செவ்வாய், 18 மே, 2010

“நடைபாதை வியாபாரம் அல்ல, இது சுயதொழில் முயற்சி...”

நடைபாதை வியாபாரம் ஒரு சாதக, பாதக அலசல்

கொழும்பு வீதிகள் பார்ப்பதற்கு துடைத்து விட்ட மாதிரி தெளிவாகக் காணப்படுகின்றன. புறக்கோட்டையில், பின்னால் வாகனங்கள் வருகின்றனவா எனத் திரும்பித் திருப்பிப் பார்த்தபடியே வீதியில் இறங்கி நடக்கத் தேவையில்லை. பாதசாரிகளுக்கான நடைபாதை துப்புரவாக இருக்க அமைதியாக, வேகமாக எம்மால் நடக்க முடிகிறது. ஏனென்றால் கொழும்பில் நடைபாதை வியாபாரம் அல்லது ‘நடைபாதை வேர்ல்ட் மார்க்கட்’ முற்றாக அகற்றப்பட்டிருக்கிறது.

இதுவொன்றும் புதிய விடயம் அல்ல. இரண்டாயிரமாம் ஆண்டின் ஆரம்பப் பொழுதுகளில் அன்றைய அமைச்சர் மங்கள சமரவீர எடுத்த நடவடிக்கையின் போது மாநகர சபையின் அனுமதி பெறாத கட்டடங்களும் நடைபாதையோர கடைகளும் அகற்றப்பட்டன. ஆனால் கொஞ்ச காலத்துக்குத்தான். அரசாங்கம் மாறியதும் மீண்டும் கடைகள் வந்துவிட்டன. இப்போது கொழும்பு, கண்டி ஆகிய நகரங்களில் நடைபாதைக் கடைகள் அப்புறப்படுத்தப் பட்டுள்ளன. மெயின் வீதி வழியாகச் சென்றால் பாதை விசாலமாகி இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முன்னர் புறக்கோட்டை வீதி வழியாக நடப்பதானால் முட்டி மோதிக் கொள்ள வேண்டியிருக்கும். இந்த வியாபாரிகள் தரக்குறைவான பொருட்களையும் அழுகிய பழங்களையும் அவசரமாக செல்லும் பயணிகள், பாதசாரிகள் தலையில் கட்டி வந்தார்கள்.

இந்த நடவடிக்கையில் சில நூறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்தான். எனினும் மொத்தமாக எடுத்துக்கொண்டால் நல்லதே நடந்திருக்கிறது. ஏனெனில், பல வீதி விபத்துக்களுக்கு இந் நடைபாதை வியாபாரம் காரணமாக இருந்திருக்கிறது.

நடைபாதை வியாபாரிகள் தாம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதியிடம் முறையிட்டிருக்கிறார்கள். இதை கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி, பாதசாரிகளைப் பாதிக்காதபடியும் நகரின் அழகு கெடாதபடியும் மாற்று நடவடிக்கைகள் மூலம் வியாபாரிகளின் குறைகளைக் களையுமாறு உத்தரவிட்டிருக்கிறார். இதன் பிரகாரம் புறக்கோட்டை அரச மரச் சந்திக்கும் பஸ் நிலையத்துக்கும் இடையே கடைகளை உடனடியாக அமைக்கும்படி ஆலோசனை வழங்க அது இப்போது துரிதமாக கட்டட வடிவமெடுத்துக் கொண்டிருக்கிறது.

நடைபாதை வியாபாரம் தொடர்பாக இங்கே சிலரிடம் கருத்துகள் கேட்டோம். அவற்றை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.

சுயதொழில் புரிவோருக்கான சம்மேளனத்தின் தலைவர் மகிந்த கஹந்தகமவை புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள வேர்ல்ட் மார்க்கட் (தீorlனீ ணிarkலீt) கட்டட மேல் மாடியில் அமைந்துள்ள சம்மேளன காரியாலயத்தில் சந்தித்தோம். மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் எம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அவருடன் உரையாடினோம்.

எமது ‘சுயதொழில் புரிவோருக்கான சம்மேளனத்தில்’ அகில இலங்கை ரீதியில் சுமார் 12 ஆயிரம் பேர் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் அனைவரும்,

1) சிறிய வியாபாரிகள்

2) சுமை தொழிலாளர்கள்

3) கைவண்டி இழுப்பவர்கள்

4) முச்சக்கர வண்டி சாரதிகள்

5) லொறிச் சாரதிகள், மற்றும் அதன் உதவியாளர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். தமது வீட்டிலிருந்து காலை உணவு தயாரித்து கடைகளுக்கு கொடுப்போர், வீட்டிலே கடதாசி உறை ஒட்டுபவர்கள், பத்திக்குச்சி செய்பவர்கள் என்று இன்னும் பல சிறுகைத்தொழில்களில் ஈடுபட்டிருப்போரும் இச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

கண்டி, கதிர்காமம், அநுராதபுரம், காலி, மாத்தறை, இரத்தினபுரி என்று பல நகரங்களிலும் எமக்கு அங்கத்தினர் உள்ளனர்.

எமது அங்கத்தினர்களிடம் வருடாந்தம் 365/- அல்லது தினம் 1/- ரூபா என்ற அடிப்படையில் சந்தா அறவிடப்படுகிறது.

அங்கத்தவரிடம் அறவிடப்படும் சந்தா பணத்தைக் கொண்டே எமது கிளைகளின் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

அத்துடன் அங்கத்தினர்களுக்கு ஏதாவது நடந்தால் அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருகின்றோம். அவர்களின் குடும்ப அங்கத்தினர்களின் சுயதொழில் முயற்சிகளுக்கும் நாம் உதவி வருகின்றோம்.

நாட்டை அபிவிருத்தி செய்யவும் நகரை அழகுப்படுத்தவும், நாம் தடையாக இருக்கப் போவதில்லை. ஆனால், நாட்டின் மக்களும், நகரின் மக்களும் எந்தவிதமான அவலங்கள் இன்றி தங்களின் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்தக்கூடிய வழி வகைகளை ஏற்படுத்த வேண்டும்.

நடைபாதை வியாபாரிகளை அகற்றியதற்கு நாம் எதிரானவர்கள் இல்லை. ஆனால், அங்கு வியாபாரம் செய்தவர்களின் நலன்களைக் காப்பாற்ற மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் மங்கள சமரவீர போன்றவர்கள் எடுத்த தான்தோன்றி நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரம் சிறு வியாபாரிகள் அகதிகளாகினர். அதன் பயனை மங்கள சமரவீர அனுபவிக்கிறார். என்று அவர் பேச்சை ஆரம்பித்தார்.


கேள்வி : நடைபாதை வியாபாரிகள் மக்களை ஏமாற்றுவதாக மக்கள் கூறுகிறார்களே?

பதில் : ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது நடைபாதை வியாபாரிகள் என்று யாரும் இல்லை. ஒரு காலத்தில் அவ்வாறான ஒரு பகுதியினர் இருந்தனர். அவர்கள்தான் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது, துன்புறுத்துவது என்று பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்தனர். ஆனால் இன்று சுயதொழில் புரிபவர்கள்தான் உள்ளனர். எமது சம்மேளனம் எமது அங்கத்தினரை நல்வழிப்படுத்தி, சுயதொழிலின் மேன்மையை எடுத்துச் சொல்லி வருகிறது.

கடந்த காலங்களில் அரசியல் வாதிகளின் அடிவருடிகள்தான் இவ்வாறான துர்ச் செயல்களில் ஈடுபட்டார்கள். ஏமாற்றுபவர்கள் எங்குதான் இல்லை! எமது கண்களுக்கு புலப்படாமல் எம்மை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். நாமும் ஏமாற்றப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றோம். இவ்வாறான பிரச்சினைகள் எமக்கு வந்தால் நாம் உடன் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்டஈட்டை பெற்றுக்கொடுப்போம்.

தினம் சுமார் ஒரு இலட்சம் பேர் எம்மிடம் பொருட்களை கொள்வனவு செய்கிறார்கள். எம்மை தேடி வருபவர்களில் அனேகர் குறைந்த வருமானம் உடையவர்கள். இந்த நாட்களில் அவர்களின் நிலை மிக மோசமானது. பத்து ரூபாய்க்கு விற்ற அப்பிளை இன்று கடைகளில் நாற்பது ரூபாய்க்கு விற்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது வாடிக்கையாளர்கள்தான்.


கேள்வி : அரச காணிகளில் அத்துமீறி கட்டடங்கள் அமைத்தபடியால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும், அதனால் பல கோடி ரூபாய்கள் நஷ்டமடைவதாகவும் கூறுகிறார்களே?

பதில் : ஆம். அது முற்றிலும் உண்மை. கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் அடியாட்களும், அவர்களின் ஆசை நாயகிகளுமே இவ்வாறான இடங்களில் வர்த்தக நிலையங்களை அமைத்தார்கள். இவை இலட்சக் கணக்கில் விலை போனது. இது மக்களுக்குத் தெரியும்.

இன்று கொழும்பு மெயின் வீதியில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட பல கடைகள் பல அடுக்கு மாடிகளாக நிற்கின்றன. அத்துடன் அவை நகர அபிவிருத்தி சபையின் அனுமதியையும் பெறவில்லை. இதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த வீதியில் போகிறவர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயம் இது. கொழும்பு நகரின் அனைத்து கடைகளுக்கும், வீடுகளுக்கும் ஒரு வரைபடம் உண்டு. அதன் பேரில்தான் மாநகர சபையினர் வரி அறவிடுவார்கள். புதிய திருத்தம் செய்வதாயின் மாநகர சபையின் அனுமதிபெற வேண்டும். இன்று மெயின் வீதியில் நடைபாதையை பிடித்து கட்டிய கடைகளுக்கு அனுமதி அளித்தது யார்? நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஊழல்தான் இதற்குக் காரணம்.


கேள்வி : இது தொடர்பாக நீங்கள் யாரிடம் முறையிட்டீர்கள்?

பதில் : எமது நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதியை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறினோம்.


கேள்வி : ஜனாதிபதி உங்கள் பிரச்சினைகளுக்கு என்ன பதில் சொன்னார்?

பதில் : எமது ஜனாதிபதி தனது மஹிந்த சிந்தனை 2ல் சுயதொழில் புரிவோரைப் பற்றி மிக விரிவாக விளக்கியுள்ளார். கடந்த காலங்களில் போல் அல்லாது சுயதொழில் புரிவோருக்கான ஓர் காரியாலயத்தை அமைப்பது சம்பந்தமாகவும், அரச வங்கிகளில் தின அடிப்படையில் குறைந்த வட்டியில் பணம் கிடைக்க வழி செய்வது போன்ற இன்னும் பல நல்ல திட்டங்கள் அவரிடம் உள்ளன. எமது அங்கத்தவர்களின் தற்போதைய நிலையை நான் மிக விளக்கமாக எடுத்துக் கூறியதன் விளைவாக எமது நிரந்தர அங்கத்தவர்களுக்கு ரூபா இரண்டாயிரம் வீதம் தற்காலிக நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுத்தார். விரைவில் இவர்கள் வியாபாரம் செய்வதற்கு மாற்றிடம் வழங்கப்படும் என்றும் சொன்னார். கடை நிர்மாண வேலைகளும் துரிதகெதியில் நடைபெறுகிறது.


கேள்வி : சுயதொழில் முயற்சியில் யார் யார் ஈடுபடுகிறார்கள் என்று கூறமுடியுமா?

பதில் : சுயதொழில் என்பது அவரவர் விருப்பம். வசதி அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகும். படித்தவர்கள், படிக்காதவர்கள் படித்துவிட்டு வேலை செய்து ஓய்வூதியம் பெற்று, மேலதிகமாக ஏதாவது உழைக்க முயற்சிப்பவர்கள் என்று பலதரப்பட்டோர் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். ஆகவே அனைத்து மக்களும் சுயதொழில் முயற்சியில் ஈடுபடலாம்.

அடுத்ததாக சாதாரண மக்கள் சிலரைக் கண்டு பேசினோம். அவர்களில் ஒருவர் தன்னை அடையாளம் காட்ட விரும்பாமல் எம்முடன் உரையாடினார்.

இலங்கையின் மொத்த சனத்தொகை சுமார் 2 1/2 கோடி என்று வைத்துக்கொணடாலும், அவர்கள் அனைவருமே நடைபாதை வியாபாரம் கூடாது என்றுதான் கூறுவார்கள்.

இலங்கையை நேசிக்கும் நாம் நாட்டையும், நகரையும் வளமாக்க வேண்டும். இந்நாட்டை கடந்த மூன்று தசாப்த காலமாக பயங்கரவாதம் ஆட்டிப்படைத்து வந்தது. இப்பொழுது தான் நாம் அனைவரும் பூரண சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது. அதற்காக ஒரு சில தியாகங்கள் செய்யத்தான் வேண்டும்.

அதேவேளை நடைபாதை வியாபாரிகளின் நன்மை கருதி ஏதோ ஒரு வகையில் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தான் வேண்டும்.

தென் பகுதியில் பல அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. அந்த பகுதியைச் சேர்ந்த அதேசமயம் தற்போது கொழும்பில் நடைபாதையில் வியாபாரம் செய்பவர்களுக்கு அந்த திட்டங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

எல்லோரும் கொழும்பில்தான் இருப்போம் என்றால் முடியாத காரியம். ஒரு சிலருக்கு நான்கு, ஐந்து தட்டுகள் (படைபாதை கடைகள்) வைத்திருக்கிறார்கள் அவர்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும் என்றார் இவர்.

இதேவேளை ஒல்கொட் மாவத்தையில் உள்ள நடைபாதை கடைகள் அகற்றியது தொடர்பாக அங்குள்ள கடை உரிமையாளர்களிடம் உரையாடினோம்.

நடைபாதை கடைகளை அகற்றியது மிகவும் நல்லது. மிகச் சரியான நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். நாம் பாராட்டுகிறோம். நாடும், நகரும் அபிவிருத்தியம், அழகும்பெறுவது அவசியம். அந்த வகையில் நாம் சந்தோஷப்படுகிறோம். கடை வாடகை, மாநகர வரி, விற்பனை வரி, வருமான வரி, என்று பல வரிகளை செலுத்தும் எமது பிரச்சினைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.

நடைபாதை வியாபாரிகள் பலர் மூர்க்கத்தனமாக வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்வதை நான் நேரடியாகவே கண்டுள்ளேன். ஆனால் ஒன்றும் பேச முடியாது. இப்பொழுது ஒல்கொட் மாவத்தை மிகவும் தூய்மையாக சந்தடியின்றி காணப்படுகிறது என்று கூறிய இவர், தனது பெயரையோ, வியாபார நிலையத்தின் பெயரையோ வெளிப்படுத்த வேண்டாம் என்று வினயமாக கேட்டுக்கொண்டார்.

எங்கள் தந்தையார் காலந்தொட்டே நான் இந்த ஒல்கோட் மாவத்தையில் தொழில் புரிகிறேன். அந்த காலத்தில் வெளிநாட்டு பேனா, வெளிநாட்டு கடிகாரம் என்று மக்களை ஏமாற்றியதை நான் அறிவேன். எனினும் அவர்கள் வேறு வடிவில் இன்றும் பவனி வரத்தான் செய்கிறார்கள். வாடிக்கையாளர்களை மதிக்காமல் அவர்களை கேலி கிண்டல் செய்யும், பெண்களின் அவயவங்களை தீண்டும், பச்சையாக வசனங்களை உதிர்க்கும் அவர்களால் ஒல்கொட் வீதி நிரம்பியிருந்தது.

ஒரு சிலர் உண்மையாகவே உழைத்துப் பிழைக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அவ்வாறானவர்களை இனம் கண்டு அவர்களுக்கு மாற்று நடவடிக்கை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக நடைபாதையில் சுயதொழில் செய்யும் சிலரைச் சந்தித்துப் பேசினோம்.


சாலிகா தர்ஷனி (வயது 28)

நான் வசிப்பது கொழும்பு கொச்சிக்கடையில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உண்டு. அவர்கள் இருவரும் படிக்கிறார்கள். கணவன் நிரந்தர தொழில் அற்றவர்.

ஆகவே குடும்பத்தை நடத்த, கொழும்பு மாநகர சபையின் அனுமதியுடன் நடமாடும் வண்டியில் வியாபாரம் செய்து வருகிறேன். இதற்கு நான் வருடாந்தம் ரூபா 500/- மாநகர சபைக்கு செலுத்தி வருகிறேன்.

இப்பொழுது வண்டியில் வியாபாரம் செய்யவிடாது தடுக்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றார் இவர் கண்ணீர் மல்க.


மாரி ஆரியபால (வயது 45)

கடந்த பல வருடங்களாக லிப்டன் சுற்று வட்டத்தில், சட்டைப்பின் போன்ற சிறு பொருட்களை விற்பனை செய்து வருகிறேன்.

எனக்கு தொழில் ஏதேனும் செய்ய முடியாது. மாற்று வலுவுடைய நான் இந்த வியாபாரத்தை விட்டால் ஏதும் செய்ய முடியாது.

இந்த வியாபாரம் சம்பந்தமாக நான் வருடாந்தம் ரூபா 2 ஆயிரம் கொழும்பு மாநகர சபைக்கு செலுத்தி வருகிறேன். (அதற்கான ரசீது இதுதான் என்று காட்டினார்.) அப்படி இருந்தும் இப்பொழுது வியாபாரம் செய்யவிட மாட்டேன் என்கிறார்கள். என்ன செய்வது? எங்கே போவது என்றே தெரியவில்லை.


எஸ். தங்கேஸ்வரன்:

பிறந்த இடம் நாவலப்பிட்டி பாரண்டா தோட்டம். வெஸ்ட் ஹோல் தமிழ் வித்தியாலயத்தில் ஆண்டு 10 வரை படித்தேன். தொடர்ந்து படிக்க எங்கள் குடும்பநிலை இடம்கொடுக்காததால் கொழும்பு வந்து சிறிய சம்பளத்தில் வேலை செய்து இப்பொழுதுதான் கொஞ்சம் பணம் கடனாக வாங்கி கேஸ்வேர்க் வீதி 100 அடி திட்டத்தில் வியாபாரம செய்கிறேன். அந்த 100 அடி திட்டத்தின் சுய தொழில் செய்வோர்க்கான சங்கத்தின் தலைவராக பணிபுரிகிறேன்.

திடீரென்று இந்த நடைபாதை வியாபாரத்தை நிறுத்தியதால் பல நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வீதிக்கு வரவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கூடிய விரைவில் இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர மாற்றுத்திட்டத்தை நிறுவி தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தற்காலிக நிவாரணமாக ரூபா இரண்டாயிரம் வழங்க ஜனாதிபதி எடுத்த முடிவை பாராட்டாமல் இருக்க முடியாது.

கே. பொன்னுத்துரை

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல