சிறந்த பெறுபேறுகளுடன் க.பொ.த.வில் சித்தி பெற்றிருக்கும் செவ்வந்தி
இந்நாட்டு பரீட்சை வரலாற்றிலேயே முதல் தடவையக பாய் மீது அமர்ந்து பரீட்சை எழுதி க. பொ. த. சா/த பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று உயர்தரத்துக்கு தகுதிபெற்றிருக்கிறார் நிகவெரடிய விதுகுளிய மத்திய கல்லூரி மாணவி தியாக்யா செவ்வந்தி என்ற வலது குறைந்த மாணவி.
பிறவியிலேயே அங்கக் குறைபாடு கொண்ட இம்மாணவி நிகவரடிய அவ்ளேகம சாங்கபோதி மகா வித்தியாலயத்துக்கு அருகில் வசிக்கிறார். தனது வேலைகளை சுயமாக செய்துகொள்ளவோ நடக்கவோ அல்லது தனது தலையை சமநிலையில் வைத்துக்கொள்ளவோ முடியாத இவரால் தெளிவாகக் கதைக்கவும் முடியாது. இம்மாணவி பாடசாலைக்கு அருகில் வசித்தும் பாடசாலை செல்ல ஆசையோடு இருந்தாலும் அதை நிறைவேற்றி வைக்க முடியாத நிலையில் பெற்றோர் இருந்தபோது இம்மாணவியின் வீட்டிலிருந்து சுமார் ஐந்து மைல் தொலைவில் உள்ள வித்துக்குளிய மத்திய கல்லூரி இம்மாணவிக்கு சந்தர்ப்பம் வழங்கியது. இவரின் பெற்றோரும் ஆசிரியர்கள். தாய் இதே கல்லூரியில் ஆசிரியை என்பதால் இம்மாணவிக்கு இங்கு கல்வியைத் தொடர மிகவும் வாய்ப்பாக அமைந்தது.
செவ்வந்திக்கு அங்கத்தில் குறையிருந்தாலும் அறிவில் குறையேதுமில்லை என்பதை நிரூபிக்கும் முகமாக நடந்து முடிந்த க. பொ. த. சா/த பரீட்சைக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தோற்றினார்.
எல்லா பரீட்சார்த்திகளுக்குமுள்ள விதிமுறைகள் செவ்வந்திக்கும் செல்லுபடியாயின. நாட்டில் எல்லா வலது குறைந்த பரீட்சார்த்திகளுக்கும் வழங்கப்படும் ஒரு மணித்தியாலயத்துக்கு மேலதிக கால் மணி நேரம் இவருக்கும் வழங்கப்பட்டது.
கதிரையில் அமர்ந்து மேசை மீது பரீட்சை எழுதும் விதிமுறைக்கு மாற்றாக பாய்மீது அமர்ந்து பரீட்சை எழுத விசேட அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் இவருக்கென தனியான மேற்பார்வையாளரும் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் கடந்த 2008ம் ஆண்டு முதல் முறையாக க. பொ. த. சா/த பரீட்சைக்கு தோற்றினார். அப்போது இவரால் நான்கு பாடங்களில் மட்டுமே சித்தியடைய முடிந்தது. அதுவும் சாதாரண சித்திகள். இதனால் மிகவும் மணமுடைந்து போயிருந்த செவ்வந்திக்கு இம்முறை சிறந்த பெறுபேறுகளைப் பெறவும் பரீட்சைக்கு தோற்றச் செய்வதற்கும் மன தைரியத்தையும் உற்சாகத்தையும் நண்பிகளும் ஆசிரியர்களும் பெற்றோருமே அளித்தனர்.
எனினும் நம்பிக்கை இழந்திருந்த இவர் தான் பரீட்சையில் சித்தியடைவேன் என்று எதிர்பார்க்க வேண்டாமென தனது தாயிடம் தெரிவித்திருந்தார்.
எனினும் அவளுடைய முயற்சி வீண் போகவில்லை. சுயநம்பிக்கையிழந்திருந்த செவ்வந்தி சிறப்பான சித்திகளைப் பெற்று தனது சுயபச்சாதாப உணர்வையும் வென்றுள்ளார்.
இந்த வெற்றி மூலம் உற்சாகமடைந்துள்ள இவர் சரியான முறையில் தன்னால் எழுத முடியாததால் தனது கையெழுத்து அலங்கோலமாக இருப்பதாகவும் கையெழுத்து நன்றாக இருந்திருந்தால் இதனைவிட அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்க முடிந்திருக்கும் என்றும் சொல்கிறார்.
தான் உயர்தரத்தில் கல்வியைத் தொடர விரும்புவதாகவும் ஊடகத்துறை மற்றும் கணனி கற்கையை விருப்பப் பாடமாகக் கொள்ளவிருப்பதாகவும் சொல்கிறார் செவ்வந்தி.
“எமது கல்வி வலய அதிகாரிகள் இம்மாணவியை முதலாம் ஆண்டிலிருந்தே கல்வி நடவடிக்கைகளில் கரிசனையுடன் கவனித்து வந்தனர்
காரணம் அங்கவீனமான மாணவர்களிலிருந்து இம்மாணவி மிகவும் வித்தியாசப்படுவதை இவர்கள் அவதானித்துள்ளனர்.
இவருடைய திறமை முளையிலேயே வெளிப்பட்டிருந்தது” என்கிறார் நிகரவெட்டிய வலய கல்விப் பணிப்பாளர்களில் ஒருவரான பிரசன்ன ஹெட்டியாராச்சி.
இவரை ஏனைய சாதாரணமாவர்களுடனேயே ஒரே வகுப்பில் அமரச் செந்தோம். அப்படி செய்யாதிருந்தால் இத்தகைய வெற்றியை இம்மாணவியால் பெற முடியாமல் போயிருக்கும்.
இவரது உயர் கல்வியைத் தொடர குருநாகல் நகரின் பிரதான பாடசாலைகளில் ஒன்றை தெரிவுசெய்துள்ளோம். அவருக்கு விரும்பிய துறையை தெரிவுசெய்து படிக்க சந்தர்ப்பம் வழங்கவுள்ளோம். இதற்கென விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்களை சேவையில் அமர்த்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாசிரியர்களுக்கு செவ்வந்தியின் நடவடிக்கைகள், குணநலன்கள், கல்வி நடவடிக்கைகளில் உள்ள ஆர்வம் என்பவற்றை வீடியோ காட்சிகள் மூலமும் பயிற்சி வகுப்புகள் மூலமாகவும் விளக்கமளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்கிறார் ஹெட்டியாராச்சி.
அங்கத்தில் குறையிருந்தாலும் கல்வியைத் தொடர அது தடையாக அமையாது என்பதற்கு செவ்வந்தி ஒரு வாழும் உதாரணம்.
யு. எல். முஸம்மில்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக