வியாழன், 22 ஜூலை, 2010

அடுத்தவரை நோக்கி ஒரு விரலை நீட்டினால் மற்றைய நான்கும் எம்மை நோக்கியதாக இருக்கும்

முதன் முதலாய் தன்னுள்ளே தன்னை பார்க்கும் யாரும் தனக்குள் இவ்வளவு அழுக்குகளா? குப்பைகளா என்று அதிசயிப்பர். ஏனென்றால் மனிதன் என்றுமே தன்னைப் பற்றி அறிய முயல்வதை விட அடுத்தவரைப் பற்றித் தெரிந்துகொள்வதிலேயே அதிக நேரத்தை செலவிடுகிறான்.

அடுத்தவர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பதில் பாதியைக் கூட தனனைப் பற்றி தெரிந்திருப்பதில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியப் பெண்மணி வசதியான நாகரிக குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவருடைய மாமியாரும் அவர் வழி உறவுகளும் அதிகம் படிக்காத கிராமவாசிகள். ஒருமுறை மாமியார், மருமகள் பணிபுரியும் வைத்தியசாலைக்கு வைத்தியம் பார்க்கச் சென்றபோது மருமகள் தன்னுடன் இருந்தவர்களிடம் படிக்காத பட்டிக்காட்டு பெண்மணியை மாமியார் எனச் சொல்லத் தயங்கி இவர்கள் எனக்குத் தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னாராம்.

நுனி நாக்கு ஆங்கிலமும், படிப்பும் பதவியும் மட்டுமே நாகரித்தின் அளவுகோல் என்று நினைக்கும் இவர்களுக்கு உறவுகள் பற்றியும் மனித மனங்களைப் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உறவினர் ஒருவர் தன்னுடைய கடைத் திறப்பு விழாவிற்கு ஒரு அரசியல்வாதியை அழைத்திருந்தார் குத்து விளக்கு ஏற்ற. அரசியல்வாதியின் மனைவினையே அழைக்கலாம் என்று உறவினரின் நண்பர் சொன்னார்.

ஆனால் உறவினரோ வயதான தன் விதைவைத் தாயை வைத்து குத்துவிளக்கேற்றினார். என்ன இப்படி செய்து விட்டீர்கள் என்ற நண்பரிடம், ‘அரசியல்வாதியை அழைத்தது என் கடை விளம்பரத்திற்கு. ஆனால் குத்து விளக்கு ஏற்றி நான் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்த என் தாயைவிட சிறந்தவர் யார்? அவள் விதவையானது ஒரு நிகழ்வேயன்றி அவர் எந்த விதத்தில் தகுதியை இழந்தார் என்றதும் நண்பர் வாயடைத்துப் போனார்.

எனக்குத் தெரிந்த வேறொரு பெண் எந்த விசேஷத்திற்கும் போகமாட்டாள். அப்படிப் போக வேண்டிய கட்டாயமிருந்தால் எதிலும் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியே நிற்பாள். இதனால் பலநேரம் அவளுக்கும் அவள் கணவனுக்கும் கருத்து வேறுபாடு. நான் ஏன் இப்படி நடந்துகொள்கிறாய் உன் கணவர் சொல்வதில் தவறென்ன, நாம் நாலுபேருக்கு எடுத்துக்காட்டி செய்து உதவினால்தானே நமக்கு யாராவது செய்வார்கள் என்றதும் உடைந்துபோய் அழுதாள்.

விசாரித்த பிறகுதான் தெரிந்தது பிள்ளை இல்லாத அவளை எந்த நல்ல காரியத்திற்கும் முன்னிறுத்தி அழைப்பதில்லை. நேரிடையாகச் சொல்லாவிட்டாலும் அவர்களின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்டு தான் ஒதுங்கியிருப்பதாகச் சொன்னாள். இது புரியாத அவள் கணவர் ஏதோ அகங்காரத்தில் இப்படியிருப்பதாக அவளைத் திட்டுகிறார்.

கேட்டதும் என்ன சொல்வது என்று புரியவில்லை. பிள்ளை பெறுவதும் இல்லாமல் இருப்பதும் ஒரு இயற்கை நிகழ்வு என்று உணராமல் ஏற்கனவே இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட அவர்களை மேலும் இப்படி நோகடிக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

கல்லூரியில் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண் ஆண் நண்பர்களுடன் பழகுவது பற்றி மட்டமாக அவதூறு பேசிய பெண்மணி தன் மகளும் அதேபோல் பழகியபோது அடுத்தவர்கள் தன் மகளைப் பற்றித் தப்பாக பேசுகிறார்களே என்று வருந்தினார். அடுத்தவர்களைப் பற்றிப் பேசும்போது தெரியவில்லை; தனக்கு என்று வரும்போது தானே வலி புரிகிறது. அடுத்தவரை நோக்கி ஒரு விரலை நீட்டினால் மற்ற நான்கும் நம்மை நோக்கி இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

தனக்குச் சாதகமாக ஏதும் நிகழும்போது ஒருவரை ராசியானவர் என்பதும் சாதகமில்லாதபோது, அப்போதே தெரியும் அவர் ராசியில்லாதவர், அதுதான் இப்படி என்று தூற்றுவதும் மனிதர்களின் இயல்பாகிவிட்டது.

மனிதர்களை மனிதர்களாகப் பார்க்காமல் ஜாதி, மதம், அந்தஸ்து, செல்வாக்கு என்ற அளவீட்டில் பார்க்காதீர்கள்.

ஒரு ஓவியர் யேசுபிரானின் படத்திற்கு மாதிரியாக ஒரு பொருத்தமான முகத்தைத் தேடினாராம். ஒருநாள் ஒரு காட்டின் வழியே செல்லும்போது ஒரு மனிதனைக் கண்டாராம். பழங்களையும் கிழங்குகளையும் தின்றுவிட்டு, ஓடை நீரை பருகி ஆனந்தமாக இருந்த அவன் முகத்தில் சாந்தமும் அமைதியும் கண்டு இவனே பொருத்தமானவன் என்று அவனை மாதிரியாக வைத்து யேசுவின் படம் வரைந்தாராம் அருமையாக வந்திருந்ததாம்.

சில காலம் கழித்து யேசுகாவியம் முடியும் நிலையில் யூதாஸின் உருவத்திற்கு ஆள் தேடிப் போனபோது கொடூர முகத்துடனும், குரோதம் பொங்கும் விழிகளுடனும் ஒருவனைக் கண்டு அவனை வைத்து காட்டிக் கொடுத்த யூதாஸை வரைந்தார். பிறகுதான் தெரிந்து கொண்டார் காட்டில் பார்த்தவன் தான் அவன். அன்று கள்ளமில்லா மனதுடன் குழந்தையைப் போல் இருந்தவன் பணமும், ஆசைகளும் பெருகியதும் மாறிவிட்டான் என்பதைப் புரிந்துகொண்டார்.

மனிதன் தேவனாவதும், கொடியவனாவதும் சூழ்நிலைகளின் ஆசாபாசங்களின் விளைவேயன்றி பிறப்பினால் அல்ல.

நேரத்திற்கு நேரம் மனிதர்கள் முழுக்க முழுக்க வெவ்வேறு முகங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கின்றனர். நிறம் மாறும்போது குணம் மாறும் குணம் மாறும் போது தரம் மாறும்.

ரோஜாவுக்கு ஆசைப்பட்டால் அதன் முட்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது நியதி.

மனிதர்களையும் அவர்களின் குறை, நிறைகளோடு ஏற்கப் பழகுவதே உண்மையான மனித நேயத்தின் வெளிப்பாடு.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல