மதகுருவான வண. அலெக்ஸ் பிறவுண் (Reverend Alex Brown, 61), ஈஸ்ட் சஸக்ஸிலுள்ள (East Sussex) சிறிய தேவாலயத்தில் சட்டவிரோத குடியேற்ற வாசிகளான நூற்றுக்கணக்கான ஆபிரிக்க ஆண்களுக்கு பண நெருக்கடியிலுள்ள கிழக்கு ஐரோப்பிய பெண்களை திருமணம் செய்து வைத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த மதகுரு சட்டவிரோத குடியேற்றவாசிகள் பிரித்தானியாவில் நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கு உதவும் முகமாக சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தலா 3000 ஸ்ரேலிங் பவுணை கட்டணமாக செலுத்தி இந்த திருமணங்களை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர் 2005 ஆம் ஆண்டு ஜுலை மாதத்துக்கும் 2009 ஆம் ஆண்டு ஜுலை மாதத்துக்கும் இடைப்பட்ட 4 ஆண்டு காலப்பகுதியில் சென் லியோனார்ட்ஸிலுள்ள (St Leonards) சென் பீற்றர் சென் போல் தேவாலயத்தில் 383 க்கு மேற்பட்ட திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்.
அதற்கு முந்திய 4 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இக்காலப்பகுதியில் 30 மடங்கிற்கும் அதிகமான திருமணங்கள் மேற்படி தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த லெவ்ஸ் கிறவுண் நீதிமன்ற நீதிபதி, குடிவரவு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் வண. அலெக்ஸ் பிறவுணுக்கு 4 வருட சிறைத் தண்டனையும் திருமணத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் விளைவித்தமைக்காக 5 மாத சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் இந்த வழக்கில் மேற்படி சட்ட விரோத திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கிய சட்டத்தரணியான மைக்கேல் அடெலாஸோயி (Michael Adelasoye 50 வயது) மற்றும் அவரது உதவியாளரான விளாடிமிர் பக்சக் (Vladymyr Buchak 33 வயது) ஆகியோரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக