சனி, 1 மே, 2010

பயணிகளிடம் யாசிக்கத் தடை

பஸ்களில் இனி நிம்மதியாகப் பயணிக்கலாம்!

மே மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பஸ்களிலும் ரயில்களிலும் யாசிப்பதற்கும் வியாபாரம் செய்வதற்கும் தடை வந்திருக்கிறது. அரசு பஸ்களில் யாசிப்பதற்கு தடை இருந்தாலும் கூட யாசகமும் வியாபாரமும் நடக்கத்தான் செய்கிறது.


வறுமைக் கோடு என்பது தனிமனித பொருளாதார அறவீட்டின் மத்திய ரேகை. இந்த ரேகைக்கு மேலே செல்பவன் வசதி படைத்தவனாகவும், அந்த ரேகைக்கு கீழே உள்ளவன் வசதியிழந்தவனாகவும் கணிக்கப்படுகின்றான்.

இன்று இலங்கை முழுவதையும் எடுத்துக் கொண்டு பார்க்குமிடத்து லட்சக் கணக்கானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களாக இருப்பதைக் காண்கிறோம். இவர்களுக்குக் கிடைக் கும் வருமானம் வாழ்க்கையை ஓட்டிக் கொள்ளப் போதுமானதாக இல்லை.

எனவே இவர்கள் வறுமையோடு சதா போராட வேண்டியிருக்கிறது. இவர்கள் ஏதேனும் தொழில் செய்து ஓரளவுக்கேனும் வருமானத் தைப் பெருக்கிக் கொள்ளப் பாடுபடுகின்றனர். உணவு, உடை, உறையுள் என்பவற்றில் ஏதேனும் ஒன்றில் குறை ஏற்படும் போது அதனை சரிக்கட்ட இயலாதவர்களாக துன்பப்படுகின்றனர்.

இந்த வறுமை நிலையை ஓரளவுக்கேனும் குறைப்பதற்காக வேண்டி அரசாங்கம் சமுர்த்தி உதவித் திட்டத்தினை ஏற்படுத்தி ஒவ்வொரு பிரதேசத்திலும் இனங்காணப்பட்டவர்களுக்கு குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உதவிகளைச் செய்து வருகிறது.

என்றாலும் இது முழுமையான வாழ்வாதாரப் பிரச்சினையைத் தீர்த்து விடுவதில்லை.

சமுர்த்தித் திட்டத்தின் நோக்கம் வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். இதற்கென தனியானதொரு திட்ட வடிவமைப்பு உள்ளது.

சமுர்த்தி வங்கிகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக சேமிப்பினையும் ஊக்குவித்து வருகின்றது.

கடன் உதவிகளையும் செய்து வருகின்றது. இதற்கென வருடாந்தம் வரவு செலவுத் திட்டத்தில் பெருந் தொகையான நிதி ஒதுக்கப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது.

இது இவ்வாறு இருக்க இந்த எல்லைக்குள் வராத ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். இவர்கள் தான் யாசகர்கள். இவர்களைப் பொறுத்தவரையில் உணவு, உடை, உறையுள் எதுவுமே இல்லை.

கிடைப்பதை உண்டு இருப்பதை உடுத்தி, இரவு வேளைகளில் கடைத் தெருவோரங்களில் படுத்து உறங்கி, நாளையும் பொழுதையும் யாசகத்திலேயே கழித்து எங்கோ, எப்பொழுதோ இவ்வுலகுக்கு விடை கொடுப்பவர்கள். இவர்களை எவரும் ஏறிட்டும் பார்ப்பதில்லை.

பஸ்ஸில், ரயிலில் நடைபாதையில் கூட்டங்கள் கூடும் இடங்களில் எல்லாம் நீங்கள் தினம் தினம் சந்திக்கும் பாத்திரம்தான் யாசகர்கள். இவர்கள் தெரு வழியே கடை கடையாக ஏறி இறங்குவதையும் நாம் காண்கிறோம். என்றாலும் எல்லோரது தேவைகளையும் ஒரு தனிமனிதனால் தீர்க்க முடியாது.

இவர்களுக்குள்ளே கையிழந்த காலிழந்த முடவர்கள், வாயிருந்தும் பேச்சு வராத ஊமைகள், கண் இருந்தும் விழிப்புலனற்ற குருடர்கள், செவிடர்கள், நோயாளர்கள், உடல் ஊனமுற்றவர்கள், யானைக்கால் கண்டவர்கள், என எத்தனையோ வகையினர் நம் முன்னே நடமாடுகின்றனர். இவர்கள் எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்வது என்பது ஒரு பிரச்சினைதான்.

யாசகம் பெறுவதிலும் பல முறைகளை இவர்கள் கையாள்வதைக் காண்கிறோம். பஸ்ஸிலும், ரயிலிலும் யாசகம் பெறுவது ஒரு வகை, இது பொதுவாக ஓரிரண்டு ரூபாய் சில்லறையைக் கொடுப்பதுடன் முடிந்துவிடுகிறது.

இதுதவிர அழகாக டிப்டொப்பாக ஜீன்ஸ¤ம், டீ சேட்டும் அணிந்து இளைஞர்களும், யுவதிகளும் பஸ்ஸிலும், ரயிலிலும் ஏறி பாடல்கள் பாடி பிரயாணிகளை மகிழ்வித்து கிடைப்பதைப் பெற்றுக் கொள்கின்றனர். இன்னும் சிலர் ‘ரபான்’ இசைத்து ‘விருது’ எனப்படும் கவிபாடுவார்கள்.

இவர்கள் வாகனத்தில் ஏறியவுடன் தம்மைப் பற்றிய ஓர் அறிமுகத்தைச் செய்வார்கள். ‘நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல; நன்றாகக் கல்வி கற்றவர்கள். தொழில் இல்லாமையால் இப்படி உங்கள் முன் வந்திருக்கிறோம். நாங் கள் மூன்று முத்தான பாடல்களை உங்களுக்குத் தருவோம்.

பிரபல பாடகர்களான அல்ஹாஜ் மொஹிதீன் பேக், மில்டன் மல்லவாராய்ச்சி, எச். ஆர். ஜோதிபால ஆகியோர்களின் பாடல்களைத் தருகிறோம். உங்களால் முடிந்ததைத் தாருங்கள்’ என்று கூறிப் பாடத் தொடங்குவார்கள். முடிவில் கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு பஸ்ஸைவிட்டு இறங்கி மற்ற பஸ்ஸில் ஏறி விடுவார்கள். இது பாடிப் பிழைப்பவர்கள்.

‘என்னை மன்னிக்க வேண்டும் நான் பிச்சை எடுக்க வரவில்லை, நான் அரசாங்க உத்தியோகம் பார்த்தவன். ஒலிபரப்பு ஊடகம் ஒன்றில் ஒலிபரப்பாளனாக இருந்தவன். எனது தாய் கிட்னி சத்திர சிகிச்சைக்கு உள்ளாகி இருக்கிறார்.

அதற்கு பதின்மூன்று இலட்சம் ரூபாய் தேவை. ஆறு இலட்சம் ரூபாய் ஜனாதிபதி நிதியில் இருந்து தருவதாகச் சொல்லுகிறார்கள் மிகுதியை உங்கள் முன்னிலையில் வந்து இப்படி உண்மையைச் சொல்லிக் கேட்கிறேன்’ என மற்றொருவர் பஸ்ஸில் ஏறி ஆதார புகைப்படப் பிரதிகளையும், புகைப்படங்களையும் காட்டி கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு மறைகிறார்.

இது எவ்வளவு தூரத்துக்கு உண்மை என்பது அவனுக்குத்தான் வெளிச்சம். தேவையான போலி ஆவணங்களைத் தயார் செய்து ஏய்த்துப் பிழைக்கும் ஏமாற்று வித்தைக்காரர்களும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பொதுவான யாசக முறைகளில் இருந்து விடுபட்டு புதிய புதிய உக்திகளைக் கையாளவும் அவர்கள் தவறுவதில்லை. பிரயாணிகள் ஆசனங்களில் அமர்ந்திருக்கும் போது ஒரு சிலர் துண்டுப் பிரசுர வடிவில் தயாரிக்கப்பட்ட அட்டைகளை ஒவ்வொருவர் மடியிலும் கரங்களிலும் திணித்து விடுவார்கள்.

அந்தத் துண்டுப் பிரசுர அட்டையில் ‘தனக்குப் பேச முடியாது’ என்றோ, தெய்வத்துக்கு காணிக்கை படைப்பதற்கென்றோ ஏதோ ஒரு காரணத்தைக் குறிப்பிட்டு வித்தியாசமான முறையில் பணத்தை வசூல் செய்ய முயற்சிப்பார்கள்.

பஸ் புறப்பட தயாரானவுடன் திரும்பவந்து அந்த அட்டைகளைச் சேகரிக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்பொழுது சிலர் காசுடன் அதனைத் திருப்பி ஒப்படைப்பர். சிலர் அந்த அட்டையை மாத்திரம் கொடுத்து விடுவதுண்டு. இது ஒரு வகையான யாசக முறை.

சில இடங்களில் ஆண்களும் கையில் குழந்தையை ஏந்திக் கொண்டு யாசிப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஒரு குழந்தை அறிமுகமற்றவர்களிடம் செல்வதில்லை. அப்படியானால் பிறத்தியார் குழந்தைகளை ஆண்களும் பெண்களும் முழு நாளும் எப்படிக் காவித்திரிய முடிகிறது என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

இக் குழந்தைகளுக்கு காலையிலேயே மது அல்லது கஞ்சாவைக் கொடுத்துவிடுவார்களாம். இந்தப் போதையில் ஆழ்ந்து போன குழந்தைகளை தூக்கிக் கொண்டு நாள் முழுவதும் திரிந்தாலும் தம்மைக் காவித் திரிவது யார் என்பதை அக் குழந்தைகள் கண்டு கொள்வதில்லை.

இக்குழந்தைகள் பிற்காலத்தில் கிரிமினல்களாக அல்லது போதை பழக்கத்துககு அடிமையாளர்களாக மாறிவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், பிச்சை எடுப்பதற்காக குழந்தைகளின் எதிர்காலத்தையே பிய்த்து எறிவதென்றால்...!

இன்று பஸ், ரயில்களில் பிச்சை எடுப்பவர்கள் அவர்களாக முன்வந்து யாசிப்பவர்கள் அல்ல என்றும் ஒரு குழுவினரே இவர்களைப் பிச்சை எடுக்கச் செய்வதாகவும் தெரிய வந்துள்ளது.

நாள் முடிவில் தமது வருமானத்தை இவர்கள் தமது ‘முதலாளி’மார்களிடம் ஒப்படைத்து தினக் கூலியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த யாசகர்கள் தினமொன்றுக்கு சராசரியாக மூவாயிரம் முதல் ஐயாயிரம் ரூபாவரை திரட்டுகிறார்களாம். யாசகம் என்பது. இன்று ஒரு தொழிலாகவே நடத்தப்படுகிறது.

சிறுவர்கள் முதல் வயோதிபர் வரை பலரும் இதில் சோகக் கதை சொல்லி பிச்சை எடுக்கும்படி தூண்டப்படுகிறார்கள். இந்தப் பிச்சைக்காரர்கள் எவ்வளவு நேர்த்தியாக பேசுகிறார்கள். பாடுகிறார்கள்! இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது பல பயணிகளின் கருத்து.

யாசகம் என்பது எப்படிப்பட்ட தலைவலி என்பதை வர்த்தகர்களிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும். ஒவ்வொரு சீசனுக்கும் எதையேனும் காரணம் காட்டி வசூலுக்கு வந்துவிடுவார்கள் என்பார்கள் கடைக்காரர்கள். யாசகத்துக்கென தினமும் ஒரு தொகையை ஒதுக்கி வைத்துவிட வேண்டுமாம்!

மிருகங்கள் தமக்கென ஒரு எல்லையை வகுத்து வைத்திருக்கும். அந்த எல்லையைத் தாண்டி வெளி மிருகம் உள்ளேவர அவை அனுமதிப்பதில்லை. யாசகர்களும் இப்படி ஒரு எல்யையை வைத்திருக்கிறார்கள். வெளி இடத்தைச் சேர்ந்த யாசர்கள் அந்த எல்லைக்குள் வர முடியாது.

வந்தால் சச்சரவு தான். சில நகரங்களில் குறிப்பிட்ட தினத்தில் வந்தால் மட்டுமே கடைக்காரர்கள் பிச்சை போடுவார்கள். அந்தப் பகுதி யாசகர்களுக்கு எந்தெந்த நாள்களில் எந்தெந்த பகுதிக்குப் போனால் வருமானம் கிடைக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள்.

ஆனால் ஒருவர் சொல்கிறார் யாசகம் தடை செய்யப்படுவதெல்லாம் சரிதான். எனினும் இந்தப் பிச்சைக்காரர்களில் வாழ வழியில்லாத ஒரிஜினல் யாசகர்கள் இருக்கிறார்கள். யாசிக்கத் தடை என்றால் இவர்கள் எப்படி வாழவார்கள்? பாதிக்கப்பட்ட பல பெண்கள் வேறு வழியின்றி பிள்ளைகளைக் காப்பாற்ற வீதிக்குத்தானே வரவேண்டியிருக்கிறது? என்பது இவரது வாதம்.

யாசகம் என்பதே தவிர்க்கப்பட வேண்டிய ஒரு சமூக நோய். பிச்சைக்காரர்களை இல்லாமல் செய்வதே நாட்டின் கொள்கையாக இருக்க வேண்டும்.

பஸ்களில் யாசிக்காவிட்டால் அல்லது வியாபாரம் செய்யாவிட்டால் இவர்களின் வாழ்க்கையே இருண்டுவிடும் என்று சொல்லிவிட முடியாது. இத்தடை மூலம், வியாபார ரீதியாககபிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கையும் குற்றப் பின்னணி கொண்டவர்களையும் குறைக்க முடியும்.

வாழ வழியில்லாதவர்களின் கதி?

வாழ வழி இல்லை என்பது சோம்பேறிகளின் வாதம் என்றும் வாழ வழி இல்லை என்பதால் விபசாரம் செய்யலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்றும் சிலர் கேட்கிறார்கள். சில சந்தர்ப்பங்களைத் தவிர வாழவே வழி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாழ்க்கையில் வாழ்வதற்கு வாசல்கள் திறந்தே கிடக்கின்றன. நாம்தான் பயன்படுத்திக் கொள்ளத் தவறி, குறுக்கு வழிகளை நாடுகிறோம். யாசிப்பது அவ்வாறான வழிகளில் ஒன்று.

இனி, மீண்டும் யாசகர்களிடம் வருவோம்.

அடுத்து பெண்களிடம் கைக் குழந்தைகளைக் கொடுத்து யாசகம் செய்விக்கும் முறை.

இரவு நேரமானால் யாசகர்கள் அத்தனை பேரும் தெருவோரப் படுக்கைகளுக்கு ஆஜராகிவிடுவார்கள். சிலர் தமக்குரிய வானொலிப் பெட்டிகளை வைத்துப் பாடல்கள் ரசித்த வண்ணம் அளவலாவிக் கொண்டும், சிலர் சேர்ந்த பணத்துக்கு தண்ணீரை உள்ளே செலுத்தி உளறிக் கொண்டும் இருப்பார்கள்.

பிச்சை ஏற்றாலும் இச்சைப்படி உல்லாசமாக பொழுதைக் கழிப்பார்கள் அவர்கள். இடைக்கிடையே சில அசம்பாவிதங்களும் தகாத செய்கைகளும் அரங்கேறுவது வாடிக்கை. எனினும் விடிந்தால் எல்லாம் சமரசமாகி விடும். இவர்கள் மத்தியில் சாதி, மதம், மொழி பேதங்கள் கிடையாது.

இம்மாதம் முதல் பஸ்களிலும் ரயிலிலும் யாசகம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. தனியார் பஸ் உரிமையாளர்கள் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார்கள். எனவே பிரயாணிகள் ஓரளவு நிம்மதியாக பிரயாணம் செய்ய முடியும் என்பது உண்மை.

என்றாலும் பிச்சைக்காரர் பிரச்சினைக்கு ஒரு வழியைக் காண்பது காலத்தின் தேவையாகும். பிச்சை ஏற்பவர்களில் வயோதிபர், பெண்கள், சிறுவர்கள் என உள்ளனர்.

இவர்கள் பிச்சை ஏற்பதை இலகுவான தொழிலாகக் கருதுகிறார்கள். உடல் வலிமை கொண்டவர்கள் கூட பிச்சை எடுப்பதைக் காண முடிகின்றது. இவர்களுக்கு நன்றாக உழைத்து உண்ண முடியும். இவர்களின் மூலதனம், நம்முடைய இரக்க சுபாவம் தான்.

இவர்களை இனங்கண்டு அதிலிருந்து இவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வறுமை ஒழிப்புக்கு வழி ஒன்றைக் காண்பது மிக மிக முக்கியம். அப்பொழுதுதான் நாளுக்கு நாள் பெருகி வரும் இத்தொழிலில் ஈடுபடுபவர்களை குறைக்க முடியும்,

வடக்கு கிழக்கை எடுத்துக் கொண்டால் மூன்று தசாப்த காலங்களாக யுத்த அரக்கனின் பிடியில் இருந்து தற்பொழுதுதான் விடுபட்டு இருக்கிறார்கள் மக்கள். இவர்களில் அநேகம் பேருக்கு இருக்க இடமோ உடுக்க உடையோ வருமானமோ கிடையாது.

இவர்களை யாசகர்களாக்க முடியாது. இதைத் தடுக்க அவர்கள் வாழ வழி அமைத்துக் கொடுக்கப்பட வேண்டியது அவசியம். ஏனெனில் இவர்கள் விரும்பி யாசகத்துக்கு வர மாட்டார்கள். வேறு வழியின்றி தான் தெருவுக்கு வருவார்கள். இதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல