செவ்வாய், 28 செப்டம்பர், 2010

உலக மேடையில் மீண்டும் பழைய நாடகம்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டம். சர்வதேச அரங்கில் முக்கியமானதொரு மேடை.

அந்த மேடையில் அமெரிக்கத் தலைவர் ஏறி நின்றபோது, அவர் என்ன பேசப் போகிறார் என்று முழு உலகமும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தது.

அவர் பேசுவதற்கு நிறைய விடயங்கள் இருந்தன. ஆனால், மத்திய கிழக்கு பிரச்னைக்கு அதிக அழுத்தம் கொடுத்துப் பேசினார், ஒபாமா. தமக்குள் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டியது இஸ்ரேலியர்களும், பலஸ்தீனர்களும் என்றபோதிலும், நமது பங்களிப்பையும் வழங்க வேண்டிய கடமை நமக்கு உண்டென்றார், அமெரிக்கத் தலைவர். பன்னெடுங்காலமாகத் தொடரும் பிரச்சினைக்குத் தீர்வுகாணக் கூடிய சந்தர்ப்பம் உருவாகியிருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகள் ஒபாமாவின் உரையில் எதிரொலித்தன. ஒன்றரை வருடகால இடை வெளிக்குப் பின்னர், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவும், பலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்த் அப்பா ஸூம் நேரடியாக சந்தித்ததைத் தொடர்ந்து அவரது கருத்து வெளியாகிறது. இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்து பிள்ளையார் சுழி போட்டதுடன் அமெரிக்காவின் பணி நின்று விடவில்லை. மத்திய கிழக்கு தீர்வு யற்சி களில் சம்பந்தப்பட்டுள்ள நான்கு தரப்புக்கள் பங்கேற்கக்கூடிய கூட்டமொன்றை நடத்தி, இஸ்ரேலிய பலஸ்தீன தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் அமெரிக்கா மேற்கொண்டது. அமெரிக்கா, ரஷ்யா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நான்கு தரப்புக்களின் பிரதிநிதிகள் கடந்த வாரம் நியூயோர்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் இஸ்ரேல் பலஸ்தீனம் என்ற இரு தேசங்கள் உருவாக்கப்படக்கூடிய தீர்வு நோக்கி முன்னேறுமாறு இருதரப்புக்கள் மீதும் அழுத்தம் தொடுக்கக்கூடிய விடயங்கள் பற்றி ஆராயப்பட்டன. பேச்சுவார்த்தையின் முடிவில், பேச்சுவார்த்தைக்குரிய சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்தக்கூடிய கூட்டறிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டறிக்கையில் கூறப்பட்ட விடயம் சர்வதேச விதிமுறைகளுக்கு முரணாக மேற்குக் கரையில் மேலும் யூதக் குடியிருப்புக்களை அமைப்பதற்கு இஸ்ரேல் சுயமாக விதித்துக் கொண்டுள்ள தடை பற்றியதாகும். இஸ்ரேலிய பலஸ்தீன தரப்புக்களுக்கு இடையில் நிலவும் பகைமை உணர்வின் அடித்தளமாக அமைந்துள்ள பல பிரச்சினைகளில் யூதக் குடியிருப்புக்களின் விஸ்தரிப்பும் முக்கி யமானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் குடியிருப்புக்களை அமைக்கும் முயற்சிகள் இஸ்ரேலியத் தலைவர்கள் சுயமாக விதித்துக் கொண்ட தடை, செப்ரெம்பர் 26ஆம் திகதி, முடிவுக்கு வந்தது.

அந்தத் தடை தொடர்ந்து நீடிக்கப்படாவிட்டால், பேச்சுவார்த்தையில் இருந்து விலகி விடப்போவதாக பலஸ்தீனத் தரப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய நிலையொன்று உருவாகுவதைத் தடுக்கும் வகையில், சர்வதேச சமூகம் இரு தரப்பிற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது அமெரிக்கத் தலைவரது நோக்கமாக இருந்திருக் கக்கூடும். அதற்கு முன்னர் எப்படியாவது இஸ்ரேலிய பலஸ்தீனத் தரப்புக்களை ஒருவழிக்குக் கொண்டு வந்து பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதில் அவர் அதீத ஆர்வம் காட்டுவதைக் காணக்கூடியதாக இருக் கிறது. அந்த ஆர்வத்திற்கு ஆப்கான் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தொடர்பாக தாம் அனுசரிக்கும் கொள்கைகளுக்கு தமது தரப்பில் இருந்து அதிருப்திக் குரல் எழுந்துள்ள வேளையில், மத்திய கிழக்கின் பக்கம் கவனத்தைத் திசைதிருப்புவது முதற்கொண்டு தமக்குக் கிடைத்த நோபல் சமாதானப் பசை அர்த்தள்ளதாக மாற்றும் அவாவரையில் பலகார ணங்கள் இருக்க முடியும். ஆனால், அவரது கோரிக்கைகளுக்கு செவிமடுத்து சர்வதேச சமூகம் இஸ்ரேலிய பலஸ்தீன தரப்புக்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் மாத்திரம் தீர்க்கப்படக் கூடிய அளவிற்கு இந்தப் பிரச்சனை எளிமையானதாக இருக்கவில்லை. சமகாலத்தில் இஸ்ரேல் என்று அங்கீகரிக்கப்படும் நிலப்பரப்பிற்குள் காஸா பள்ளத்தாக்கு, மேற்குக் கரை ஆகிய பிரதேசங்களுக்குள் பலஸ்தீனர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்த மக்களுக்கும் சொந்தமானதொரு தேசத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய தீர்வை நோக்கி நகர வேண்டுமானால், பல பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்சினைகளில் யூதக்குடியிருப்புக்களின் விஸ்தரிப்பை நிறுத்துதல் என்பது சிறியதொரு விடயம் மாத்திரமே.

முதலில் மண் சம்பந்தப்பட்ட பிரச்சினையை ஆராயலாம். யூதர்களது தேசம் பற்றி விவிலியத்தில் கூறப்பட்டிருந்தாலும், சமகால இஸ்ரேலிய தேசம் 1947ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட் தீர்மானத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகளால் உருவான தாகும். 1967ஆம் ஆண்டு நிகழ்ந்த யுத்தத்தைத் தொடர்ந்து இஸ்ரேலியப் படைகள் பெரும்பகுதி நிலத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. தொடர்ந்து வந்த ஆண் டுகளில் மேற்குக் கரையைச் சுற்றி கொங்கிரிட் மதில் அமைத்து பலஸ்தீனர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குடியிருப்புக்களை அமைத்தார்கள், இஸ்ரேலியத் தலைவர்கள்.

இஸ்ரேலும், பலஸ்தீனம் அருகருகே இருக்கக்கூடிய தீர்வுத் திட்டம் சாத்தியப்பட வேண்டுமாயின், இந்த நிலப்பரப்பில் எந்தளவு பகுதி பலஸ்தீன இராஜ்ஜியத்திற்குள் அடங்க வேண்டும், இஸ்ரேலுக்கு எத்தனை சதவீதம் செல்ல வேண்டும் என்ற சிக்கலான கேள்விக்கு பதில் காண வேண்டிய நிர்ப்பந்தம் எழுகிறது.

எதிர்கால பலஸ்தீன தேசம் 1967ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த எல்லைகளின் அடிப்படையைக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் என்பது பலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்த் அப்பாஸின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த யோசனை நியாயமானதெனின், இதனை ஏற்றுக் கொள்ளுமாறு இஸ்ரேலியத் தலைவர்களை வலியுறுத்துவதில் சர்வதேச சமூகம் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பது முக்கியமான சந்தேகம்.

இந்த இடத்தில் ஜெருசலேம் பற்றியும் கூற வேண்டியிருக்கிறது. இந்த நகரை பெரும்பாலும் இஸ்லாமியர்களாகக் காணப்படும் பலஸ்தீனர்களும், யூ தர்களான இஸ்ரேலியர்களும், கிறிஸ்தவர்களும் தத்தமது புனித நகராகக் கருதுகின்றனர். இந்த மூன்று மதங்களையும் சேர்ந்தவர்கள் வழிபடக்கூடிய முக்கியமான வணக்கஸ்தலங்கள் ஜெருசலேமில் அமைந்திருக்கின்றன. உலகில் மிகவும் பழமையானதாகக் கருதப்படும் இந்தப் புராதன நகரை அடுத்த வருக்கு விட்டுக் கொடுக்க இஸ்ரேலிய, பலஸ்தீனத் தலைவர்கள் விரும்புவதில்லை. ஜெருசலேம் விவகாரத்தில் இருதரப்புக்களும் மிகவும் பிடிவாதமாக இருக்கின்றன. தீர்வாக முன்மொழியப் படும் இஸ்ரேலிய தேசத்திற்குள் ஜெருசலேம் இருக்கா விட்டால், அந்தத் தீர்வை அங்கீகரிக்கப் போவதில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன் யாஹூ வலியுறுத்தி வந்திருக்கிறார். தீவிர வலதுசாரியான நெத்தன்யாஹூ பலஸ்தீன விவகாரத்தில் கடும்போக்கு அனுசரிப்பவர் என்ற குற்றச் சாட்டு ஒருபுறமிருக்க, இஸ்ரேலின் சமகால கூட்டணி அரசாங்கத்தின் அங்கத்துவ கட்சிகள் அவரை விடவும் விடாப்பிடியாகவே நடந்து கொள்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஜெருசலேத்தின் ஒரு பகுதியை பலஸ்தீனர்களுக்கு விட்டுக்கொடுக்கும் விதத்திலான ஐநா தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதை விடுத்து, அது பற்றி பேசுவதையே அனுமதிக்காத கட்சிகளை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை நெத்தன்யாஹூ எதிர்கொள்கிறார். இஸ்ரேலின் நிலைமை இவ்வாறு இருக்கிறதென்றால், பலஸ்தீனர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மஹ்த் அப்பாஸின் நிலைவரம் அதை விடவும் மோசமானது. அவர் தலைமையிலான பலஸ்தீன அதிகாரசபையின் அதிகாரம் மேற்குக் கரை நிலப்பரப்பிற்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 15 இலட்சம் பலஸ் தீனர்களைக் கொண்ட காஸா நிலப் பரப்பை ஹமாஸ் இயக்கம் தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கிறது. மேற்குலகின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறியவராக அப்பாஸை நோக்கும் ஹமாஸ் இயக்கம், சமகால சமாதானப் பேச்சுவார்த்தைகளை அங்கீகரிக்க வில்லை. இதில் முக்கியமான விடயம் யாதெனில், ஒட்டுமொத்த பலஸ்தீனர்கள் மத்தியில் அப்பாஸூக்கு இருக்கும் ஆதரவு சரிந்து வரு கையில், ஹமாஸ் இயக்கம் தமது மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்ற அமைப்பாக மாறிவருகிறது என்பதாகும். பலஸ்தீன அதிகாரசபைக்கான தேர்தலை நடத்த வேண்டுமாயின் அப்பாஸ் தலைமையிலான பத்தா இயக்கம், ஹமாஸ் இயக்கம் கருத்தொற்றுமை காண வேண்டியது கட்டாயமானதாகும். ஆனால், தற்போதைய அரசியல் நிலவரத்தில் அது சாத்தி யப்பட மாட்டாதெனவே தோன்றுகிறது. ஒரு வேளை சர்வதேச சமூகத்தின் சார்பில் இஸ்லாமிய நாடுகள் கருத்தொற்றுமை வலியுறுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றதாகக் கருதுவோமாயின், அந்தக் கருத்தொற்றுமையின் பலனாக ஹமாஸின் கை மேலோங்குவதை இஸ்ரேல் மாத்திரமன்றி மேற்குலகம் சகித்துக் கொள்ள மாட்டாது. ஏனெனில், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பாகவே நோக்குகின்றன. மறுபுறத்தில் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் என்ற தேசம் இருக்கவே கூடாதென்று கருதுகிறது. இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டும் என்பது இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட் பல சமாதான முயற்சிகளில் இஸ்ரேலியத் தலைவர்களால் வலுவாக வலியுறுத்தப்பட்ட கோக்கையாகும்.

இஸ்ரேலை யூத தேசமாக அங்கீகரிப்பதில் மற்றுமொரு உணர்வுபூர்வமான பிரச்சினையும் இருக்கிறது. தமது வரலாற்றுத் தாயகமாகக் கருதும் மண்ணின் மீது பலஸ்தீனர்களுக்குள்ள பற்று அதிகம். தமது மண்ணில் இஸ்ரேலிய தேசம் உருவாக்கப்பட்டதாக பலஸ்தீனர்கள் கருதுகிறார்கள். சுயாதீன பலஸ்தீன தேசம் என்பது இந்தக் கருத்து நிலைப்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் எதுவித விட்டுக் கொடுப் புக்களையும் மேற்கொள்ள பலஸ்தீனர்கள் தயாராக இல்லை.

இஸ்ரேலை யூத தேசமாகக் கருதும் பட்சத்தில், இது யூதர்களின் பூர்வீக மண் என்று அர்த்தப்படுவதுடன், பலஸ்தீனர்கள் வந்தேறு குடிகள் என்ற பிரமையை ஏற்படுத்துவதாக மாறிவிடும். இந்தத் தோற்றப்பாட்டை எந்தவொரு பலஸ்தீனப் பிரஜையும் விரும்பாத நிலையே உள்ளது.

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி மத்திய கிழக்கு சமாதானம் பற்றி நம்பிக்கையுடன் எதிர்நோக்குமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும், அந்த நடைமுறை முன்னேறக்கூடிய ஒவ்வொரு கட்டத்திலும் புதிது புதிதாக பிரச்சினைகள் முளைத்துக் கொண்டு தான் இருக்கப் போகின்றன.

அந்தப் பிரச்சினைகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்ற கேள்வி பூதாகரமானதாக எழுந்து நிற்கக்கூடிய தருணத்தில், பிரச்சினைத் தீர்வு முயற்சிகளில் சர்வதேச சமூகம் எந்தள வுக்கு நேர்மையானதாக இருக்கப் போகிறது என்பது தான் தற்போதைய கேள்வி.


சதீஷ் கிருஷ்ணபிள்ளை
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல