இலஞ்சம் பெறல், மோசடி, மற்றும் குற்றச் செயல்களை செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினாலும் தர்மத்தின் அடிப்படையில் அவர் தண்டிக்கப்படுவது உறுதி.
தலைநகருக்கு அண்மையில் உள்ள ஒரு ஊரில் இருபத்துரெண்டு வயதுடைய இளைஞன் வாழ்ந்து வந்தான். இவருடைய பெயர் பிரகீத். வெறித்து பார்த்துக் கொண்டிருப்பது, திடீரென கூச்சலிடுவது, தாயை ஏசுவது. தாக்குவது, கொலை செய்ய முயற்சிப்பது போன்ற பிறழ்மன குணங்களை இவர் கொண்டிருந்தார்.
கடந்த மூன்று வருடங்களாக இவரிடமிருந்த இந்தத் தீய குணங்களால் தாய் சுனந்தா மிகுந்த கவலையடைந்திருந்தார்.
மகனுக்கு தேவையான சிகிச்சையுமளித்தார். சில காலங்களின்பின் இவரது நோய் சுகமாகியுள்ளதாக உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் நம்பினர்.
உளவியல் நிபுணர்களிடமும் இவர் சிகிச்சை பெற்றார். எனினும் மகன் சுகம்பெறவில்லை என்பதை தாய் சுனந்தா உணர்ந்து கவனமாக செயல்பட்டார். மகன் பேரில் செத்கவி, போதிபூஜைகளை நடத்தி சுகம் பெற வேண்டினார்.
மகன் பிரகீத், தாயை கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்து உன்னை நான் கொல்வேன் எனக்கூறி, சில சமயங்களில் தாவி அவரது கழுத்தை நெரிக்க முயற்சிப்பார்.
மகனின் நிலை திடீரென மாறியதை அறிந்து தாய் சுனந்தா அயலவரின் வீட்டுக்குள் ஓடி ஒளிந்துகொள்வாள். இவ்வாறான சூழலில் மகனை சுகப்படுத்த இம்முறை மாந்திரிகரை நாடினார் சுனந்தா.
மாந்திரிகர் அவரது வேலைகளை ஆரம்பிக்கும் போது பிரகீத் மாந்திரிகர்களை தாக்கி துரத்துவான். இவை தொடர் கதையாகவே வேறு வழியின்றி அத்தாய் ஊர் பெளத்த விகாரையின் மத குருவிடம் மகனின் நிலைபற்றி தெரிவித்தாள்.
மதகுரு, பிரகீத்தை ஆலயத்துக்கு வரச்சொல்லி பிரித் நூலை கட்டி ஆசிர்வாதம் செய்தார். அச்சமயம் கீழ்படிந்த பிள்ளையை போல் நடந்துகொண்ட பிரகீத் வீட்டுக்கு சென்றதும் பிரித் நூலை கழற்றி எறிந்துவிட்டு தாயைக் கொல்ல முயற்சித்தார். மீண்டும் பிரித் நூல் கட்டி ஆசிர்வாதம் செய்யப்பட்டது.
வீட்டிறகு வந்ததும் மகனின் நிலை மாறுவதை அப்போதுதான் தாய் அவதானித்தாள். இதற்குக் காரணம் ஆவியின் சேட்டையென அநுமானித்த மதகுரு, நோயாளியை ஹோமகமை பிரதேசத்தில் உள்ள இளம் மாந்திரிகரான சுனில் சதரசிங்கவிடம் அனுப்பினார். குடும்பத்தார் மாந்திரிகருடன் பேசியபின் சாந்தி கர்மத்திற்கான திகதி குறிக்கப்பட்டது.
குறிப்பிட்ட தினம் மாந்திரிகர் இன்னுமொரு இளம் மாந்திரிகருடன் தன் முச்சக்கர வண்டியில் மஹரகமையில் உள்ள பிரகீத்தின் வீட்டுக்கு சென்றார்.
உதவிக்காக பிரகீதின் பல நண்பர்களும் அங்கிருந்தனர். வந்திருக்கும் இளம் மாந்திரிகர்கள் கால்சட்டையணிந்திருந்தனர். இதனால் அங்குவந்திருப்பவர்கள் இவர்கள் மாந்திரிகர்களா அல்லது திருடர்களா என சந்தேகம் கொண்டனர்.
மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பிரகீத் இன்று மாந்திரிகர்களை தாக்கி அவர்களது முச்சக்கர வண்டியையும் உடைத்து சின்னாபின்னமாக்கலாமென அவரது நண்பர்கள் பேசிக்கொண்டனர்.
மாந்திரிகர் சுனில், வேலைகளை ஆரம்பிக்கு முன் பூக்களை ஒழுங்குபடுத்தி தன் முச்சக்கர வண்டியிலுள்ள பிரம்பை எடுத்துவரும்படி உதவியாளரிடம் கூறி பிரம்பை பூக்களின் மத்தியில் வைத்தார். பிரகீத் அவரது பெற்றோர், மற்றவர்கள் உட்கார முதலில் அங்குள்ள அனைவரும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
முன்பு வந்த மாந்திரிகர்கள் போல் நான் பிரகீத்திடம் உதை வாங்கிச் செல்வேனென எவரும் எண்ண வேண்டாம். நான் ஓடமாட்டேன். பிரகீதின் உடலில் ஆவி குடிகொண்டிருந்தால் அதனுடன் நான் பேசுவேன்.
நல்ல விதமாக காரணங்களை எடுத்துக் கூறி ஆவி கேட்பவைகளை கொடுத்து நல்லயிடத்துக்கு அனுப்புவேன். என் பேச்சை கேட்காது ஆவி செயல்பட்டால் பிரம்பை பாவிக்க நேரிடும். ஆவியென்றால் அதற்கு வலிக்காது. பிரகீதின் உடலில் பிரம்படையாளமிருக்காது கீறல்களுமிருக்காது.
காலையில் பிரகீதின் உடலில் பிரம்படையாளம் அல்லது கீறல்களிருப்பின் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தரவேண்டாம். நாளையிலிருந்து இத்தொழிலை செய்யமாட்டேன் எனக் கூறி சமய விடயங்கள் அனுட்டானங்களை செய்தபின் மாந்திரிக வேலைகளை ஆரம்பித்தார்.
மாந்திரிகம் ஆரம்பமானது. ‘துடிப்பது யார்’ எனக் கேட்டார் மாந்திரிகர். ‘நீ யாரடா என்னிடம் கேள்வி கேட்பதற்கு’ என பிரகீத் கேட்டார். ‘நான் யாரென்பதை உனக்கு காட்டுகிறேன். முன்பு உன்னிடம் அடிபட்டு ஓடியவர்கள் போலல்ல நான்’ எனக் கூறிய மாந்திரிகர் கையில் பிரம்பையெடுத்ததும்,
‘உன்னை தூக்கி நிலத்திலடிப்பேன்’ எனக் கூறிய ஆவி மாந்திரிகர் சுனில் மீது தாவியதும் அவர் விலகி பிரகீதின் தலைசேகத்தை பிடித்து முதுகில் பிரம்பால் ஓங்கி அடித்தார்.
‘ஐயோ என்னை அடிக்க வேண்டாம் நீங்கள் சொல்வதை செய்கிறேன்’ என்றது ஆவி.
‘சரி நாம் பேசுவோம்’ என்றார் மாந்திரிகர்.
‘என்ன பேசிவிருக்கிறது துரையே, இது என் மகன், என் வீடு, என் காணி என்று ஆவி கூறியதோடு, ‘நான் வில்பர்ட்’ என்றது ஆவி.
‘வில்பர்ட் ஏன் இந்த பையனின் உடலில் புகுந்துள்ளாய்’
‘சுனந்தவை பழிவாங்க’,
‘யார் சுனந்தா?’
ஆவி தாயின் பக்கம் பார்வையை செலுத்தியது.
‘ஏன் அம்மாவை பழிதீர்க்கப் பார்க்கிறாய்?’
‘இவள் அம்மாவல்ல. சும்மா, நானில்லாத சமயம் கள்ளப்புருஷனுடனிருந்தாள். என்னை கவனிக்காமல் மருந்து தராமல் அசட்டையாயிருந்ததின் காரணமாக நான் வீணே இறக்க வேண்டியதாயிற்று. இவளை பழிவாங்காமல் நான் போகமாட்டேன்’ என்றது ஆவி.
இதெல்லாம் உண்மையா என மாந்திரிகர் சுனந்தாவிடம் கேட்க
‘இவையனைத்தும் பொய்’ என்றாள் அவள். ஆத்திரமடைந்த ஆவி, உன் ‘குரல்வளையை கடித்துத் தின்பேன். தாசியான நீ தயரத்னவுடன் சேர்ந்து என்னை சாகவிட்டாய்’ என பயமுறுத்தியது. இதனைக் கேட்ட வீட்டார் ஆச்சரியமடைந்தனர். வீட்டிலுள்ள அனைவரையும் வெளியேற்றும்படி மாந்திரிகர் ஆவி குடிகொண்டுள்ள பிரகீதிடம் தென்னம்பூவை கொடுத்தார்.
‘ஹா... ஹா.... என பலமாக சிரித்த ஆவி வீட்டிலுள்ள அனைவரையும் தென்னம் பூவினால் அடித்து விரட்டியது. சுனந்தா, மாந்திரிகர் அவரது உதவியாளரைத் தவிர மற்ற அனைவரும் வெளியே ஓடினர்.
‘சரி வில்பர்ட், இப்போதாவது உண்மையை கூறு...’ என்றார் மாந்திரிகர்.
‘இவளை பழிவாங்கும் வரை என் உள்ளம் அமைதிபெறாது. இவள் ஆடிய ஆட்டத்தை என்னால் சகிக்க முடியவில்லை’ என்றதும் மாந்திரிகர் மீண்டும் பிரகீதின் தாயிடம் இவை உண்மையா எனக் கேட்டார். அப்போதும் தாய் குற்றச்சாட்டை ஏற்கவில்லை. மாந்திரிகர் மீண்டும் பிரம்பை எடுத்ததும் ‘வில்பர்ட் அண்ணனை அடிக்க வேண்டாம். நான்தான் தயாரத்ன.
நான் உண்மையை சொல்கிறேன்’ என சுனந்தாவின் கள்ளப் புருஷன் முன்வந்தார். ‘பிரகீதின் உடலில் குடிகொண்டுள்ள வில்பர்டின் ஆவி கூறியது அனைத்தும் உண்மை. வில்பர்ட் அண்ணன் வாழும்போது அரசன் போல் வாழ்ந்தான். இப்பகுதியில் உள்ளவர்கள் பயந்து வாழ்ந்தனர்.
சுனந்தாவைவிட வில்பர்ட் அதிக வயதானவர். இவருக்கு முப்பத்தைந்து வயதாகும் போது கேசம் முழுவதும் நரைத்துவிட்டது. அக்காலத்தில் இவரை நெருப்பு கோழியென்பர். நான் ஒரு நாள் தேவையின் காரணமாக வில்பர்ட் அண்ணனை காண அவர் வீட்டுக்கு சென்றேன். அப்போது பிரகீத் சின்ன பையன்.
அன்று சுனந்தா என்னை நன்றாக கவனித்தார். அத்துடன் எங்களிடையே கள்ள தொடர்பும் ஆரம்பமானது. சுனந்தாவின் தொந்தரவு தாங்க முடியாத நான், வில்பர்ட் அண்ணனில்லாத நேரத்தில் சுனந்தாவிடம் சென்று வந்தேன்.
எங்களது கள்ளத் தொடர்பை வில்பர்ட் அண்ணன் அறிந்துகொண்டார். எங்களை கொன்றுவிடுவார் எனப் பயந்து நாமிருவரும் வெளிநாடொன்றில் வேலை பெற்றுக்கொண்டு வெளிநாட்டுக்குச் சென்றோம்.
மாதந்தோறும் சுனந்தா, வில்பர்ட் அண்ணனுக்கு பணம் அனுப்பி வந்தார். அப்பணத்தில் அவர் பிள்ளையை வளர்த்து வந்தார். நாமிருவரும் சைப்பிரஸ் நாட்டில் ஒரே அறையில் வாழ்ந்தோம். சில நாட்களில் வேதனையுடனிருந்த வில்பர்ட் அண்ணன் சுகயீனமுற்றார்.
நான் உடனே சுனந்தாவை இங்கு அனுப்பி கணவனை கவனிக்கும்படி கூறினேன். ஆனால் சுனந்தா கணவனை கவனியாது அவருடைய இறப்புக்கு காரணமானார். கணவர் வில்பர்ட் இறந்தபின் அவருடைய தேவைக்காக என்னை இங்கு வரச் செய்தார். இதுவே நடந்த சம்பவமென்றார் தயாரத்ன.
இன்று நாங்கள் வாழ்க்கை நடத்துவது இறந்த வில்பர்ட் அண்ணனின் வீட்டில்தான். அதனால் அவர் கோபப்பட்டு பழிதீர்க்க முனைகிறார் என்றும் கூறினார்.
‘வில்பர்ட் உமக்கு பெரும் அசாதாரணம் நிகழ்ந்துள்ளது. அதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம். பிரம்பால் உம்மை இரண்டு தடவைகள் அடித்ததையிட்டு நான் மனம் வருந்துகிறேன். அப்படி அடித்ததினால்தான் இன்று உண்மை வெளியாகியுள்ளது. வில்பர்ட் இனி பழையவைகளை மறந்து, பழிதீர்க்கும் எண்ணத்தை கைவிட்டு நல்லதை நினை.
பழிதீர்க்கும் எண்ணமிருந்ததினால் நீ ஆவியாகி துன்பப்படுகிறாய். இன்னும் இவ்வீட்டில் புகுந்திருந்தால் மேலும் துன்பப்படுவாய் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி, பழிதீர்க்கும் மனதை கருணை மனதாக மாற்றி புண்ணியம் பெற்று நல்லயிடத்துக்கு செல்வது உமக்கு சாந்தியளிக்கும்’ என்று உபதேசம் செய்தார் மாந்திரிகர்.
அச்சமயம் அங்குவந்து வில்பர்ட்டின் மனைவி சுனந்தா மகன் பிரகீதின் உடலில் குடிகொண்டிருக்கும் கணவன் வில்பர்டின் ஆவியிடம் மன்னிப்பு கேட்டார்.
மாந்திரிக வேலைகளுக்கு கொண்டு வரப்பட்ட கோழியின் மீது ஆவியின் பார்வை சென்றது.
‘வில்பர்ட் எனக்கு புரிகிறது... கோழியை உனக்குத் தர முடியும். அது மேலும் கர்மத்தை உண்டுபண்ணும். உனக்கு நல்லயிடத்துக்கு செல்ல முடியாமல் போகும்’ என்றார் மாந்திரிகர்.
‘அவ்வாறெனில் அதுவும் வேண்டாம்’ என்றது ஆவி. ‘எனக்கு எனது மற்ற இரு பிள்ளைகளையும் காண ஆசை’ என ஆவி கூறியதும், முத்த மகன், மகள் இவர்களின் மனைவி, கணவன் பிள்ளைகள் அனைவரும் அழைக்கப்பட்டனர்.
‘மகனே, மகளே நான் உங்களை சந்திக்கும் கடைசி சந்தர்ப்பமிது. நான் போகிறேன்’ எனக் கூறிய வில்பர்டின் ஆவி மகன், மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகளை முத்தமிட்டு அழுதது. பேரன் பேத்திகளை கட்டியணைத்து அழுததை மாந்திரிகர் அவதானித்துக் கொண்டிருந்தார்.
‘வில்பர்ட் செல்லுமுன் உண்மையை காண்பித்து செல்லுமாறு’ மாந்திரிகர் வேண்டினார். பின்னர் தென்னம் பூவை பிரகீதின் கையில் கொடுத்தார். அத் தென்னம் பூவை தன் முகத்தில் வேகமாக அடித்துக்கொண்டே போன ஆவி குடிகொண்டிருக்கும் பிரகீத் நான் ‘வெடிஹிடி கந்தைக்கு’ செல்கிறேன் எனக் கூறி அமைதியானது.
‘எனக்கு நித்திரையாயிருக்கிறது’ எனக் கூறிய பிரகீத் அங்கிருந்த பாயில் சாய்ந்தார்.
எம். எப். ஜெய்னுலாப்தீன்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக