செவ்வாய், 18 மே, 2010

குட்டிச் சிறுமி செனுதி கடத்தல் விவகாரம்;: எப்போதும் குழந்தைகள் மீது கண்ணாக இருங்கள்

‘தவறான தொடர்புகள் மூலம் கிடைக்கும் குழந்தைகள் வீசி எறியப் படுகின்றன. மறுபுறம் பணத்துக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றன. கொலை செய்யப்படுகின்றன. மற்றொரு பக்கம் பெற்றோர், பராமரிப்பாளர்களி னால் குழந்தைகள் அடித்துத் துன்புறு த்தப்படுவதோடு வக்கிர உணர்வுகளுக் கும் பலியாக்கப்படுகின்றனர். குழந்தை கள் தலையெடுப்பதற்கு முன்னர் எத்தனை தீயாறுகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது!’

பணத்திற்காக அப்பாவி சிறுவர் களைக் கடத்திக் குரூரமாகக் கொலை செய்யப்பட்ட பல சம்பவங்கள் கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதி களில் இடம்பெற்றுள்ளன. போர்ச் சூழல் முடிவடைந்த பின்னர் இந்த நிலை சற்று குறைந்திருந்தாலும் மீண்டும் கப்பம் கோரி சிறுவர்களை கடத்தும் சம்பவங்கள் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் தரவுகள் கூறுகின்றன.

பிள்ளைகளை வளர்ப்பதற்கு போதிய வசதியில்லை என்று தாய் தனது சின்னஞ்சிறு குழந்தையை களுத்துறை ஆற்றில் வீசிக் கொன்ற சம்பவம் கடந்த தினங்களில் முழு இலங்கையையும் உலுக்கியது. இந்தச் சம்பவத்தினால் தாய்மையின் புனிதம் கேள்விக்குறியாக்கப்பட்டது. இரத்தத்தை பாலாக்கி ஊட்டி வளர்த்த தன் பிள் ளையை தன் உயிரைக் கொடுத்தாவது காக்கவே எந்தத் தாயும் விரும்புவாள்.

அனைவரின் உள்ளத்தையும் கசிய வைத்த களுத்துறைச் சம்பவம் நடை பெற்று சில வாரங்களே கடந்துள்ள நிலையில் மீண்டும் சிறுமியொருவரைப் பற்றிய சம்பவம் முழு இலங்கையை யும் அதிர வைத்துள்ளது.

பெற்றோருடன் களனி விகாரைக்கு வந்த 2 1/2 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் கடந்த வாரத்தில் இலங்கை யில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியது. ஆனால் ஓரிரு நாட்களில் சிறுமி மீட்கப்பட்டது அனைவருக்கும் நிம்மதியை அளித்தது. தனது குழந்தையை பிரிந்து சிறுமியின் தாய் பட்ட வேதனையும் வடித்த கண்ணீரும் கல் நெஞ்சக்காரர்களையும் நெகிழ வைத்தது.

அநாதரவாகக் கிடந்த சிறுமியை தான் காப்பாற்றியதாக சிறுமியை கடத்திய மூதாட்டி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார். ஆனால் இவரின் வாக்குமூலம் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் இவர் கூறியதை அப்படியே நம்புவதற்கு பொலிஸார் தயாராக இல்லை. வெளி நாட்டவருக்கு விற்பதற்காகவே சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தே கமே வலுத்துள்ளது. விசாரணைகள் பல கோணங்களில் முடுக்கி விடப்பட் டுள்ளன. ஓரிரு தினங்களில் சிறுமி கடத்தப்பட்டதற்கான சரியான காரணம் அம்பலமாகிவிடும்.

கடத்தப்பட்ட சிறுமி செனுதி லிமன்ஸாவுக்கு வெறும் இரண்டரை வயதுதான் ஆகிறது. இவருக்கு மூத்த சகோதரர் ஒருவரும் இருக்கிறார். செனுதியின் பாட்டனார் மாபலகம நீண்டகாலமாக புற்றுநோயினால் அவதிப்பட்டு வருபவர். அவருக்கு சுகம் கிடைக்க வேண்டி போதி பூஜை செய்வதற்காக மாபலகம குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதன்படி கடந்த ஞாயிறன்று மாப லகம அவரின் மனைவி, செனுதியின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் களனி விகாரைக்கு பயணமானார்கள்.

செனுதியின் பாட்டன் பாட்டியும் பெற்றோரும் மத அனுஷ்டானங்களில் மூழ்கியிருந்தனர். குட்டி செனுதி தனது சகோதரியுடன் விகாரை வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப் பொழுது பிற்பகல் 2.30 மணியிருக்கும் சிறுமிகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த இடத்துக்கு சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வந்திருக்கிறார். எல்லோரிடமும் சில நிமிடங்களிலே ஒட்டிக்கொள்ளும் சுபாவமுடையவள் தனது பாட்டியை போன்ற வயதான பெண்மணிகளை அவளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

இதனால் குறித்த மூதாட்டியுடன் சில நிமிடங்களிலே செனுதி ஒட்டிக் கொண்டாள். மூத்த சகோதரியும் சிறிய வயதுடையவள் என்பதால் செனுதி பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. செனுதியின் பெற்றோர் பக்கத்தில் இல்லை என்பதை தெரிந்துகொண்ட மூதாட்டி அவளை நைசாக அழைத் துக் கொண்டு அந்த இடத்தைவிட்டும் அகன்றார். அக்காவுடன் செனுதி விளையாடிக் கொண்டிருப்பாள் என்ற நம்பிக்கையில் அவளின் பெற்றோர் பூஜையில் மும்முரமாக இருந்தனர்.

ஒரு சில நிமிடங்கள் கடந்தன. மூத்த மகள் தனியாக இருப்பதைக் கண்ட செனுதியின் பெற்றோருக்கு தூக்கிவாரிப்போட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் களனி விகாரையில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்திற்கு மத்தியில் சிறுமி தொலைந்திருக்கலாம் என அவர்கள் விகாரை முழுவதும் சல்லடை போட்டுத் தேடினர்.

இந்த விசயம் விகாரை முழுவதும் பரவியது. அங்கிருந்த பொலிஸார், பக்தர்கள் அனைவரும் செனுதியை தேட ஆரம்பித்தனர். நேரம் நகர நகர அவளின் பெற்றோருக்கு பயம் அதி கரித்தது. தாயின் அழுகைச் சத்தம் முழு விகாரையையும் அதிர வைத்தது. இரவு வரை தேடியும் சிறுமி கிடைக்க வில்லை. குட்டி செனுதியை அழைத் துச் சென்ற மூதாட்டி இடைவழியில் வைத்து அவளுக்கு யோக்கட் ஒன் றையும் வாங்கிக் கொடுத்தார். பின் மாரவிலயில் உள்ள தனது மகளுக்கு தொலைபேசி அழைப்பொன்றையும் எடுத்து மறுநாள் தான் அங்கு வருவ தாக வேறு அறிவித்திருக்கிறார்.

பின்னர் சிறுமியை அழைத்துக் கொண்டு களனி பட்டிய சந்தியிலுள்ள தனக்கு நெருக்கமான வீடொன்றுக்கு சென்றார். இருவரும் இரவை அங்கு கழித்தனர். தாய் பக்கத்தில் இல்லாவிட் டாலும் மூதாட்டியுடன் ஒட்டிக்கொண்ட செனுதி இரவு அவருடன் சேர்ந்து தொலைக்காட்சி பார்த்தாள். பின்னர் அவருடன் அமைதியாக தூங்கினாள். ஆனால் வயிற்றில் நெருப்பைக் கட்டி க்கொண்டிருந்த அவளின் பெற்றோரோ இரவு முழுவதும் அவ ளின் சிந்தனையிலே கண்ணீரோடு கழிக்க நேரிட்டது.

மறுநாள் விடிந்தது. அவசர அவசரமாக தயாரான சந்தேக நபர் சிறுமியை அழைத்துக் கொண்டு மாரவிலவுக்கு வந்தார்.

ஆனால் அவளின் பெற்றோரோ செனுதி கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் மீண்டும் களனி முழு வதும் மகளைத் தேட ஆரம்பித்தனர். சிறுமியை தேட மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப் பட்டிருந்தது. அவர்க ளும் நகரம் முழுவதும் சிறுமியை தேடுவதில் மும்முரமாக ஈடுபட்டனர்.

செனுதி கடத்தப்பட்ட விடயம் ஊடகங்களி னூடாக வெளியிடப் பட்டிருந்ததால் இந்த சம்பவம் நாடு முழு வதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சிறுமி காணாமல் போன மறுநாளும் அவள் பற்றிய எதுவித தகவலைப் பெற பொலிஸாரினால் முடியவில்லை.

இந்த நிலையில் சிறுமியின் புகைப் படத்தை களனி பகுதியில் ஓடும் ஆட்டோகளிலும் பிரதான இடங்களி லும் ஒட்ட பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதேவேளை மூதாட்டி யொருவருடன் குறித்த சிறுமியை கண்டதாக பொலி ஸாருக்கு தகவல் கிடைத்தது. அவர் தொலைபேசி அழைப்பு பெற்ற கடை கள் பற்றிய தகவல்களும் கசியத் தொடங்கியது. இதன்படி செயற்பட்ட பொலிஸார் குறித்த தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் விசாரணைகளை முடுக்கி விட்டனர்.

மாரவில மற்றும் கல்கிஸ்ஸ பிர தேசங்களுக்கே அந்த அழைப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.

சிறுமி தங்க வைக்கப்பட்ட களனி பட்டிய சந்தி வீட்டிலுள்ளவர்களையும் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தினர்.

நூறுக்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம் பதியப்பட்டாலும் சிறுமி பற்றிய ஒழுங்கான தகவல் எதுவும் பொலிஸாரிடம் சிக்கவில்லை.

இதேவேளை சிறுமி மாரவிலயில் உள்ள மூதாட்டியின் மகளின் வீட்டிலே தங்க வைக்கப்பட்டிருந்தாள்.

இதில் உள்ள ஆச்சரியமான விஷயம், சிறிய செருப்பு ஜோடி தான் கடத்தப்பட்ட சிறுமியை காப்பாற்றியது என்பதாகும். ஆம், அது தான் உண்மை. சிறுமியை கடத்தி வரும் போது அவள் வெறும் கால்களுடனே இருந்தாள். தனக்கு செருப்பு வேண்டுமென்று அவள் அடம்பிடித்ததாலே விசயம் அம்பலமாகியது. கடந்த 11ஆம் திகதி சிறுமி கடத்தப்பட்ட மூன்றாம் நாள் தான் அவள் மீட்கப்பட்டாள்.

சந்தேக நபரின் மகளுக்கு இரு பெரிய மகள்மாரே இருந்தனர். இதனால் சிறுமியின் அளவுடைய செருப்பு ஜோடி எதுவும் அந்த வீட்டில் இருக்கவில்லை. இதனால் சிறுமியை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள வீடொன்றுக் குச் சென்றிருக்கிறார் மூதாட்டி.

வீட்டு கேட்டை தட்டவே உள்ளே இருந்து இளைஞர் ஒருவன் வெளியில் வந்தான். மூதாட்டியொருவர் சிறுமி ஒன்றுடன் கேட்டருகே நின்றிருந்தார். சிறுமியின் கால்களுக்கு பொருத்தமான சிறிய செருப்பொன்றிருந்தால் தருமாறு இளைஞனிடம் அந்த மூதாட்டி கேட்டாள்.

ஆனால் மூதாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் சிறுமியை கண்டதும் அந்த இளைஞனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் ஒரு சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக ஊடகங்களில் கூறப்பட்ட அதே சிறுமி தான் அங்கு நின்றிருந்தாள்.

தனது சந்தேகத்தை நிவர்த்திக்க அவன் நினைத்தான். யாருடைய பிள்ளை என மூதாட்டியிடம் வினவிய போது களனி பன்னலையில் கைவிட ப்பட்டிருந்த குழந்தையை தான் காப் பாற்றியதாக அவர் கூறியிருக்கிறார். சிறுமியை பெற்றோர் தேடுவர் என்ப தால் அவளை பொலிஸில் ஒப்படைக் குமாறு அந்த இளைஞன் கூறினான். ஆனால் மூதாட்டி அதற்குத் தயக்கம் காட்டினார்.

உடனே தனது நண்பன் ஒருவனு டன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவனின் ஆட்டோவை எடுத்து வருமாறு கூறினான். சில நிமிடங்களில் அவனின் வீட்டுக்கு முன் ஆட்டோ வந்து நின்றது.

மூதாட்டியையும் சிறுமியையும் ஆட்டோவில் ஏற்றிய இளைஞன் நேரே மாரவில பொலிஸ¤க்கு சென்றுள்ளார். மாரவில பொலிஸார் உடனடியாக சிறுமி கிடைத்த தகவலை களனி பொலிஸ¤க்கு அறிவித்தனர்.

சின்ன மகள் காணாமல் போன கவலையில் ஊன் உறக்கமின்றி இருந்த செனுதியின் பெற்றோருக்கு அந்த இனிய தகவல் தொலைபேசி மூலம் கிடைத்தது. உடனடியாக மார வில பொலிஸ¤க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். செனுதியின் தாய்க்கு மகளின் குரலைக் கேட்டதும் தான் போன உயிர் திரும்பி வந்தது. ‘அம்மா’ என்று மகள் மறுமுனையில் அழைத்த போது அவளின் தாய் மகிழ்ச்சியில் உறைந்து போனாள். மட்டற்ற மகிழ்ச்சியில் திக்குமுக்காடி யது செனுதியின் குடும்பம்.

களனி பொலிஸாருடன் செனுனியின் குடும்பம் உடனடியாக மாரவில பொலிஸ¤க்கு பயணமானது.

மாரவிலவை அடையும் வரை அவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் ஒரு மணித்தியாலமாகவே கழிந்தது. மாரவில பொலிஸ¤க்கு வந்த தாயை செனுதி ஆரத்தழுவி உச்சி முகர்ந் தாள். இந்தக் காட்சி அங்கிருந்தவர் களை மட்டுமன்றி பொலிஸாரையும் கண் கலங்க வைத்தது.

கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டாலும் இந்த சம்பவம் இன்னும் கேள்விக்குரி யாகவே உள்ளது.

ஏனென்றால் இந்தக் கடத்தல் நாடக த்தின் பிரதான நடிகையான மாரவில பகுதியைச் சேர்ந்த மூதாட்டி பொலி ஸில் அளித்துள்ள வாக்குமூலம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததே அதற்குக் காரணம். தான் சிறுமியைக் கடத்தவில்லை என இவர் அடித்துக் கூறியுள்ளார்.

களனி விகாரையில் வழிபட்ட பின் கடந்த 11ஆம் திகதி தான் புறக்கோட்டை குணசிங்கபுர பஸ் தரிப்பிடத்துக்கு வந்தாராம். அங்கே இளைஞன் ஒருவர் சிறுமியுடன் காணப்பட்டதாக வும் தான் குழந்தையை கஷ்டப்பட்டு வளர்ப்பதாகவும் 400 ரூபா தந்தால் குழந்தையை தருவதாகவும் அந்த நபர் கூறினாராம். அதன்படி 300 ரூபா கொடுத்து தான் குழந்தையை வாங்கி யதாக இவர் பொலிஸில் வாக்குமூல மளித்துள்ளார்.

தனக்கு எந்த வசதியும் இல்லை என்றும் பிள்ளைகள் கூட தன்னை பார்ப்பதில்லை என்று வேறு இவர் கூறியிருக்கிறார். வசதியில்லாத நிலை யில் எப்படி பிள்ளையொன்றை வளர் க்க முடியும் என பொலிஸார் கேட்ட கேள்விக்கு சந்தேக நபர் பதில் சொல்ல முடியாமல் திணறியுள்ளார்.

இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமி தங்க வைக்கப் பட்ட மாரவில வீட்டு உரிமையாள ரான சந்தேக நபரின் மகளின் இரு பேத்திகளும் கூட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரின் மகள் சைப்ரஸிலே பணிபுரிந்திருப்பவள். இவரின் இரு மகள்களும் கொன்வன்ட் ஒன்றில் கல்வி கற்கின்றனர். சந்தேக நபரோ மாரவில வீட்டில் இருந்துள்ளார். சில வாரங்களுக்கு முன் தான் நாடு திரும் பியதாகவும் ஆனால் தனது வீட்டை தாய் வாடகைக்குக் கொடுத்து பணம் பெற்று வந்துள்ளதாகவும் அவரின் மகள் பொலிஸில் கூறியிருக்கிறார். இதனால் தான் தாயை வீட்டை விட்டுத் துரத்தியதாகவும் கடந்த 11ஆம் திகதி தாய் சிறுமியொன்றுடன் வீட்டுக்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். சந்தேக நபர் நீதிமன்றத் தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரின் மகளும் இரு பேத்தி மாரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

செனுதி வெளிநாட்டவர் ஒருவருக்கு விற்பதற்காக கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதால் அந்தக் கோணத்திலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வேலைப்பளு மற்றும் பிரச்சினை களினால் பிள்ளைகளை மறந்துவிடும் பெற்றோருக்கு செனுதியின் கடத்தல் சம்பவம் சிறந்த பாடமாகும்.

எத்தனை தான் வேலை இருந்தாலும் எப்போ தும் தமது குழந்தைகளின் மீதே கண் வைத்திருப்பது பெற்றோரின் பொறுப்பு.

எம். எஸ். பாஹிம்...

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல