சோதனை குழாய் முறையில் செயற்கையாக கருவுறும் முறையை கண்டறிந்த இங்கிலாந்து விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்சுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு, ரூ.71/2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.
ரூ.71/2 கோடி பரிசுத் தொகை
சர்வதேச அளவில் கலை, அறிவியல், அமைதி போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடனை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழிலதிபர் நினைவாக, கடந்த 1901-ம் ஆண்டு முதல் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2010) நோபல் பரிசு பெறுவோர் பற்றிய விபரங்களை நோபல் அறக்கட்டளை வெளியிட தொடங்கி இருக்கிறது.
முதலில், மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. சோதனைக் குழாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானி டாக்டர் ராபர்ட் எட்வர்ட்சுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. தற்போது, 85 வயதாகும் ராபர்ட் எட்வர்ட்சுக்கு ரூ.71/2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.
இலக்கியம், அமைதி உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
1978-ல் முதல் குழந்தை
செயற்கை முறையில் கருவுறும் முறையை கண்டுபிடிக்கும் முயற்சியில் 1968-ம் ஆண்டு ராபர்ட் எட்வர்ட்ஸ் இறங்கினார். ஆனால், மத அமைப்புகள், கிறிஸ்தவ தேவாலயங்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் ஆராய்ச்சிக்கு தேவையான பணத்தை அவரால் திரட்ட முடியவில்லை. எனினும், தனியார் அளித்த உதவியுடன் தனது ஆராய்ச்சியை தொடங்கினார்.
அதன் விளைவாக, 1978-ம் ஆண்டு ஜுலை 25-ந் தேதி அன்று உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை லூயிஸ் பிரவுண் பிறந்தது. அதன் பிறகு, உலகம் முழுவதிலும் 40 லட்சம் சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்துள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் 10 சதவீத மக்கள் குழந்தை இல்லாமல் ஏங்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு ராபர்ட் எட்வர்சின் கண்டுபிடிப்பு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
உதவியாக இருந்த விஞ்ஞானி
மனித உடலில் இருந்து கருமுட்டையை வெளியே எடுத்து செயற்கை கருவூட்டும் சோதனையில் ராபர்ட்டுடன் இணைந்து பணியாற்றியவர், டாக்டர் ஸ்டெப்டோ. அவர்களுடைய சோதனை வெற்றி பெற்றதும் 1980-ம் ஆண்டில் `சோதனைக் குழாய் குழந்தை மருத்துவமனை'யை கேம்பிரிட்ஜ் நகரில் தொடங்கினார்கள். அதன் பிறகு, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கான சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்தன.
இந்தநிலையில், 1988-ம் ஆண்டில் ஸ்டெப்டோ இறந்து விட்டார். எனினும், செயற்கை கருவூட்டல் முறையை உலகம் முழுவதும் ராபர்ட் பரப்பினார். மேலை நாடுகளில் பிறக்கும் குழந்தைகளில் 2 சதவீதம் பேர், சோதனைக் குழாய் குழந்தைகள் தான். ராபர்ட் எட்வர்ட்சின் இந்த சேவையை பாராட்டி நோபல் பரிசு வழங்குவதாக நோபல் கமிட்டி உறுப்பினர் கோரான் ஹசன் தெரிவித்தார்.
ராபர்ட் எட்வர்ட்சுக்கு 85 வயதாவதால் உடல் நலமின்றி இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே, பெரும்பாலும் அவர் வெளியில் வருவது கிடையாது. எனவே, நோபல் பரிசு கிடைத்தது பற்றி ராபர்ட் எட்வர்ட்சிடம் கருத்து கேட்க முடியவில்லை.











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக