதிரிகள் காஷியஸ் என்பவன் தலைமையில் கொலைத் திட்டம் தீட்டி முடிக்கிறார்கள்.

மறுநாள் காலையில் சீசர் செனட் கூட்டத்தில் கலந்துகொள்ள கிளம்புகிறார். மனைவி ஓடோடி வந்து, ‘நான் கெட்ட கனவு கண்டேன். நீங்கள் இன்று செனட் கூட்டத்திற்கு போகவேண்டாம்’ என்கிறாள். அதை ஏற்றுக்கொள்ளாத சீசர் ‘நடப்பது நடக்கட்டும்’ என்றபடி கூட்டத்திற்கு செல்கிறார்.

மரணம் அவரை பின்தொடர்கிறது! சீசரை நெருங்கும் மரணத்தை தடுக்கும் முயற்சியாக செயல்படுகிறார், அவரது நண்பர் ஆர்ட்டிமிடோரஸ், தத்துவஞானியான இவருக்கு கொலை சதி பற்றி தெரிந்துவிட்டது அவர் சீசரை எச்சரிக்கை செய்ய விரும்பி ஓடோடி வருகிறார். ஆனால் அதற்குள் சீசர், செனட்டிற்கு வந்துவிட்டார். அவரைச் சுற்றி பெருங்கூட்டம். ஆர்ட்டிமிடோரஸ் நெருங்கிப் போக நினைக்கிறார். ஆனால் சுற்றி நின்ற சதிகாரர்களோ சீசரை அவர் நெருங்கிவிடாமல் பார்த்துக்கொண்டனர். (சீசரை நெருங்கும் மரணத்திற்கும்) அவரைக் காப்பாற்ற நினைக்கும் ஆர்ட்டிமிடோரஸ்க்கும் இடையே திக்... திக்... போராட்டம் நடக்கிறது.

அடுத்து என்ன செய்வது என்று யோசித்த தத்துவ சிந்தனையாளர், தனது எச்சரிக்கையை உடனடியாக எழுதி, கூட்டத்திற்குள் முண்டியடித்து முன்னேறிச் சென்று சீசரின் கையில் கொண்டுபோய் திணித்தார். அதை என்ன ஏதென்று படிக்க சீசருக்கு மரணம் வாய்ப்புத் தரவில்லை.

அடுத்த முயற்சியாக சீசரின் நெருங்கிய நண்பரான மார்க் எண்டனி, சீசரை நோக்கிச் செல்கிறார். அவரை அருகில் விட்டால் தம் கொலைத் திட்டம் நிறைவேறாது என்பதை அறிந்து அவரை புரூட்டஸ் வசமாக மடக்கி பேச்சுக் கொடுத்து நெருங்கிப் போகாத அளவிற்கு பார்த்துக் கொள்கிறான். மரணம் சீசரின் கைக்கெட்டும் தூரத்தில்!

அவர் வந்து தன் அரியணையில் அமர்கிறார். பின்னால் இருந்து அவருடைய அங்கியை டிலியஸ் என்பவன் இழுக்கிறான். அதுதான் சதி திட்டத்தை தொடங்கும் சிக்னல். அடுத்து காஸ்கா என்பவன் கத்தியோடு பாய்கிறான். குத்து விழுகிறது சீசர் எதிர்கொண்டு தடுக்க முயற்சிக்கிறார். அதற்குள் சதிகாரர்கள் அனைவரும் ஆளுக்கொன்று என்ற அடிப்படையில் சுற்றி வளைத்து காட்டுமிராண்டித்தனமாக குத்தினார்கள்.

அதை எல்லாம் தாங்கிக்கொண்ட சீசர், தன் நண்பனாக இருந்த புரூட்டசும் குத்தும் போது மனதளவிலும் தளர்ந்துபோய் அதை பார்க்க சகிக்காமல், தடுக்கவும் விரும்பாமல் கைகளால் முகத்தை மூடிக்கொண்டார். (ஷேக்ஸ்பியரால் புகழ் அடைந்த, ‘நீயுமா புரூட்டஸ்...?!’ என்ற வார்த்தை இந்த நேரத்தில்தான் சீசரிடம் இருந்து வெளிப்பட்டிருக்கிறது! ரத்தம் பீறிட்டு வெளியேற மரணம் நிச்சயம் என்று உணர்ந்த சீசர், அருகில் இருந்த பம்ப்பேயின் சிலையின் காலடியில் போய் விழுந்து இறந்தார். (வாழ்க்கை எப்படி முடிகிறது பாருங்கள்! பாம்ப்பேயின் கொலைக்கு காரணமானவர், அவர் சிலையின் காலடியிலே தன் உயிரை விடுகிறார்.

இந்த மரணச் சூறாவளி அதோடு ஓயவில்லை. சதித் திட்டத்தை உருவாக்கி, செயல்படுத்திய காஷியஸ் என்பவன் சீசர் மீது தான் பாய்ச்சிய கத்தியால் தன்னையே குத்தி உயிரை மாய்த்தான். ‘என் கட்டிலின் அருகில் தினமும் இரவில் சீசரின் ஆவி வந்து நின்று கொண்டிருக்கிறது என்று புலம்பிய புரூட்டஸ், மலை உச்சிக்குச் சென்று இன்னொருவரிடம் கத்தியைக் கொடுத்து தன்மீது குத்தச் செய்து இறந்தான்.

சரித்திரத்தின் உள்ளே நாம் சற்று புகுந்துவிட்டதால், உலகப் பேரழகி கிளியோபாட்ராவை மரணம் எப்படி மயக்கியது என்றும் பார்த்துவிடுவோம். அழகி என்றாலே ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் இருக்கத்தானே செய்யும்!

அவள் கிரேக்கத்தை பூர்வீகமாகக் கொண்டவள். கிரேக்க மன்னர் மாவீரன் அலெக்சாண்டரின் மரணத்திற்குப் பிறகு அவரது தலைமை தளபதி டாலமி பதவிக்கு வந்தார். அவர் எகிப்தைக் கைப்பற்றி அதன் மன்னராக முடிசூட்டிக்கொண்டார். அந்த டாலமியின் பரம்பரையில் வந்தவள் கிளியோபாட்ரா.

இவளது தந்தை பெருங்குடிகாரர். அவர் பெயர் பதினொன்றாவது டாலமி. அவர் குடித்து குடித்து இறக்கும்போது அவளுக்கு 18 வயது. தந்தை இறந்ததும் தன் தம்பி 12வது டாலமியோடு சேர்ந்து ஆட்சி நடத்தத் தொடங்கினாள். அவள் சுதந்திரமாக ஆட்சி செய்ததை சுற்றி இருந்த பெருசுகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தம்பி டாலமியை கைக்குள் போட்டுக்கொண்டு, சூழ்ச்சி செய்து கிளியோபாட்ராவைப் பிடித்து நாடு கடத்திவிட்டார்கள். அதனால் அவள் தடுமாறவில்லை. சிறிது காலத்தில் பெரும்படையை திரட்டிவந்து தம்பியோடு மோதி ஜெயித்து ஆட்சியை பிடித்துக் கொண்டாள். அப்போதுதான் இவளுக்கும் – ஜூலியஸ் சீசருக்கும் நட்பு ஏற்பட்டது. அவரையும், அவருடைய கொலைக்கு சிறிது காலத்திற்குப் பிறகு ரோமை ஆண்ட மார்க் ஆண்டனியையும் இவள் திருமணம் செய்திருந்தாள்.

அவளிடம் உடல் கவர்ச்சியை விட அறிவுக் கவர்ச்சியே அதிகம் இருந்தது. வசீகரக் குரலில் பேசுவாள். பல நாட்டு மொழிகளில் அறிஞர்களோடு சகஜமாக உரையாடுவாள். அவளுக்கு பிடித்த ஆண்களோடு தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வாள். அவர்கள் மது அருந்தினால் இவளும் அருந்துவாள்.

ஒரு நாள் மார்க் ஆண்டனியும், கிளியோபாட்ராவும் மீன் பிடிக்கப் போனார்கள். அவளது தூண்டிலில் ஏகப்பட்ட மீன்கள் சிக்கிக்கொண்டே இருந்தன. உடனே ஆண்டனி தன் பணியாளரை அழைத்து எதுவோ கிசு கிசுக்க, அடுத்த சிறிது நேரத்தில் ஆண்டனி தூண்டிலில் நிறைய மீன்கள் சிக்கிக்கொண்டிருந்தன. (அந்த பணியாள் நீர் சாகசம் தெரிந்தவன். அவன் ஏற்கனவே பிடித்து வைத்திருந்த மீன்களை எடுத்து தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று ஆண்டனியில் தூண்டிலில் அவைகளை செருக்கிக்கொண்டிருந்தான்.)

இந்த ரகசியத்தை புரிந்துகொண்ட கிளியோபாட்ரா தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் ஆண்டனியின் தூண்டிலில் மசாலா தடவிய மீன்கள் பிடிபட்டன. (அவள், தனது பணியாளர் மூலம் மசாலா தடவிய மீன்களை ஆண்டனியின் தூண்டிலில் செருக ஏற்பாடு செய்தாள்.)

மசாலா மீன் ஒன்றை சுண்டி இழுத்து ஆண்டனி மேலே தூக்க அதை தற்செயலாக பார்த்தது போல் பாவனை செய்துகொண்ட கிளியோபாட்ரா, ‘நீங்கள் எவ்வளவு சாமர்த்தியசாலி. மசாலா மீன்கள்கூட உங்கள் தூண்டிலில் சிக்குகின்றன...’ என்று வியப்புகாட்ட, சுற்றி இருந்த அனைவரும் சிரித்து விட்டார்கள்.

மக்கள் மனதில் எளிதாக இடம்பிடித்த இந்த பேரழகி, மரணத்தின் மனதிலும் சீக்கிரமே இடம் பிடிக்கத் தொடங்கினாள்.

ஆண்டனி அவளிடம் மதிமயங்கி கிடக்க, ரோமில் ஆக்டேவியஸ் சீசர், ஆண்டனிக்கு எதிராக படை திரட்டிக் கொண்டிருந்தார். அவர்களுக்குள் போர் மூண்டது. ஆண்டனி தோல்வி அடைந்து தற்கொலை செய்துகொண்டான். உடனே படை எகிப்துக்குள் நுழைந்தது. கிளியோபாட்ரா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாள். இளமை விடைபெற்றிருந்தாலும் கவர்ச்சி கண் இமைக்க மறுக்கும் அழகில் இருந்த அவளுக்கு அப்போது 39 வயது.

உலகத்தின் பல முனைகளில் இருந்த பயண யாத்திரிகர்கள் அவளது அழகு கவர்ச்சி பற்றிய தகவல்களை தோண்டித் துருவி எடுத்து எழுதி புகழ் பரப்பிக் கொண்டிருக்க, வீட்டுக் காவலில் இருந்த அவளுக்கு மரண பயம் தொற்றிக்கொண்டது.

ஆக்டேவியன் சீசர் புறப்பட்டு, அவளைத் தேடி விரைந்து வந்துகொண்டிருந்தார். ‘அவர் நினைத்தால் தன்னை தெருத்தெருவாக இழுத்து செல்லமுடியும். ஆடைகளை கிழித்து அவமானப்படுத்த முடியும். அவர் என்னை எதுவேண்டுமானாலும் செய்யலாம். அப்படி ஏதாவது நடந்தால் உலகப் பேரழகியாக புகழ்பெற்ற என் அத்தியாயத்தில் அந்த அவல அசிங்க வரிகளும் இடம்பெற்று விடும்’ என்று பயந்தாள்.

மரணம் அந்த பேரழகியை முத்தமிட நாள் குறித்து விட்டது.

அன்று... கிளியோபாட்ராவை பணிப்பெண்கள் சூழ்ந்திருக்கிறார்கள். அவள் முகத்தில் வழக்கத்தைவிட அதிக மகிழ்ச்சியை அவர்கள் பார்க்கிறார்கள். அவள் குளித்து நன்றாக அலங்காரம் செய்துவிட்டு பேரழகுடன் வந்து பணிப்பெண்களோடு அமர்ந்து இறுதி உணவருந்துகிறாள். மகிழ்ச்சியோடு அவர்களிடம் விடைபெற்று தனது படுக்கை அறைக்குள் புகுந்து கொள்கிறாள். அவளோடு மரணமும்...!

ஆக்டேவியன் சீசர் வந்து சேர்ந்தார். கிளியோபாட்ராவை சந்திக்க அவள் படுக்கை அறைக்குள் வேகமாக நுழைந்தார். அதிர்ச்சி... திடுக்கிட்டு நிற்கிறார்... அற்புத அலங்காரத்தோடு தங்கக் கட்டிலில் உயிரற்ற உடலாக கிடந்தாள் அவள்.

படுக்கை அறையில் அவள் பாதுகாத்துவைத்திருந்த ஜாடியில் இருந்த ராஜநாகத்தை தீண்ட வைத்து இறந்தாள் என்றும், அவள் தலையில் எப்போதும் பாதுகாத்த விஷம் பொருத்தப்பட்ட கொண்டை ஊசியால் குத்திக்கொண்டு இறந்தாள் என்றும் இரு கருத்துக்கள்.

அதில் எது உண்மை என்பது மரணத்திற்கே வெளிச்சம்!

இந்த அத்தியாயத்தில் நாம் சொல்ல விரும்பும் விஷயங்கள் இரண்டு.

ஒன்று : மற்றவர்களுக்கு மரணத்தை ஏவி விடுகிறவர்களை, மரணம் விரைவாகவே அதே வழியில் பழிவாங்கி கணக்கை சரிசெய்து கொள்கிறது. மரணம் மட்டுமில்லை, ஒருவன் மற்றவர்களை எந்த வழியில் வீழ்த்துகிறானோ அதே வழியில் அவனும் சிறிது காலத்தில் வீழ்த்தப்பட்டு விடுகிறான்.

இரண்டு : வாழ்க்கை முடியும்போது காலம் அளிக்கும் பரிசுதான் மரணம். அதுவரை காத்திருந்து வாழ்க்கையை தொடராமல் மரணத்தை இடையிலே தேடிக்கொள்வது மாபெரும் தவறு!

இணையம்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல